நாலு பேரு நாலு விதமா பேசியது…. 8

மலைப் பாம்பும், இரையும்

அன்னிக்கு செப்டம்பர் ஐந்து. சரி திருமண நாளாச்சே… வெளியே எங்காவது போகலாமுன்னு கிளம்பினா பள்ளிக்கூடம் விடுமுறையின்னு குட்டீஸ் களும் கூடவே கிளம்பியாச்சு.… சரி கேரளாப் பக்கம் போகலாமுன்னு கூகுளில் தேடினால் பாலக்காடு பக்கத்தில் ஒரு பொழுது போக்குப் பூங்கா இருப்பதாகப் பார்த்துப் போயாச்சு….

செல்லும் வழியெங்கும் விநாயகர் சிலைகளை வைத்து ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது. அரசின் குடும்பக் கட்டுப்பாடு சின்னம் போலவே குச்சியில் ஆங்காங்கே கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தது. நிச்சயமாக எனக்கு அது என்ன கொடியென்றே தெரியாது.… ஊர்களிலும், ஏன் சேரிகளிலும் கூட ஆங்காங்கே சிலைகள் இருந்தன. காவி வேட்டிகளோடு ஆங்காங்கே பல இளைஞர்கள் அதிலும் கோபுர தரிசனத்துக்கு மட்டுமே தகுதி உடையவர்கள் என புனித இந்து மதத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இளைஞர்கள்….

பொழுது போக்குப் பூங்காவில் நுழைவுச்சீட்டு வாங்கும் போது அங்கிருந்தவர் கேட்டார், ஏன் இன்னிக்கு தமிழ்நாட்டில் விடுமுறை? ஆசிரியர் தினமா? என்றவரிடம் பின்னால் வந்தவர் ஒருவர், “இல்லீங்க இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி” என்றார். கேரளாவில் விடுமுறை இல்லை என்றார். அந்த சேட்டன்… என்னாடா இது தாய்த் தமிழகத்திற்கு வந்த சோதனை?…

பொழுதைப் போக்கிய பின் திரும்பும் வழியில் மலம்புழா அணை அருகில் உள்ள பாம்புப் பூங்காவைப் பார்வையிடச் சென்றோம். பல வகையான பாம்புகள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அதை பார்த்தோம். ஒரு பெரிய மரம் அதைச் சுற்றிக் கூண்டுடன் உள்ளே ஒரு பெரிய மலைப்பாம்பு நன்றாக இரை எடுத்துக் கொண்டு இருந்தது. கூண்டுக்கு உள்ளே ஒரு பிராய்லர் கோழி சுற்றித் திரிந்தது. அடிக்கடி தூங்கிக் கொண்டிருந்த மலைப் பாம்பின் மேலே ஏறியும் விளையாடிக் கொண்டிருந்தது. தனக்கு வரவிருக்கும் ஆபத்தை உணராமல்.

இப்போது என் நிணைவுக்கு வந்தவர்கள், விநாயகர் சிலை முன் நின்று கொண்டிருந்த தலித் இளைஞர்களே.… தங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை உணராமல் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்தில் மயங்கி மலைப் பாம்பிடம் மாட்டிக் கொண்ட கோழியைப் போல, அதன் மீதேறி விளையாடி வருகிறார்கள். இந்துத்துவா மலைப்பாம்புக்குப் பசிக்கும் போது இவர்கள் கதி?… இப்போதும் ஒன்றும் காலம் தாழ்ந்து விடவில்லை. தங்களைச் சுற்றி இருக்கும் இந்து மதம் என்னும் வேலியை விட்டு வெளியேற வேண்டும். அதற்கான சாவியைத் தேடக் கண்ணாடி அணிய வேண்டும் அதன் ஒரு பகுதி தன் ஜாதிக்காரர் என்பதைத் தாண்டி, அம்பேத்கரைப் பார்ப்பதும், கடவுள் இல்லை என்ற அட்டையோடு மூடி வைத்து விட்ட பெரியார் எனும் புத்தகத்தைப் படிப்பதுமே.

என்னாடா இது தாய் தமிழகத்திற்கு வந்த சோதனை?

ஏற்கனவே கேரளா சேட்டன் விநாயர் சதுர்த்திக்கெல்லாம் விடுமுறை இல்லை எனக் கடுப்பேத்தி விட்டார். தொடர்ந்து அடுத்த நாள் கேரள முதல்வர் பினராய் விஜயனின் ஆசிரியர் தின உரையைப் படித்த போது அதில் அவர், தன் மாநில மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதாவது மக்கள் கோவிலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியை அரசு பள்ளிகளுக்குத் தரவேண்டும் என்பதே அக்கோரிக்கை. ஏற்கனவே அவர் அரசு அலுவலங்களில் ஓணத்தை ஒட்டி அத்திப்பூக் கோலம் போடக்கூடாது என தெறிக்க விட்டிருந்தார்.… இதுபோக அரசுப் பள்ளிகள் சிலவற்றை உலகத் தரத்துக்கு உயர்த்துவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அரசு விழாக்களில் குத்து விளக்கு ஏற்றுதல் பிராத்தனைகள் தேவையில்லை எனவும் பொதுப் பனித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அதிரடிக்குப் பெயர் போன பினராய் விஜயனின் அதிரடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடவுளின் சொந்த தேசத்தில். போதாக்குறைக்கு சபரிமலை பற்றி முற்போக்கான கருத்துக்கள் கேரள பா.ஜ.க தலைவரிடமிருந்து...…

ஏற்கனவே ஆடம்பரத் திருமணம் பற்றியும் மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்தும் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் கர்நாடகாவில் தொலைக்காட்சியில் ஜோதிடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை என சித்தாராமையா ஒரு பக்கம் பட்டையை கிளப்ப, என்னாடா நடக்குது தமிழகத்தில் என சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கும் போதே கையில் பேப்பரோடு வந்து நின்றார் இரத்தத்தின் இரத்தம் ஒருவர்.…

“அட.. என்ன இப்படிச் சொல்லிப் போட்டீங்க ...தமிழகத்தில் விவசாயிகள் கந்து வட்டிக்கு விட்டு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றபடி. அப்படியா உண்மையா? என்றவனிடம் அமைச்சரே சொல்லிட்டாரே… கொடுங்க தம்பி ரிமோட்டை, டீவியைப் பார்த்தா உண்மை தெரிஞ்சுடும் என்றபடி அரசு கேபிளின் முதல் சேனலை போட்டார்.. அய்யோ சேனலை மாத்துங்க என்றபடி ரிமோட்டைப் புடுங்கிச் சேனலை மாற்றினால், ஆடலும், பாடலும் நிகழ்ச்சி போடலையின்னா எனக்கு இந்த நாட்டை விட்டுப் போறதைத் தவிர வேறு வழியில்லை என முழங்கி கொண்டிருந்தார் போஸ் பாண்டி…

சோத்துக் கட்சி

அய்யா எப்படி இருக்கீங்க…?

நல்லா இருக்கேன் எனக்கென்ன குறைச்சல்?

சரி வாங்க டீ சாப்பிடலாம்.… சரி தம்பி சக்கரை இல்லாமல் சொல்லுங்க.…

வடை, போண்டா?…

 அய்யோ அதெல்லாம் வேண்டாம் தம்பி… கொழுப்பு ஆகாது. இரத்தக் கொதிப்பு இருக்கு…

அப்ப சிக்கன், மட்டன்?…

அதெல்லம் தொடவே கூடாதுன்னுட்டாரு டாக்டரு.

இப்படித்தான் இருக்கும் பெரும்பாலும் இன்றைய நடைமுறை விவாதங்கள். சக்கரை, இரத்தக் கொதிப்பு என்பது சளி, தும்மல் மாதிரி மாறியாகி விட்டது. இன்று அவை நமக்குச்சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் புலால் மறுப்பு.

இரத்தக்கண்ணீர் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஆர்.ராதா, பிச்சையெடுக்கும் வீட்டில் புலால் உணவு கேட்பார். அதற்கு எஸ்.எஸ்.ஆர்அவர்கள், தாங்கள் ஜீவகாருண்யக் கட்சி எனவும், புலால் உண்பதில்லை எனவும் கூறுவார்..…அதற்கு எம்.ஆர்.இராதா, “திங்கறதுக்குக் கூட கட்சி வைச்சிருக்கறது இந்த நாட்டில் தாண்டா” என்பார்.

இராத்திரிக்கு மூட்டைப்பூச்சி கடிச்சா என்ன பன்னுவீங்க என்பார். இதுவரைக்கும் இந்தத் தாவர உண்னிகளின் அலப்பறையால் சைவ உணவுதான் உடலுக்கு ஏற்றது. அசைவம் உடலுக்குத் தீங்கானது என்ற பொதுப்புத்தி உருவாகி மக்களிடையே, ஏன் பெரியாரிஸ்டுகளிடையே கூட ஊடுருவிக் கிடக்கிறது.… எனக்குப் புலால் உணவு தான் பிடிக்கும். ஆனாலும் என்ன செய்ய, எனக்கு உடலுழைப்புக் குறைவு, அதனால் சைவம் மட்டும் சாப்பிடுகிறேன் என்கிறார்கள்.

இதற்கிடையே இந்த இயற்கை ஆர்வலர்களின் தொல்லை வேறு. சிறு தானியம், நவதானியம் என கோழி திண்பது, ஆடு திண்பது என எல்லாவற்றையும் நம்மைத் திங்கச் சொல்லிவிட்டு, ஆடு,கோழி திங்கக்கூடாதுன்னு சொல்லிட்டுத் திறியுறாங்க.… பாடப் புத்தகத்தில் மட்டுமே பார்த்த பல தானிய வகைகள் திடீரென்று திரும்பி வந்து, நவீன வகை சுய சேவை அங்காடிகள் வரை நுழைந்து விட்டன. போதாக்குறைக்கு ஊருக்கு ஒரு இயற்கை அங்காடிகளின் தொல்லை வேறு. அதில் வாங்கி வந்த அயிட்டங்களால் சமையல் அறையில் பெண்களுக்கு ஓவர் டைம் வேறு.

என்னடா வயசு 35 ஐத் தாண்டியாச்சே... இனி கறி சாப்பிடுவதைக் குறைச்சுக்கோணும் என்ற எண்ணம் தலை தூக்கிய போது தான் முகநூலில் பார்த்தது ஆரோக்யம் - நல்வாழ்வு குழுமம். இதை உருவாக்கிய நியாண்டர் செல்வன் எனும் அமெரிக்க வாழ் தமிழர் நமக்குள் புதைந்திருக்கும் உணவு மூடநம்பிக்கை மீது சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்.. சொன்னதோடு நின்று விடாமல் தானும் பின்பற்றி கிட்டத்தட்ட 80,000 நபர்களை குழுவில் இணைத்து ஒரு உணவு புரட்சியே நடத்தி நம் வயிற்றில் கொழுப்பை வார்த்திருக்கிறார்…

வெகு மக்களின் நடை முறை வாழ்க்கைக்கு அனைத்து வகையிலும் ஒவ்வாது இருக்கும் இந்து வேத வாழ்வியல் உணவுப் பழக்க வழக்கத்திலும் புகுத்தியிருப்பது மூட நம்பிக்கையே.…இதுவரை எதெல்லம் உடலுக்கு நல்லது என்கிறார்களோ அவையெல்லாமே நம் இன்றைய நோய்களுக்கு காரணம். எதெல்லம் உடலுக்குக் கேடு என்கிறார்களோ அவைகளை மட்டும் சாப்பிடுங்கள்.என்கிறது. இக்குழு.…உடல் எடை குறைந்த, சக்கரை, இரத்த அழுத்தம் குறைந்த பல்வேறு நபர்களின் அனுபவங்கள் மற்றும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் போன்ற புகைப்படங்கள் குழு முழுக்க.…

மாற்று உணவுப் பழக்க வழக்கம் பற்றித் தேடியபோது PALEO,LCHF போன்ற ஏராளமான வகைகள். கார்போஹைட்ரேட்டைக் குறைத்துக் கொழுப்பை அதிகமாக எடுத்துக் கொள்ளச் சொல்பவை. இவற்றிக்கு இடையே தந்தை பெரியாரின் பேட்டி ஒன்று.…பெரியார் பேட்டி

கேள்வி: தங்கள் உணவுப் பழக்கம் என்னென்ன?

பதில்: எப்பொழுதும், காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன். முன்பெல்லாம், 4, 3 வாழைப் பழங்கள் சாப்பிட முடிந்தது. ஆனால், இப்போது ஒரு பழத்திற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதன் பிறகு, பார்வையாளர்களைச் சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி, பால் அருந்துவேன். மதியம் 12 - 1 மணிக்குள் ஒரு கரண்டி சாதம், சிறிதளவு மாமிசம், தயிர், குருமா, ஒரு வாழைப்பழம் இதுதான் ஆகாரம். மாமிசம் சாப்பிடாவிட்டால், அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.

நிருபர்: மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படவில்லையா?

பதில்: என்னைப் பொறுத்தவரை, மற்ற உணவுப் பதார்த்தங்களைவிட மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகிவிடுகிறது. அதனால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால், அத்துடன் சரி. காப்பியும், பாலும்தான் முக்கிய உணவு.

மாலை முரசு 16.09.1973 -நாளிதழுக்கு பெரியார் அவர்கள் அளித்த நேர்காணல்

இது பெரியார் தன் இறப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன் கொடுத்த நேர்காணல். தன்னுடைய 93 வயதில் பெரியார், தான் புலால் சாப்பிடுவதைக் குறிப்பிடுகிறார். பிறகென்ன தயக்கம்?…கொதிக்கச் சொல்லுங்கள் கோமாதா குழம்பை.

அதெல்லாம் இருக்கட்டும் சார். அதென்ன கட்டுச் சோத்துக்குள்ள எலியை வைத்து கட்டுன மாதிரி பேலியோவில் இப்படி ஒரு சொல் என்றபடி வந்தார் செங்கொடி சிவக்குமார். அப்படி என்ன குறை கண்டீங்க பேலியோவில்? என்றவனிடம் அதென்ன சைவ பேலியோ என்றார்.…

ஆங்கிலத்தில் Irony words என்பார்கள். ஒரு வாக்கியத்தில் இரண்டு வார்த்தைகள் முரணாக அமைவது. அதுபோலவே சைவ போலியோ என்றேன். அதெப்படீங்க உதாரணம் சொல்லுங்க என்றார் செங்கொடி சிவக்குமார்..

சொல்லிட்டா போச்சு… உண்மைக் கதை, ஊரறிந்த ரகசியம், வீரத்துறவி, அதுபோலவே சைவ பேலியோ….

Pin It