நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் என பல்வேறு சூழலியல் பிரச்சனைகளை பற்றி பரவலாக அறியப்பட்டுள்ளது. ஒளிமாசு என்பது ஒரு சூழலியல் பிரச்சனையாக பரவலாக அறியப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லை. ஒளி மாசுபாடும், ஒலி மாசுபாடும் பெரும்பான்மையானவர்களால் ஒரு சீர்கேடாகவோ, பிரச்சனையாகவோ உணரப்படவில்லை என்பதும் மிகப் பெரும் பிரச்சனை தான். ஒளி, ஒலி மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மற்ற சூழலியல் பிரச்சனைகளை காட்டிலும் இதை நம்மால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். சமூக அளவில் முடிந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து மக்கள் செயல்பட்டால் ஒளிமாசைக் குறைக்க முடியும். குறைந்தது நம் சுற்றியுள்ள பகுதிகளிலாவது ஒலி, ஒளி மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

light pollutionமின்விளக்குகளின் கண்டுபிடிப்பு ஒரு புரட்சிகர மாற்றத்தை இந்தப் புவிச் சூழலில் ஏற்படுத்தியது. அதனால் மனிதர்களின் பகல் பொழுதுகள் நீண்டன. இரவுகளை பகலாக்கிய மின்விளக்குகள் புவிச்சூழலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதில் நேர் நிறைத் தாக்கம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் நினைத்த பணிகளை நினைத்த நேரத்தில் செய்ய முடிகிறது. தகவல் தொடர்பு, போக்குவரத்து அனைத்திலுமே பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் வரம்புகளை கடந்தவாறே இயற்கை அறிவியலிலும், தொழில் நுட்பங்களிலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன. பல அறிவியல் நுட்பங்களையும், அவற்றின் புதிய பரிமாணங்களையும் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்விளக்குகளின் அதீதப் பயன்பாடு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 ஒரு காலத்தில் இரவில் நிலா பார்த்தல், விண்மீன்கள் நிறைந்த வான் பார்த்தல் என்பதெல்லாம் அன்றாட வழக்கமாக இருந்தது. அது மனிதர்களின் கற்பனை வானை விரிவுபடுத்தியது. நிலா சோறு சாப்பிட்டு, குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, வேடிக்கையாக விளையாடுவதற்கான சூழல் இருந்தது. ஆனால் இன்றைக்கு அத்தகைய சூழல் இல்லை. மின்விளக்குகளால் ஏற்பட்ட ஒளிமாசுவே அதற்குக் காரணமாக உள்ளது. இரவின் நிலவொளி, விண்மீன் ஒளி எல்லாவற்றையும் மின்னொளி இருட்டடிப்பு செய்துவிட்டது.

ஒளிமாசுபாடு என்பது தொழில்மயம், நகரமயம் ஆகியவற்றின் துணைவிளைவுகளில் ஒன்று. இன்று புவியில் பாதிக்கு மேற்பட்டோர் நகர சூழலில் வாழ்கிறோம் கடைத் தெருக்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கேளிக்கை அரங்கங்கள், திரையகங்களில் அதிக ஒளிரும் தன்மை கொண்ட விளக்குகள் நீண்ட நேரம் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளிலும் சரி, வெளிப் புறங்களிலும் சரி மிகப் பிரகாசமான மின்விளக்குகள் நெடுநேரம் எரிக்கப்படுகிறது. தெருவிளக்குகள், விளம்பரப் பலகைகளின் அலங்கார விளக்குகள், பேருந்துகள், கடைத் தெருக்களில் சுழலும் பல்வண்ண விளக்குகள் என அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாக மின்விளக்குகள் அதீத ஒளியுடன் எரியவைக்கப்படுகின்றன. அது ஒளி மாசுபாடாக தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மிகப் பெரிய வீடுகளில் வசிப்போர், மாடி வீடுகளில் வசிப்போர் எல்லா அறைகளில் உள்ள விளக்குகளையும் போட்டு வைத்திருக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. புழக்கத்தில் உள்ள பகுதியில் மட்டும் விளக்கு போடும் பழக்கம் பெரும்பாலும் யாருக்கும் கிடையாது. மாலை 6 மணி ஆகிவிட்டால் அனைத்து விளக்குகளையும் போட்டு வைத்து நள்ளிரவு வரை அணைக்காமல் வைத்திருப்பது வழக்கமாகிவிட்டது. வீடுகளுக்குள் மட்டுமல்லாமல் வெளிப்புறங்கள், வாகன நிறுத்துமிடம் என எல்லா இடங்களிலும் விளக்குகளை போட்டு வைப்பதாலும் ஒளிமாசுபாடு அதிகரிக்கிறது. எல்லா அறைகளிலும் எந்நேரமும் விளக்குகளை போட்டு வைத்திருப்பதும், கடைத் தெருக்களில் அதிக அளவு ஒளிரும் விளக்குகளை நேரங்காலம் அறியாது 24 மணி நேரமும் பயன்படுத்துவது நம் அனைவரையும் பாதிக்கிறது.

மின்விளக்குகளின் பயன்பாட்டை தவிர்க்க முடியாது இரவில் விழித்திருப்பதற்கு, வேலை செய்வதற்கு, பயணம் செய்வதற்கு என எல்லாவற்றுக்கும் மின்விளக்குகள் அவசியம். மின்விளக்குகள் பயன்படுத்தாவிடில் மனித வாழ்க்கையே உருக்குலைந்து முடங்கிப் போகும்.

எந்த இடத்தில் ஒளி தேவைப்படுமோ, அங்கு மட்டும் ஒளி பெறச் செய்யாமல், எல்லா இடத்திற்கும் பரவும் ஒளி விதமாக மின்விளக்குகளை பயன்படுத்துவதால் தான் ஒளிமாசுபாடு ஏற்படுகிறது. தெளிவாக விண்மீன்களை, வான் பொருட்களையே பார்க்கமுடிவதில்லை. விண்மீன்கள் மின்சார விளக்குகளால் மாயமாகிவிட்டது. ஆனால் தவிர்க்கவேண்டிய ஒளிபயன்பாட்டை கட்டுப்படுத்தி, குறைக்க முடியும். ஒளியை எல்லை மீறிச் செல்லாமல் கட்டுப்படுத்தும் போது ஒளிமாசுபாட்டைக் குறைக்க முடியும். இன்று உலகளவில் மின்சாரப் பயன்பாட்டில் நான்கில் ஒரு பகுதி மின்விளக்குகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பதிலிருந்து எந்தளவிற்கு ஆற்றல் விரயத்திற்கான வாய்ப்புள்ளது என்பதை அறியமுடியும். ஆனால் மற்ற மாசுபாடுகளைக் காட்டிலும் ஒளிமாசுபாட்டை பிராந்திய அளவிலேனும் எளிதில் ஒழுங்குபடுத்தமுடியும்.

ஒளி மாசுபாட்டினை முக்கியமாக மூன்றுவிதமாக பிரித்தறியலாம்.

  1. கண் கூச்சம் (Glaring)
  2. எல்லை மீறல் (Tresspassing):
  3. ஒளிக் குழப்பம் (Clutter):

கண் கூச்சம் (Glaring):

அதிக வெளிச்சத்துடன் விளக்குகளை ஒளிரவிடுவதால் கண்கூச்சம் ஏற்படுகிறது. இதனால் பொருட்களை வேறுபடுத்தி, பிரித்துப் பார்க்கும் கண்ணின் திறன் குறைந்துவிடுவதால் நலக்குறைவை ஏற்படுத்துகிறது.

கண் கூச்சம் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

நலிவுபடுத்தும் கண்கூச்சம் (Discomfort glare):

அதீதமாக ஒளிரும் வெளிச்சத்தை நோக்க நேரிடும் போது ஏற்படும் கூச்சம் நலிவுபடுத்தும் கண்கூச்சம் என குறிப்படுகிறது.

பார்வையை குறைக்கும் கூச்சம்(Disability glare):

அதீத ஒளி சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு கண் பார்வையில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

 குருடாக்கும் கூச்சம்(Blinding glare):

அதீதமாக ஒளிரும் வெளிச்சத்தால் கண்களின் முன் என்ன உள்ளது எனப் பார்க்க முடியாத படி குருடாக்கும் விளைவை ஏற்படுத்துகிறது.

சூரிய ஒளி அதிகம் உள்ள பகல் வெளிச்சத்தில் இருந்துவிட்டு குடியிருப்புக்குள் வரும் போது கண்ணின் கருமணி சுருங்குவதால் (pupil contraction) எதையும் பார்க்க முடியாதபடி கண் இருண்டுவிடும். கண்ணின் கருமணி விரிவடையும் போது (pupil dilation) தான் குறைந்த வெளிச்சத்தில் பார்க்கமுடியும்.

கண் கூச்சத்தை ஏற்படுத்துகிற ஒளிமூலத்தை கவசம் மூலமாகக் கட்டுப்படுத்தலாம். ஒளியின் செறிவை மட்டுப்படுத்தி, தேவையில்லாமல் அதிக ஒளியை பரவாது தடுக்கப்படும். சரியான திரையை பயன்படுத்தியும், கட்டுப்படுத்தலாம், ஒளிக் கவசங்களில் நிறைய வகைகள் உள்ளன. வாகன விளக்குகளுக்குக் கவசமிட வேண்டும். வாகன விளக்குகளில் மையப் பகுதியில் கருப்பு மையால் கவசமிடுவதன் மூலம் கண் கூச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். விளக்குகளின் மேல் தொப்பி போன்ற கவசத்தைப் பொருத்துவதன் மூலம் மேல் நோக்கிய ஒளி பரவலை தடுக்க முடியும்.

எல்லை மீறல் (Tresspassing):

விளக்குகள் ஒளிரும் போது தேவையான இடங்களில் மட்டும் வெளிச்சம் ஏற்படுத்தாது கூடுதலாக தேவையில்லாத இடங்களுக்கும் வெளிச்சத்தை பரப்புவதையே வரம்பு கடந்து செல்லுதல் எனப்படுகிறது. ஒளியின் பரவலை வரம்பிட்டு குறைப்பதன் மூலம் இத்தகைய பிரச்சனையைத் தவிர்க்க முடியும்.

வீடுகளில் மின்விளக்குகளை ஒளிரச் செய்யும் போது அதன் ஒளி வீடுகளைக் கடந்து அக்கம் பக்கமுள்ள வீடுகளிலும் ஒளியைப் பாய்ச்சுவதையும் வீட்டிற்கு வெளியே மேல் நோக்கிப் பொருத்தப்படும் விளக்குகள் எல்லா கோணம்/பக்கங்களிலிருந்தும் ஒளியைப் பரப்புவது ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வரம்பு கடந்து ஒளி பரவுவதைத் தடுக்க துண்டித்தல் (Cut off) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. துண்டித்தலின் மூலம் ஒளியின் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

துண்டிக்கப்படாத ஒளி விளக்கில் எல்லா கோணத்திலும் ஒளி பரவ அனுமதிக்கப்படும். பெரும்பாலும் துண்டிக்கப்படாத ஒளி விளக்குகளே பயன்படுத்தப்படுகிறது.

துண்டித்தல்(cut off) முறையில் ஒரு சிறிய அளவில் பக்கவாட்டாக மேற்பரப்பில் ஒளியூட்ட அனுமதிக்கப்படுகிறது. அரை துண்டித்தல் (semi cut off) முறையில் மேல் நோக்கியும் ஒளி பரவ அனுமதிக்கப்படுகிறது.

முழு துண்டித்தல் (full cut off):

தாழ்புள்ளியிலிருந்து 90 பாகை கோணத்திலோ, அதற்கு மேலோ ஒளி பரவுவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. இம்முறையில் ஒளியானது கீழ் நோக்கி செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ ஒளி பரவுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. உதாரணமாக இசை நிகழ்வுகளில் மேடையில் பாடுபவரைச் சுற்றி மட்டுமே வட்ட வடிவில் ஒளியூட்டப்பட்டும் மற்ற இடங்கள் இருண்டும் இருப்பது போன்ற ஒளியமைப்புகளை பார்த்திருப்போம். அத்தகைய ஒளியமைப்பே முழு துண்டித்தல் எனப்படுகிறது.

ஒளிக் குழப்பம் (Clutter):

ஒரே நேரத்தில் வெவ்வேறு ஒளிமூலங்களிலிருந்து ஒளி பரவும் போது கண் முன் உள்ளவற்றை பார்ப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இத்தகைய ஒளிக்குழப்பத்தால் பாதிக்கப்படும் போது வாகன ஓட்டிகள் விபத்துகளுக்குள்ளாகும் அபாய சூழல் ஏற்படுகிறது.

ஒளிரும் வானம் (Sky glow):

நகர்ப்புறங்களில் மின் விளக்குகளால் உருவாக்கப்படும் எல்லா ஒளியும் வான் நோக்கிப் பரவி அங்கே ஒரு ஒளிர்வு மாடத்தை (dome) ஏற்படுத்துகிறது. இந்த ஒளிர்மய பின் புலம் நட்சத்திரங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் இருட்டடிப்பு செய்கிறது. இதுவே ஒளிரும் வானம் என அழைக்கப்படுகிறது.

வான் பார்த்தலே வானியலாரின் ஆய்வுக்களம். நல்ல இருண்ட வானத்தில் பால்வெளி மண்டலம் (ஆகாய கங்கை) அழகுடன் மிளிர்வதைக் காண முடியும். ஒளிமாசுபாட்டினால் ஏற்படும் ஒளிரும் வானம் (Sky glow) வானியல் வல்லுனர்களின் ஆய்வுகளை பாதிக்கிறது. வானவியல் நிபுணர்கள் தொலை நோக்கி மூலமாக ஆய்வு செய்யும் போது இயல்பாகத் தெரியும் பால்வெளி மண்டலம், விண்மீன் கூட்டங்கள் ஆகியவற்றைப் பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒளி மாசுபாடு அவர்களது ஆய்வுகளை தடுக்கிறது. நிறைய ஒளி தடுப்பான்களை பயன்படுத்தும் போது கூட அவர்களால் தெளிவாக பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒளிமாசு குறைந்தால் தான் அவர்களால் சிறப்பாக ஆய்வு செய்யமுடியும். ஆகவே இரவு நேரத்தில் ஏற்படும் ஒளி மாசைக் குறைக்கவேண்டியது மிகவும் அவசியம்.

போக்குவரத்தினால் ஏற்படும் புகை மாசையும், காற்று மாசையும் புகை மூட்டமாக மாறவிடாமல் தடுக்கும் வேதிவினை இரவு நேரத்தில் மட்டுமே நிகழ்கிறது. இந்த வேதிவினை நடைபெற நைட்ரேட் அயனிகளும் ஒளி குறைந்த இருளான சூழலும் தேவைப்படுகிறது. ஆனால் ஒளிமாசுபாட்டினால் இந்த வேதிவினை தடைபடுகிறது. ஆகவே வாகனப் போக்குவரத்தால் புகைமூட்டம் ஏற்படுவதற்கு, ஒளி மாசுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. புதை படிவ எரிபொருட்கள் மூலமாகத் தான் பெருமளவு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதால் மின்விளக்குகளை அதிகமாக பயன்படுத்துவது நேரடியாக இல்லாவிட்டாலும், சுற்றடியாக புதை படிவ எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துகிறது. இரவு நேரத்தில் மின்விளக்குகளை அதிகமாக பயன்படுத்துவதால், 12 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு கூடுதலாக உமிழப்படுகிறது. இவ்வளவு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகிப்பதற்கு 702 மில்லியன் மரங்கள் தேவைப்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அந்த அளவுக்கு அதிக கார்பன் டை ஆக்சைடு ஒளி மாசுபாட்டினால் மட்டுமே உமிழப்படுகிறது. இவ்வாறு ஒளி மாசுபாடு காற்று மாசுபாடு அதிகரிக்கவும், காரணமாக உள்ளது. கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரிக்கவும் காரணமாக உள்ளது. ஆகவே ஒளி மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் காற்று மாசுபாட்டையும் குறைக்கமுடியும்.

ஒளி மாசுபாட்டால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகள்

ஒளிப் பயன்பாட்டை சரியாக மேலாண்மை செய்யாததால் தான் இத்தகைய மாசுபாட்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வானத்தின் நட்சத்திரங்களை பார்க்கமுடியாதது மட்டும் பிரச்சனை அல்ல. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை மறந்துவிடக்கூடாது. சூரிய ஆற்றல், இரவு பகல் சுழற்சியின் அடிப்படையில் தான் எல்லா உயிரினங்களும் இயங்கி வருகின்றன. இரவு பகல் சுழற்சிக்கு தகுந்தாற் போல் இயங்குவதற்காக எல்லா உயிரினங்களின் உடலிலும் ஒரு உயிரிகடிகாரம் (bio clock) செயல்படுகிறது. மூளை செயல்பாடு, ஹார்மோன் சுரப்பு, இயங்குமுறை ஆகியவற்றை இது ஒழுங்குபடுத்துகிறது. உயிரிகடிகாரத்தின் மூலமே உயிரிகளின் உடலியல் செயல்பாடுகள் அந்தந்த நேரத்திற்கான வேலைகளை செய்யுமாறு இயக்கப்படுகிறது. எப்படி சூரியகாந்தி பூ சூரியனை நோக்கி ஒளித் தூண்டலால் மலர்கிறதோ, அது போல் நம் உடலிலும் பல தூண்டல் செயல்பாடுகள் உள்ளன. மனித உடலிலும் ஒரு உயிரிக் கடிகாரம் உள்ளது. உயிரினங்களில் மனிதர்கள் மட்டும் விதிவிலக்காக மின் விளக்குகளை அதிகம் பயன்படுத்துவதால் நமது பகல் நேரம் அதிகரித்துள்ளது. இது நம் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வயதில் மூத்தவர்கள், மின்சார வசதி இல்லாத கிராமப்புறங்களை சேர்ந்தவர்களிடம் அதிகாலையில் கண் விழிக்கும் பழக்கம் இருப்பதைக் காணமுடியும். சூரியன் உதிக்கும் போது வேலையைத் தொடங்கி, சூரியன் மறைவதற்குள் வேலைகளை முடித்துவிட்டு இரவில் சீக்கிரமே உறங்கச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருப்பதையும் பார்க்க இயலும். இத்தகைய வாழ்க்கைமுறையால் உயிர்கடிகார ஒழுங்குமுறை பாதிக்கப்படாது என்பதால் உடலுக்கு நலம் பயக்கும்.

ஆனால் இப்பொழுதெல்லாம் இரவில் 12 மணி வரை விழித்திருப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக இளைய தலைமுறையினர் இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மனித உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் தூக்கம் சார்ந்த செயல்பாடுகளையும், உடல் இயக்கத்தையும், உறுப்புகளின் செயல்பாட்டையும் ஒழுங்குமுறை செய்கிறது. இரவில் நல்ல இருண்ட சூழலில் உறங்கும் போது மட்டுமே மெலடோனின் சுரப்பு இயல்பாக உள்ளது.

இரவு தூக்கம் என்பது மொத்தத்தில் 5 சுழற்சிகளை கொண்டிருக்கும் என்றும் 71/2 மணி நேரம் உறங்குவது நல்ல நிறைவான தூக்கத்தைத் தரும் என்று உறக்கம் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு நிலைகளை கொண்ட தூக்க சுழற்சி 5 முறை ஏற்படுவதற்கு 71/2 மணி நேரம் தேவைப்படுகிறது. உறக்கத்தின் போது 5 முறை தூக்க சுழற்சி நடைபெற்றால் தான் நிறைவான தூக்கம் கிடைக்கும். நிறைவான தூக்கம் இருந்தால் தான் உடல் நலத்துடன் மனப்பிரச்சனைகள் இல்லாது நாம் செயல்பட முடியும்.

பகலில் தூங்கி, இரவில் விழித்திருப்பதாலும், இரவிலும் விளக்குகளை அணைக்காமல் தூங்குவதாலும் மெலடோனின் சுரப்பது குறைவதனால் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. தலைவலி, உடல் சோர்வு, மனச்சோர்வு, மனச்சிதைவு, உடல் பருமன், பதட்டம், மன அழுத்தம், இதய நோய், தூக்க நோய்கள், போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது. இரவில் அதிக நேரம் விழித்திருப்பதாலே பலருக்கு மன நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரவில் வேலை செய்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எவ்வளவு ஊதியம் பெற்றாலும் இரவில் வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவை சரி செய்யமுடியாது என்பதால் பெரும்பாலும் இரவில் வேலை செய்வதை அறவே தவிர்ப்பது உடலுக்கு நல்லது. முன் தூங்கி, முன் எழுவதே உடலுக்கு நல்லது. இயற்கையுடன் ஒத்துப் போகாத தூக்கமுறையால் நம் உடலில் உள்ள உயிரிக் கடிகார செயல்பாடுகளின் சமநிலை பாதிப்பதால் பிரச்சனைகளை ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும்.

கண்ணுக்கு மட்டும் தான் ஒளியை உணரும் திறன் உள்ளது என நினைப்போமானால் அது தவறு. நம் தோலில் உள்ள எல்லா செல்களுக்கும், ஒளி உணர்திறன் உள்ளது. முகத்தை/ கண்ணை மட்டும் இருள் பெறுமாறு மூடிக்கொண்டு உடலின் பிற பாகங்கள் வெளிச்சத்தில் இருக்குமாறு தூங்கும் போதும் பாதிப்புகளை அறவே தவிர்க்கமுடியாது. தூங்கும் போது உடல் முழுவதும் இருண்ட சூழலில் இருக்குமாறு தூங்குவது உடலுக்கு நலம் பயக்கும்.

இன்று நாம் தொலைக்காட்சி, கணினி, கைபேசி ஆகிய மின்சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் திரை வெளிச்சத்தைக் குறைவாக வைத்துப் பயன்படுத்துவது நல்லது. கைபேசி, கணினி ஆகியவற்றிலிருந்து நீல ஒளி உமிழப்படுகிறது. நீல ஒளி மெலடோனின் சுரப்பதை அதிகமாக பாதிக்கிறது. பச்சை நிற ஒளியும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிகப்பு நிற ஒளி தான் மெலடோனின் சுரப்பில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவது.

மின்விளக்குகளில் ஒளிஉமிழும் டையோடு விளக்குகள் அதிக ஆற்றல் திறம் கொண்டவை. நீல நிற ஒளிஉமிழும் டையோடு விளக்குகளை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பதால் வெள்ளை நிற ஒளிஉமிழும் டையோடுகளை பயன்படுத்த வேண்டும்.

ஒளி மாசுபாடு மனிதர்களிடம் மட்டும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. உயிரினங்களின் பன்மைத்துவம், குறைவதற்கும் ஒளி மாசுபாடும் காரணமாக உள்ளது. ஒளிமாசுபாட்டால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒளிமாசுபாட்டால் இரவில் விழித்திருக்கும் உயிரினங்களின் இரை தேடுதல், தூக்க சுழற்சி, இடப்பெயர்வு, இனப்பெருக்கம் வாழ்க்கைமுறை என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்தை போன்ற இரவில் விழிப்போடு இருக்கும் உயிரினங்களால் நிலவொளியில் தான் இரை தேடமுடியும். மின் விளக்குகளால் ஏற்படும் செயற்கை வெளிச்சம், அவற்றின் பார்வையையும், இரை பிடிக்கும் திறனையும் பாதிக்கிறது. வேட்டையாடும் விலங்குகளுக்கும், இரையாகும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாதிக்கிறது, சில விலங்குகள் எளிதில் இரையாவதற்கும் வழி வகுக்கிறது.

ஒளிமாசுபாட்டால் பறவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பறவைகள் வலசை போவதையும், பறவைகளின் இடப்பெயர்வையும் ஒளிமாசுபாடு பெரிதும் பாதித்துள்ளது. பகலில் பறந்து சென்றால் உடலிலிருந்து அதிக நீரிழப்பும், அயற்சியும் ஏற்படும் என்பதால் பறவைகள் இரவு நேரத்தில் இடம்பெயர்வு செய்கின்றன. இரவில் இடம் பெயரும் பறவைகளுக்கு வானில் உள்ள ஒளிரும் நட்சத்திரங்கள் தான் திசைகாட்டியாக செயல்படுகிறது, அதன் வழிகாட்டுதலிலே பறவைகள் புலம்பெயருகின்றன. ஆனால் ஒளி மாசுபாட்டால் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியாததால் பறவைகள் திசை மாறி செல்கின்றன.

சூரிய ஒளியானது தளவிளைவுக்குட்படாத ஒளி, எல்லா தளங்களிலும் அதிர்வுகளை கொண்டுள்ளது. நிலவொளி என்பது தளவிளைவுக்குட்பட்ட ஒளி(polarized light), ஒரு தளத்தில் மட்டும் அதிர்வுகளை கொண்ட ஒளி ஆகும். பெரும்பாலான பறவைகளும், விலங்குகளும் தளவிளைவுக்குட்பட்ட நிலவொளியை பயன்படுத்தியே இடம் பெயருகின்றன. ஆனால் மின் விளக்குகளால் பெறப்படும் ஓளி தளவிளைவுக்குட்படாத ஒளியாகவோ, செயற்கையாக தளவிளைவுக்குட்பட்ட ஒளியாகவோ உள்ளது. ஒளிமாசுபாட்டால் பறவைகளும், விலங்குகளும் திசைதெரியாது குழம்பிப் போகின்றன, அவற்றின் பழக்கவழக்கங்களையும், சூழலுடனான இடையுறவும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதிக வெளிச்சத்துடன் காணப்படும் இடங்களுக்கு பறவைகள் திசை மாறி செல்கின்றன, கலங்கரை விளக்கம், காற்றாலைகளில் மோதி எண்ணற்ற பறவைகள் இறந்துள்ளன. இரவு நேர மின் விளக்குகளால் எது பகல் எது இரவு என தெரியாது குழம்பிப் போவதால் பறவைகள், விலங்கின்ங்களின் இயல்பான ஓய்வு நிலை பாதிக்கப்படுகிறது. ஒளிமாசுபாட்டால் அவற்றின் இயல்பான வாழ்க்கை சுழற்சி அச்சுறுத்தப்பட்டுள்ளது.

ஆமைகள் தவளைகள் போன்ற இரு வாழ்விகளும் ஒளி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இருண்ட பகுதிகளில், பாதுகாப்பான இடங்களில் தான் இருவாழ்விகள் முட்டையிடும். ஆனால் ஒளிமாசுபாட்டால் அவற்றின் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகிறது, முட்டையிலிருந்து குஞ்சு பொறித்தவுடன் ஆமைக் குஞ்சுகள் இயல்பாக கடலை நோக்கியே செல்ல வேண்டும். ஆனால் கடற்கரையோரங்களில் மின்விளக்குகள் எரிவதால் அவை திசை மாறி செல்கின்றன, மற்ற விலங்கினங்களுக்கும் இரையாகின்றன.

மின்விளக்குகள் பூச்சி இனங்களை பொறி போல் கவர்கிறது. இதனால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால், பூச்சிகளை உண்ணும் பறவைகள், விலங்கினங்களும் பாதிக்கப்படுகின்றன. இரவில் பூக்கும் தாவரங்களுடைய வாழ்க்கை சுழற்சியும் ஒளிமாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

அதிக ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தும் அதிக வாட் திறனுடைய விளக்குகளை தவிர்க்கவேண்டும். வெள்ளை ஒளியை உமிழும் காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள் (CFL) ஒளி உமிழும் டையோடு பல்புகளைத் பயன்படுத்துவது நல்லது. இயக்கத்தை உணரும் உணரி(sensor) பொருத்தப்பட்ட விளக்குகளை பயன்படுத்துவது நல்லது. பகல் வேலைகளிலும் சாலைகளில் விளக்குகள் எரிவதைத் தவிர்க்க வேண்டும். சென்சார் பொருத்தப்பட்ட சாலை விளக்குகளை பயன்படுத்த வேண்டும். வீடுகளிலும் சரி, வெளியிடங்களிலும் சரி பகல் வேளையில்/தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத இடங்குகளில் மின்விளக்குகளை ஒளிரச் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சியை பார்க்காத போது நிறுத்துவதும், வேண்டும். தூங்கும் போது கைபேசி, மின் சாதனங்களை அணைத்து விடுவதும் மிகவும் அவசியம். ஒளி பயன்பாட்டு அளவைக் குறைக்க ஆற்றல் திறம் மிக்க ஐடிஏ சான்றிதழ் பெற்ற விளக்குகளை பயன்படுத்துவது நல்லது. வானத்தில் உள்ள நட்சத்திரங்களை மின்விளக்குகள் இருட்டடிப்பு செய்கிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவர சர்வதேச இருண்ட வானத்திற்கான கூட்டமைப்பு (IDA) போன்ற பல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

அந்தந்த இடத்திற்கு அந்தந்த நேரத்திற்கு எவ்வளவு வெளிச்சம் வேண்டுமோ அந்தளவுக்கு குறைவாக மட்டுமே வெளிச்சம் கிடைக்குமாறு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் உள்ள வெளிச்சம் வெளியில் செல்லாதவாறு இருக்க திரைச்சீலைகள், தடுப்பான்களை பயன்படுத்த வேண்டும். விளக்குகளுக்கு கவசமிடுவதன் மூலம், தேவையில்லாத மேல் நோக்கிய, பக்கவாட்டு ஒளிபரவலை தவிர்க்க வேண்டும். எந்த இடத்தில் புழங்குகிறோமோ அங்கு மட்டும் விளக்கு போடுவது நல்லது. வீடெங்கும் விளக்கு போட்டால் தான் வீட்டிற்கு மஹாலெட்சுமி வருவாள் என்ற மூடப்பழக்கத்தால் ஆற்றலை விரயம் செய்து, ஒளிமாசுபாட்டால் உயிர்ச்சூழலை அச்சுறுத்த வேண்டாமே. இரவில் நீண்ட நேரம் விளக்குகளை எரிய விடாது இரவு 10-11 மணிக்குள் விளக்குகளை அணைத்து விடவேண்டும்.

ஒலி மாசுபாடு:

ஒலியானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது. 70 டெசிபலுக்கு மேல் உள்ள ஒலியே இரைச்சல் எனப்படுகிறது. வாகனங்களின் போக்குவரத்து, கட்டுமான வேலைகள், விளம்பர ஒலிபரப்புகள், பாடல், இசை ஒலிபரப்பு என பல்வேறு நிகழ்வுகளால் இரைச்சலான சூழல் ஏற்படுகிறது. வீடு, தொழிற்சாலைகளில் எந்திர பயன்பாடு, தொலைக்காட்சி, ஜெனரேட்டரை இயக்குவதாலும் இரைச்சல் ஏற்படுகிறது. இரைச்சலான சூழலில் தொடர்ந்து இருப்பதும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒலி மாசுபாட்டினால் இரத்த அழுத்தம் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுகிறது, காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இதய செயல்பாட்டிலும், ரத்த ஓட்டத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒலிப்பான், தலையணி கேட்பொறி (head-phone) ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. அதிக ஒலி மாசுபாட்டினால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இரைச்சலான சூழலில் வாழும் குழந்தைகளுக்கு கவனச்சிதறல் நோய் ஏற்படுகிறது, அவர்களின் நினைவுத்திறனும் பாதிக்கப்படுகிறது.

100 டெசிபல் ஒலியை 2மணி நேரம் தொடர்ந்து கேட்டால் அதற்கு 16மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டுமாம். தூங்கும் போது 35 டெசிபலுக்கு மேல் ஒலி இல்லாமல் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

20 முதல் 20, 000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியையே மனிதர்களால் கேட்க முடியும். 20 ஹெர்ட்ஸை விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி தாழ் ஒலி (infrasonic) என்றும், 20, 000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி(ultrasonic) என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களால் தாழ் ஒலியையும், மீயொலியையும் கேட்க முடியாது. வௌவால், எலி, கடல் பன்றி, பூச்சியினங்கள் மீயொலியை பயன்படுத்துகின்றன. யானை, மயில், முதலை, நீர் யானை, காண்டாமிருகம், திமிங்கிலம் ஆகிய விலங்குகள் தாழ் ஒலி மூலம் தகவல்தொடர்பு கொள்கின்றன. பறவைகள் காற்று, மலைகளிலிருந்து தாழ் ஒலிகளை பயன்படுத்தி இடப்பெயர்வு செய்கின்றன. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தாழ் ஒலி (infrasonic), மீயொலி(ultrasonic) ஆகியவற்றை மனிதர்களால் உணர முடியாத போதும் அவற்றைப் பயன்படுத்தும் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.

ஒலிமாசுபாட்டல் மற்ற உயிரினங்களின் தகவல் தொடர்பும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பாடும் பறவைகள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒலி மாசுபாட்டால் கிராமப்புறத்தில் உள்ள பறவைகளைக் காட்டிலும் நகர்ப்புறத்தில் உள்ள பறவைகள் வழக்கத்தை விட சீக்கிரமாக எழுந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பகலில் பாடும் பறவைகள் பகலில் அதிக இரைச்சல் காணப்படுவதால் இரவில் பாடுகின்றன. மனித சமூகம் பறவைகளையும் ‘நைட் ஷிப்டுக்கு’ மாற்றியுள்ளது.

ஒலி காற்றை விட நீரில் வேகமாக பயணிப்பதால் நீரில் வாழும் விலங்கினங்கள் ஒலி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. புதை படிவ எரிப்பொருட்களையும், தாதுக்களையும் எடுப்பதற்காக கடல் பகுதிகளிலும் துரப்பண பணிகள், சுரங்க வேலைபாடுகள் செய்யப்படுவதால் அதிக இரைச்சல் ஏற்படுகிறது. டால்பின்கள், திமிங்கிலங்கள், ஒலி மூலமாகத் தான் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. கப்பல் படையினர் வேவு பார்ப்பதற்காக சோனார் ஒலிக்கருவியை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக இரைச்சல் ஏற்படுவதால் கடல் வாழ் உயிரினங்களின் தகவல் தொடர்பும் இயல்பான வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. துறவி-நண்டுகளின் கூட்டினை தேர்ந்தெடுக்கும் போக்கும் இரைச்சலால் மாற்றத்திற்கு உட்படுகிறது. கணவாய் மீன்கள் நீரினை வடிகட்டி உணவினைப் பெறும் போது அதன் மூலம் கீழே வாழும் உயிரினங்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்கும். இரைச்சலால் கணவாய்களின் உணவூட்டமும் பாதிக்கப்படுகிறது. இரைச்சலால் சிப்பிகளின் வால்வுகள் மூடிக் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒலி மாசுபாட்டால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களை குறைக்க நம்மால் இயன்ற அளவிற்கு வீடுகளிலும், வெளிப்புறங்களில் இரைச்சலை குறைக்க வேண்டும். தேவையில்லாத ஒளியைக் குறைப்பதன் மூலம் ஆற்றல் விரயத்தையும் குறைக்கலாம், ஒளி மாசுபாட்டினால் ஏற்படுகிற சூழலியல் தாக்கங்களையும் குறைக்கலாம்.

அதீத ஒலியும் ஒளியும், மாசுபாடு என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாமல் உள்ளது என்பதால் இது குறித்த விழிப்புணர்வை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒலி, ஒளிமாசை குறைத்து, பெரும்பாலும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையை பின்பற்றும் போது நம் உடல் நலமும் மேம்படும்.

- சமந்தா