கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம், சர்வாதிகாரம், சட்டம், ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அனைத்தையும் அவை பயன்படுத்தப்படும் இடங்கள் எவை, பயன்படுத்துபவர்கள் யார், இவற்றால் பயன்படப் போகிறவர்கள் யார்? பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? என்பவற்றை வைத்துத்தான் முடிவு செய்ய முடியும். எல்லா இடத்திற்கும், எல்லாச் சிக்கல்களுக்கும் பொதுவாக - ஒரே மாதிரியாக இவற்றைப் பயன்படுத்த முடியாது.
ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம். தோழர் பெரியாரின் சர்வாதிகாரம் என்றால் ஏற்போம். பெரியாரியலைப் பரப்புவதற்குத் தடை என்றால் ‘கருத்துச்சுதந்திரம்’ என்ற சொல்லையும் பயன்படுத்துவோம். அதே ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற கருவியை, பார்ப்பன ஆதிக்கக்காரர்கள் பயன்படுத்தினால் எதிர்ப்போம். ஒரு கவுண்டர் சங்கமோ, வன்னியர் சங்கமோ கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் பேசினால் உறுதியாக அந்தக் கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்போம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் உடுமலைப்பேட்டையில் தி.வி.க தோழர்கள் ஆயுதபூஜை குறித்து துண்டறிக்கை விநியோகித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார்கள். துண்டறிக்கைகூட வெளியிடக்கூடாது என காவல்துறை வழியாகத் தடையை உருவாக்கியது இந்துமுன்னணி. அதே அமைப்பு, அப்போது கமலஹாசன் வெளியிட்ட விஸ்வருபம் 2 படத்தின் கருத்துரிமைக்காகப் போராட்டத்தில் இறங்கியது. இப்படிப் பல சான்றுகள் உள்ளன.
எல்லாச் சொற்களையும், எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக பயன்படுத்த முடியாது. இது அனைத்துத் தத்துவத் தலைவர்களுக்கும், அனைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும்.
அந்த அடிப்படையில்தான், மெர்சல் படத்தின் கருத்துச்சுதந்திரத்திற்காகத் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. பா.ஜ.க, மோடி எதிர்ப்பு காரணமாக, நாமும் மெர்சலின் கருத்துச்சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களை ஆதரித்தோம். அதே சமயம் பெண்களைக் கொச்சைப்படுத்தும் “கேரள பெண்கள் அழகா? தமிழ்நாட்டுப் பெண்கள் அழகா” என்ற ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்.
நிகழ்ச்சி நடந்தால் தானே அதில் கொச்சைப்படுத்தினார்களா? பெருமைப் படுத்தினார்களா? என்பது புரியும்? என்று கேட்கலாம். உண்மைதான் நிகழ்ச்சி நடந்த பிறகு விமர்சிக்கலாம். ஆனால், அதையெல்லாம் ‘கருத்துச்சுதந்திரம்’ என்பதை அதே பொருளில் - ஒரே பொருளில் - அனைத்து இடங்களிலும், ஒரே மாதிரியாகப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே கூறமுடியும். அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
நிகழ்ச்சிக்குத் தடை வந்த பிறகு 23.10.17 அன்று நியூஸ்ஸ்18 தொலைக்காட்சியின் ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில், நீயா? நானா? நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் திலீபன், ஆண்டனி இருவரும் பேசியதைப் பார்த்த பிறகு, அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே வேண்டியதில்லை - எதிர்த்துத் தடை பெற்றதில் சிறிதும் தவறே இல்லை என்பது புரிந்தது.
“குடும்பப் பெண்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்க்க மாட்டார்கள்” என்கிறார் ஆண்டனி. இதற்கு முன்பு இவர்கள் நடத்திய ‘நீயா? நானா?’ நிகழ்ச்சிகளில் பெண் விடுதலைக்கு ஆதரவான விவாதங்கள் நிறைய வந்துள்ளன. அவை எல்லாம் சமுதாய விடுதலை என்ற நோக்கில் இல்லாமல், வெறும் கமர்ஷியல் நோக்கில் மட்டுமே தயாரித்தார்கள் என்பதற்கு ஆண்டனி பேசியதே சான்று.
‘குடும்பப் பெண்’ என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ஆண்டனி? இந்தக் ‘குடும்பப் பெண்’ என்ற சொல், பல கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளையும் - காதல்களையும் - ஆசைகளையும் - இலட்சியங்களையும் -சுயமரியாதையையும் - சுய அடையாளத்தையும் அழித்துள்ளது. அழித்துக்கொண்டிருக்கிறது. அழிக்கப்போகிறது.
களநிலவரம், கள எதார்த்தம் என்றெல்லாம் அள்ளிவிடும் ஆண்டனி, திலீபன், கோபிநாத் கூட்டமே! இன்று இந்தியாவில் உள்ள குடும்பங்களில் வாழும் பெண்களின் மனநிலவரம் தெரியுமா? அதை எந்த ஏஜன்சியாலும் சர்வே செய்ய முடியாது. ஆம். உண்மையை, உண்மை மன நிலையை வெளிப்படையாகக் கூறினால் மட்டுமே எவரும் சர்வே எடுக்க முடியும்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் ‘குடும்பங்கள்’ என்பவை எவராலும் அசைக்கமுடியாத சிறைக் கூடங்களாக உள்ளன. அந்தச் சிறையில் ‘நல்ல பெண்’, ‘குடும்பப் பெண்’ என்று பட்டம் பெறுபவள் ஒரு பிணத்திற்குச் சமமானவள். அப்படிப்பட்ட பிணங்கள் உங்கள் நிகழ்ச்சியை எதிர்க்காது. உண்மை தான்.