சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அது அற்ப ஆயுளாய் முடியுமென்றே முடிவு கட்டி இருந்தோம். அந்தப்படி ஒழிந்து விடுமென்று எதிர்பார்த்த காலத்திற்கு மேலாக சற்று காலம் கடத்தி வரப் படுகின்றது. சட்டமறுப்புத் தன்மையை தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்ல முடியாதவர்களும் அதில் கலந்து கொள்ள சிறிதும் தைரியமில்லாதவர்களுமாய் இருந்த சில கூட்டாத்தாருக்கு சட்டமறுப்பு இயக்கம் நீடித்து இருப்பதால் வாயில் பேசி பெருமையும் திருப்தியும் அடைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த மாதிரி இனியும் கொஞ்சம் காலம் கடத்தும் நிலைமைக்கு சட்டமறுப்புக்காரர்களாவது வாய்ப்பேச்சு வீரர்களாவது சிறிதும் பொறுப்பாளிகளல்ல என்பதே நமது முடிவு. மற்று யார் என்றால் சர்க்காராரே முக்கிய காரணஸ்தர்களாவார்கள்.
இந்தக் கிளர்ச்சி ஆரம்பித்த காலத்தில் அனேகமாய் இந்தியா தேசம் முழுவதும் அதற்கு எதிரிடையாய் இருந்த காலத்தில் பேசாமல் விட்டுவிட்டு பிறகும் கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் அனாகரீகமான முறையில் முரட்டு பலத்தை பிரயோகித்ததால் இப்போது பாமர மக்களை மயங்கச் செய்து அதில் கவனம் செலுத்தும்படி செய்து வருகின்றது. நியாய, அனியாயங்களை கவனியாமலும் காரண காரியங்களை கவனியாமலும் இதுசமயம் பாமரமக்கள் பலர் அவ்வியக்கத்திற்கு அனுதாபம் காட்டுகின்றார்கள்.
சட்டமறுப்பின் விஷயம் தெரிந்தோ அதன் தத்துவத்தை உணர்ந்தோ அனுதாபம் காட்டப்படவில்லை என்பது உறுதியானாலும் சர்க்கார் நடவடிக்கையின் பலனாய் “சர்க்காரார் அடிக்கிறார்கள். அடிக்கிறார்கள்”என்கின்ற ஒரு காரணத்திற்காகவும், “நாளைக்கு நம்மையும், இப்படித்தானே அடிப்பார்கள்” என்கின்ற எண்ணத்தைக் கொண்டும் அவ்வியக்கத்தினிடம் அனுதாபம் காட்டுகின்றார்கள். பாமர மக்களின் அனுதாபம் சட்டமறுப்பு இயக்கத்தின் பக்கம் திரும்பி விட்டது என்கின்ற சந்தேகம் படித்த மக்களுக்கு உண்டானவுடன் அவர்கள் தாங்கள் அடுத்த தேர்தலில் ஸ்தானங்கள் பெற வேண்டுமே என்கின்ற கவலையின் மீது அவர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் அனுதாபம் உள்ளவர்கள் போல் நடந்து கொள்ள வேண்டியவர்களாகி விட்டார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் சர்க்கார் என்றுதான் மறுபடியும் சொல்லுகின்றோம். நிரபராதிகள் அனேகர் அடிபடுகின்றதானது அவ்வியக்கத்தை நெய் வார்த்து வளர்ப்பதுபோல் ஆகின்றது.
அன்றியும், இதில் சர்க்கார் காட்டின தந்திர புத்தியும், இயக்கத்திற்கு அனுகூலமாகி விட்டது. உதாரணமாக வைசிராய் பிரபு தன்னைப் பொருத்த வரையில் தான் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீது வழவழவென்று பேசுவதும் திரு. காந்தியையும் காங்கிரசையும் புகழ்வதும் இந்தியா மந்திரி தன்னைப் பொருத்தவரை தான் நல்ல பிள்ளையானால் போதுமென்று இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும் பிரிட்டிஷ் முதல் மந்திரி தன்னைப் பொருத்தவரைதான் எல்லாரையும்விட நல்ல பிள்ளையாய் ஆகிவிட வேண்டுமென்று யெல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் பேசுவதுமாகிய காரியங்கள் இயக்கத்தை வளர்த்திக் கொண்டே இருக்கின்றது. அவர்கள் உண்மையிலேயே மனப்பூர்வமாய் மனதிலுள்ளதை பேசினார்கள் என்று சொல்லுவதானால் இம்மாதிரி தடியடி தாண்டவம் நடந்து கொண்டு இருக்க முடியாது. சென்னையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் போலிசார் நடவடிக்கையையும் சர்க்காரின் போக்கையும் கண்டித்து மூன்று நாளையில் இரண்டு தீர்மானங்கள் செய்யப்பட்ட பிறகுகூட அதே முறையில் தடியடிப் பிரயோகம் நடக்கின்றதென்றால் நடுநிலைமையில் உள்ளவர்கள் இக் காரியத்திற்கு சென்னை அரசாங்கத்தையே பொருப்பாக்க முடியாது.
இந்தியா கவர்ன்மெண்டிலிருந்து “நான் நல்ல மனிதன்போல் வாயில் பேசிக் கொண்டிருக்கின்றேன். நீ உன் காரியத்தைப்பார்” என்று உத்திரவு வந்திருந்தாலொழிய மற்றபடி வேறு காரணம் இருக்க முடியாதென்றே கருத வேண்டி யிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதற்காக யோசித்து முடிவு செய்ய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களை விடுதலையும் செய்துவிட்டு மறுபடியும் இந்தக் காரியம் செய்வதானது, “சர்க்காரார் சட்டமறுப்புக்கு பயந்து கொண்டு தலைவர்களை விட்டு விட்டார்கள் என்று எங்கும் பாமர ஜனங்கள் எண்ணி சர்க்காராரை ஏளனம் செய்வார்களே என்கின்ற பயத்தின் மீதும் இந்திய அரசாங்கம் தடிப்பிரயோகத்திற்கு அனுமதி கொடுத்து வருவதாகவும் கருத வேண்டி இருக்கின்றது.
எந்தவித எண்ணத்தின் மீது வெகு புத்திசாலித்தனம் என்று கருதி இந்தக் காரியம் செய்திருந்தாலும் இதற்கு யார் பொறுப்பாளியானாலும் சர்க்காராரின் இந்த செய்கையானது பாமர மக்களை சட்டமறுப்பு இயக்கத்திற்கு அனுதாபம் காட்டவே இக்காரியம் பயன்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. பாமர ஜனங்களை கிளப்பிவிட இது மிகவும் பயன்பட்டு வருகின்றது.
உதாரணமாக சென்னையில் இந்த வாரம் நடந்த தடிப்பிரயோகமானது மிக்கப் பெரிது செய்யப்பட்டு சென்னை ஜனங்களின் 100 க்கு 50 பேர்களின் மனமானது சட்டமறுப்பு இயக்க சம்மந்தமான எல்லா நடவடிக்கைகளினிடமும் அனுதாபம் காட்டும்படி செய்து இருக்கின்றது. பரீட்சை பார்க்க வேண்டுமானால் சமீபத்தில் நடந்த தேர்தலில் சென்னையில் வெற்றி பெற்ற 4 சட்டசபை அங்கத்தினர்களும் தங்கள் ஸ்தானத்தை இராஜீனாமா செய்து விட்டு இன்று மறுபடியும் நிற்பார்களேயானால் ஒருவர் கூட வெற்றி பெற மாட்டார்கள். சாதாரணமாக திரு. கே. பாஷ்யம் அவர்களுக்கு முதல் ஸ்தானமும் மற்றவை அவர் சொல்லுகின்ற ஆள்களுக்குமே கிடைக்கும் என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஆகவே பாமர மக்களின் மனதைப் பாழாக்கத் தான் இம்மாதிரி நடவடிக்கை பயன்படுகின்றது. இயக்கத்தில் கலந்துள்ளவர்களில் 100க்கு 99 பேர்களின் எண்ணம் இதுதான் என்பதை சர்க்காரார் தெரிந்திருந்தும் இம்மாதிரி நடந்தால் பிறகு இதற்கு யார் மீது குற்றம் சொல்ல முடியும்?
தவிர நமது மக்களுக்கும் சொந்த புத்தி குறைவு என்பதற்கு மற்றொரு உதாரணம் சொல்லுவோம். அதாவது சர்க்கார் தடியடியை வெகு நாளாகவே வெகுபேர்மீது பிரயோகித்து வந்திருக்கின்றார்கள். இதுவரை சுமார் எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான அடி கிடைத்திருக்கின்றது. ஆனால் அவர்கள் பேர்கள் எல்லாம் அனாமதேயமாய் போய்விட்டது. திருவாளர் பாஷியத்திற்கு நடந்ததாகச் சொல்லப்படும் தடியடியானது “ஆகாயமளாவி, கடல்முட்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் முதுகிலும் தடிப்பு உண்டாகிவிட்டது” என்று புராணப்புளுகர்கள் வர்ணிக்கும் மாதிரி இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் அடிபட்டது போல் கருதும்படி அவ்வளவு தந்திரம் செய்யப்பட்டிருக்கின்றது,
நமது ஆட்களே இந்த பிரசாரத்திற்கு பெரிதும் காரணம் என்று சொல்லுவோம். ஏனெனில் அவர்களது பயங்காளித்தனமே அதற்கு காரணமாகும்,
திரு, பாஷ்யம் பட்ட அடியானது ஈரோடு திரு. ஈஸ்வரன் பட்ட அடியில் 100 ல் ஒரு பங்கு இருக்காது,
திரு, ஈஸ்வரனை இன்னவிதமாய்த்தான் அடிப்பது என்றில்லாமல் அடித்து காரில் வைத்து ஊரை விட்டு 15மைல் தாட்டி ஒரு காட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் இரவில் விட்டுவிட்டு வந்தார்களாம். இம்மாதிரி காரியங்களுக்கு இந்தக் கூட்டத்தார் யாரும் அனுதாபப்படவே இல்லை, ஆகவே அடிபடுவதும் அனுதாபப்படுவதும் அதற்காக சர்க்காரைக் கண்டிப்பதும் எல்லாம் அடியோடு தன் தன் சொந்த நலத்திற்கும், விளம்பரத்திற்கு மாகவே இருக்கின்றதேயொழிய உண்மையான காரியத்திற்கோ ஒரு பொது நலத்திற்கோ இல்லை யென்பது நன்றாய் விளங்குகின்றது. திரு, பாஷியத்திற்காக மாத்திரம் சென்னையில் வக்கீல்கள் ஒன்றுகூடி துக்கம் கொண்டாடி ஊர்வலம் சென்றார்களாம். இது எதற்காக? அடுத்த எலக்ஷன் ஓட்டுக்காகவா? அல்லவா என்பதை யோசித்தால் உண்மை விளங்காமல் போகாது. நிற்க,
எந்த வக்கீலாவது இதற்காக ஒரு நாள் வேலையை நிறுத்தி அனுதாபம் காட்டினாரா. அடித்ததும், அடிக்கச் செய்ததும், அய்யங்கார் பார்ப்பனர்தானே அவரை ராஜீனாமா செய் என்றார்களா? அவர் பேரையாவது வெளிப்படுத்தினார்களா? சர். உஸ்மான் பெயர்தானே அடிபடுகின்றது.
சட்டமறுப்பை ஆதரித்துப் பேசி வந்த பலர் வட்டமேஜை மகாநாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தங்களுக்குக் காரணம் சட்டமறுப்பு இயக்கந்தான் என்றும் சட்டமறுப்பு இயக்கத்தைக் கண்டு சர்க்காரார் இருப்பதா போவதா என்றும் எண்ண வேண்டியவர்களாகி விட்டதால் பயந்து கொண்டு கொடுத்து விட்டார்கள் என்பதாகவும் ஒரு சோம்பேறிக் கூட்டம் திண்ணை திண்ணையாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பொய்யாக்க வேண்டிய அவசியமும் சர்க்காராருக்கு ஏற்பட்டு விட்டாற்போல் ஒருபுறம் வாயிலும் ஒருபுறம் தடி யாலும் பேச வேண்டியவர்களாகி விட்டார்கள்.
வட்டமேஜைத் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும், சமீபத்தில் கலந்து பேசப் போகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதன் பயனாக சமீப காலத்திற்குள் இந்திய சட்டசபையும் மாகாண சட்டசபைகளும் கலைந்து புதிய தேர்தல்கள் அதுவும் ஒரு வருஷத்திற்குள்ளாகவே புதிய தேர்தல்கள் ஏற்படலாம் என்பதாக நினைக்க வேண்டியிருக்கின்றது. மாகாணங்களின் நிர்வாக சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கைகளும் குறைந்து அவைகளும் மந்திரி ஸ்தானங்களாக மாறினாலும் மாறலாம்.
ஆகவே இந்த மாதிரி தேர்தல்களுக்கு இந்தத் தடிப் பிரயோகமானது வெகு தூரம் உதவி செய்யக்கூடும். அந்தப்படி ஏற்பட்டாலும் நாம் அதிசயப் பட நியாயமில்லை. சென்னை காங்கிரஸ் தலைவர்கள் திரு. காந்தி அவர்களுக்கு இதைத்தான் முக்கியமாய் வலியுறுத்துவார்கள். திரு. சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் வார்த்தைக்கு திரு. காந்தி முதலியவர்கள் காது கொடுத்துத்தானாக வேண்டி யிருக்கும். திரு. சாஸ்திரியாரும் சீமையில் இருந்தே இதற்கு உத்திரவு வாங்கி வந்திருக்கலாம் என்று கூட எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆகவே ஒரு சமயம் திரு. காந்தி அவர்கள் இதற்கொப்புக் கொண்டால் சட்டசபைகள் அவசரமாக கலைவது என்பது உறுதியேயாகும். அந்தப்படி அவர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட வட்டமேஜை மகாநாட்டிற்குப் போனவர்கள் ஸ்தானம் பெறவும் அடுத்த சீர்திருத்தத்திற்கு விதிமுறைகள் ஏற்படுத்தவும், என்கின்ற அவசியத்தின் மீதாவது கலைக்கப்படலாம். அல்லது புது வைசிராய் வந்தவுடன் ஒரு புதிய மாறுதலைக் காட்டவாவது ஏற்படலாம். அந்த சமயத்தில் பழைய சுயராஜ்யக்கட்சி தோன்றியது போல் சுதேசிக் கட்சி என்பதாக ஒன்று தோன்றி தேர்தல்களுக்கு போட்டி போட்டாலும் போடலாம். ஆதலால் இன்றைய மந்திரிகளும் சட்டசபை மெம்பர்களும் மறுபடியும் தாங்கள் ஸ்தானம் பெற வேண்டுமே என்கின்ற எண்ணத்தின் மீது சட்ட மறுப்புக்கு அனுதாபம் காட்டி கண்களில் நீர் ஒழுக்க வேண்டிய அவசியமுடையவர்களாவார்கள் என்பதிலும் அதிசயமிருக்காது என்போம். எனவே பொது அபிப்பிராயம் சர்க்காருக்கு விரோதமாக பலப்பட்டுக் கொண்டு வருவதற்கு தடிப்பிரயோகம் ஒருபுறம் பயன்பட்டு வருவதால் சென்னை அரசாங்கம் உடனே கவனித்து புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும்.
(குடி அரசு - தலையங்கம் - 01.02.1931)