பிரிட்டனில் மதச்சார்பின்மை வளர்ந்து வருகிறது என்று சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டன் அரசாங்கம் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகைப் புள்ளி விவரம் வெளியிடுகிறது. சென்ற முறை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், ஏறத்தாழ 25 சதவீதத்தினர் தங்களை “மதச்சார்பு அற்றவர்களாக” அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்தப் புள்ளிவிவரத்தினை நோக்குகையில் ஒவ்வொரு பத்தும் ஆண்டு அதிகாரப்பூர்வ அரசாங்க கணக்கின் படியே மதச்சார்பின்மையினர் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. (Reference : https://humanism.org.uk/campaigns/religion-and-belief-some-surveys-and-statistics/census-2011-results/)

வேடிக்கை என்னவெனில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடு. இதில் தற்போதைய வாடிக்கை என்னவெனில், ஒவ்வொரு பத்து ஆண்டும் கிறிஸ்தவர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதைக் காட்டிலும் தங்களை மதச்சார்பற்றவராக மாற்றிக் கொண்டு வரும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது.

British Social Attitude Survey என்ற தலைப்பில், சமீபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை பிரதிநிதித் துவப்படுத்தி ஒரு கணக்கெடுப்பை நடத்தி, புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு. இந்த அமைப்பினர் 1983 இல் இருந்தே இந்தக் கணக்கெடுப்பை நடத்திப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து, தொகுத்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்தப் புள்ளி விவரம் சொல்லும் சேதி இதுதான். பிரிட்டனில் தற்போது 53 சதவீத மக்கள் தங்களை மதச்சார்பு அற்றவராகக் கருதுகிறார்கள் என்பதுதான் வியப்பான செய்தி. (Reference: https://humanism.org.uk/2017/07/05/53-of-britons-are-non-religious-says-latest-british-social-attitudes-survey/)

குறிப்பாக, இளைஞர்கள் 18லிருந்து 25 வயது வரை உள்ளவர்களில் 71 சதவீதத்தினர் தங்களை மதச்சார்பு அற்றவர்களாகக் குறிக்கிறார்கள். (Reference: https://humanism.org.uk/2017/09/04/latest-british-social-attitudes-reveals-71-of-young-adults-are-non-religious-just-3-are-church-of-england/)

இந்தச் செய்தி கிறிஸ்தவ தேவாலயங்களை நிலை குலையச் செய்துள்ளது என்றே சொல்லலாம். ஒரு கிறிஸ்தவநாடு தன்னுள் பலரைக் கிறிஸ்தவராக அடையாளம் காட்டாமல் இருப்பது தேவாலயங்களுக்கு பேரிடிதான்.

இந்தச் செய்தியைப் பிரிட்டனில் வாழும் தமிழர்களோடு பொருத்திப் பார்ப்போம். பிரிட்டனில் வாழும் தமிழர்கள் எண்ணிக்கையில் மிக மிகச் சிறுபான்மையினரே. நூற்றுக்கு 2 விழுக்காட்டுக்கும் குறைவே. பெரும்பாலும் தங்களை ஹிந்துக்கள் (சைவர், வைணவர்) என்று நம்புகிறவர்கள். மேலும் தமிழர்களைக் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், பகுத்தறிவாளருமாக வகுக்கலாம்.

பிரிட்டன்னில் ஏன் மதச்சார்பின்மை வளர்கிறது?

பிரிட்டனின் கல்வித்திட்டம் மாணவர்களுக்குச் சுதந்திர உணர்வோடு, கேள்வி கேட்கும் சூழலை ஏற்படுத்தித் தருகிறது. எதனையும் திணிக்கும் நோக்கில் செயல்படுவதில்லை. குறிப்பாக, தாங்கள் கிறிஸ்தவ நாடாக இருந்தாலும் கிறிஸ்தவ மதத்தைப் பள்ளி மாணவர்கள் மீது திணிப்பது இல்லை. மனப்பாடக் கல்வியைக் காட்டிலும், புரிந்து கொண்டு செயல்படும் கல்வியை ஊக்குவிக்கிறது. இயல்பாகவே இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவெனில், கேள்வி கேட்டு ஆராயும் மனப்பான்மை வளர வளர மூட நம்பிக்கைகள் தேயத்தானே செய்யும். அதாவது Inversely proportional.

அலுவலகச் சூழலில், யாரும் மதத்தை உள்ளே கொண்டு வருவதில்லை. அத்தோடு எந்த மதத்தினரையும் துவேஷத்துடன் பேசுவதும் கிடையாது, நடத்துவதும் கிடையாது. அனைவரையும் அன்போடே நடத்துகிறார்கள். அனைத்து மதம் பற்றியும் ஒரு புரிதல் இருக்கிறது. ஹிந்து மதம் என்றால் ஜாதிகள் இருக்கிற, மூடநம்பிக்கைகள் இருக்கிற மதம் என்ற புரிதல் பிரிட்டன் மக்களுக்கு இருக்கிறது. அதேவேளையில் தாங்கள் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைக் கேள்வி கேட்பவர்கள் உண்டு.

பிரிட்டனில் வாழும் தமிழருக்கு மதச்சார்பின்மை ஏன் அவசியம்?

பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்குப் பெரும்பாலும் ஒரு அச்ச உணர்வு உள்ளது. இறை நம்பிக்கைக்கு உள்ள பல காரணங்களில் அச்ச உணர்வும் ஒன்று என்று தோன்றுகிறது. அச்சம் என்பது ஒரு இயற்கையான உணர்வு. யாருக்குத்தான் அச்சம் இல்லை. அச்சம் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது; ஆனாலும் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ - எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்ச வேண்டும். அதை விடுத்து மூட நம்பிக்கைகளுக்கு அஞ்சுவது நேர விரயம், பொருள் விரயம், வீண் செயல்.

பிரிட்டன் தமிழர்களைப் பெரியவர்கள், இளையவர்கள் என இரண்டாக வகுத்துக் கொண்டால், இளையோருக்குக் கேள்வி கேட்கும் - ஆராயும் மனப்பாங்கு இருக்கிறது. அதே வேளையில் பெரியவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை நிறையவே இருக்கிறது. சொல்லப்போனால் பார்ப்பனர் அல்லாத தமிழர்களுக்கு தாங்கள் மத ரீதியாக கோவிலில் இழிவுபடுத்தப் படுகிறோம் என்ற புரிதல் கூட இல்லை.

தமிழரால் கிறிஸ்தவ நாடான பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகச் செல்ல இயலும். கிறிஸ்தவப் பாதிரியார் ஆக இயலும். ஆனால் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழரால், தான் பொருள் கொடுத்து, பணம் கொடுத்துக் கட்டிய, பெரும் கோவிலில் மதக் குருமாராக அதாவது அர்ச்சகராக முடியாது. உயர் ஜாதிப் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும். இதுதான் கள யதார்த்தம்.

மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி என்று எடுத்துக் கொண்டால், 100 பேர் பயில்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால், விகிதாச்சார அடிப்படையில் அதில் 2 பேர்தான் தமிழ் மாணவர்களாக இருக்க முடியும். தற்போதைய கள நிலவரப்படி, பிரிட்டனில் இளைஞர்களில் அதாவது 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 71 சதவீதத்தினர் மதச்சார்பு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில், இயற்கையாகவே அந்த 2 தமிழ் மாணவர்களைச் சுற்றி 71 பகுத்தறிவாளர்கள் இருக்கும் சூழல்தான். இப்படிப்பட்ட சூழலில் தமிழ்ப்பெற்றோர்களும், தங்கள் இளையோர் மேல் மூட நம்பிக்கைகளான நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், ஜோசியம், ஜாதகம், ஹோமம், பூஜை, புனஸ்காரம் என்று தினிப்பது இளையோருக்குச் செய்யும் சமூக அநீதியாகவே அமையும். பிரிட்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் மூட நம்பிக்கைகளின் பக்கம் செல்லாமல், கேள்வி கேட்டு ஆராயும் பக்கத்தில் இருப்பது, தன்னம்பிக்கை மற்றும் கல்வி வளர்ச்சிக்குப் பெரிய உந்துதலாக அமையும்.

Pin It