தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது சிறப்புநிலை அறுவை சிகிச்சைப் பேராசிரியராக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருபவரும் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது தஞ்சையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதோடு பல நூறு மருத்துவ மாணவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவப் பாடம் கற்பித்து வருபவருமான டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள் தமிழ் மொழிப்பற்றின் காரணமாகவும் அறிவியல் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் இரண்டு மருத்துவக் களஞ்சியங்களையும் தமிழிலும் இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியவர்.

மருத்துவம் மற்றும் எழுத்துப் பணிகளுக்காக மைய, மாநில அரசு விருதுகளையும் மருத்துவப் பல்கலைக்கழக வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பல பாராட்டுப் பத்திரங்களையும் பெற்றுள்ளார். பொதுமக்களிடமும் சமூகத்திடமும் மகத்தானதொரு சாதனை மருத்துவராக அடையாளம் பெற்றுள்ள டாக்டர் சு.நரேந்திரன் அவர்களை தஞ்சை அரண்மனையின் நுழைவாயிலுக்கு நேரெதிரே அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம்.

su narendran 600அடிப்படையில் மருத்துவரான நீங்கள் தமிழில் நூல்கள் எழுதத் தொடங்கிய ஆர்வத்தின் பின்னணியைக் கூறுங்களேன்?

அந்தக் காலத்தில் எனது தந்தையார் சில இதழ்களின் செய்தி சேகரிப்பாளராகவும் விளம்பர முகவராகவும் செயல்பட்டு வந்தார். அப்போது எங்களது வீட்டுக்கு எட்டு பத்திரிகைகள் தினமும் வரும். தான் அனுப்பிய விளம்பரம் மற்றும் செய்திகள் வந்திருப்பதை எனது தந்தையார் பார்த்துக்கொண்டிருப்பார். நான் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாக எல்லா பத்திரிகைகளையும் இயன்றளவுக்கு வாசிக்கும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

அப்போது எனது மூத்த சகோதரர் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இதழியல் தொடர்பாக மேல்படிப்பு படித்து வந்தார். அதன்பிறகு நிறைய எழுதத் தொடங்கினார். அவர் அவற்றைப் படிக்கச் சொன்னபோது அவரது எழுத்துகளையெல்லாம் தொடர்ந்து படிப்பது எனக்கொரு வழக்கமானது.

நான் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு சென்னைக்கு எம்எஸ் படிக்கச் சென்றபோது என்னுடைய நண்பர் ஆடலரசன் “டாக்டர் நீங்க தினமும் காலையில் ஏழுநிமிடம் சென்னை வானொலியில் நலவாழ்வைப் பற்றிப் பேசுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து நாற்பது முறை தொடர்ச்சியாக வானொலியில் உரை நிகழ்த்தினேன். அவ்வுரை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி இருந்ததால் பெருமளவிலான மக்களிடம் போய்ச்சேர்ந்தது. அது எனக்கு மிகுந்த தெம்பாகவும் நிறைவாகவும் இருந்தது.

அதைத் தொடர்ந்து ‘நோயின்றி வாழ்வதெப்படி’ என்ற எனது சிறியநூலை அப்போது என்சிபிஎச் நிர்வாகியாக இருந்த உசேன் அவர்கள் முயற்சியெடுத்து வெளிக்கொண்டு வந்தார். அந்தப் புத்தகமும் பெரியளவில் விற்பனை ஆனது. இதற்குப் பிறகு இதழ்களில் எழுதுவது, குறிப்பாக அறிவியலைப் பற்றி, மருத்துவத்தைப் பற்றி எழுதுவது என்பது எனக்கு பொழுதுபோக்காகவே ஆகிப் போனது.

1983ஆம் ஆண்டு நான் எம்எஸ் முடித்துவிட்டு தஞ்சைக்கு வந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் அறிவியல் தமிழை மக்களுக்கு எடுத்துப் போக வேண்டாமா? நம் மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும்? எப்படி, எப்போது, எதை சாப்பிட வேண்டும்? என்பதெல்லாம்கூடத் தெரியவில்லையே? என்றெல்லாம் கேட்டார்.

அதைத் தொடர்ந்து அறிவியல் தொடர்பான எல்லா செய்திகளும் மக்களிடம் சென்றடைய வேண்டும். குறிப்பாக கிராம மக்களுக்கு இவை தெரிய வேண்டும் என்று சொல்லி ‘அறிவியல் பண்ணை’ எனும் இயக்கத்தைத் தொடங்கி என்னை அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அனுப்பிவைத்தார். நான் அங்கே சென்று பேசத் தொடங்கியபோது இருந்தவர்களின் எண்ணிக்கை வெறும் எட்டுபேர்தான். ஆனால் நான் பேசி முடித்தபோது ஆயிரம்பேர் வரை கூடியிருந்தனர். அங்கிருந்த நெசவாளர்கள், விவசாயிகள் அனைவரும் என்னை வெளியேற விடாமல் மருத்துவக் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டுக் கேட்டுத் தெளிவு பெற்றனர். அதன்பிறகு அச்சொற்பொழிவை சிறுநூலாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டு பல பதிப்புகளைக் கண்டது. இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடர வேண்டும். இதன் மூலம் அப்போது மக்களிடம் நாம் செல்லாததால்தான் அவர்களிடம் அறிவியல் குறித்த புரிதல் இல்லை என்ற ஆதங்கம் எனக்குள் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வ.ஐ.சுப்பிரமணியம் தமிழில் மருத்துவக் கல்வி வர வேண்டும், தமிழில் பொறி­யியல் கல்வி வரவேண்டும் என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு இராமசுந்தரம் அவர்கள் இயக்குநராக இருந்தார். அதில் நான் உட்பட 13 பேராசிரியர்கள் நூல்கள் எழுதினோம். அப்போது நான் உதவிப் பேராசிரியர். இதில் ‘பொது அறுவை மருத்துவம்’ என்ற எனது நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. தொடர்ந்து புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

எனது தந்தையார் நிறைய புத்தகங்கள் படிப்பார். அதாவது அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம், அர்த்தமற்ற இந்துமதம் புத்தகம் இரண்டையும் ஒருசேரப் படிக்கிற வழக்கமுடையவர். அவரிடம் ஏறத்தாழ 3000 புத்தகங்கள் இருந்தன. அவர் என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது உங்களிடமுள்ள புத்தகங்களை மட்டும் எனக்குக் கொடுங்கள் என்று கேட்டேன். கம்பராமாயணம் முதல் பெரியார் களஞ்சியம் வரையிலான அந்தப் புத்தகங்களை இன்றளவும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்னர் 1991ஆம் ஆண்டு ‘வயிற்றுநோய்களும் அவற்றின் மருத்துவமும், என்ற எனது நூல் தமிழகஅரசின் முதல் பரிசை இரண்டாவது முறையாகப் பெற்றது. அதற்குப் பின்னர் நூல் எழுதுவது பொழுதுபோக்கு என்பது கடமை என்பதாக எனக்கு மாறியது. அப்போதிலிருந்து ‘அறிவியல் ஒளி’ ‘விஞ்ஞானி’. ‘நல்வழி’, ‘அறிக அறிவியல்’ எனும் அறிவியல் இதழ்களிலும் தினத்தந்தி, தினகரன், மாலைமுரசு போன்ற நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ‘கலைக்கதிர்’ மற்றும் சில ஆண்டு மலர்களிலும் அவ்வப்போது எழுதி வந்தேன்.

அறிவியலைத் தமிழில் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் யார்?

சங்ககாலப் புலவர்கள் அறிவியலாளர்கள் அல்ல. ஆனால் அவர்கள் அறிந்தது, அனுபவித்தது, பயன்படுத்தியது, பயன்பட்டது இவையனைத்தையும் அவர்கள் உள்வாங்கி செய்யுள் வடிவில் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே தமிழில் அறிவியல் இல்லை என்று சொல்ல முடியாது. நமது உரையாசிரியர்களின் உரைகளில் அறிவியல் நூல்கள் அதிகளவில் பேசப்படுகிறது.

அப்போதே ஆஸ்தானகோலாகலம், கோலதீபிகை, பூகோளவிலாசம், அசுவசாஸ்திரம் என்றெல்லாம் நூல்கள் இருக்கின்றன என்று பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார், பரிமேலழகர், தக்கயாகப்பரணியாசிரியர் போன்றோரிடமிருந்து அறிய முடிகிறது. ஆக அந்தக் காலத்திலேயே அறி­வியலை வளர்க்க நடந்த முயற்சிகள் முறையாக எழுதிவைக்கப்படவில்லை அல்லது காணக் கிடைக்கவில்லை.

இங்கிருந்து அரை கி.மீ தூரத்திலுள்ள தஞ்சைப் பெரிய கோயில் ஐந்தடி அஸ்திவாரத்தில்தான் நிற்கிறது. அதேபோல ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று ஓடிக்கொண்டேயிருக்கிற காவிரியாற்றின் குறுக்கேதான் புதை மணலுக்குள் கரிகாலன் கல்லணையைக் கட்டியிருக்கிறான். இன்றுவரை எப்படி எந்த அறிவியல் துணைகொண்டு இவர்கள் கட்டினார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. பாரம்பரியமாக வந்த நமது அறிவியல் அறிவை சொல்லித் தரக்கூடிய பள்ளிகள் அன்று இல்லை. அதாவது தச்சன் மகன் தச்சுத்தொழில் செய்வான் என்பது போன்ற குலத்தொழில் நம்பிக்கைப்படி இருந்திருப்பார்கள் என்று கருத இடமுண்டு. அவர்கள் அவற்றை எழுதி வைக்காததால் நாம் பெரும் இழப்புக்கு உள்ளானதென்னவோ உண்மை.

சங்ககாலப் புலவர்களின் பாடல்களில் பொருள்முதல்வாதக் கருத்துகள்கூட இடம் பெற்றுள்ளன. பல்லுயிரினச் சுழற்சி இடம்பெற்றுள்ளது. உருப்புகள், உருவம், உணவு, உறைவிடம், செய்கை, நடத்தைகளெல்லாம் குறிப்பிடப்படுகின்றன. இனப்பெருக்கமுறைகூட கூறப்பட்டுள்ளது. இப்படியாக சங்கப்புலவர்கள் கூறியதையெல்லாம் பேராசிரியர்கள் பி.எல்.சாமி, சீனிவாசன் ஆகிய இரண்டு பேரும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்தெல்லாம் உள்ள பாடல்களை ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார்கள்.

எலியின் முடியில் போர்வை தயாரித்து போர்த்தப் பட்டிருந்ததாக சங்க இலக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிய மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்று ஆராய்ந்து அந்த எலியைக் கண்டுபிடித்து முடிகளுள்ள காடுவாழ் எலிகள் பற்றி ஆதாரபூர்வமாக அதில்எழுதியுள்ளார் பி.எல்.சாமி.

அய்ரோப்பியர்களுக்கும் அறிவியலுக்குமான உறவைப் பற்றிக் கூறுங்கள்?

ஒருகட்டத்தில் இந்தியாவுக்கு அய்ரோப்பியர்கள் வருகிறார்கள். அவர்களின் முக்கிய பணி காலனியத்தை நிலைநாட்டுவது. அத்துடன் கிறித்தவ சமயத்தைப் பரப்புவது. அதற்காக அவர்கள் அந்தந்த மக்கள் மொழியில் பேசவேண்டும் என்பதற்காக விவிலியத்தை மொழிபெயர்க்கிறார்கள். அதில் சிறந்து விளங்கியவர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்கள். மேலும் ஜி.யு.போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் திருவாசகம், திருக்குறள் போன்றவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் செய்தாலும் கத்தோலிக்கர்கள் அறிவியலைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. அவர்கள்தான் கலீலியோவையும் புருனோவையும் தண்டித்தவர்கள். ஆனால் அதன் விளைவு அண்மைக்காலத்தில் போப் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு அறிவியலைக் கொண்டுவந்து சேர்த்தவர்கள் யார் யார்?

அந்த நாளில் அறிவியலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்கள். அதில் யுரேனியஸ் என்பவர்தான் முதலில் பூமி சாஸ்திரத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதன் முதல் பக்கத்தில் ‘தமிழர்களுக்கு அறிவுண்டாகும்படி இந்நூல் எழுதப்படுகிறது’ என்று எழுதியுள்ளார்.

இலங்கையிலிருந்து வந்த பிஷ்கிறீன் அவர்கள் அமெரிக்காவில் இருந்தபோது தமிழர்களிடம் தமிழைத் தானே கற்றுக் கொண்டவர். இங்கு வந்து அதைவிட சிறப்பாகக் கற்றுக் கொண்டதோடு தன்னுடைய மாணவர்களுடன் 11 நூல்களைத் தமிழில் எழுதுகிறார். அவை அத்தனையும் ஆங்கில மருத்துவம் குறித்த நூல்கள். இதற்கு இலங்கையில் வசித்த கிறித்தவர்களாக மாறிய யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களான டேனியல், சப்மென் ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர்.

மேலும் 33 மாணவர்களை தமிழில் மருத்துவம் படிக்கத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் பிஷ்கிறீன். அவர்களை டாக்டர்களாக உருவாக்குகிறார். அப்போது இலங்கையில் ஆங்கிலம் ஆட்சிமொழி என்பதால். அரசாங்கப் பதவி கிடைக்காது என அவர்கள் தமிழில் படிக்க மறுக்கிறார்கள். இன்றைக்குபோல் அன்றைக்கும் தாய்மொழிக் கல்வி ஏற்புடையதாக இருக்கவில்லை. ஆனால் பிஷ்கிறீன் உறுதியாக இருக்கிறார். உங்களுக்கு பத்துநாட்கள் அவகாசம் தருகிறேன். மருத்துவம் படித்தால் நீ தமிழில் படி, இல்லாவிட்டால் நீ வேறு தொழிலை நாடு என்று சொல்லிவிடுகிறார். இதிலிருந்து பிஷ்கிறீனின் தமிழ் ஈடுபாடு எந்தளவு இருந்ததென்பதை நம்மால் உணரமுடிகிறது. அவர் சொல்கிறார். “பத்தாயிரம் தமிழர்களுக்கு ஒரு மருத்துவரை நியமிப்பது என்பது என்னுடைய கொள்கை. அதற்காகத் தமிழில் மருத்துவர்களை உருவாக்குவதற்கு நான் முயற்சிப்பேன்” என்கிறார்.

அந்தக் காலத்தில் கிறித்தவத்தை பரப்புவதற்காக வந்த பிஷ்கிறீன் தமிழில் அறிவியலை மட்டும் சொல்லவில்லை. இங்கிருந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டியது பற்றி ஒவ்வொரு புத்தகத்திலும் எழுதி வந்துள்ளார். கெமிஸ்தம் என்ற புத்தகத்தில் ‘ரஸவாதத்திற்கு பதிலாக பொருள்களின் கூறுகளைக் குறிக்கும் கெமிஸ்தம் என்ற வித்தையையும் ஜோதிட சாஸ்திரத்திற்குப் பதிலாக நட்சத்திரங்களின் தன்மைகளை சரியாகச் சொல்லும் வானசாஸ்திரத்தையும் இல்லாத ராட்சதர்களை, தேவதைகளைப் பற்றிய கதைகளுக்கு பதிலாக உள்ள கருத்துருக்களையும் சுருக்கிச் சொல்லும் பொய்யான கல்விக்கு பதிலாக மெய்யான அறிவியலை நிலைநிறுத்துவதே என்னுடைய கடமை" என்று கூறுகிறார்.

அவருக்கடுத்து ஜான் முர்டாக் நூறு வருட நூல்களுக்கான ஒரு நூலடைவைத் தயார் செய்கிறார். அது ஒரு மிகப் பெரிய பணி. அதாவது நூறாண்டுகளில் எந்த வகையான நூல் வெளிவந்தது? என்ன உள்ளடக்கம் கொண்டிருந்தது? யார் எழுதியது? எல்லாவற்றையும் அதில் இடம்பெறச் செய்துள்ளார். அந்த வகையில் அவரும் முக்கியமானவர். 1960களில் தமிழ்நாடு அரசு இந்நூலை மறுபதிப்பு செய்தது.

அடுத்து சாமுவேல் என்றொருவர் ரங்கூனிலிருந்தவர். அவர் அந்தக் காலத்திலேயே செக்ஸாலஜி எழுதுகிறார். சிசுவை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றிய அந்த நூலின் பெயர் ‘மானுட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்பதாகும்.

அப்படியென்றால் அறிவியலைப் பற்றி தமிழர்கள் எதுவுமே எழுதவில்லையா?

su narendran 304ஆம், எழுதியிருக்கிறார்கள். ஆனால் முதன்முதலில் எழுதியவர் ஒரு நாயுடு. அவர் ‘சாரீர வினாவிடை’, ‘பிரசவ வைத்தியம்’ உள்ளிட்ட ஏழு நூல்கள் எழுதியுள்ளார். ஏழு நூல்களின் பெயர்களும் சமஸ்கிருதமாகத்தான் இருக்கிறது. கிறீனின் நூலின் பெயரே ‘அங்காதிபாதம் சுகரணவாதம் உற்பாலனம்’ என்பதுதான்.

அந்தக் காலத்தில் பேச்சுமொழியில் சமஸ்கிருதமே அதிகளவில் புழங்கியது. மேலும் விஞ்ஞானம் என்பது வடமொழியில்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதோடு ஆங்கிலம் - தமிழ் அகராதிகள் இல்லை. ஆங்கிலம் - சமஸ்கிருதம் என்பதைத்தான் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் தலைப்பிலிருந்து உள்ளடக்கம் வரை அப்படித் தானிருந்தது. இருப்பினும் அவர் தமிழ்க் கலைச்சொல் கோட்பாட்டை உருவாக்கி - கலைச்சொல் முதலில் தமிழில் தேடவும் இல்லாவிடில் சமஸ்கிருதத்தில் இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் ஆங்கிலத்தில் இருக்கலாம் என்கிறார். இப்படிச் சொன்னாலும் அவரது நூல்களின் தலைப்புகள்கூட வடமொழியில்தான் உள்ளன.

அதன் பிறகு வந்த மா.ஜெகந்நாத நாயுடு என்பவர் ‘சாரீர சாஸ்திரம்’ என்றுதான் பெயர் வைக்கிறார்.

அண்மைக் காலத்தில் தமிழகத்தில் அறிவியலை பரந்துபட்டு கொடுத்தவர் டாக்டர் அ.கதிரேசன் அவர்கள்தான். அதற்கு மிகவும் துணைநின்றது உடைபடாத சோவியத் யூனியனும் தமிழகத்தின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும்தான். ஏறத்தாழ 60 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகளை ‘தாமரை’ மாத இதழில் தொடராக எழுதிவந்த இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அவரைத் தமிழகத்தின் அறிவியல் முன்னோடி என்று சொல்லலாம்.

இதேபோல இலங்கையில் எப்ஆர்சிஎஸ் படித்த டாக்டர் சின்னதம்பி என்பவரும் ஒரு முன்னோடிதான். இவர் ஒரு மகளிர் மருத்துவ நிபுணர். ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். அதன்பிறகு ஓய்வு பெற்றபிறகும்கூட தமிழில் நூல்கள் வெளிவருவதற்காக தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவு செய்துள்ளார். அவருடைய நூல்கள் எதிலும் சமஸ்கிருதம் கிடையாது. எங்கும் கிரந்த எழுத்துகளும் கிடையாது. ஜெல்லி என்பதை யெல்லி என்பார். ஜப்பான் என்பதை யப்பான் என்பார். கிட்னி என்பதை குண்டிக்காய் என்பார். ஆக அவரது நடை கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருக்கும். ஆனால் நூலின் பெயரை ‘நலம் பேணல் விஞ்ஞானம்’ என்று தமிழ்ப்படுத்தி எழுதியிருப்பார்.

நல்ல தமிழில் கொண்டுவர வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அவர் மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்துவிட்டு கருத்துக்கு முதலிடம் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது நாம் கருத்துக்கு முதலிடமும் மொழிக்கு அடுத்த இடமும் கொடுக்கிறோம். அதோடு இப்போது இலக்கண நெகிழ்வும் வந்துவிட்டது. அதாவது குளோரோபார்ம் என்பதை க்குளோரோபார்ம் என்று இப்போது எழுதுவதில்லை.

சிங்கப்பூரில் பூரணஜீவியம் என்ற செக்ஸாலஜி நூல் வந்திருக்கிறது. ஏனெனில் காலனிய காலத்தில் கிரந்தி நோய்கள் அதிகம். காரணம் அப்போது சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காலம். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் அந்த நோயின் காரணத்தால் ஆண்குறியை வெட்டி எடுத்திருக்கிறார்கள். ஆக செக்ஸாலஜி குறித்த நூல்கள் சிங்கப்பூரிலும் வந்திருக்கிறது. தமிழிலும் வந்திருக்கிறது.

தமிழ்வழிக் கல்வி எனும் குரல் வழங்கிவரும் வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். அதன் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது?

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ராஜாஜி. அவர் அறிவியல் நூல்கள் எழுதியவர். ஆனால் அந்த நேரத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அரசு அமைத்த கலைச்சொல் குழுவில் வடமொழி ஆதிக்கம் வந்து விடுகிறது. அதற்காகத்தான் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தின் வழியாகப் போராடுகிறார். அதனால் சிறிதுகாலம் நன்றாக இருந்தாலும் பிறகு 1940இல் சீனிவாச சாஸ்திரியைக் கொண்டு வந்து முழுமையாக சமஸ்கிருத மயமாக்கல் தொடர்கிறது. மறுபடியும் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை இதனை எதிர்க்கிறார். இதற்காக நெற்றிப்பட்டையணிந்த முழுமையான சைவரான இவர் தந்தை பெரியாருடன் கைகோர்த்துக் கொள்கிறார்!

பெரியார் ‘விடுதலை’ இதழில் 6-11-46யிலும் 11-6-46யிலும் ‘குதிரைக்கு முன் வண்டி’, ‘கலைச்சொல்லாக்கத்தில் கொலையா?’ என்று இரண்டு தலையங்கங்கள் எழுதுகிறார். அதற்குப்பின் அந்தக் குழுவுக்குத் தலைவராக வந்தவர் சாமிநாதன் என்ற ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு ஆங்கிலப் பேராசிரியர் எதற்கு என்று இ.மு.சுப்பிரமணிய பிள்ளை எதிர்க்கிறார்.

அப்போது வையாபுரி பிள்ளையை குழுவில் உறுப்பினராகப் போட்டாக வேண்டும் என்று சீனிவாச சாஸ்திரி விரும்புகிறார். ஆனால் வையாபுரி பிள்ளை சில தமிழ்ச் சொற்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறார். நூல் என்பதற்கு ‘சாஸ்திரம்’ என்றுதான் சொல்லவேண்டும் என்று வாதாடுகிறார். ஒருமுறை இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடமும் இன்னொரு முறை சேலம் ராமசாமி கவுண்டரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டு வையாபுரி பிள்ளை கூடியிருந்த குழுவின் கூட்டத்­திலிருந்து வெளியேறிச் சென்று விடுகிறார்.

பிறகு இ.மு.சுப்பிரமணிய பிள்ளையின் சொற்களை ‘ஏ’பிரிவு என்றும் வையாபுரி பிள்ளையின் சொற்களை ‘பி’ பிரிவு என்றும் இரண்டையும் இணைந்தவற்றை ‘சி’ பிரிவு என்றுமாக 1946இல் ஒரு கலைச்சொல் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆக இந்தப் போராட்டம் 1932லிருந்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. தமிழ் வரக்கூடாது என்பதில் குறிப்பிட்ட பிரிவினர் முனைப்பாக இருந்துள்ளார்கள். 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஏ.எல்.லட்சுமணசாமி முதலியார் எந்த நேரத்திலும் தமிழ் வரவேண்டும் என்று விரும்பியதே கிடையாது. 1970இல் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரும் அவரது சகோதரர் ஏ.எல்.ராமசாமி முதலியாரும் சேர்ந்து ‘ஆங்கில ஆதரவு மாநாடு’ நடத்தினார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கில ஆதரவு மாநாடு, ஈரோட்டில் ஆயிரம் பேர் தமிழ்த் தேர்வு எழுதாமல் வெளியில் வருகிறார்கள். இதற்கு அப்போதைய ஸ்தாபன காங்கிரஸ் (சிண்டிகேட்) கட்சியும் துணை போகிறது. அந்நேரத்தில் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதி குன்றக்குடி அடிகளாரும் கி.ஆ.பெ.விசுவநாதமும் கலைஞரிடத்தில் போய் தமிழ்வழிக் கல்வி உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள்! என்ன காரணத்தாலோ கலைஞரும் ஒப்புக்கொண்டு விடுகிறார்.

கலைஞர் மறுபடியும் 1990இல் மெட்ரிகுஷேன் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழி வர வேண்டும் என்று அரசாணை கொண்டு வருகிறார். அதையும் மெட்ரிகுலேஷன் கூட்டமைப்பு நீதிமன்றம் சென்று தோற்கடிக்கச் செய்துவிடுகிறது (சில தென்மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளைப் பயில வேண்டும் என்ற விதிமுறை நடப்பில் உள்ளது). ஆக எப்படியும் தமிழகத்தில் தமிழ் வந்துவிடக்கூடாது என்பதில் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளும் ஆங்கிலம் தெரிந்த அறிஞர்களும் உறுதியாக இருந்தார்கள் - இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

தமிழ்வழிக் கல்விக்கு வேறு என்ன மாதிரியான முயற்சிகள் தமிழகத்தில் நடந்தன?

1983இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வந்த பின்னால் முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் தமிழில் பொறியியலைக் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் முறையிடுகிறார். அரசும் ஒத்துக்கொண்டு 600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தந்த கல்லூரி என்று முடிவான பின்னர் தொழில்நுட்பக்கழகம் இதை ஒத்துக் கொள்ளவில்லை என்று காரணம் கூறி தமிழ்வழிப் பொறியியல் படிக்க விரும்பியவர்கள் ஆங்கிலவழிக் கல்விக்குச் செல்ல நேரிட்டது.

ஆனால் அந்த நேரத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியலில் தலா 13 நூல்கள் தமிழில் வெளிவந்து விட்டன. தமிழ்வழியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் மாநில அரசும் அமைதியாக இருக்க நேரிட்டது.

தமிழில் கலைச்சொல் உருவாக்கம் என்பதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கருதுகிறீர்கள்?

கலைச்சொல்லாக்கம் என்பதை ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக செய்து கொண்டிருக்கிறார்கள். முதன்முதலில் யுரேனியஸ் ‘பூமிசாஸ்திரம்’ எழுதும்போதே 60 கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார். அதன்பின் பிஷ்கிறீன் கலைச்சொற்களைப் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதுகிறார். அதற்குப் பிறகு வந்த எல்லா நூல்களிலும் கடைசியாக சில கலைச்சொற்கள் பட்டியலை வெளியிடுகிறார்கள். இப்படித்தான் இருந்ததே தவிர அவற்றை தரப்படுத்தி முறைப்படுத்தி கொண்டு வரப்படவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பிறகு இதில் ஆர்வங்காட்டி கலைச்சொல்லாக்கத்தில் ஐந்து தொகுதிகள் வரை வெளிவந்தன. அறிவியல் களஞ்சியம்கூட வெளிவந்தது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் என்று தனித்தனியாக ஒதுக்கப்பட்டு 11 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கலைச்சொல் பேரகராதி ஒன்றும் கொண்டு வரப்பட்டது. அது மிகவும் பயனுடையதாக உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக அகராதி மிகச்சிறந்த முறையில் அமைந்திருக்கிறது. அது செம்மைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். தமிழ் மருத்துவத்தைப் பற்றி மணவை முஸ்தபா சில அகராதிகளைக் கொண்டுவந்தார். பட்டுக்கோட்டை­யிலிருந்து ச.சம்பத்குமார் என்பவரும் சென்னை டாக்டர் சாமி.சண்முகம் என்பவரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து ஜோசப் என்பவரும் கலைச்சொல் அகராதிகளைக் கொண்டு வந்துள்ளனர். எனவே தமிழில் கலைச்சொல் இல்லை. அதனால் தமிழில் அறிவியல் நூல்களையோ மருத்துவ நூல்களையோ எழுத இயலாது என்று இனிமேல் யாரும் கூற முடியாது. அவ்வளவு கலைச்சொற்கள் இருக்கின்றன.

அண்மைச் செய்தியாக அகரமுதலி செயலகத்தில் 14 லட்சம் சொற்களை அவர்கள் திரட்டிவைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் திரட்டி வைத்திருத்தல் மட்டும் போதாது. அவை சரிவர தரப்படுத்தம் செய்யப்படவேண்டும். ஏனெனில் மருத்துவத்தில் சொல்லுக்குப் பொருள் தெளிவாக இருக்கவேண்டும். கருத்துத் தெளிவு இருக்க வேண்டும். கருத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஆகவே தரப்படுத்துவதை முறையாகச் செய்ய வேண்டியது மிகமிக அவசியம்.

தமிழ்வழிக் கல்வியின் இன்றைய நிலை என்ன?

இப்போதிருக்கிற தமிழக அரசு ரூ 2 கோடி ஒதுக்கி ‘முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்’ எனக் கொண்டு வந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வழியாக ஓர் அமைப்பை நிறுவியுள்ளது. அதில் 100 மருத்துவம் உள்ளிட்ட அறிவியல்அறிஞர்கள் பங்காற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நூலாக இதுவரை 120 நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் நிறைய வரவேண்டியுள்ளது. இதன் உள்நோக்கம் தமிழில் மருத்துவமும் மற்றைய தொழில் நுட்பங்களும் வர வேண்டும் என்பதுதான். மருத்துவக் கல்லூரி தமிழ் வழியில் தொடங்க தண்டையார்பேட்டையில் புற்றுநோய் மருத்துவமனைக்குப் பக்கத்தில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கியாகி விட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அது விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, சிபிஎஸ்சி என மூன்று பிரிவாக பாடத்திட்டங்கள் இருக்கும் நிலையில் சீரான கல்வி என்பது எப்படி சாத்தியப்படும்? ஐரோப்பிய நாடுகளில் அனைவருக்கும் ஒரே கல்விமுறைதான் உள்ளது. இங்கு அப்படியில்லை. கல்வி பரப்பல், கல்வி பெறும் உரிமை இவையெல்லாம் சமச்சீராக இல்லை. கிராமச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை இவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதில்தான் நீட் இடையூறாக இருக்கிறது. ஒரு மாணவர் நீட் தேர்வை எதிர்கொள்ள ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் செலவு செய்து படிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒரு கிராமத்து மாணவனால் எப்படி செய்ய முடியும்? இதன் உள்ளர்த்தம் எல்லோருக்கும் கல்வியைக் கொடுக்கக்கூடாது அல்லது எல்லோருக்கும் ஒரேமாதிரியான கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேல் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள உங்களின் அனுபவங்கள் குறித்து...

இரவு நேரங்களில்கூட எனக்கு சில நோயாளிகள் தொலைபேசியில் பேசுவார்கள். ‘டாக்டர் என்னுடைய அம்மாவை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள், இல்லையெனில் அவர் இறந்து போயிருப்பார்’ என்றெல்லாம் சொல்லும்போது எனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்ததுபோல மகிழ்ச்சியாகிவிடும்.

துபாயில் ஒருவருடைய அம்மாவுக்கு இரவில் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது. உடனே அவரது வாயில் சர்க்கரையைக் கொடுத்து மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார்.அப்போது அங்கிருந்த மருத்துவர் இவருக்கு சர்க்கரை கொடுக்க வேண்டும் என்று உனக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் எங்க தஞ்சாவூர் டாக்டர் ஒரு நூலில் இப்படி எழுதியிருந்தார் என்று சொல்லியிருக்கிறார். சர்க்கரையின் அளவு குறைந்தால் இறந்து விடுவார்கள் என்பதால் சர்க்கரையைக் கொடுத்து மருத்துவமனைக்குச் செல்லச் சொன்ன அந்த டாக்டருக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அதனால் அவர் அந்த இரவில் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

இதுபோன்ற நெகிழ்வான சம்பவங்கள் நிறைய உண்டு.

பொதுவாக தமிழகத்தில் இன்றைய மருத்துவம், மருத்துவர்கள் பற்றிக் கூறுங்களேன்.

மருத்துவர் என்பவர் சமுதாயத்துடன் ஒட்டி வாழவேண்டும். அதாவது நோயாளியிடம் இயல்பாகப் பேசவேண்டும். அவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கேட்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் மருத்துவர்களுக்கு நேரம் போதவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தலையைத் தூக்கிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்காக பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளை முழுமையாக கவனிக்க முடிவதில்லை. அவர்களை விரைவாகக் கவனித்து வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் நேரம் அனுமதிப்பதில்லை. ஒரு மருத்துவமனைக்கு இவ்வளவு நோயாளிகள் என்ற விகிதாச்சாரப்படி மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

பெரிய பெரிய கட்டிடங்களால் நாம் மருத்துவத்தை வளர்க்கமுடியாது. தகுந்த மருத்துவர்கள் தகுந்த நேரத்தை மக்களுக்காக செலவு செய்தாலே நாம் சரியான மருத்துவத்தை அளிக்க முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவர்கள் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை தங்களை மேம்படுத்திக்கொள்ள தொடர்ச்சியாக மருத்துவத்தை இன்றளவும் தெரிந்து கொள்வதற்காக புத்தொளி வகுப்புகளுடன் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அந்த நடைமுறை இங்கு இல்லை. இங்கு இந்திய மருத்துவக் கழகக் கூட்டங்களில் 1000 பேர் உறுப்பினர்கள் இருந்தால் 300பேர்கூட கலந்துகொள்வதில்லை. மருத்துவ மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகளைப்போல இங்கு மருத்துவர்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அவசியம் தரப்படவேண்டும். அரசு இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நீங்கள் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்கள். அதைப் பற்றிக் கூற முடியுமா?

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் முனைவர் பட்டம் பதிவு செய்வதற்கு போதிய முறையான வழிவகைகள் செய்யப்படவில்லை. கலைத்துறை­யிலுள்ள பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றால் அவர்களுக்குக் கிடைப்பதுபோல மருத்துவர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும் கிடையாது. ஏன் இந்தப் பாகுபாடு எனத் தெரியவில்லை. விதிவிலக்காக என்னைப்போன்ற சிலர் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கிறார்கள். இதைச் செய்தாலும் பெரிய அங்கீகாரம் என்றெல்லாம் ஏதுமில்லை. ஆனால் இந்தத் துறையில் நாம் முதிர்ச்சி பெற்றவராக ஆவதற்கு இது உதவும். கூடுதல் மதிப்பாக சொல்லிக் கொள்வதோடு அலங்காரமாக முனைவர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளலாம்!

தமிழில் வெளிவந்த - வெளிவரும் மருத்துவ இதழ்கள் குறித்துக் கூறுங்கள்...

தமிழில் தொடக்ககாலத்தில் அதிகமாக வந்தவை மருத்துவ இதழ்கள்தான். ஹோமியோபதிக்கென்று 50 இதழ்கள் வெளிவந்தன. ஆயுர்வேதத்திற்கென்று 50 இதழ்கள் வெளிவந்தன. சித்த வைத்தியத்திற்கும் நிறைய இதழ்கள் வெளிவந்தன. இப்போது அதுபோல் வருவதில்லை. சமீபகாலத்தில் டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர் ஆகியவை வெளிவந்தன.‘ நல்வழி’ என்றொரு இதழ் பெரும்பாலும் மருத்துவம் சார்ந்து வெளிவந்தது. அறிவியல்ஒளி, அறிக அறிவியல், கலைக்கதிர் போன்ற இதழ்கள் வெளிவந்தன. கொரோனா காலத்தில் இந்த மூன்றைத் தவிர பெரும்பாலான இதழ்கள் நின்றுவிட்டன. கலைஞர் ஆட்சிக் காலத்தில் ‘அறிவியல் தமிழ்’ என்றொரு இதழ் வெளிவந்தது அதுவும் தற்போது வருவதில்லை.

சென்னையிலிருந்து ந.சு.சிதம்பரம் என்பவர் அவரது சொந்த முயற்சியில் ‘அறிவியல் ஒளி’ எனும் பல வண்ண இதழைக் கொண்டு வருகிறார். இதற்கு தமிழ்நாடு அறிவியல் கழகம் உதவி செய்கிறது. குன்றக்குடி ஆதினம் சார்பில் ‘அறிக அறிவியல்’ எனும் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. யுஜிசி நிதியுதவியில் ‘கலைக்கதிர்’ எனும் இதழ் வந்துகொண்டிருக்கிறது. இவையெல்லாம் 7000, 8000 என்ற எண்ணிக்கையோடு நின்று விடுகின்றன. ஆனால் மக்களிடம் இவ்விதழ்கள் குறித்து எந்த ஆர்வமும் இல்லை.

மாணவர்களுக்கு தமிழ்வழி மருத்துவம் என்பது கிடைத்தால் என்னென்னவெல்லாம் சாத்தியப்படும் எனக் கருதுகிறீர்கள்?

நாம் நோயாளியிடம் தமிழில்தானே பேசுகிறோம். அப்படியானால் மருத்துவத்தைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதில் நாம் விருப்பமாகத்தானே இருக்க வேண்டும். தெரியாத்தனமாக ஒரு கிராமத்து மாணவன் நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவராகிவிட்டால் அவன் தமிழில்தானே நோயாளிகளை கவனிப்பான்?

என்னுடன் படித்த ஐந்து மருத்துவ மாணவர்கள் ஆங்கிலத்தில் படிக்கமுடியாமல் முதலாண்டு தேர்ச்சிபெற இயலவில்லை என்பதால் மருத்துவக்கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இது எனக்கு மிகப் பெரிய வலி.

ஆக அதுபோன்று ஆங்கிலம் படிக்க இயலாத மாணவர்களுக்கு தமிழில் நூல்கள் வந்துவிட்டால் எளிதாகப் படித்து ஆங்கில வழி மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கிவிடுவார்கள். ஆக மருத்துவம் படிப்பவர்களுக்கு தமிழ் நூல்கள் மிக உதவியாக இருக்கும். இரண்டாவதாக தடுப்புமுறை மருத்துவம் போதிக்கப்படும். மேலும் அரசுக்கு செலவும் குறையும். அரசின் வேலைப்பளுவும் குறையும். எனவே ஒவ்வொரு மருத்துவரும் இதைப்பற்றி புரிந்து எழுதவேண்டும்.

தமிழ்வழிக் கல்வி படித்த மருத்துவர்கள்தான் இன்றைக்கு மருத்துவ சேவைபற்றி அதிகளவில் எழுதுகிறார்கள். ஆங்கிலவழிக் கல்வி படித்தவர்கள் குறைவாக எழுதுகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. தற்போதைய அரசின் முயற்சியில் 100 மருத்துவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு எழுதி வருகிறார்கள். ஆக தேவை அதிகமாகும்போது இவர்கள் எழுதத் தயாராகிறார்கள்.

இவ்வாறாக ஏராளமான நூல்கள் தமிழில் அதிகமாக வெளிவருகிறபோது கலைச்சொற்கள் தானாகப் பெருகும். அவை தானாகத் தரப்படுத்தப்படும். ஆனால் அறிவியல் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லக் கூடிய ஒன்று. ஆகவே ஒன்றை எழுதிவிட்டால் அது நாட்பட நிலைத்திருக்கும் என்று நம்புவதற்கில்லை. இன்று வருகிற ஒரு அறிவியல் புத்தகம் இரண்டாண்டுகள் கழித்து திருத்திப் புதுப்பிக்கப்பட்டு வெளிவர வேண்டிய சூழலிருக்கிறது.

தற்போதைய சூழலில் தமிழ்வழி மருத்துவக் கல்வியை சாத்தியப்படுத்த என்னென்ன செய்யலாம்?

புதுப்புது கண்டுபிடிப்புகளையும் புதிய அறிவியல் சிந்தனைகளையும் சேர்த்துக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் நிரந்தரமாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதைப்போல கலைச்சொல்லாக்கத்திற்கும் அவற்றைத் தரப்படுத்துவதற்காகவும் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இவையெல்லாம் அமைக்கப்பட்டால் தமிழ்வழிக் கல்வி என்பது இயலாத காரியமே கிடையாது.

வளர்ந்த நாடுகள் தாய்மொழிக் கல்வியில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த முன்னெடுப்பைச் செய்து விட்டன. அந்நாடுகள் பொருளாதாரத்தில் பண்பாட்டில் பகுத்தறிவில் சிறந்து விளங்குகின்றன.. ஜெர்மன், ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற பெரிய நாடுகளோடு நேற்றைக்கு சுதந்திரம் வாங்கிய சோமாலியாவில்கூட ஆங்கிலேயர் ஆட்சிபோய் சுதந்திரம் பெற்ற பிறகு ஆங்கிலத்தை உதறித் தள்ளிவிட்டு தம்முடைய மொழியை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் தாய்மொழிக் கல்வியில் ஆர்வமும் ஈடுபாடும் வர வேண்டும்.

பொதுவாக சிலர் சொல்கிறபடி ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதமுடியாது என்பதில் உண்மையில்லை. உலகளவில் எழுதப்படும் மருத்துவக் கட்டுரைகளில் சுமார் 40 விழுக்காடு மட்டுமே ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. மீதமெல்லாம் ருசிய, ஜப்பானிய, ஜெர்மானிய மொழிகளில்தான் எழுதப்படுகின்றன.

எனவே ஆய்வு நூல்கள் நம்மிடம் இல்லை, தமிழ்ப் புத்தகங்கள் நம்மிடம் இல்லை, கலைச்சொற்கள் இல்லை. ஆகவே முடியவே முடியாது என்று பேசுவதற்கு இயலவே இயலாது. நம்மிடம் கலைச்சொற்கள் உள்ளன. நூல்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். தேவை பெருகும்போது இன்னும் பெருகும். வெளிநாட்டு மொழிக் கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொள்ள முடியும். ஆகவே எதிர்காலத்தில் தமிழ்வழி மருத்துவக் கல்வி சாத்தியப்படும் என்றே சொல்லமுடியும்.

இது தொடர்பாக அரசு என்ன செய்யவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

முதலில் நாடு முழுவதும் அறிவியலைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். படித்தவர்களுக்குக்கூட அதில் ஆர்வமும் புரிதலும் இருப்பதில்லை. கல்விப் பாடங்களில் முழுமையாக அறிந்துகொள்ளும் நிலையுமில்லை. இந்நிலையில் அறிவியலைப் பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதைவிட மக்களை நோக்கி அறிவியலைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறி­வியக்கத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது தற்காலத் தேவையாகும்.

தமிழில் அனைத்துவிதமான உயர்கல்விச் செயல்பாட்டு நடவடிக்கைகளும் அறிவியல் சோதனை முயற்சிகளும் இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் சாத்தியப்படும் என்பதில் எவ்விதமான அய்யமுமில்லை. அதற்கான சூழலை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய தமிழகஅரசு செயல்படுத்திவரும் திட்டங்களில் ஒன்றான ‘மக்களை நோக்கி மருத்துவம்’ என்பதைப்போல ‘மக்களை நோக்கி அறிவியல்’ எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று விளக்குவதன் மூலமாக படிப்படியாக தாய்மொழி வழியாக அறிவியல், மருத்துவம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் சூழலை உருவாக்க இயலும்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறைக்கும் மருத்துவத்துக்குமான தொடர்பை விளக்கமுடியுமா?

ஆங்கில மருத்துவத்தில் உணவுத் தடுப்புமுறை மருத்துவம் மிகக் குறைவாகத்தான் சொல்லப்படுகிறது. உணவு மருத்துவம் என்பதும் குறைவுதான். ஆனால் உணவு மருத்துவம்தான் வாழ்க்கை என்று சொல்கிறது சித்தமருத்துவம். வாயு, பித்தம், கபம் என்பவற்றை உணவினாலேயே சரி செய்யலாம் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. அலோபதிக்கும் இவற்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இப்போது உணவுச்சந்தையில் கிடைக்கிற துரித உணவுகள் மைதாவினால் செய்யப்படுகின்றன. மைதாவில் தயாரான உணவை உண்ணும்போது அடுத்தநாள் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மேலும் மைதாவில் எந்தவிதமான சத்துப்பொருளும் கிடையாது. என் நண்பரொருவர் மைதாவை ‘குப்பை உணவு’ எனக் குறிப்பிடுவார். துரித உணவுகளில் நான்குவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது மணத்திற்காகவும் ருசிக்காகவும் அஜினமோட்டோ, அதிக மசாலா, அதிகமான உப்பு போன்றவை சேர்க்கப்படுவதால் அதிகளவில் இளம்பிள்ளைகளுக்கு ஊளைச்சதை உண்டாகிறது. பெண்களுக்கு மாதவிலக்குச் சிக்கல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இட்லியை சாப்பிடச் சொல்வதற்கான காரணம் அதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுடன் தேவையான அமினோஆசிட்களும் இருக்கின்றன. ஆக இட்லி ஒரு மிகச்சிறந்த உணவு. சிறுகுழந்தை முதல் நோயாளி மற்றும் முதியவர்கள் வரை எளிதாகச் செரிமானம் ஆகக்கூடிய உணவு இட்லி. ஆக அந்தந்த நோய்க்கான உணவை ஒவ்வொரு மருத்துவரும் அறிந்திருக்கவேண்டும். அண்மையில் ஸ்டான்லி மருத்துவமனையில் வயிற்று நோய்களுக்கான சிகிச்சையில் பழைய சோற்றை உண்ணக் கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில் அதிகளவிலான லேக்டோபசில்லஸ் இருப்பதாகவும் இதனால் பல நோய்கள் குணமாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பழைய சோற்றுடன் வெங்காயம் சேர்த்து உண்கிறபோது கூடுதலான நோய் எதிர்ப்பாற்றல் உடலுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு பாக்கெட் நொறுக்குத் தீனிகள் பெரும் கேடுகளைத் தருகின்றன. இன்றைக்கு கொழுக்கட்டை, சுண்டல் போன்ற வீட்டு உணவுகள் மறைந்து போய்விட்டன. இவை உடலுக்கு ஊறு விளைவிக்காதவை. அவற்றை குழந்தைகளுக்குச் செய்து தரவேண்டும்.

ஒவ்வொரு காய்கறிக்கும் சில நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மையுண்டு. உதாரணமாக கேரட் நுரையீரல் கேன்சர் நோயாளிகளுக்குக்கூட மிகச்சிறந்த உணவு. புகைபிடிப்பவர்களுக்கு உண்டாகும் நுரையீரல் பாதிப்பை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உண்டு. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சி, பூண்டு, பச்சை வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவற்றையெல்லாம் ஒவ்வொரு மருத்துவர்களும் நோயாளிகளுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

தற்போது தாங்கள் செய்துகொண்டிருக்கும் நூலாக்க முயற்சிகள் குறித்து...

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தின் வரலாறு, வளர்ச்சி இவைபற்றி முழுமையாக எழுதி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு அளித்துள்ளேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தபோது நானெழுதிய ‘மருத்துவம் வளர்த்த தமிழ்’ எனும் நூலை தமிழக அரசு அச்சாக்கி விரைவில் வெளியிடவுள்ளது.‘தமிழ்வழிப் பயிற்றுமொழி கனவும் நனவும்’ என்று தமிழில் வெளியான எனது நூல் தமிழக அரசு சார்பில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.

தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி வரவேண்டும் என்பது எனது கனவு. அனைத்துத் துறைகளிலும் தமிழ்வழிக் கல்வி மிக விரைவில் வந்தடையக்கூடும் என்பது எனது நம்பிக்கை. இதற்கு மக்களிடம் முழுமையான தாய்மொழிப் பற்றும் எழுச்சியும் வரவேண்டும். ஆங்கில மோகத்திலிருந்து விடுபட்டு வளர்ந்த நாடுகளைப்போல் ஒவ்வொருவருக்கும் தாய்மொழிப் பற்று முழுமையாக வரவேண்டும்.

வேளாண் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்வழிப் பயிற்சி அளிக்க அரசு அறிவித்ததன் தொடர்ச்சியாக மருத்துவம், பொறியியல் உட்பட எல்லா தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் தீட்டி விரைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் வளர்ந்த நாடுகளைப்போல் நம் தமிழ்நாடும் பொருளாதாரம். பகுத்தறிவு, பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்க முடியும்.

டாக்டர் சு.நரேந்திரன் அவர்களின் கனவும் நம்பிக்கையும் விரைவில் கைகூடும் எனக் கூறி புத்துணர்வோடு விடை பெற்றோம்.

நேர்காணல்: ஜி.சரவணன்