1800 காலப்பகுதியில் இருந்து தொடங்கலாம். சைவத் துறையில் அப்போது கடந்த நூற்றாண்டுகளின் பரிமாணங்களே நிலவின. பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் பற்றிய போற்றி உணர்வுகளும், தத்துவராயர், சிவஞான முனிவர் உணர்ந்த மெய்யுணர்வுகளும் பயிற்சியில் விளங்கின. வீரசைவமும், லகுலீச பாசுபதமும் குறிப்பிட்ட இடங்களில் கைக்கொள்ளப்பட்டு நிலவின. 13-ஆம் நூற்றாண்டு மெய்கண்டாரது சித்தாந்த நெறியும், 16-ஆம் நூற்றாண்டுத் தத்துவராயரது வேதாந்த நெறியும் சைவத் துறையில் வேர் ஊன்றி நிலவின.

சித்தாந்த நெறியானது 18-ஆம் மாதவ சிவஞான முனிவரால் வீறார்ந்த வளம் பெற்றது. அவர் வேதம் மற்றும் ஆகமங்கள் வழி நின்று உபநிடதங்கள், பேருரைகளை உடன் கொண்டு மெய்கண்டாரது சிவஞான போதத்திற்கு மாபாடியம் கண்டு வளப்படுத்தினார். மேலும், நான்கு வேதங்கள், ரௌரவம், மிருகேந்திர ஆகமங்கள் மற்றும் பவுட்கரம், மதங்கம் ஆகமங்களையும், சுபாலம், சாந்தோக்கியம், சுவேதாச்சுவதரம் உபநிடதங்களையும், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், சிவாக்கிர யோகிகள் ஆகியோரது பேருரைகளையும் போற்றிக் கொண்டார். அந்த ஞானத்தில் பதி, பசு, பாசம் முப்பொருளுக்கு விளக்கம் கண்டார். ஆனால் அப்போது வேதாந்த நெறியினுக்கு இது போன்று விளக்க நூல்கள் எழுதவில்லை. வைராக்கிய நூல்களே பயிற்சியில் நிலவின. இந்த நெறி பரமாத்துவிதம் எனவும் தத்துவராயரால் குறிப்பிடப்பட்டது. வேதம், ஆகமம், உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியனவற்றை இது பிரமாணங்களாகக் கொண்டு நின்றது. பிரம்ம சூத்திரத்தை அனுசரிப்பது இல்லை. பொதுவாகவே, சைவத் துறைகள் பிரம்ம சூத்திரத்தை அனுசரிப்பது இல்லை.

மெய்கண்டார் மற்றும் தத்துவராயர் நெறிகள் ஒரு தெய்வக் கோட்பாட்டை விளக்கின. உலகு, தனி ஆத்மாக்களை உண்மை என ஏற்று இருந்தன. மெய்கண்டார் நெறியானது மாயை என்ற ஒன்றைத் தனிப் பொருளாக ஏற்று இருந்தது. தத்துவராயர் நெறியானது மாயை என்ற ஒன்றை எந்த வகையிலும் ஏற்கவில்லை. மெய்கண்டார் சித்தாந்தமானது ஒவ்வொரு உடலிலும் ஆன்மா உண்டு எனப் பல ஆத்மாக்களை எடுத்துக் காட்டியது.

தத்துவராயர் வேதாந்தமானது ஏகமான பிரம்மம் ஒவ்வொரு உடலினுள்ளும் அநுப்பிரவேசித்துத் தனித் தனி ஆத்மாக்களாக இருக்கை கொள்ளுகிறது என எடுத்துக் காட்டியது. இந்த நெறிக்காகத் தத்துவராயர் பெருந்திரட்டு, குறுந்திரட்டு என நூல்களைத் தொகுத்தார். சூதசம்ஹிதையையும், அதன் ஒரு பகுதியாகிய பிரம்மகீதையையும் சேர்த்து மொழி பெயர்த்தார். மேலும், வீரை. ஆளவந்தார் எழுதிய வமல ராமாயணம் என்ற ஞான வாசிட்டம் வைராக்கிய நூலாகப் போற்றப்பட்டது. இவை எல்லாம் சைவத் துறையுள் வேதாந்த நூல்களாகக் கொள்ளப் பட்டன. இந்த இரண்டு நெறிகளும் சங்கர அத்வைதத்தை மாயா வாதம் என மதிப்பிட்டன. மேலும், பஞ்சராத்திரம், பௌத்தம், சமணம், உலகாயதம் ஆகியனவற்றையும் இந்த நெறிகள் நிராகரித்தன. அப்போது இங்கு ஆட்சியில் இருந்த இஸ்லாத்தையும், ஆட்சிக்கு வந்து கொண்டு இருந்த கிறித்தவத்தையும் இவை பேசவில்லை. வீரசைவத்தை அனுசரித்த சிவப்பிரகாசர் இயேசு சமயத்தை நிராகரணம் செய்தார். கி. பி. 1839-1898 இல் வாழ்ந்த மகான் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள் தமது ஆங்கிலியரந்தாதி நூலினில் ஆங்கிலேயர் சமயத்தைப் பொய் மதம், வாதம் எனக் கண்டித்தார் (50).

19-ஆம் நூற்றாண்டில் சைவத்தின் தொடர்ச்சியை அறிவது என்ற வகையினில், அதன் 18-ஆம் நூற்றாண்டுச் சிறப்பு அமைதியை ஏற்புடையது ஆகும். அதன் பொருட்டுச் சிவஞான முனிவரது மாபாடியத்துள் அடிக்கோடு இடத்தக்கச் சிறப்பு அமைதிகளைக் காண்பது உகந்தது ஆகும்.

18-ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்த போது தத்துவத் துறையினில் பிரம்மம் முதல் மண் ஈராகக் கருதப் பட்ட முப்பத்து ஆறு பதார்த்தங்கள் பேசப்படும் போதே பொருள், காலம், இடம், நிகழ்ச்சி, இயக்கம் என்ற சிந்தனைமுறை முன்னிலைக்கு வந்து கொண்டு இருந்தது. இதே சமயம் ஐரோப்பிய அறிவியல் வளர்ச்சிப் பின்புலத்தினில் தனது சமய சிந்தனையைத் தக அமைத்துக் கொண்ட லூத்ரன் சபை குருமார்கள் ஜேர்மானிய ஹாலே நகரத்து குருத்துப் பள்ளியில் திருச்சபைப் பயிற்சி பெற்று தரங்கம்பாடி வந்து இறங்கி, சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் நகரங்களில் சமயப் பணி புரிந்தனர்.

கத்தோலிக்கச் சபையினர் கோவா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு மதுரை, திருநெல்வேலி, தெற்குக்கரை பகுதிகளில் பணி புரிந்தனர். அர்ச். சேவியர், ஆண்ட்ரிக் பிரிட்டோ , இராபர்ட் டி நோபிலி பணிக்கு பின்னர் சீகன்பால்கு, புளுச்சோ, சூல்ட்ஸ், பெப்ரீசியஸ், வால்ட் சுவார்ச் மற்றும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி ஆகியோர் அந்தச் சபை பணிகளை மேற்கொண்டனர். உறுதிப் பொறுப்பான நிறுவனம், செயல் கண்டிப்பு, பணி புரியும் களம் பற்றிய நுட்பமான மதிப்பீடு அவர்கள் இடையே உலவியது. அந்த இரண்டு சபைமார்கள் தமக்குள் விரோதம் கொண்டு வாழ்ந்தனர். போட்டி போட்டுக் கொண்டனர். ஆனாலும் தமது பொறுப்புகளில் சுயநினைவுடனேயே இயங்கினர்.

காசி முதல் இராமேஸ்வரம் வரையான சிந்து ராஜ்ஜியத்தினில் அடங்கிய மலபார் எனப்பட்ட இந்தத் தேன் தமிழ் பகுதியில் வாழும் மக்களிடையே ஊழியம் புரிந்தனர். 1715-1726 காலப் பகுதியில் தமது விருமறையான பைபிளைத் தமிழில் தந்தனர். 1726-இல் விக்கிரகாராதனை எதிர்ப்பை வெளியிட்டனர். இது ஆவிகளை வணங்குதல், தனித் தனிக் கடவுளர்களை நம்புதல், முன்னோரை வழிபடல், உலகியல் பொருள்களைத் தொழுதல் மற்றும் பலி, படையல் இட்டு வரம் வேண்டுதல் ஆகியனவற்றை எதிர்ப்பதை உட்கொண்டது ஆகும். மேலும், உலகப் படைப்பு, மனிதப் படைப்பு, ஒரே தெய்வம் பற்றியும், ஆத்ம சுதந்தரம், சித்தத்தின் சுயாதீனம் ஆகியனவற்றை வலியுறுத்தியும், மறுபிறப்பு, வினைத் தொடர்ச்சிகளை நிராகரித்தனர். பிரபஞ்சம், உலகம், இயற்கைப் பொருள்கள் ஆகியனவற்றினில் உட்கலந்து நிலவாது, இவற்றிற்கு அப்பால் தனியாக உள்ள அருவமான கடவுளை உறுதிப்படுத்தியும் தமது உபதேசங்களை போதித்தனர். அப்போது ஐரோப்பாவில் அறியப்பட்டு இருந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தெரிந்து நடமாடினர்.

இந்த வரலாற்றுப் பகைப்புலனில் சிவஞான முனிவரைக் காண்பது உசிதமாகும். இவர் காலத்தை ஒன்று எனக் கொண்டு இருந்தார். மற்றபடி, ஆண்டு, அயனம், மாதம், நாள், நாழிகை, சூநாடி எனக் கொள்ளுவது செயற்கை. அதாவது நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டது என்றார் (சூ.2. அதி.2). நீருக்குள் இருந்தும் உயிர்களுக்கு நீரானது இடம் அளிக்கின்றது. ஆதலால் நீருக்குள் இடம் உண்டு என்றார் (சூ.8, அதி.2). விடயமானது எது என்றால் எந்த உணர்வு நிகழும்போது எது விளங்குகின்றதோ அது விடயம். விளங்குதல் விடயத்தின் உரிமை (சூ.2 அதி.2). அதாவது புறநிலையில் திகழும் விடயமானது உணர்வினில் விளக்கம் கொள்ளுகின்றது. அஃது அதனது உரிமை என்ற உலை நூதனமானது.

மேலும், புனர் உற்பவத்தினை விளக்கும் போது "பிரபஞ்சம் அநாதியாகலின், ஆம்முதற்கோடி நம்மனோரான் அறியவாராமையின்'' என்று கூறி, முதற்கோடி என உணர்த்த விழையும் கருத்தியலானது, பிரகிருதி, அசுத்த மாயை என்ற தத்துவ விவரிப்புக்குள் அடங்காதது. வரலாற்றுப் பூர்வமான தொடக்கத்தை அறிய முயல்வது ஆகும். அப்போது தமிழகத்தில் அஃது இயலவில்லை . ஏனெனில், அவர் சூரிய மையத்தை அறியாத நிலையில், பூமி மையத்தை நம்பியபடிப் பிரபஞ்சத் தோற்றத்திற்கு விளக்கம் கொண்டு நின்றார். அதோடு, நவகோள்களும் அந்தரத்தில் இயங்குவதாகம் அறிந்து விளக்கினார். ஆனால் கிரகண விவரங்கள் அறிந்தாரில்லை (சூ,2 அதி.3, சூ.6. அதி.3). சுட்டி அறியப்படும் உலகு என்பது சைவமரபு காணப்படும் உலகு என்றும் இவர் குறித்தார் (சூத்.1.உரை). இது visible world என்ற ஐரோப்பியா மற்றும் விவிலிய வழக்குக்கு இணையானது. இதற்கு இது பொருள் என்று இயலுலகப் பதார்த்தங்கள் உள்ளன என்ற கருத்தானது, வஸ்துக்கள் கண்டிப்பு என்ற தன்மையை உடையன என்ற கிறித்தவ உரையோடு ஒப்பமைதி கொண்டது.

வினை பற்றிய விளக்கத்தில் "வினைகள் சடமாகலின் சென்று அணைய மாட்டாது. ஆன்மாக்கள் சேதனமாகலின் அவைகளே வினைப் பயன்களை அறிந்து எடுத்துக்கொண்டு நுகரும். இதற்கு ஒரு முதல்வன் வேண்டா” என்ற ஒரு தடை ஐயத்தைச் சுட்டிக் காட்டினார் (சூ.2 அதி.2). இது கிறித்தவக் கருத்திற்கு இணையானது. ஆத்மாக்கள் பாப புண்ணியங்களைப் பகுத்து அறியும் சுதந்தரம் உடையன என்பது திருச்சபையினர் கருத்தியல் (சத்திய வேத பரிட்சை.112). சிவஞான முனிவர் உரைக்கும் அறிந்தெடுத்தலும், கிறித்தவர் சொல்லும் மனச் சுதந்தரமும் ஒரே பொருள் கொண்டவை. இவை சித்தத்தின் பகுத்தறிவு, சுயாதீனம் ஆகியனவற்றோடு ஒப்புடையவையும் கூட. ஆத்மா சுதந்தரம் அற்றது என்பது சைவமரபு. அதோடு அறிந்து எடுத்து நுகரும் என்ற கருத்தைச் சுட்டிக் காட்டி நிராகரிப்பது சமகாலத் தன்மையது ஆகும்.

சரியையாளர் நுண்ணுணர்வு அற்றவர். உருவ மேனியாகிய தூலவடிவத்தைப் பொருள் எனக் கொண்டு வழிபடுபவர் (சூ.8. அதி.1). நுண்ணுணர்வு என்பது தூலவடிவைக் கொண்டு சூக்கும உட்பொருளை உணரும் தன்மையாகும். பகுத்தறிவு அன்று. ஆனாலும் அப்படி வழிபடுவது சிவஞான முனிவரால் ஏற்கப்பட்டது. இது விக்கிரகாராதனையைப் போற்றுவதுவும் ஆகும். பொருட்களின் ஒரு பகுதியே இன்னொரு பொருள் வடிவை அடைகிறது. முழுசக்தியும் அடைவது இல்லை. அப்படி முழுவதுவும் இன்னொன்றாகக் காரியப்பட்டால் சக்தி அழியும் பொருளாக, அநித்தியப் பொருளாக ஆகிவிடும் (சூ.2. அதி.4). சிவஞான முனிவருடைய சக்தி வாதக் கருத்தியல் சற்காரிய வாத வழிப்பட்டது. என்றாலும், பொருளின் சக்தி நித்தியமானது என்ற கருத்தமைதி பொலிந்தது.

அதிகாலை, இங்குப் பேசப் பட்டு, பரவி இருந்த கிறித்தவ இன்னொரு கருத்தமைதி விதந்து சுட்டுவதற்கு உரியது. காலம் ஒன்றே என நிகழ் காலத்தை மட்டும் ஏகமாக உள்ளது என உரைத்தனர். மற்றபடி காலக் குறிப்புச் சொற்கள் நமது புத்தியில் மட்டும் உண்டாக்கிக் கொண்டது ஆகும்.

வஸ்துக்களுக்கு ஸ்தலம், இடம், உண்டு. உலகு, பொருள்கள் துவக்கம், கண்டிப்பு, பகுப்பு, மாற்றம் ஆகியனவற்றை சுயஇயல்பாகக் கொண்டு நிலவுவன என்றனர். இவை இறைவனால் படைக்கப்பட்டவை. மரங்கள், தானியதவசங்களது விளைவுகளில், மனிதர், பட்சிகள், மச்சங்கள், மிருகங்கள் முதலிய வஸ்துக்களின் உருவத்திலும், உறுப்புகளிலும் பொருத்தமும், இணக்கமும், கிரமமும் உண்டு. ஆனால், இவைகளில் கடவுளுடைய சொரூபமோ, அம்சமோ இல்லை. இவை கடவுளால் படைக்கப்பட்ட பொருள்கள் மட்டுமே. மேலும், இவை எல்லாம் ஒன்றும் இல்லாமையில் இருந்து உண்டாக்கப்பட்டவை. இவை எல்லாம் மனிதனுடைய வாழ்வியல் பிரயோசனத்திற்காகக் கடவுளால் படைக்கப் பட்டவை. மனிதன் அவைகளுக்கு எல்லாம் அரசன். இப்படியான கருத்துநிலை கிறித்தவத் தந்தைமார்களது நெஞ்சங்களில் திகழ்ந்தது.

இந்த நிலையில் இருந்து "இந்தச் சிந்து இராச்சியத்து சாஸ்திரிகளிலே சிலர் தங்கள் எண்ணத்தில், மேலான தெய்வீக சுபாவத்தைத் தாழ்த்தி உலகத்தினது இயல்பை உயர்த்தி இரண்டும் ஒன்றுதான் என்று சாதித்துத் தெய்வமும் உலகமும் சரிசமம் என்றும், உலகம் எல்லாம் தெய்வசுபாவச் சாயல் என்றும், தெய்வீகத்தின் உருவும், உடலும் என்றும் சொல்லிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், இது புத்திக்கும், மெய்ஞ்ஞானத்துக்கும் ஒவ்வாத தப்பறையே அல்லாமல் வேறல்ல" என மதிப்பிட்டனர் (சத்திய வேத பரிட்சை. 91). இது கிறித்தவர் நோக்கினில் அனைத்திறைக் கொள்கை. வைணவ ஆழ்வார்கள், ஆச்சாரியர், சூஃபிஸ ஞானிகள், பரமாத்துவித சைவ அநுபூதியாளர் தத்தம் வழியினில் போற்றிய மெய்யியல்களைக் கிறித்தவ அருட் தந்தையர் இதில் அடக்கிப் பேசினர்.

அடுத்து, "அப்படியே தெய்வமானது தமது அளவில்லாத சுபாவத்தின் இயல்பினால் எங்கும் வியாபித்தபடி இருந்தாலும் சகல வஸ்துக்களும் அவரிடத்தில் அடங்கினாலும், அவர் அதுகளில் நிறைந்தாலும், அதுகளோடு ஒன்றாகாததைப் பற்றி அவருனடய சர்வ வியாபகம் அந்த வஸ்துக்களின் சுபாவத்தை மாறுபடுத்துகிறதும் இல்லை. அதுகளை மேன்மைப்படுத்துகிறதும் இல்லை. ஆதலால், சர்வேசுவரன் எங்கும் வியாபித்து இருப்பதால் மண்ணு, கல்லு, மிருகம் முதலிய படைப்புண்ட வஸ்துக்களின் ஈனமான சுபாவம் மாறாது இருக்கின்றமையாலும் அதுகளோடு அவர் ஒன்று ஆகாததினாலும் அதுகளை வணங்கி ஆராதிக்கலாகாது (சத்திய வேத பரிட்சை.46)”. இதனைச் சித்தாந்த சைவத்துடன் வைத்து எண்ணத் தக்கது.

மாயையானது வியாபகமாய் இருக்க, முதல்வன் வியாப்பியமாக உள்ளான். மனித உயிர்கள் இடத்திலும் முதல்வன் வியாப்பியமாக உள்ளான் என்பது அதன் மையக் கருத்தியல். "மனிதனுக்குத் துவக்கமும், சாவும் அவனுடைய தத்துவத் தொழில் முதலிய எல்லாவற்றுக்கும் மட்டும் (எல்லை), அளவு இருக்கின்ற அவன் எவ்வந்தஸ்திலாவது, எக்குலத்திலாவது பிறந்தாலும், எவ்வளவோ கீர்த்திப் பிரதாப சோபனத்தைக் கொண்டாலும், எவ்வளவோ வல்லமை அதிகாரத்தோடு ஒட்டோலகனாய்த் திரிந்தாலும், ஞானத்தாலும், கல்வியாலும் எவ்வளவோ சமர்த்தனாய் போனாலும், ஆஸ்தியினாலாவது, தர்மத்தினாலாவது, வேறு எந்த வகையினாலாவது எவ்வளவோ பெரியவனானாலும் தெய்வ சுபாவம் அவனுக்குப் பரிச்சேதமும் இராது. ஆனபடியினால் இராசாக்கள், பிராமணர், லிங்கதாரிகள், தாதர், பூர்வ பிதிர்கள் முதலியவர்களுக்குத் தேவலட்சணங்கள் பரிச்சேதம் இல்லை. ஆதலால் அவர்களைத் தேவர்கள் என்று சொல்லவும், கருதவும் கூடாது'' (சத்தியவேத பரிட்சை .15) .

"அநேக கோடி தேவர், பஞ்சபூதம், வேல் முதலான ஆயுதங்கள் எழுத்தாணி, புஸ்தகங்கள், தறி, வெள்ளாவிப் பானை இப்படி அந்தந்தத் தொழிலாளிகள் தங்கள் தங்கள் ஆயுதங்களை நமஸ்கரிக்கிறார்கள். ஸ்திரீகளானவர் முறம், கூடை, குடம், சட்டி, குடுவைகளுக்குப் பூசை செய்வர். மீளவும், துளசி, அரசு, வேம்பு முதலான செடி, மரங்களை வணங்குகிறார்கள். பசு, எருது, குதிரை, யானை, குரங்கு, பருந்து, பாம்பு முதலான அற்ப சீவசந்துக்களை வணங்குகிறார்கள்” (தெய்வ பரிட்சை.7) "அந்தப் புத்தியீனத்துக்குக் குருட்டு நியாயமாக அவர்கள் சொல்லுகிறது ஏதெனில் தெய்வம் சவைந்தரியாமி ஆகையால் எங்கும் வியாபகமாய் நிறைந்து இருக்கிறது என்றும், ஆதலால் அந்தந்த வஸ்துக்களுக்குச் செய்கிற பூசை, நமஸ்காரம் தெய்வத்திற்குச் செல்லும் என்றும் சொல்லுகிறார்கள்” (தெய்வ பரிட்சை.7).

கம்மாளர் செய்யும் பஞ்சலோக, மரபு, கருங்கல் சிலைகளுக்கு வேத பிராமணர் வந்து மந்திர வல்லமையால் அதுக்குத் தேவகலையும், சத்தியும் கொடுக்கவே அது மெய்யான தேவன் ஆயிற்று என்பார்கள் (தெய்வ பரிட்சை.11). "பெய் தேவர்கள் உண்டாக்கப் புலவர்களுடைய உரூபிகார சத்தியும் காரணமாகும். இத்தேசத்துப் புலவர்கள் விசேஷமாய் இப்படிச் சகலத்தையும் தங்களுக் கிஷ்டமானபடி பாவித்து வருணித்துக் கட்டுக் கதைகளைப் பெரும் பிரபந்தங்களாகத் தந்தார்கள். அரச சரித்திரங்களை மனிதர் முதலிய அற்ப சிருஷ்டிகளைத் தெய்வமாக உயர்த்தினார்கள்'' (சத்தியவேத பரிட்சை.205). இந்தத் தேசத்துச் சாஸ்திரிகள் எழுதின புராணம், பிரபந்தங்கள், சாஸ்திரங்கள், போற்றப்பட்ட மரபுகள், வேதபாராயணம் ஆகியனவற்றை இதற்காகவே மேற்கொண்டு உள்ளனர் எனக் கத்தோலிக்கத் திருச்சபையினர் உரைத்தனர்.

தரங்கம்பாடி லூத்தரன் மற்றும் புராட்டஸ்டண்ட் சபையினரும் இப்படியே பேசினர். தீய ஆவிகளையும், முன்னோர் ஆவிகளையும் இயற்கைப் பொருள்களில், சிலைகளில் மந்திரத்தால் ஏற்றினால் அந்தப் பொருள்களில் அவை புகும் என்பதுவும், இது சார்ந்த பாடல், ஆடல், விழாக்கள் கீழ்நிலைப் பழங்கால நாகரீக மக்களிடையே தான் நிலவும். அவர்களுக்கு இயற்கையைப் பற்றிய அறிவும் குறைவு. இவர்கள் தாழ்வானவர்கள். பல தெய்வங்களையும், உலகத் தோற்றம், இருப்பு, அழிவுகளுக்குத் தனித்தனி தெய்வம். மேலும், உலகப் பொருள்களில், மனிதரில் கடவுள் கலந்து நின்று, அவைகளைக் கடவுளது அங்கமாக, பகுதிகளாகக் கொண்டு உள்ளது என்ற கருத்தியலும், இது சார்ந்த சாஸ்திரங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஆடல், பாடல், வழிபாடுகள், விழாக்கள் சற்று நாகரிகம் அடைந்தவர்களால் மேற்கொள்ளப்படும். இஃது அனைத்திறைக் கருத்தியல்.

ஒரே கடவுள், அவரே படைப்பாளர், ஆணை செலுத்தி ஒழுங்கு, கிரமம், இணக்கம் உடைய இந்த உலகை நடத்துபவர். மனிதன் சுயசுதந்திரம் உடையவன். பொருள்கள் அவனுக்காக, அவனது பிரயோசனத்திற்காக உள்ளன. பொருள்களது சுயஇருப்பு, இயக்கம், நியதி உடையவை என்ற கருத்தியலும், அது சார்ந்த மெய்யியல், வரலாறுகள், வழிபாடுகள், விழாக்கள், சபைகள் என்பன உயர்நாகரிகம் உடையவர்களால் கொள்ளப் படுவன. இப்படியாக அருட்தந்தையர் இந்தத் தேசத்து மக்களை அணுகினர். தம்மை ஒரே கடவுள் உடையவர்களாக மதித்துக் கொண்டு, இந்த தேசத்து சமயங்களை, மெய்யியல்களைப் பரிசீலித்தனர். மதிப்பீடு செய்தனர். இதோடு மட்டும் அல்லாது காசி முதல் இராமேசுவரம் வரை உள்ள சிந்திராச்சியத்தில் நிலவிய குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல், கோவில்களில் நடன மாதர் ஆடும் சதிர் நடனம், சக்கி பூசைகளில் மது, கள், அருந்துதல், ஆண், பெண் குழு புணர்ச்சி, சகுனம், நிமித்தம், ஜாதகம் எழுதுவது, ஜோதிடம் பார்த்தல் ஆகியனவும் அருட் தந்தையரால் நிராகரிக்கப் பட்டன.

இந்த உலகினில் நான்கு கண்டங்களிலும் கிறித்தவம் பரவிய காலை, இந்தத் துணைக் கண்டத்திலும் வந்து இறங்கியது. ஆவி வணக்கம், அனைத்திறைக் கருத்தியல் பொலிந்த சமய நெறிகள் எல்லாக் கண்டங்களிலேயும் நிலவின. விவிலிய வரலாறு, கிரேக்க, ரோமானிய நாகரிகங்களைத் தம்முடைய நெறிக்குத் திருப்பிய அனுபவம், அப்போதைய அறிவியல் வளர்ச்சி, பொருளாதார, அரசு ஆதிக்க வேட்கை, வந்து இறங்கிய நிலங்களின் செழிப்பான வளங்களின் மீது உதித்த பேராவல் ஆகியனவற்றோடு, தாங்களே ஒரே மெய்யான ஏகதெய்வம் கடவுள் கொண்ட உயர் நெறியினர் என்ற மேம்பாட்டு உயர்வோடு அங்கங்கு விளங்கிய சித்தாந்த, வேதாந்தங்களைக் கிறித்தவத் தந்தைமார் எதிர் கொண்டனர். இந்தச் சிந்திராச்சியம் உலகின் நூற்று நாற்பதில் ஒரு பகுதி. இதனை மனித சுயாதீனம், சித்த சுதந்தரம் உபதேசித்து அகப் படுத்த விழைந்தனர். வரலாற்று நிலையில், போர்ச்சுகீசிய ஆதிக்கம் இறங்கு முகமான பின்னர், வோவினைத் தலைமை இடமாகக் கொண்டு கத்தோலிக்கத் திருச்சபையாளர் 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் மிகவும் சோர்வு கண்டனர். சுயமாகச் சபை இல்லாமலும், இந்திய மயம் ஆகாமலும் இருந்த தரங்கம்பாடி லூத்ரன் திருச்சபையாளர்கூட மிகவும் சோர்ந்து விட்டனர். மைசூர் திப்பு சுல்தான் மேல் பெற்ற இராணுவ வெற்றிகள் ஆங்கிலேயத் திருச்சபையாளருக்கு ஊக்கம் அளித்தன. தரங்கம்பாடி தேவாலயச் சபை சார்ந்த அருட் தந்தையர் இருபதினாயிரம் சுதேசி மக்களைத் திருப்பிக் கொண்டு முன்னேறினர்.

கிறித்தவத் துறையினருக்கு அபேதுபாய், புக்கானன் இருந்தது போன்று சைவ சித்தாந்த, வேதாந்தத் துறையினருக்குத் தத்தம் நெறியினில் உரியவர் யாரும் அப்போது விளக்கம் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் சிவனே எல்லாமான முதல்வன் என்று ஒரு கடவுள் தன்மையைச் சித்தாந்த சைவமும், பிரம்மமே எல்லாமாக உள்ளது என்று பரமாத்துவித சைவமும் நிறுவும் வரலாற்று இயக்கம் இடையற வில்லை . ஏனெனில், பல தெய்வக் கருத்தியலை மறுப்போம் எனக் கிறித்தவ சபைகள் திரிமூர்த்திகளை, பிரம்மத்தை நிராகரித்தே வந்தன.

1813-இல் விக்டோரியா ஆட்சியில் கிழக்கு இந்தியா கம்பெனியின் வியாபரப் பத்திரம் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், திருச்சபைகளுக்கு இருந்த தடை நீங்கியது. 1815--1833 வரையான காலத்தில் ஆங்கிலிக்கன், கத்தோலிக்கன், அமெரிக்கன் திருச்சபைகள் உற்சாகம் கொண்டன. கிறித்தவ கிராமங்கள், சங்கங்கள், இதழ்கள் தம்தம் சமயப் பணிகளில் முளைத்தன. திருச்சபை சார்ந்த ஆங்கிலக் கல்வி, அதனால் அரசு உத்யோகப் பணிகள் மேற்குல மக்களுக்கு வேட்கையை ஊட்டின. சமய மாற்றத்திற்கு ஆளானால் சமூக உயர்வும், பாதுகாப்பும் கிட்டும் என்ற அவா பஞ்சம குல மக்களைத் தூண்டியது. சரிசம பதவி அமர்வை எட்டினாலும், சாதி முரண்களைக் களைய இயலவில்லை. திருச்சபை மக்களிடையேயும் தொடர்ந்து வீறுடன் நின்றது.

இராணுவத்தினர், ஆட்சியாளர், வணிகர், தோட்ட உரிமையாளர் என வாழ்ந்த ஆங்கிலேயக் கிறித்தவர் ஆங்கிலோ இந்தியர், தமிழ் மேல்சாதிக் கிறித்தவர், ஆதிதிராவிடக் கிறித்தவர் என அப்போது திருச்சபைகளில் இருந்தனர். திருச்சபை அதிகாரிகளில் ஆங்கிலேயரே மிகுதி. இந்திக் கிறித்தவர் மிகவும் சொற்பமே. இவர்களும் ஆங்கிலப் பின்புலத்தை மனதினில் சுமந்தவர்கள். அறிவியல், சமூகவியல், பொருளாயத மற்றும் ஆன்மிக நினைப்புகளோடு சமயவியல், இறையியல் பயிற்சியில் உவகை பூத்தவர்கள். இரேனியஸ், ஸ்நார், ஷமிட், ஹென்ரி பவர், ஜி.யு. போப், சார்ஜெண்ட், கால்டுவெல், பெர்சிவல் போன்ற அருட்தந்தையர் ஊழியம் புரிந்த காலம் இது. அனைவரும் கடற்பயணங்களும், தரைப் பயணங்களும் அளித்த விவரங்களாலும், இயந்தரவியல், ஒளியியல், வேதியியல், உடலியல் தந்த தகவல்களாலும் வளம் பெற்றவர். இரேனியஸ் தாழ்த்தப்பட்ட மக்களையும் கிறித்தவ சமயத்தில் சேர்த்துக் கொள்வதே கிறித்தவ தர்மமாகும் என்ற வேட்கை கொண்டு இருந்தார். இது புரட்சிகரமானது என விவிலிய வரலாற்றாளர் மதிப்பிடுகின்றனர் (விவிலியமும், தமிழும்.102). மேலும், இதன் பொருட்டு இவர் வரலாறு, பூகோளம், பொது அறிவு நூல்களை எழுதினார். துண்டுப் பிரசுர முறையை ஏற்படுத்தித் தனது சமயக் கருத்துக்களை வினியோகித்தார்.

சிந்துராச்சியம் என்பது இந்து தேசம் என அழைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் இந்தியா எனவும், பர்சிய மொழியில் இந்துஸ்தான் எனவும் குறிக்கப் படுவது தொடங்கியது. 18-ஆம் நூற்றாண்டு இறுதிநாட்கள் விவரப்படி சிந்து இராச்சிய மக்கள் "இவ்வுலகத்தின் தேசங்களை முதலாய் நன்றாய் அறிய மாட்டார்கள். இலங்கைத் தீவு, சீனதேசம். அபிசீனிய தேசம், பார்சியா தேசம் இன்னின்ன திசையில் இருக்கும் என்று சொல்லுவது இவர்களுக்கு அருமையாய் இருக்கிறது. அல்லாமல், அப்பால் இருக்கிற தேசங்களின் பேரையும் அறிய மாட்டார்கள்'' (சத்தியவேத பரிட்சை.140). அப்போது சிந்து சமயம் என இந்த இராச்சிய மக்களது சமயமானது குறிப்பிடப்படவில்லை. 1840க்கு முன்தான் இந்து தேசம், இந்தியா என்ற வழக்கீடு தொடங்கியது. அதோடு இம்மக்களது சமயமும் இந்து சமயம் என்று வழங்கப்பட்டது. அப்போதைய இந்து தேசத்திற்கு வடக்கில் தாத்தார் தேசம், கிழக்கில் அசம் தேசம், தெற்கில் இந்து சமுத்திரம், மேற்கில் பார்சுவ தேசம் ஆகியன எல்லைகள் ஆகும்.

இங்கிலிஷ்காரர் வடஇந்து தேசம் என பகுப்பாகக் கொண்டனர். தென் இந்து தேசம், பங்காளம், பிகார், அல்லாபாத், ஆக்ரா நாடுகள் கிழக்கிலும், காபோல், காந்தார், லாகோர், காஷ்மீர், மாநிலத்தின் சிந்து, அச்சிமிர், சூராட்டு, மாளுவ நாடுகள் வடமேற்கிலும் உண்டு. இவை வடஇந்து தேசங்கள். காதேசம், பேரார், உடிசியா, தவுலதாபாத், விசைய நாடு, கோல்கொண்டா, தெக்காணம் என்ற வடசர்க்கார், சென்னப் பட்டணம், ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, தரங்கம்பாடி முதலிய இடங்களையும் உடைய கருநாடு, மைசூர், தஞ்சாவூர், பாண்டிநாடு, திருநெல்வேலி, சேரநாடு, மலையாளம் முதலிய நாடுகள் தென் இந்திய தேசமாகும். மக்கள் அப்போது பத்துக் கோடி. இதில் ஒரு கோடிப் பேர்கள் முகமது மார்க்கத்தினர். சில லட்சம் பேர்கள் கிறித்தவர்கள். மற்ற யாவரும் விக்கிரகாராதனைக்காரர். இந்துக்கள் சதுர் வருணத்தவர். இந்துக்களின் பூர்வ பாஷை சமஸ்கிருதம் எனத் தோன்றுவதாகவும், பிராகிருதம், பாலி, சிந்து அதில் இருந்து பிறந்ததாகவும் திருச்சபையினர் நினைத்தனர்.

மேலும், அப்போது இந்துஸ்தான் பங்காளி, காஷ்மிர், தொகுரா, ஒச்சு, கச்சு, சிந்து, குசிராத்தி, கொங்கணி, பஞ்சாபி, பிகானிர், மார்வார, சேய்பூர், ஒடியப்பூர், ஆரோத்தி, மால்வா, பிரசு, பண்டல்கண்ட், மாராஷ்ட, மகத, கோசல, மாதிலா, நேபால், ஒடிசா, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகியன பிரதான பாஷைகள். அறுபத்து நான்கு கலைகள் வழக்கில் நிலவின. இந்துக்களின் முனிவர்கள் அகத்தியன், ஆங்கிரசன், காசிபன், கௌதமன், நாரதன், பதஞ்சலி, பராசரன், வசிட்டன், விசுவாமித்திரர், வியாசன், தமிழ்நாடு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு, வைகை ஆற்றின் தெற்கு, மருத ஆற்றின் வடக்கு. இதனைச் சூழ்ந்த தென் பாண்டி, குடம், குட்டம் ஆகியன கொடுந்தமிழ் நாடுகள். தமிழ்நாட்டில் சங்கம் நடந்தது. அதில், இறையனார், கபிலர், பரணர், நக்கீரர், ஆலங்குடி வங்கனார் ஆகிய புலவர்கள் விளங்கினர் (வேத அகராதி.43-45).

முன்பு எப்போதும் இல்லாத முறையினில், இந்து தேச சரித்திரத்தைத் திருச்சபையினர் வடிவமைத்தனர். பூர்வீக சரித்திரம், மகமது மார்க்கத்தாருடைய துரைத்தனம், ஐரோப்பா கண்டத்தார் தேசத்தைப் பிடித்துக் கொண்டு ஆளுகின்ற சரித்திரம் என்ற மூன்று பகுப்பாய் அமைத்தனர். இந்தியாவினது பூர்வீக சரித்திரத்திற்குத் தகுதியான நூல்கள் அப்போது இல்லை. ஒரு மலைப்பு சூழ்ந்து இருந்தது. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் மகா பாரதப் போர், அதன் பின்னர் சிசோஸ்திரில், திரியு இஸதாஸ்பீஸ், அலெக்சாண்டர், சிலுகஸ், அந்தியோகஸ் ஆகியோர் ஆண்டனர். மகத வம்சத்தினர், விக்கிரமாதித்தன், ஆந்திரர் மகதத்தை ஆண்டனர். பின்னர் வங்காளம் சிறப்பு எய்தியது. பிறகு பல இராசாக்கள் அங்கிருந்து இந்தியாவில் ஆட்சி செலுத்தினர். இந்தப் பூர்வீக சரித்திரத்தோடு மூவாயிரத்து எழுநூற்று ஐந்தில் எகிப்திய பிதோலேமேயன் தன்னுடைய தாயார் பெயரில் செங்கடல் முகத்துவாரத்தில் ஒரு துறைமுகத்தை நிர்மாணித்து இந்துஸ்தானத்தோடு வணிகம் தொடங்கினான். அப்போது இருந்து போச்ச்சுகீசியர் வரும் வரை இந்தியச் சரக்குகள் அலெக்சாண்டிரியா வழியாகச் சீமை எங்கும் விலைப்பட்டன. கி. பி. 940-க்குப் பின்னர் மகமது மார்க்கத்தார் பரவினர், கிஸ்னி தேசத்து மாமூது, செங்கிஸ்கான் படையெடுப்புகள், தைமூர் முதல் ஒளரங்கசீப் வரையான மொகலாயர் ஆட்சி, நாதிர்ஷாவினது வெற்றி, பின்னர் சிற்றரசர்களது ஆட்சி என ஐரோப்பியருக்கு முந்திய சரித்திரம் நடந்தது.

கி.பி.1498 முதல் வாஸ்கோடகாமா முதல் திப்பு சுல்தான் மீது பெற்ற வெற்றியுடன் தொடர்ந்த கம்பெனி ஆட்சி வரையான காலத்தில் ஐரோப்பியர் பெற்ற வெற்றிகள் கொண்ட சரித்திரம். இப்படியான ஒரு சரித்திரம் இந்து தேசத்திற்குத் திருச்சபையினர் எழுதிக் கொண்டனர். அது வரைக்கும், இந்தத் தேசத்தில் இருந்த இந்துக்களுடைய சமயம் சம்பந்தமான விவரங்களை தொகுப்பாகத் தமிழ் பாஷையில் எவரும் எழுதி வைத்திருக்க வில்லை.

இந்துக்களது மதக் கருத்தியலை அறிய, அதை மூன்று விஷயங்களாக வைத்துத் திருச்சபையினர் விவரித்தனர். தேவர்களது சரித்திரம், நாலு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணங்களது வரலாறு, சமயக் கருத்தியல்கள் என விரித்துப் பரிசீலித்தனர். தேவர் சரித்திரத்தில் மூம்மூர்த்திகளது சரித்திரம், விநாயகன், வயிரவன், வீரபத்திரன், திக்குபாலர், விசுவகர்மன், மன்மதன், தருமசீலி, மன்னார்சாமி, பெண் தேவதைகள், சாமானிய தேவர்கள் பற்றி எழுதினர். இவர்களைப் பற்றிய புராணங்கள், பாகவதம், கந்தபுராணம், திருவிளையாடல், பாரதம் முதலிய புத்தகங்கள் கூறுகின்றன. இந்தத் தேவர்கள், தேவதைகள் மட்டும் அன்றி மிருகங்கள், பட்சிகள், மச்சங்கள், விருட்சங்கள், ஆறுகள், கிரகங்கள், ஆயுதங்கள், கற்கள் ஆகியனவற்றையும் இந்துக்கள் வணங்குகின்றனர் என்று சுட்டிக் காட்டினர்.

நான்கு வேதங்கள் மனுவினது காலத்தில் வித்துவான்களால் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இருக்கு வேதத்தைப் பாலி என்பவனுக்கும், எசுர் வேதத்தை வைசமபாயனன் என்பவனுக்கும், சாம வேதத்தைச் சயமுனி என்பவனுக்கும், அதர்வண வேதத்தைச் சோமனன் என்பவனுக்கும் வியாசர் போதித்தார். வேதத்தில் மந்திரங்கள், உபதேசப் பிரமாணங்கள் உள்ளன. இவை பிராமணர் ஆற்ற வேண்டிய பூசை, மந்திரங்கள், உபதேசங்கள், சடங்குகள் பற்றிக் கற்பிக்கின்றன. வேதமானது எங்கும் உள்ள பிரம்மம், அது மூம்மூர்த்திகளை உண்டாக்கியது, எந்தப் பொருளும் அதனது தோற்றம், பிரம்மத்தை தியானிப்பது உணர்வான ஞானம், உலகமானது மாயை எனப் பகர்கின்றது. மனுஷர்கள் அந்தப் பிரம்மத்தைப் பிரத்தியட்சமாக அறியக் கூடாமையால் மூம்மூர்த்திகளையும், தேவர்களையும் அக்கினியையும், பஞ்சபூதங்களையும், விக்கிரகங்களையும் வைத்து நமஸ்கரிக்க வேண்டும் என வேதமானது கற்பிக்கின்றது.

வேதங்களில் ஆத்மாவானது நித்தியமானது எனச் சில இடங்களிலும், காத்திரமான ஒரு பகுதி எனச் சில இடங்களிலும் காட்டப்படுகின்றது. ஆத்மாவானது தான் செய்த பாவ, புண்ணியங்களின் படியே ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குள் பாய்கின்றது எனவும் கூறுகின்றன. வேதத்தில் உலக சிருஷ்டிப்பைப் பற்றிப் பல விதமாகச் சொல்லப் பட்டு உள்ளது. கூடவே, மேல் உலகு ஏழு, கீழ்உலகு ஏழு எனவும் சித்தரிக்கின்றது.

இருக்கு என்பதற்குபட்ட பெருமை, ஸ்துதி என்றும் எசுர் என்பதற்கு ஸ்தோத்திரம் என்றும், சாமம் என்பதற்குச் சங்காரம் என்றும், அதர்வணம் என்பதற்கு அழித்தல் என்றும் அருத்தம் என்பதாகத் திருச்சபையினர் குறிப்பிட்டனர்.

நாலு வேத உபதேசப் பிரமாணங்களில் இருந்து முப்பத்து இரண்டு உபநிடதங்கள் பிறந்தன. உபநிடதம் என்றால் வேதநுட்பம் என அவர்கள் பொருள் உரைத்தனர். வேதம் பிறந்து வந்த வரலாற்றில் கபிலர் அகவலிலே சொல்லி இருக்கிறதைக் காண்பித்தனர். இதைக் கொண்டு கபிலர் அகவல் பாடலும் பெருவழக்கானது. வேதவியாசன் தன்னுடைய தகப்பன் பிரசங்கித்த வேதத்தைத் தானும் சிலகாலம் பிரசங்கித்து இறுதியில் பார்ப்பாருக்குக் கொடுத்தார் என்றும், வேதம் ஒன்றாய் இருந்தும் நாலு ரிஷிகளது தலைமுறைப்படி போதித்து வந்ததால் அதனை நாலு வேதமாக ஆக்கினார்கள். இப்படியான ஒரு நிரலா வரிசையைக் கூறிச் சரித்திரமாகச் சொன்னார்கள். வசிஷ்டர் அருந்ததி என்ற மாதை மணந்து, எல்லா மனிதரும் சாதிபேதம் இன்றி ஒன்றாய் இருந்து சகலவிதமான மாமிசமும் சாப்பிடலாம் என்று பிரசங்கம் செய்தது, இவர்கள் மகன் காசிபன் ஒரு பறைப் பெண்ணை மணந்து தந்தை போலவே பிரசங்கித்தது, இவர் மகன் பராசரன் அப்படியே பிரசங்கித்தார். அதோடு மச்ச கந்தியை மணந்து வியாசரைப் பெற்றார். பராபர வஸ்து ஒன்று, வேதம் ஒன்று, சாதி வித்தியாசம் இன்றி ஒன்றாய் இருந்து மாமிசம் சாப்பிடலாம் என்ற பிரசங்கம், இதில் இருந்து வேதமானது பார்ப்பனர் தொடர்பு பெற்ற பின்னர் நாலு வேதமாக ஆனது என்ற கருத்தமைப்பு குறிப்பிடத் தக்கது. திருச்சபையினரது விவிலியத்தினது சாயலானது.

இந்துக்களது சாஸ்திரம் இரண்டு வகுப்பாய் உள்ளன. சாங்கியம், பதஞ்சலியம் வேதாந்தம், ஒரு வகுப்பு. இதில் சாங்கியம் இருபத்தைந்து தத்துவம் கூறுவது. இவையன்றி உலகு எனப் பிறிது ஒன்று இல்லை. உலகினது உண்மையை அறிதல் அறிவு ஆகும். இதைக் கூறியவர் கபிலர். முத்தொழிலும் மூலப் பிரகிருதியாகிய மாயையின் இடத்தில் உண்டாயின.

பதஞ்சலியியம் அஷ்டயோகம் உரைப்பது.

பதஞ்சலி என்ற முனிவரால் சொல்லப்பட்டது. இவன் கபிலருடைய கருத்தியல்களை உடையவனாய் இருந்தான். கடவுள் குணமும், செய்கையும் இல்லாதவர் என்றும், சடப் பொருள் மேல் அசைவு தொன்றியதால் சிருஷ்டி உண்டாயிற்று என்றும் சொன்னான். வேதாந்தமானது வேதத்தின் முடிவு. வியாசரால் உரைக்கப்பட்டது. உபநிடதங்களில் இருக்கிற வேத உபதேசர் பிரமாணங்களை மாத்திரம் ஒழுங்காய்ச் சொல்லியது. சங்கரர் இதிலே பரப்பிரம்மம் சர்வலோகத்துக்கும் ஆத்மா என்றும், சகல வஸ்துக்களோடும் ஐக்கியமாக இருக்கிறது என்றும், பலவிதமான தேவர்கள் உண்டு என்றும், பூலோகமானது பஞ்சபூதங்களால் உண்டாக்கப் பட்டது என்றும் சொன்னான். இன்னொரு வகுப்பில் வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூர்வ மீமாம்சை, உத்திர மீமாம்சை என ஆறு இருப்பதாகக் கூறினர். இதில் வேதாந்தம் வியாசரால் உண்டாக்கப்பட்டது. வைசேடிகமானது ஒழுக்கத்தையும், தர்க்கத்தையும், பாட்டமானது காவியக் கவிதைகளையும், பிரபாகரமானது குற்றவியல் விதிகளையும், பூர்வ மீமாம்சை பழமை, சரித்திர, சடங்குகளையும், உத்திர மீமாம்சையானது தர்க்கத்தையும், ஞான காண்ட உபதேசப் பரமாணங்களையும், மகாஆத்மாவைக் குறித்தும் எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எனத் திருச்சபையினர் அப்போது எழுதினர்.

இந்துக்களுடைய புராணங்கள் மும்மூர்த்திகளது சரித்திரத்தை உடையது. மகாபாரதம், இராமாயணம், பாகவதம் ஆகியனவற்றைப் புராணங்கள் எனத் திருச்சபையினர் சொல்லினர். விஷ்ணு புராணத்தோடு சேர்த்து இந்த மூன்றையும் விசேஷித்தவையாக மதிப்பிட்டனர். பதினெட்டு புராணங்கள், உபபுராணங்கள் பற்றி அறிந்து இருந்தனர். இவற்றில் கந்தபுராணத்தில் சுக்கிர பகவான் சூரபத்மனுக்கு உரைக்கும் அண்டகோச வரலாற்றைக் குறிப்பிட்டு விதந்து எடுத்துப் பேசினர். இதில் புவனம், அதைச் சூழ்ந்து உள்ள அண்ட லோகங்கள், அவைகளுக்கு இடையே உள்ள பிரம்மாண்டமான யோசனை தூரங்கள், புவனத்தில் உள்ள கடல்கள், தீவுகள் பற்றிய விவரங்கள் கூறப் படுகின்றன. கோப்பர்நிக்கஸ், லாப்லாஸ் ஆகியோரால் உரைத்த அண்டகோசத்தோடும், தொலைநோக்கி மூலம் அப்போது அறியப்பட்டு இருந்த சூரியன், பூமி தவிர பிற ஏழு கோள்கள் பற்றி அறிந்தவராகத் திருச்சபையினர், கந்தபுராணம் விவரித்த அண்டகோச வரலாற்றைக் கீழ்மையாக எடுத்துப் பேசினர். இந்து சமயத்தில் சைவம், வைணவத்தோடு சைனம், பௌத்தம், சார்வாகம், உலகாயதமும் இருப்பதாக அப்போதைய திருச்சபையாளர் நினைத்தனர். ஆனால், சார்வாகமும், உலகாயதமும் இந்தத் தேசத்தில் விசேஷமாய் இல்லை எனச் சொல்லி வந்தனர்.

சைவத்தில் பதின் ஆறு பிரிவுகளைக் கண்டனர். சிவபூசையின் இயல்பாகச் சரியை, கிரியை, யோகம், ஞானங்களைக் கண்டனர். இதில் ஞானயோகம் இரண்டு வகையாகும். அவை துவைதம், அத்வைதம் எனக் கூறிய வியப்பிற்கு உரியது.

இந்துக்களில் ஞானிகள் உண்டு. ஆனால் மெய்ஞ்ஞானத்தை முற்ற அறியாதவர்கள். இருந்தாலும், ஞானம் உதயமாகி இந்துக்களுடைய கருத்தியல்களை விரோதித்துப் பலப்பல விதமாகப் பொய்யும், மெய்யும் கலந்து பாடி உள்ளனர். அவர்கள் பட்டினத்துப் பிள்ளை, கொங்கணர், அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர். திருச் சபையினர் இவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம் இவர்கள் நாலு வேதங்களை நிராகரித்தனர். எந்தக் கடவுளையும் தொழவில்லை. சற்குருவை ஏற்கவில்லை. மறுபிறப்பு என்பதை நிராகரித்தனர். தன்னைத் தானே அறிவதைப் போற்றியபடி, மனம் ஒன்றி இருத்தலைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் போற்றினர்.

சைவர்கள் இந்து தேசத்தில் தெற்கே அதிகம். இந்து சமயக் கடவுளர்கள் உடல் கொண்டு இருப்பவர்கள். மனிதர்கள் போல் பெண்ணை மணந்து, புணர்ந்து வாழ்பவர்கள். இப்படிப் பட்டவர்கள் மெய்யான கடவுளர் அல்லர். திருத்தந்தையர் இதனைப் பண்ணிப் பண்ணி எடுத்து உரைத்தனர். இப்படிப்பட்ட கடவுளருடைய வரலாறு கூறும் புராணங்கள் அபத்தம், ஆபாசமான தப்பறை எனப் பிரசங்கித்தனர். பிரம்மம், ஆன்மா, உலகம் பற்றிய தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. அஞ்ஞானம் என பேசி வந்தனர் (வேத அகராதி).

இந்துக்களுடைய விக்கிரகாராதனை பந்நிப் பரக்கவும், உறுதியாகவும் இடைவிடாது வந்ததில் இருந்து சதா பிரசங்கித்தனர். இதன் பொருட்டுத் திருச்சபை சரித்திரம், சிந்து தேச மார்க்கம் ஆகிய நூல்களில் எழுதினர். நோவவின் சந்ததியார் உலகம் எங்கும் பரவிய காலை விக்கிரகாராதனை உண்டானது என விவிலியம் கூறுகிறது. யூத மதத்தின் சிதைவுகள் இந்து மதத்தில் இருப்பதாக ஹென்ரி பவர் எழுதி வைத்தார். தேசத்திற்குத் தேசம், காலத்திற்குக் காலம் மாறுபட்டாலும் விக்கிரகாராதனையானது ஒரே தன்மையுடனே நிலவுகிறது. தேவர் மற்றும் வணங்கும் முறை மாறுபட்டாலும் அதன் ஆதாரம், இயல்பு, குணம், பலன் ஒன்றே எனத் திருச்சபையினர் விவரித்தனர். 1800-க்கு முன்னர் இப்படி அணுகவில்லை . 1840 களில் இப்படி அணுகினர். விக்கிரகாராதனை என்பது ஒரு பொதுச் சொல், பெயர். அவபக்தியை, உண்மை , மெய், சுத்தியம் அல்லாத போக்கினைக் குறிப்பிடுவது. ஒரு வஸ்துவைக் காட்டும் சொரூபம், பத்தி உள்ள, புத்தி இல்லாத சிருஷ்டி, மனிதர் இதயத்தில் உள்ள தகாத இச்சை, குணம் மற்றும் ஒன்றும் இல்லாத வெறும் தோற்றம், பேய்கள் ஆகியன விக்கிரகம் என்று திருச்சபையினர் கொள்கை விளக்கம் சொல்லினர். இதன்படி எந்த ஒரு உயிருக்காவது, பொருளுக்காவது பக்தி, வணக்கம், கிரியைகள் செலுத்தப்படுமானால் அதுவே விக்கிரகாராதனை. ஏனெனில், மனிதன் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வது கூடாது.

பராபரன்பால் இருந்து காப்பது விக்கிரகம். மெய்க் கடவுள் ஒருவரைக் கைவிட்டுப் பலவிதமான தேவர்களைச் சிலையாக வடித்து அதனை வணக்கம் செய்வது அவபக்தி. மெய்த்தேவனை ஏறெடுக்காமல் வழுவிப் போய்த் தங்களது மனம் போனபடியான சுயேச்சைப்படி பருப் பொருளை பக்தி செலுத்துவது தாழ்வானது. தேவன் படைத்த சிருஷ்டிகள் எல்லாம் தேவனைக் குறிக்கின்றன என நினைத்து அவைகளை வணங்குவது இது. இது மாமிச இச்சைகளுக்கும், பிரபஞ்ச சிற்றின்பங்களுக்கும் இடம் தரும். மனித ஆத்மாவானது ஒரு விசை தன் சிலையாகிய பராபரனை விட்டுப் பிரிந்தால் அது அவபக்தியிலும், அமார்க்கத்திலும் படிப்படியாய் ஏறிப் போகும். இது ஆத்மாவினது சுபாவம் என்பது திருமறை வேத அகராதியின் விளக்கம்.

மெய்யான கடவுளை விட்டு, படைப்புண்ட பொருள்களாகப் பத்து பகுப்புகளை ஹென்ரி பவர் விக்கிரகாராதனைக்கு உரியனவாக அவதானித்து எழுதினார். 1. சம்மனசுகள், பேய்கள், குலதேவதைகள், வீட்டுத் தேவதைகள், கிராமத் தேவதைகள், இறந்தவர் ஆத்மா, 2. மனிதர், தருமவான்கள்,வீரர், அரசர், தபசிகள், பத்தினிகள். 3. மனிதருக்குரிய இச்சை, குணம், வியாதி, சுகம் சார்ந்த தெய்வங்கள், செல்வம், கல்வி, காமம், பிறப்புகளுக்கு முறையே லட்சுமி, சரஸ்வதி, மன்மதன், லிங்கம் என இவைகளுக்கான தெய்வங்கள். 5. பூதங்களான நிலம், நீர்நிலைகள், நதிகள், அக்னி, வாயு. 6.மரம், தெடிகளான அரசு, வேம்பு, வில்வம், துளசி. 7. நீர் வாழ்வன. 8. ஊர்வன பாம்பு. 9. பறப்பதான கருடன் . 10. மிருகங்களான பசு, அனுமன். இப்படிக் கடவுளர் பெருகப் பெருக உற்சவம், விழாக்கள், ஆடம்பரம், ஆடல், பாடல் பெருகும். அரசர், குருக்கள், வித்துவான்கள், புலன்களுக்கு விஷயமான பொருள்களிடத்தில் ஆசை பெருகும். சத்தியத்தைக் காட்டிலும் கட்டுக் கதைகளில் விருப்பம், வெளிவேஷம் ஆகியனவற்றால் விக்கிரகாராதனை உள்ளது.

இஃது ஆத்ம சுவாதீனத்தை அழிப்பது. சன்மார்க்கத்தை அடக்குவது. மேலும், சோசியம், கௌளி, சர, சகுன, சாமுத்திரிக , துடி, தும்மல், பட்சி, மாந்திரிக சாஸ்திரங்களும் விக்கிரகாராதனையின் பாற்பட்டு சித்த சுதந்திரத்தைக் கெடுப்பது.

விக்கிரக பக்தியினால் சாதி வேற்றுமை ஏற்பட்டதாகவும், ஆண், பெண் கற்பின்மையும், நோயும், பழமை மீது மோகம், சுதேச அபிமானம் இன்மை, சுஜன அபிமானம் இன்மை, அசத்தியம் மற்றும் அயோக்கியப் பெருக்கம் ஏற்பட்டதாக திருச்சபையினர் எடுத்துப் பேசினர். இதனால், ஆண்களிடத்தில் ஒருமை, தீரம், சுறுசுறுப்பு, சலிப்பின்மை காண்பது அரிதாக இருந்ததாகக் கண்டனர் (வேத அகராதி).

சத்திய ஒளி இன்மையால் கடவுளை நிர்குணர் எனவும், சமஸ்தமும் பிரம்மம், பிரம்மம் சமஸ்தமாக உள்ளது. கண்டது எல்லாம் கடவுள், மும்மூர்த்திகள் இவர் தொடர்பான சரித்திரம், புராணம், சாஸ்திரங்கள் கொண்டும் பிராமணர்கள் பிழைக்கவும் நீச சிருஷ்டிகள் மலிந்து உள்ளதாகப் பிரசங்கித்தனர்.

உயிர்க் கொலை, உடன்கட்டை ஏறுதல், கரு அழித்தல், இளம் விதவை நிலை, சாதிக் கட்டுப்பாடு, ஆண்களது பலதார மணம், பெண் கல்வி இன்மை யாதிகளால் தாழ்நிலையில் இருப்பதாகக் காட்டினர்.

இப்படியாக இந்து மதத்தின் கடவுளர்கள், வேதசாஸ்திரங்கள், புராணங்கள், அவதார நம்பிக்கைகள், விக்கிரகாராதனை ஆகியன ஆழமான மறுப்புக்கு கிறித்தவத்தினால் உட்படுத்தப்பட்டன. கூடவே, கல்வி சம்பந்தமான பாடநூல்களும் வெளியிடப்பட்டன. 1820 களில் இரேனியஸ் காலநூல், பூத சாஸ்திரம், வான சாஸ்திரம், சூரிய மண்டலம், மனுகுல வரலாறு, இயற்கை, சரித்திரம், தமிழ் மற்றும் பிரெஞ்சு இலக்கணம், அளவையியல் ஆகிய பள்ளி நூல்களைத் தயாரித்தார். திருச்சபைக்கு மதம் மாறிய எல்லா சாதி மக்களுக்கும் கற்பித்தார். 1839 இல் அருட்திரு. ஜாய்ஸ் மனித அறிவினை மேன்மைப்படுத்திய இயந்திரவியல், காலவியல், அளவையியல், தொன்மம், ஆடியியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கு முன்னுரையாக இயற்கைத் தத்துவம் என்ற நூலினை முன் வைத்தார். இவைகளை முன்னிட்டு நியூட்டன், லாக்கே, லீப்னீட்ஸ், பேகன் ஆகியோரது கருத்தியல்களை அடிநிலையாகக் கொண்டார். 1843 இல் ஜி. யு. போப் விவிலியப் பள்ளியை நிறுவி ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன் மொழிகளைப் படிப்பித்தார். கூடவே, தத்துவம், கணிதம், தர்க்கம், பௌதீகம் ஆகியனவற்றையும் இணைத்தார். 1843 இல் கடாட்சபுரத்தில் பெண்களைப் பயிற்றுவிக்க ஒரு நார்மல் பள்ளியானது மிஷினெரியைச் சேர்ந்த ஐரோப்பியப் பெண்களால் தொடங்கப்பட்டது. 1860 இல் ஆறுமுக நாவலர் பூகோள நூல், அங்க கணிதம், வீச கணிதம், «க்ஷத்திர கணிதம் ஆகிய நூல்களைக் கற்கும் படியாக சைவத் துறை பாலகர்களுக்கு அறிவுறுத்தினார் (பிரபந்தத் திரட்டு.26).

சமயத் துறைக்குப் புறம்பே கல்வித் துறையில் 1860 களில் மூலகங்கள், பரிணாமம் பற்றிய பாடங்கள் இணைக்கப்பட்டன. இயற்கை அதாகவே இயங்குகிறது. தனது செயல் என்ற நிலையில் சுயஆற்றல், சுயதீர்மானம் ஆகிய தன்மைகள் பொலிந்தது. இறைத் தன்மை கொண்டது அன்று. பொருளும் மனித சித்தமும் வேறு, வேறு. பொருள்களது இயக்கமானது இயந்திரத் தன்மையானது. இப்படி இயலுலகு முழுதும் அளாவிய கருத்தியல் அறிவுத் துறையில் நிலவியது. இந்த நிலையில் ஆற்றலானது நித்தியமானது என்ற கருத்தை ஆங்கிலேயர் மட்டும் அறிந்து இருந்தனர். இந்த விவரங்கள் மட்டும் அல்லாது, சமூகம் பற்றிய அறிவும் இங்குப் பரவியது. தனிச் சொத்து, அரசு பற்றியும், தொல் கால இனக்குழு வாழ்வு, வேட்டை வாழ்வு, கால்நடை மேய்ப்பு வாழ்வு, உழவு வாழ்வு ஆகிய கட்டங்களைச் சமூகம் கடந்து வந்ததாகக் கற்பிக்கப்பட்டது. தனிச்சொத்து, அரசுமுறை பற்றிய ஆதரவான நோக்குடனேயே கற்றனர்.

1835 இல் இங்கிலாந்தில் உருவாகி இருந்த நேர்க் காட்சி வாதம் இங்கு அதிகாரிகள், கல்வியாளர் அளவில் இருந்து இந்தியப் படிப்பாளிகள் இடையேயும் பரவியது. இஷ்ட சித்தி, அநிஷ்ட நிவர்த்தி, அதாவது தனக்கான சொந்த நலன், ஆவல், ஆசை நடந்தேற வேண்டும். தனக்கு ஆகாதவைகள் நீங்க வேண்டும் என்று தன்னை, தனிமனித நலத்தை, தன்னலத்தை மையப் படுத்திய நேர்க் காட்சி வாதக் கருத்தியல்கள் இங்கு வேர் ஊன்றின. 1862 இல் ஹெர்பர்ட் ஸ்பென்சர் வெளியிட்ட First Principles என்ற நூலை இங்கு 1867 இல் மாநிலக் கல்லூரி பேராசிரியர் டேவிட் டன்கன் பதிப்பித்தார். ஆகவே, ஹெர்பர்ட் ஸ்பென்சரது பரிணாம நோக்கு உறுதியுடன் பரவியது.

பரிணாமம் எல்லாக் காலத்திலும் இருப்பது, இப்போதும்கூட. வடிவமும், கண்டிப்பும் அற்ற ஒரே ஏகநிலையில் இருந்து, இப்போது உள்ள வடிவமும், கண்டிப்பும் கொண்ட பன்மைத் தன்மையான பிரபஞ்சமானது உண்டாகிக் கொண்டு உள்ளது என ஒன்று பலவாகிய காட்சியை அவரது கருத்தியல் புலப்படுத்தியது. கூடவே, பொருள், ஆற்றல், இயக்கம், காலம், இடம் பற்றிக்கூறிப் பொருளினது அழியாமை, ஆற்றலின் நிலைப்புத் தன்மை, பொருளினது செறிவு, இயக்கத்தின் சென்று தேய்ந்துறும் நிலைமை என்ற கருத்தமைப்புகளோடு பரிணமித்தல், ஒடுங்குதல் பற்றிய அவரது விளக்கமானது இங்குப் பதிவுகளை உண்டாக்கியது. ஒட்டுமொத்த விசையானது பகுதிகளாக விரிந்து பரவலாகும். தொடக்க ஆற்றலானது பலமுகமாகச் செயல்படும். மாறுபட்ட தொகுதிகளாகப் பிரியும். அப்போது ஒவ்வொன்றும் மையமாக, அந்த மொத்த விசையில் செயல்படும், இரண்டாம்நிலை மாறுதலுக்குத் தனது பங்கைச் செலுத்தும் (First Principles.393). இது காரண காரிய நிலை வகைப்பட்ட கருத்தமைப்பு. ஒன்று பலவாக ஆதல் மட்டும் அல்லாமல், பலவாக ஆன அந்த ஒவ்வொன்றும் தொடக்க நிலையான அந்த ஒன்றினது விசையை மாற்றுகின்றது எனவும் அது பொருள் தந்தது.

ஸ்பென்சர் ஆற்றல்/ விசை என்ற பொருள் தரும் Force என்ற சொல்லையே மேற்கொண்டார். சக்தி எனப் பொருள் தரும் Energy என்ற சொல்லினைக் கைக்கொள்ள இல்லை. 1842 இலேயே மாயர் சக்தி அழியாதது என்ற பிரபஞ்சம் அளவிலான தனது கருத்தியலை அளித்து இருந்தார். அஃது ஐரோப்பாவிலும் பரவி இருந்தது. ஆனாலும், ஸ்பென்சர் ஆற்றல் / விசை என்ற கருத்தையே கைக்கொண்டு இருந்தார். அடுத்து, இதனோடு நேர்க் காட்சி வாதத்தின் பிரயோசன வாதமானது ஜே.எஸ். மில், கிரீன் ஆகியோர் கூற்றுகளோடு இங்கும் வழக்கிற்கு வந்தது. தனிச் சொத்து அதன் பெருக்கம் என்பதோடு உடன் கொண்டு அது நிலவியது. எந்த ஒரு பொருளையும் தனக்கான பிரயோசன உணர்வில் எடுத்துப் பேச இது கற்பித்தது. அதோடு மட்டும் அல்லாமல் புலன்களின் நேரடி அவதானிப்புக்கு உட்பட்ட புறநிலை விஷயத்தில் இருந்து பெற்ற பொறிகள் உணர்வுகளின் புலன் அனுபவங்களே அறிவு, இன்பங்களுக்கு உறுதி தருகின்றது என விவரித்தது. இதுவே அனுபவ வாதம். புறநிலை விஷயத்தை விடப் புலன் உணர்வு அனுபவமே அறிவு, இன்பங்களுக்கு வித்து என்பது இதன் கருத்தியல்.

இந்த நேர்க் காட்சி வாதமானது ஆத்திகம் மற்றும் சாத்திகம் என்ற இரண்டு முகங்களைக் கொண்டு நடமாடியது. ஆத்திகத்திலும் Deism என்ற பாங்கினில் நிலை கொண்டு இயங்கியது. கடவுளுக்கும், மனிதனுக்கும் நேரடித் தொடர்போடு, கடவுளது தெய்வத் தன்மையை தவிர்த்து விட்டு, அதனது தலைமைத் தன்மையைத் மட்டும் அனுசரிக்கும் பண்புடன் அது நடமாடியது. கடவுளை முற்றாக மறுத்த அதனது நாத்திகப் பக்கத்தில் பகுத்தறிவுத் தன்மை இணைந்து இருந்தது. தனக்கு முன்னால் இருப்பதைத் தனது நலனுக்கான நல்லது கெட்டது எனப் பகுத்து வைத்துக் கொண்டு, தனக்கு உரியதை அறிந்து எடுத்துக் கொள்வது இது. இந்த வாதமானது கிறித்தவக் கருத்தியலான சித்த சுதந்திரத்தை அடி ஒற்றியது. தனிமனித நலனை மேல்நிலைப் படுத்தித் தனக்கான சுகப்பேறு, தனது துக்க நீக்கம் என்ற முகாந்தரத்தில் இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை கால் கொண்டது. இது நாத்திகப் பக்கமாகப் பரவும் போது நிகழ்கால நலன் மட்டுமே மேலோங்க, எதிர் காலத்தில் மற்றும் முன்பின் அடுத்து வரும் நலன், தீமைகள் இரண்டாம் பட்சத்தில் நிறுத்தியது.

சாஸ்திரம், புராணம், மரபு, முறைப்படுத்தப்பட்ட மெய்யியல் கருத்தமைப்புகள் ஆகியவற்றைப் புறம் தள்ளியது. தன்னைக் கடந்து போனதை, அடுத்து வருவதைப் பொருட்படுத்தவில்லை. 1860-1870 களில் கிறித்தவத்தோடு இணைந்து படிப்பாளிகளுக்கு இடையேயும் பரவியது. சுயசதயம், அது சார்ந்த சாஸ்திரம், புராணம், மரபுகள் பால் ஒரு மாறுபட்ட போக்கைத் தோற்றுவித்தது. அவர்கள் பகுத்தறிவு தாங்கிய நாத்திகர்களாக அவர்கள் நிலவினர். “புராட்டஸ்டண்ட் பாதிரிமார்கள் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களையும் ஸ்தாபித்து... அங்கே படித்தவர்கள் திருத்தமாகிய கல்வி இல்லாதவர்களும், ஒரு சமயநெறியிலும் பற்று இல்லாத நிரீச்சுரவாதிகளும் ஆகின்றார்கள்'' என ஆறுமுக நாவலர் 1872 இல் சுட்டிக் காட்டினார் (பிரபந்தத் திரட்டு.38).

1879 இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், சேவம். பகடால. நரசிம்மலு நாயுடுவும் இந்த நிரீச்சுர வாதத்தை மறுத்து எழுதினர். வேதநாயகர் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்' எனப் புதினம் வெளியிட்டார். நரசிம்மலு ‘ஆஸ்திக மத சித்தாந்தம்' எனச் சொற்பொழிவினைப் அன்று பெங்களூரில் நிகழ்த்திக் கோயம்புத்தூரில் நூலாகவும் வெளியிட்டார். அப்போதைய ஆண்டுகளில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் அல்லாத சுதேசி கிறித்தவர் மற்றும் இந்துக்கள் இடையே நேர்க்காட்சி வாதம் பரவி இருந்ததைக் கண்டு தமது சம்மதம் இன்மையை அந்த நூல்கள் பதிவு செய்தன. 1880 இல் சூளை. சோமசுந்தர நாயக்கர் ‘ஆபாச ஞான விரோதம்' என நேர்க் காட்சி வாதத்தையும், பகுத்தறிவு நாத்திகத்தையும் பரிசீலித்தார்.

1839, 1852 இல் அருட்திரு. ஜாய்ஸ் என்ற திருச்சபையாளர் நியூட்டன், லாக்கே, லீப்னீட்ஸ் ஆகியோரை முன்னிட்டுக் கொண்டு இயந்திரவியல், ஆடியியல், தொன்மவியல், காலவியல், இயற்கை வரலாறு, அளவையியல் ஆகியனவற்றை உடன் கொண்டு, ஒரு முன்னுரையாக ‘இயற்கைத் தத்துவம்' என ஒரு கட்டுரை தந்தார். அமெரிக்க நிலத்தை வைத்து அதனை எழுதினார். மதுரையில் இருந்த அமெரிக்கத் திருச்சபை 1854 முதல் 1858 முடிய வணக்கத்திற்கு உரிய இ.வெப் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ‘கிறிஸ்து மார்க்க விளக்கம்' என்ற தமிழ் இதழோடு, ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘தமிழ் குவார்ட்டலி ரிபோசிடரி' என்ற இதழையும் வெளியிட்டனர். கத்தோலிக்கர், இந்துக்களுக்கு பதில் அளிக்கவும் அந்த இதழ்கள் தொடங்கப்பட்டன. மேலும், திருச்சபைப் பேராளர்கள் பாடநூல்கள் படிப்பதற்குத் துணையாக நிற்பதே இந்த இதழ்களின் நோக்கம். தியானம், திருச்சபை வரலாறு, இயற்கைத்தத்துவம் ஆகியன சில பாடநூல்கள் (19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்.72,290).

கிறித்தவக் கருத்தியல்களை, அதனை நம்பாதவர்க்கு எதிரில் நிறுத்த வேண்டும் என்றால், இந்த உலகிற்கு ஏற்றதாக அதனை வைக்க வேண்டும் என்றால், பகுத்தறிவு ஒளி, விவரத் தெளிவு வேண்டும். அறிவியல் இல்லாத மதமானது வெறி, மூடத்தனம் நோக்கிக் கெடும். அதனால் கருத்தியல், அறிவியல் ஆகியன உண்மையான, சுத்தமான இன்பம் தருகின்றன. சமூகத்தின் பொது நலனை உயர்த்துகின்றன.

கடவுளது ஒளியானது உண்மையின் ஊற்று. எல்லாமே கடவுளது கண்ணாடி. கடவுளது புகழுக்காக மனிதனால் எல்லாப் பொருளும் உயிரேற்றப் படுகின்றன. அழகும் இணைப்பும் உண்டாகின்றன. எல்லாப் பொருளும் மனிதனுடன் இணைந்தவை. அவைகளை மனிதன் மாற்றுகிறான். படைக்கிறான். பலவகைப்படுத்துகிறான். மேம்படுத்துகிறான். மனிதன் இல்லாத உலகானது செயல் இல்லாத உலகு. வீணானது. உறைந்த, மகிழ்வு அற்ற நிசப்தமானது.

மனிதன் பகுத்தறிவால், புரிதல் திறனால் மேன்மை ஆக்கப் பட்டவன். இதனால் வேறானவன். தலைமையானவன். பிற படைப்புகளைவிட உயர்ந்தவன். புறநிலைத் தாக்குதல்களை எதிர் கொண்டு, தாக்கும் திராணி உள்ளவன். காணப்படும் இந்த உலகப் பொருள்களுக்கு மேலே பார்வை செலுத்த முடியும். சுற்றி உள்ளனவற்றில் இருந்து வேறானவனாக அவனால் இருக்க இயலும். கூடவே, தனக்குள்ளே சிந்திக்கப் படும் பொருள்களிடம் இருந்து தனது சிந்தனையை வேறாக்கிக் கொள்ளவும் சாத்தியம் ஆகும்.

தனது இருப்பு செயல் பற்றி உள்முகமான தெளிந்த பிரக்ஞையைக் கொண்டு நிலவ அவனால் கூடும். கண்டதைக் கொண்டு காணாததை மதிப்பிட முடியும். அவனது அறிவானது துணிகரமானது. முனைப்பானது. கருத்துக்கள், முடிவுகள், கணக்கிடப்பட முடியாத தீர்ப்புகள், இவை எழுவன, இணைவன, பின்னுவன, புவிப் பயணத்தின் பொழுது எண்ணத் தொலையாத பிரதிபலிப்புகள் தருவன. மேலே, ஆழத்தில், உள்ளே , உலகினில் புலப்படும் மற்றும் புலப்படாத சாத்தியங்களில், இறந்த கால இருளில், எதிர்கால இரவில் உடைமையாக்கப் போராடும் முனைப்புடைய உள்ளமானது செல் திறம் உடையது. மேலும், அறியும், ஆழம் காணும், விளக்கும், முன்னமேயே அறியப் பட்டதுடன் ஒப்புமையைக் காணும். இணைக்கும்.

இயற்கையானது மனிதன் செயல்படும் இடம். வாழும் இடம். அங்கே வழி அமைக்கிறான். மலர்களால், கனிகளால் அணி செய்கிறான். அதனால் காற்று மணம் நிறைந்ததாக ஆகின்றது. உயிர் உள்ளதாகிறது. மகிழ்வாகிறது. இயற்கை அழகானது. மனிதன் அழகாக்குகிறான். இயற்கை ஆதாயமானது. வற்றாதது. மனிதன் மேம்படுத்துகிறான். பயன் தருகிறான். ஒவ்வொரு கல்லும், தாதுவும், மனிதனும், உறுப்பும், பொருளாயத மற்றும் ஆவி உலகும், புலப்படும் உலகு, புலப்படா உலகு, இறப்பும், எதிர்வும், சாத்தியமும், நடப்பும், படைப்பும், கர்த்தாவும் அனைத்தும் இனிமையானவை. உண்மையின் வழியில் நடத்துவன.

அனைத்தும் ஏறத்தாழ உணர்த்துகின்றன. தனிப்பட்டது மற்றும் முழுமை இணக்கம் காட்டுகின்றன. எல்லாமும் முழுமை, நிறைவு முதலானதை நோக்கி நடத்துகின்றன.

கடவுள், மனிதன், பகுத்தறிவு, செயல், வெற்றி, உலகின் உண்மைத்தன்மை, அதனது இனிமை, பயன் பற்றி இயற்கைத் தத்துவமானது உறுதி கூறியது. தனி மனிதன் காணப்படும் உலகுக்கு வேறாக நிலவ இயலும். தன்னுடைய சிந்திப்பில் இருந்து சமநேரத்தில் வேறாகவும் இருந்து கொள்ள முடியும். பொருளைப் பலவகைப்படுத்துவதுவும் மனிதனே. அவனால் பொருளை மாற்றவும், படைக்கவும் இயலும். இவனது பகுத்தறிவால் நிகழ்வுகளின் காரணம், உள்நோக்கங்களை அறிய முடியும். பிறவற்றுடனான இணக்க உறவு, பங்குநிலை, தொடர்பு, விளைவு காண இயலும். இப்படியாக அது காட்டும் காட்சிகள் இங்கிருந்த மரபுகள், பூர்வீக சிந்தனைகளை எதிர்கொண்டன. இதைக் கற்ற இளையோர் சுயசமயத்தின் மீதும், முன்னோர் போதனைகள் மீதும் பற்றுதல் இன்றி, வெளி சமயத்தின் மீது ஒட்டுதலும் இன்றி நாத்திகர் ஆயினர்.

1875 ஆம் ஆண்டு நேரங்களில் கல்வி, கேள்வி, பொருளியல் செல்வாக்கால் மேம்பட்டதோடு முன்னேறி இருந்த குடிமக்களிடையே இது வேர் ஊன்றிப் பொலிவு அடைந்தது (சே.ப. நரசிம்மலு நாயுடு கையெழுத்துக் குறிப்பு). இன்னும், சி.சிங்காரவடிவேலு முதலியார், பி.ஆர். ராஜம் ஐயர், டாக்டர்.எம். சி. நஞ்சுண்ட ராவ் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகளும் சான்று உரைக்கின்றன. பெருமளவில் அரசு மற்றும் நிர்வாகங்களில் படை மற்றும் காவல் துறைகளில், கல்வி மற்றும் சமய நிறுவனங்களில் வணிகம் மற்றும் தொழில் துறைகளில் சொத்துக்கள் சேர்ப்பதில் வேட்கை கொண்டு நாட்டமிட்ட ஆங்கிலேயர், சிறு அளவிலான பிற ஐரோப்பியர், இங்கேயே பிறந்த ஆங்கிலோ இந்தியர் அல்லாத இந்திய இளையோர் கூட்டத்தில் இது பரவி இருந்தது. ஆங்கிலேயரது நேர்க் காட்சி வாதப் பரிமாணங்களும், அமெரிக்கத் திருச்சபையினரது இயற்கைத் தத்துவம் உரைக்கோள்களும், ஆட்சியில் அமர்ந்த சென்னை வேதாகம சங்க இந்திய இயலாளர்களும் எடுத்துப் பேசி வந்த விமர்சனப் பாங்கான திருத்தும் ஆவல் தனிந்த போதனைகளும் நாத்திகத் துறை மட்டும் அல்லாது ஆத்திகத் துறையிலும் பதிவுகளைப் பதிந்தன.

1859இல் சார்லஸ் டார்வின் தமது உயில்களின் தோற்றம் ஆய்வு நூலினை வெளியிட்டார். அதனது பரிணாமக் கோட்பாடு 1870 களில் இங்குப் படித்து அறியப்பட்டது. குரங்கு நிலையில் இருந்து மனிதம் பரிணமித்து நிமிர்ந்தான் என நிறுவினார். உயிர்ப் பொருள்களில் தாவரங்கள், விலங்குகள் அவைகளது உற்பவங்கள், மாற்றங்களுக்கு இயலுலகு சார்ந்த விளக்கம் உரைத்தார். தெய்வீகத் தன்மைகள் நாடப்படவில்லை. இதனால், பொருள் சார்ந்த கொள்கைகளும், உலகாயதக் கருத்தியல்களும், இவற்றினது விதிகளும் துல்லியம் கண்டன. சார்லஸ் டார்வின் வகுத்த பரிணாமக் கோட்பாட்டில் கடவுள் என்ற ஒன்று தேவைப்படவில்லை. அதனால் அவரது கோட்பாடு நாத்திகமாகவும் போற்றப் பட்டது.

முப்பால்மணி

Pin It