பெருமை மிக்கத் தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இந்த சிறிய ஊரில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருப்பது எனக்கு அதிசயமாயிருக்கிறது. நீங்கள் செய்த வரவேற்பு ஆடம்பரங்களுக்கும் நான் சிறிதும் தகுதியில்லை என்பதை யான் உணர்கிறேன்.
ஆனாலும் அவைகளையெல்லாம் எனது கொள்கைக்கு நீங்கள் அளிக்கும் ஒரு நற்சாட்சிப் பத்திரமென்றே கருதுகிறேன். நீங்கள் இங்கு ஆரம்பித்திருக்கும் வாசக சாலையானது மிகவும் பாராட்டக்கூடியதாகும்.
நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், பூஜை, உற்சவம் நடத்துவதற்கும் நாசமாகிற பணங்களும், இடங்களும், நேரங்களும் இம்மாதிரி வாசக சாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறுமடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும்.
நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம். ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது. மற்றொன்று மக்களுக்கு பகுத்தறிவில்லாமலிருப்பது.
இந்த இரண்டும் வாசகசாலையை ஏற்படுத்தவிடாமல் குழவிக்கல்லை நட்டி கோயில் கட்டுகிற வேலையில் மக்களை திருப்பிவிட்டது. ஆனால் உங்கள் விஷயம் அப்படிக்கில்லாமல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியானது இந்த அருமையான காரியத்தை செய்யத் தூண்டிற்றென்றே கருதி இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் எனது மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஒரு நாட்டின் மதக்கொள்கைக்கும் ஆட்சியின் தன்மைக்கும் அளவுகோள், அந்த நாட்டு மக்களின் கல்வியறிவேயாகும். நமது நாட்டில் ·நூற்றுக்கு 93 பேர் கல்வியில்லாத தற்குறிகள். நூற்றுக்கு 99 பேர் கல்லில் முட்டிக் கொள்ளும் மூடர்கள்.
இப்படிப்பட்ட இந்த நாடு எப்படி அறிவுள்ள ஒரு சுதந்திரமான நாடாகும்? இந்த நாடானது சமீபகாலம் வரை எல்லா மக்களும் கல்வி கற்கக் கூடாது எல்லா மக்களும் அறிவாளிகளாகயிருக்கக் கூடாது, எல்லா மக்களும் சுதந்தரமாக இருக்கக் கூடாது என்கின்ற கொள்கையையுடைய மத ஆதிக்கத்திற்கு அடிமையாயிருந்த அரசர்களாலேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது. அதனால்தான் 100க்கு 97 வீதமுள்ள மக்கள் தற்குறிகளாயிருக்க ஏற்பட்டது.
இப்பொழுது அம்மாதிரி கொள்கையில்லாமலும் எல்லாரும் படிக்கலாம் என்கின்ற கொள்கையுடைய அரசர்களுடைய ஆட்சியிலுமிருக்கிறபடியால் இப்போது கல்வி பரவ ஆரம்பித்து விட்டது.
ஆனால் எல்லோரும் படிக்கலாம் என்று சொல்லக் கூடிய அரசாங்கம் வந்து 150 வருஷ காலமாயும் ஏன் இன்றைக்கு 100-க்கு 10 பேர்தான் படித்திருக்கிறார்கள் என்கின்ற ஒரு கேள்வி பிறக்கலாம். அதற்குச் சமாதானம் என்ன வென்றால் இந்த 150 வருட காலமாய் வெள்ளைக்கார ஆட்சி இருந்து வந்தாலும் கூட அவர்கள் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற கொள்கையையுடைய பார்ப்பனர்களின் இஷ்டப்படி நடந்து வந்ததால் பார்ப்பனர்கள் இஷ்டத்திற்கு விரோதமாகப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அதிகமாய்ப் படிக்க முடியாமல் போய் விட்டது.
இப்போது கொஞ்சங் கொஞ்சமாக அரசாங்கத்தினிடத்துள்ள பார்ப்பனராதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாத ஆதிக்கம் பெருகுவதின் பலனாக அந்தக் கொள்கைகளை எல்லாம் மறந்து எல்லாரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்து வரும் ஜனக் கணிதத்தில் 100-க்கு 15 பேராவது படித்தவர்களாயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே இந்த விகிதமானது சென்ற 150 வருஷத்திற்கு 7 வீதமும் 1920 லிருந்து 1930 - க்குள் 10 வருஷத்தில் அது இரட்டித்து 15 வீதமும் ஏற்பட்டிருக்கின்றது போலவே இந்த பார்ப்பனரல்லாதார் இயக்கம் இப்படியே நடைபெற்றுப் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் ஆட்சியில் இன்னுமதிகமாகப் பலப்படுமானால் குறைந்தது இருபத்தைந்து வருஷத்துக்குள்ளாக இந்த நாட்டில் தற்குறிகள் என்பவர்களே இல்லாமல் போகலாமென்று நினைக்கிறேன்.
இந்த நாட்டு பார்ப்பனராதிக்கமானது அரசாங்கத்தாராலும் மக்களைப் படிப்பிக்க முடியாமலும் சொந்தத்திலும் தங்கள் மக்களைப் படிப்பிக்க முடியாமலும் அவ்வளவு தரித்திர நிலையில் 100-க்கு 97 பேர் நிரந்தரமாயிருக்கும் படி பார்ப்பன மதச் சூட்சி செய்து விட்டது.
இந்த மதச் சூட்சியை வெட்டிப் புதைத்தப் பிறகுதான் எல்லா மக்களும் படிக்க முடியும். அப்படிக்கில்லாத வரையில் எவ்வளவுதான் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் சௌகரியமில்லாமலே போய் விடும்.
வெள்ளைக்கார அரசாங்கம் இந்தியர்களைப் படிக்க வைக்காமல் 100-க்கு 93 பேர்களை தற்குறிகளாக வைத்துவிட்டது என்று நமது பார்ப்பனர்களும், அவர்களது திருவடி சம்பந்திகளான பார்ப்பனரல்லாதவர்களும் மேடையில் நின்று கொண்டு சொல்லுவார்களானால் அந்தப் பார்ப்பனர்கள் மாத்திரம் ஆண், பெண் உள்பட காப்பிக்கடை, வேசித்தெரு முதலிய இடங்களில் பிழைக்கும் சகலர்களும் 100-க்கு 100பேர் படித்திருப்பதற்குக் காரணம் என்ன என்றால் என்ன சமாதானம் சொல்லுவார்கள்? இதிலிருந்து இந்தியர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்காமலிருப்பதற்குக் காரணம் வெள்ளைக்கார ஆட்சியா? அல்லது நமது முட்டாள்தனத்தின் பலனாய் நாம் சுமந்து கொண்டிருக்கும் பார்ப்பன மத ஆட்சியா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நமது மக்களில் ஒரு பெரிய விவசாயி தன்னுடைய இரண்டு பிள்ளைகளைக் கூட படிக்க வைப்பதற்கு திணருகிறான். ஆனால் அன்றாடம் பிச்சை எடுக்கிற தொழிலையுடைய பஞ்சாங்கப் பார்ப்பான் தன்னுடைய 5 பிள்ளைகட்கும் படிப்புச் சொல்லி வைத்து பட்டதாரி யாக்கிவிட்டு தொப்பை போட்டுக் கொண்டு திண்ணையில் கொரட்டை விட்டுத் தூங்குகின்றான்.
இது எப்படிச் சாத்தியப்படுகிறது? ஆகவே இதற்கு வெள்ளைக்கார ஆட்சி காரணமா; பார்ப்பனராட்சி காரணமா வென்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒரு பள்ளிக்கூடத்தில் எல்லாப் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளலாமென்பதாகக் கூட பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் அரசாங்கத்தில் ஏற்பட்ட பிறகுதான் உத்தரவு போடமுடிந்தது என்றாலும் கூட பார்ப்பனராதிக்கமும் பார்ப்பனத் திருவடி சம்பந்திகள் ஆதிக்கமும் இருக்கின்ற ஊர்களில் இன்னமும் இதை அமுலுக்குக் கொண்டுவர முடியவில்லை.
இன்றையத் தினம் அதாவது பூரணச் சுயேச்சைக்கு மக்கள் கல்லில் முட்டிக் கொள்ளுகிற காலத்திலும் கூட தெருவில் நடப்பதற்கே பார்ப்பனர்களுடன் போராட வேண்டியும் பார்ப்பன தாசர்களிடம் அடிபட வேண்டியுமிருக்கின்றதென்றால் வெள்ளைக்காரன் பேரிலேயே எல்லாக் குற்றங்களையும் சொல்லிக் கொண்டு இருப்பதில் ஏதாவது பொருளிருக்கிறதா? ஆகவே நாம் முன்னேற வேண்டுமானால், மற்ற நாட்டாரைப் போல் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமானால், அவைகளுக்கு முட்டுக் கட்டையாகவுள்ள சகலத்தையும் ஒழித்தெறியத் தயாராயிருக்க வேண்டும். அவ்விதம் மக்கள் தயாராவதற்கும் அறிவு பெறுவதற்கும் இம்மாதிரி வாசக சாலைகள் மிகவும் அவசியமாகும்.
சாதாரணமாக கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் குருட்டு உருப்போட்டு பரிட்சைகளில் (பாஸ்)தேரி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் பி.ஏ.,எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும், தமிழ் சங்கத்தில் படித்து வித்வான் பரிட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லி விட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக் கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது அலமாரியில் உள்ள புஸ்தகங்களைப் போல் இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களை “பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி” என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம்.
உதாரணமாக ஒரு கோள பூகோள சாஸ்திரத்தில் எம். ஏ. (பண்டித) பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் (ப்ரபசர்) பிள்ளைகளுக்கு சூரிய சந்திர கிரகணத்தைப் பற்றி வானசாஸ்திரப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பூமியும், சூரியனும், சந்திரனும் ஒன்றுக் கொன்று சுற்றுவதின் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுர்தியும் ஒளியும் மறைவுபடும், அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரியகிரகணம் என்றும் சொல்வது என்று பாடம் சொல்லி கொடுப்பான்.
ஆனால் சந்திர கிரஹணமோ சூரிய கிரஹணமோ வந்து விட்டால் சூரியன் என்கின்ற ஒரு தேவதையை றாகு, கேது என்கிற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும், இது அவர்களுக்கு ஏற்பட்ட சாபத்தீடு என்றும், அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு கிரஹணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும், விடும்போது ஒரு ஸ்நானமும், மத்தியில் மந்திரங்களும், ஜெபங்களும் செய்வான்.
சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர கிரக நக்ஷத்திரமும் கிரகண நேர கிரக நக்ஷத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக் கொண்டு முழுகுவான்.
ஆகவே அவனது படிப்பானது வான சாஸ்திர பரிக்ஷயில் (பாஸ்) தேரத்தான் உபயோகப்பட்டதே தவிர அந்த எம்.ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்கு சற்றும் பயன்படவே இல்லை. ஆனால் நமது தமிழ் பண்டிதர்கள் நிலையோ அப்படிக் கூட இருக்க முடிவதில்லை.
அவர்களுக்கு உள்ள படிப்பே முட்டாள்களாக்குவதற்கு முதல்தர மருந்து போன்றது. புராணங்களைத் தவிர அவர்களுக்கு வேறு படிப்பே கிடையாது. இலக்கணம் நீதிநூல் என்று சிலது படிப்பார்கள். ஆனாலும் அவைகளும் ஆரம்பமும் மூடத்தனமானதாகவே இருக்கும். முடிவும் மூடத்தனமானதாகவே இருக்கும்.
மத்திய பாகமோ உலக வாழ்க்கைக்கு பயன்படாததாகவும், அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமானதாகவும் இருக்கும். ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் என்பவர்களுக்காவது அறிவாளர்களாவதற்கு ஏற்ற பல நூல்கள் உண்டு. தமிழ் பட்டதாரிகளுக்கோ மடையர்களாவதற்கேற்ற நூல்களே உண்டு.
அதாவது அவை பெரிதும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பன போன்றவைகளைத் தவிர இலக்கணம், இலக்கியம் என்று சிலதும் கூட்டி இவைகளை உருப்போட்டு பரீட்சை கொடுத்தவர்களாவார்கள். ஆகவே ஆங்கிலப் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கும் அதாவது அறிவுஇயல் புஸ்தகங்கள்
படிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்த அளவு கூட தமிழ் பட்டம் பெற்ற பண்டிதர்கள் என்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே. மனிதன் முழு மூடனாக வேண்டுமானால் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்து பண்டிதனாக வேண்டியதுதான் என்பதற்கிணங்கத்தான் நமது படிப்பும் அறிவும் இருக்கின்றது.
தமிழ் பண்டிதர்கள் என்பவர்களுடைய யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காக தமிழைப்படி என்று சொல்லுவது மிக்க மோசமான காரியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஏனென்றால் அவர்களுக்கு பொது அறிவு ஏற்படும்படியான படிப்புக்கு தமிழில் ஆதாரங்களே இல்லை என்பது தான்.
வடமொழி ஆதாரங்களே தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பல வேஷங்களுடன் திகழ்கின்றனவேயன்றி மக்களுக்கு அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் உண்டாகும்படியானவைகள் அல்ல.
ஆகவே மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உலக இயல் அறிய சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஆதாரங்கள் பத்திரிகைகள் படிக்கவும் பல மக்களிடம் சேர்ந்து பழகிப் பேசவும் சௌகரியமுள்ளதான வாசக சாலைகளேயாகும். நிற்க சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி நான் பேசுவேன் என்று விளம்பரப்படுத்தி இருக்கின்றீர்கள்.
சுயமரியாதை இயக்கமானது நமது நாட்டு மக்களின் சமத்துவத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமாகும்.
அது முதலாவதாக மக்கள் பிறவியில் கீழ் ஜாதி, மேல்ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஆண் மேலானவன், பெண் கீழானவள் என்கின்றதையும், பணக்காரன் ஏழை - அரசன் குடிகள் - குரு சிஷ்யன் - கடவுள் அடியார் என்கின்றவைகளில் இருந்து வரும் உயர்வு தாழ்வு வித்தியாசங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதே அதன் முக்கிய கொள்கையாகும். மேல்கண்ட உயர்வு தாழ்வு வித்தியாச உணர்ச்சியே மக்களை அடிமைப்படுத்தி விட்டது.
எல்லா நாடுகளிலும் இந்த வித்தியாச உணர்ச்சிகள் மாறுபட்டு சமத்துவவுணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் பரவி வருகின்றது.
நமது நாடு மாத்திரம் உலகத்திலேயே எல்லா வகைகளிலும் அடிமை நாடாக இருக்கின்றது. இந்த நாட்டு மக்களைப்போல் மனிதத் தன்மையற்ற மக்களை வேறு எந்த நாட்டிலும் காண்பதரிது. மக்களுக்கு சுய அறிவும் இல்லை, பிறர் அறிவையும் கேட்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அத்தடைகளை விலக்க முயற்சிக்கும் போதுதான் கடவுளும், மதமும், மதாச்சாரியர்களும் வந்து பார்ப்பனர் மூலமும் பண்டிதர்கள் மூலமும் குறுக்கிடுகின்றார்கள். அப்படிக் குறுக்கிடும்போது அவைகளைத் தூக்கித் தூர எறிந்து விட்டுப் போக வேண்டியதாகின்றது. அப்போது சுயநலக்காரர்களால் நம்மை மதத் துரோகிகள் என்றும் கடவுள் விரோதிகள் என்றும் சமயாச்சாரிகளை தூஷிக்கின்றவர்கள் என்றும் சொல்லப்படுகின்றார்கள்.
நமது நாட்டு மக்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகவே மூட நம்பிக்கையிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் ஈடுபட்ட பாமர மக்களானதினால் சுயநலக்காரர்கள் சூட்சியை சுலபத்தில் நம்பி ஏமாறுகிறார்கள்.
அவர்களையெல்லாம் அறிவுள்ள மக்களாக்கி நாட்டை சுதந்திரமுள்ளதாகவும் செய்ய வேண்டுமானால் எவ்வித பழிப்புக்கும் தூற்றலுக்கும் பயப்படாமல் வேலை செய்தால்தான் முடியுமே ஒழிய அன்னியர் நம்மை குற்றம் சொல்லுவார்களே என்று பயந்தால் ஒரு காரியமுமே செய்யமுடியாது.
நம்மை அன்னிய ஆட்சிக்கு அடிமைப்படுத்தினவர்கள் நமது நாட்டு வைதீகர்களும் பண்டிதர்களும் பணக்காரர்களுமே ஆவார்கள். இவர்களுக்கு உதவி செய்வது மதமும் கடவுளுமேயாகும். மதத்தின் கொள்கையையும் கடவுள் செயலையும் ஆயுதமாக வைத்துக் கொண்டே இந்த நாட்டு மக்களின் அறிவையும் சுயமரியாதையையும் நாசமாக்கி விட்டார்கள்.
போதாக் குறைக்கு தேசீயம் என்பதாக ஒரு புதிய புரட்டு சில காலமாய் புறப்பட்டு அது மதமும் கடவுளும் பாக்கி வைத்த கொஞ்ச நஞ்சங்களையும் ஒழிக்கத் தலைப்பட்டு விட்டது. 40 வருஷ காலமாய் நமது நாட்டில் ஏற்பட்ட தேசீயம் இதுவரை மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கின்றது? என்பதை யோசித்துப் பாருங்கள். தேசீயத்தின் பலனாய் பலர் உத்தியோகம் சம்பாதிக்கவும் பலர் பதவி சம்பாதிக்கவும் ஏற்பட்டதே தவிர தீண்டாமை ஏதாவது ஒழிந்ததா பாருங்கள்.
குறிப்பு : 20.07.1930 ஆம் நாள் கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன் வாசக சாலையைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.
(குடி அரசு - சொற்பொழிவு - 27. 07. 1930)