தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வடநாட்டுத் தொழில் அதிபர்களும் தமிழ்நாட்டு இடைநிலை ஜாதி தலைவர்களும், முதலாளிகளும் விநாயகர் சதுர்த்தி விழாக்களை இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் விநாயகர் சிலை வைப்பதற்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்கிறார்கள். அதுபோக ஊர்வலங்களில் இந்த மக்களையே பயன்படுத்தி ‘இந்து எழுச்சி’ என முழங்குகிறார்கள். இராம கோபாலன்களும், அர்ஜூன் சம்பத்களும், ஹெச்.இராஜாக்களும் இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்கிறார்கள்.
ஊரில் உள்ள விநாயகர் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதிப்பது இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகரை வைத்துவழிபடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதி அளிக்கிறார்கள்.
பல ஊர்களில் விநாயகர் சிலை வைப்பதில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கும், தாழ்த்தப் பட்டவருக்கும் மோதல்கள் நடந்தது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஒரே ஊரில், ஊருக்குள் ஒரு தனி சிலையும், சேரியில் மற்றொரு தனிச் சிலையும் மேலும் இரண்டு தெருக்களாக இருந்தால் எதிராக இரண்டு விநாயகர் சிலைகளை வைத்துக் கொள்கிறார்கள். நாம் அதனை நேரடியாக பார்க்கலாம்.
தீண்டாமை இல்லை என முழங்கும் ஹெச்.இராஜாக்கள் அவர்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் உள்ள தீண்டாமையை, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஊடகங்கள் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு விளம்பரம் கொடுப்பதினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இதில் பலியாகிறார்கள்.
பார்ப்பனர்களும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் கொண்டாடும் விழாக்களையும் சடங்குகளையும் தாங்களும் அப்படியே கடைபிடிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களை உயர் ஜாதியினராகக் காட்ட முயற்சிக்கிறார்கள். அப்படிச் செய்யும் போது அவர்கள் மேல் வன்முறைத் தாக்குதலை நடத்துகின்றனர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் இந்தத்துவாதிகளும்.
கோவை பெரிய தடாகம் பாரதிநகர் சக்கிலியர் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்ககு மேளம் அடிக்க மறுத்து, தங்களது பகுதியில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடியதனால் ஆத்திரம் அடைந்த, பூலுவக் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கோவையிலிருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் 18.கி.மீ தூரத்தில் உள்ள பெரிய தடாகம் ஊரில் சுமார் 150 பூலுவ கவுண்டர் குடும்பங்களும், பாரதி நகர் (சேரி)யில் 27 குடும்பங்களும் வசிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அங்குள்ள பூலுவ கவுண்டர்களுக்குச் சொந்தமான செங்கல் சூளைகளில் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள்.
“அதிகாரங்களுக்கு எதிராக மேளம் அடிப்பதை நிறுத்தினோம்”: சதீஷ்
எங்களுக்கு மேளம் (ஐமாப்) அடிக்கவே தெரியாது 3 ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் கோயில் கும்பாபிஷேககத்துக்கு அடித்தே பழகினோம். செல்வ கணபதி, பட்டத்தரசி அம்மன், பண்டிதகாரசாமி, முனியப்பசாமிகளுக்கு மூணு வருஷம் முன்னால கும்பாபிஷேகம் செஞ்சோம். மேளம் (ஐமாப்) அடிக்க வெளியில் போய் ஆள் கூப்பிட்டோம். அதிகப் பணம் கேட்டாங்க. அதனால் அவர்களை விட்டுவிட்டோம். நாங்களே ரூ.1000/-, ரூ.500/-ன்னு போட்டு பழகினோம். ஜமாப் அடிக்கத் தெரிஞ்ச எங்க ஜாதிக்காரர்கள் கத்துக் கொடுத்தாங்க. கும்பாபிஷேகத்துக்கு நாங்களே ஜமாப் அடிச்சோம்
அந்த வருஷமே விநாயகர் சதுர்த்திக்குப் பெரிய தடாகத்துல உள்ள உயர் ஜாதிக்காரங்க ஜமாப் அடிக்கக் கூப்பிட்டாங்க. நாங்க புதுசா அடிச்சுப் பழகிட்டு இருக்கோம். அதனால் முடியாதுன்னு சொல்லிட்டோம். அடுத்த வருஷம் விநாயகர் சதுர்த்திக்கு ஜமாப் அடிக்கக் கூப்பிட்டாங்க. நம்ம ஊர்க்காரங்களாச்சேன்னுதான் குறைந்த தொகைக்கு ஜமாப் அடிக்கப்போனோம். ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டியதும், அதிகாரம் செஞ்சதும், இழிவாகவும் நடத்துனாங்க. அதனால, இனிமே இப்படி வெளியிடங்களுக்கு ஜமாப் அடிக்கப் போகக்கூடாதுன்னு முடிவு செய்தோம்.
என்று கூறினார்
அவர்களை இழிவாக நடத்துவதால் மேளம் அடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், விநாயகர் சிலையை அவர்கள் பகுதியிலேயே வைத்து விழா எடுப்பதெனவும் முடிவு செய்து சிலை வைத்துள்ளனர். அனுமதி பெற்றுத் தான் சிலை வைக்க வேண்டும் என்று தெரியாத மக்கள் சிலை வைத்துவிட்டனர். காவல் துறை விசாரித்து அனுமதிக் கடிதம் பெற்று, அனுமதி அளித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நாகராஜ் நம்மிடை விவரிக்கின்றனர் 05.09.2016 திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் சுந்திரசாமி, மதன் என்பவர்களின் தலைமையில் விவேக், அசோக்குமார், தினேஷ், சிவா, சுரேஷ், மருது, அங்கண்ணன் மற்றும் சில பேர், “ஏண்டா மேளம் (ஜமாப்) அடிக்க வரலை? “எவனைக் கேட்டு விநாயகர் சிலை வைச்சீங்க?” எனக் கூறி கைகளாலும், கட்டையாலும் சுரேஷ், நாகராஜ், மனோஜ், பிரவீன், கருப்புச்சாமி, விஜியா, பூங்கொடி, மருதாசலம், சந்தியா, பிரதீப் சரவணன் ஆகியோரை அடித்து உதைத்தார்கள். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றோம். ஊர்ப் பகுதியைச் சார்ந்தவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள். சமாதானமாகப் போகலாம் எனக் கூறினார்கள். நாங்களும் அவர்களுடைய செங்கல் சூளைகளில் வேலைசெய்வதால் வேறு வழி இல்லாமல் சமாதானம் ஆகிவிட்டோம்.
07.09.2016 புதன் அன்று மாலையில் பூலுவக் கவுண்டர்கள் மதியம் இரண்டு மணி முதல் ஐந்து மணி வரை வெளி ஆட்களை வைத்து மேளம் (ஜமாப்) அடித்து விநாயகர் ஊர்வலம் நடத்தினர். அப்பொழுது அவர்கள் பாரதிநகர் வீடுகளின் மீது கற்களைக் கொண்டு எறிந்தார்கள். வழக்கமாக ஐந்து நாட்கள் சிலை வைத்து எடுப்பதை மூன்றே நாட்களில் எடுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை உடனடியாகத் தாக்கவேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தனர்.
பாரதி நகர் மக்கள் அவர்கள் வீதியில் மட்டும் ஊர்வலமாக எடுத்து சென்று அருகில் இருக்கும் பட்டத்தரசி அம்மன் கோயில் தண்ணீர்த் தொட்டியில் சிலை கரைத்துள்ளனர். (10.09.2016 நமது குழு ஆய்வுக்கு சென்ற போது அந்த சிலை கறையாமல் இருந்ததை பார்த்தோம்)
எவனக் கேட்டுடா விநாயகர் சிலை வச்சீங்க?
ஊராட்சித் தலைவர் சசிமதன் அவர்களின் கணவர் பாரதி நகரை சார்ந்த (றுயவநச ஆயn) மருதாச்சலத்தை, “குடிநீர் திறந்து விடும் சாவியைத் தந்துவிடு ஊர்காரர்கள் உன் மீது கோபமாக இருக்கிறார்கள்” என்று எச்சரித்து விட்டு சென்று உள்ளனர். அதற்குப் பிறகு நடந்ததைத் தாக்குதலுக்கு ஆளான கருப்புச்சாமி நம்முடன் விபரத்தை கூறினர்.
எனது குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் மருந்து வாங்கிக் கொண்டுவரும்போது கே.கே.ஜி. சேம்பர் (செங்கல் சூளை) அருகில் கருப்புச்சாமி டூவீலரில் வரும் பொழுது கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அனுவாவி சுப்பிரமணி சுவாமி கோவில் (கிளர்க்கு) மாரிமுத்து, நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் காரை குறுக்கே மறித்து அடித்து உதைத்தார்கள்.
நான் டுவீலரைப் போட்டு விட்டு அங்கு இருந்து ஓடி விட்டேன். நாகராஜ் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறிவிட்டு டூவிலரை மீட்டுக் கொடுக்கும்படிக் கேட்டேன்.
பிறகு சிறிது நேரம் கழித்து, டூவிலரை எடுக்கச் சென்றோம். நாகராஜ் (எதிரி) என் சட்டை பிடித்துக் கொண்டார். பிரகாஷ் என்னை கண்ணத்தில் அடித்தார். அங்கு இருந்த ஐந்து பேரும் என்னைத் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டு, உருட்டுக் கட்டையில் அடித்தனர். இரவி என்னுடன் வந்தவரை அடிக்காதே என்றுகூறித் தடுத்தார்.
“நீ வேற சாதிகாரன்... நீ.. தள்ளி நில்லு, கவுண்டான சக்கிலியனா? இன்னைக்குப் பாத்துக்கலாம் என்றனர். சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு பாரதி நகர் மக்களும் வந்து சேர்ந்தனர். பூலுவக் கவுண்டர்களும் சுமார் 30 பைக்குகளில் கட்டைகளுடனும், கம்பிகளுடனும் வந்து சேர்ந்தனர்.
“பூலுவக் கவுண்டன் எல்லா தனியா நில்லு... சக்கிலியன் எல்லம் தனியா நில்லு....” என்று மீண்டும் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டு “ஏன்டா மேளம் ஜமாப்) வரமாட்டீங்களா? எவனக் கேட்டுடா விநாயகர் சிலை வச்சீங்க? எல்லாப் பிரச்சனைக்கும் மருதாச்சலம் தான் காரணம் என்று சொல்லி எட்டி உதைத்தார் மதன். சிவா, அசோக், சுந்திரசாமி ஆகியோரும் தலைகளிலும், மார்பிலும், கால்களிலும், கடுமையாகத் தாக்கினார்கள். மருதாச்சலத்தைத் தாக்கும் போது அவரது மனைவி பூங்கொடி தடுத்தார். அவரைக் காலால் எட்டி அடி வயிற்றில் உதைத்தார்கள். விஜியா என்பவரை மதன், கார்த்தி, தினேஷ் ஆகியோர் கடுமையாகத் தாக்கினார்கள். சிவகாமி என்பவரை பல்லு செல்வம் என்பவர் தலையின் பின்புறத்தில் கடுமையாகத் தாக்கினார்.
சோமையனூர் திருவள்ளுவர் நகர் செல்வராஜ் CMGH Secretary ஆக ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். பேரனுக்கு உடல்நிலை சரியில்லை எனப் பார்க்க வந்தவர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துவிட்டு, பட்டத்தாரி அம்மன் கோவில் அருகில் நின்று இருந்தார். ஜாதி வெறியாளர்கள் கற்களை வீசிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்தனர். செல்வராஜின் தலையில் பலமாக அடிபட்டது. மருதாசலம், பூங்கொடி, விஜயா, சிவகாமி ஆகியோர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடியாமலேயே (10.09.2016) அன்று வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து, சமத்துவக் கழகத்தின் தலைவர் தோழர் கார்க்கி, சமூகநீதிக்கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் நள்ளிரவு 1.30 மணிக்கு, பாரதி நகர் மக்களை அழைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையும் அரசு அதிகாரிகளும் சமாதானம் பேசி துடியலூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அன்று நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பாரதிநகர் பொது மக்கள் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். காலையில் புகாரைப் பெற்று குற்ற எண் FIR. No. 697/2016 147, 148, 341, 294(b), 323, 324, IPC r/w, 3(i)(r)(s)3(2)(va)of Sc/St (POA) Amendment Act 2015 ல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை (05.10.2016) ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை.
7.9.2016 முதல் 10.09.2016 வரை (நாம் கள ஆய்வு அறிக்கை வழங்கிய நாள் வரை) பாரதி நகர் மக்களுக்குக் கடைகளில் பொருட்கள் வழங்குவதுமில்லை. கவுண்டர்களின் செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வதால், அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்தால் வேலைகளுக்கும் செல்லவில்லை. ஒட்டு மொத்தச் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
12.09.2016 அன்று டி.எஸ்.பி தலைமையில் கோவை வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு தரப்பையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாதிப்புற்ற பாரதிநகர் மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது ஆதிக்கச் சாதி மனநிலை கொண்ட அதிகாரிகள் நடத்துவதால் அதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறி அமைதிப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்புச் செய்து விட்டார்கள்.
15.09.2016 அன்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் பாதிப்புற்ற ஆறு பேருக்கு நிவாரணமாக தலா 22,500 ரூபாய் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பாரதி நகர் மக்களைத் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் நேரில் சென்று விசாரணை செய்தது. சமூக நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் பன்னீர்செல்வம், தலைவர் வெள்ளமடை நாகராஜ், பொதுசெயலாளர் ஷேக்பாபு உள்ளிட்ட சமூக நீதிக்கட்சித் தோழர்களும், சமத்துவக்கழகத் தலைவர் கார்க்கி அவர்களது அந்த அமைப்பின் தோழர்களும் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச்சென்று மக்களின் போராட்டத்திற்கு ஆலோசனையும், ஆதரவும் வழங்கி வருகிறார்கள்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு.இராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர் வெண்மணி ஆகியோரும், பல சமூக ஆர்வலர்களும் நேரில் சென்று, ஆதரவு தெரிவித்து சென்றனர்.
அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்:
1. நிலைமை சீரடையும் வரை பாதிப்புற்ற பாரதி நகர் மக்களுக்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி அரிசி, பருப்பு, எண்ணெய், பால், உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
2. பாரதி நகர் மக்களுக்கு பிற்படுத்தப்பட்டவர் பகுதியிலேயே வீட்டுமனைப் பட்டா கொடுத்து அரசு செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தனியாகச் சேரி என்று இருக்கக்கூடாது.
3. வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில் தாட்கோ திட்டத்தின் மூலம் தொழில்கள் செய்யத் தொழிற்கடன் வழங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
4. வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய, அவர்களின் அசையும், அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தாக்குதலுக்குள்ளான மக்களிடம் வைக்கும் கோரிக்கை:
இனி மேலாவது, மானம், மரியாதையுடன் வாழ, இந்த இந்து மதத்தைவிட்டு வெளியேறுங்கள். இந்து மதத்தின் எந்தக்கோவிலிலும் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே நுழைய விடுவதில்லை. இந்த மதமே நம்மை மனிதர்களாக நடத்த அனுமதிக்கவில்லை. எதற்காக இந்து மத விநாயகனுக்கு நாம் சிலை வைக்க வேண்டும்? தாக்குதல் நடந்த பிறகு எந்த இந்து அமைப்பும், எந்த இந்துத் தலைவனும் நம்மை வந்து சந்திக்கவில்லை. சமூகநீதிச் சிந்தனையாளர்களும் பகுத்தறிவாளர்களும் தான் நம்முடன் களத்தில் நின்றனர். எனவே மதம் மாற வேண்டியதன் அவசியம் குறித்துச் சிந்தியுங்கள். இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள். இதைத் தவிர நமக்கு வேறு எந்த நிரந்தரத் தீர்வும் கிடையாது.
தாக்கிய கவுண்டர்களிடம் ஒரு கோரிக்கை:
பிற்படுத்தப்பட்ட சமுதாயமான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த திருப்பூர் சரவணன் என்ற மருத்துவ மாணவர் டெல்லியில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்து உயர்கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு நுழைய முடியவில்லை. அவர் மருத்துவ உயர்கல்வியில் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக, விஷ ஊசி போடப்பட்டுக் கொல்லப்பட்டு, தற்கொலை என வழக்கை முடித்தனர். வடஇந்தியாவில் உள்ள பார்ப்பன, உயர்ஜாதியினர் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த எந்த மாணவர்களையும் உயர்படிப்புகளில் நுழையவே விடுவதில்லை. அப்படியே நுழைந்தாலும் படிப்பை முடிக்க விடுவதில்லை.
உண்மையாகவே கவுண்டர்களுக்காக, கவுண்டர்களின் சுயமரியாதைக்காகப் போராட வேண்டுமானால், பார்ப்பனர்களோடு மோதிப்பாருங்கள். இன்றுவரை அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பறித்து, ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன உயர்ஜாதியினரிடம் போட்டி போடுங்கள். இன்றுவரை எந்தக் கவுண்டரையும் கோவில் கருவறைக்குள் நுழைய விடாமல், சட்டப்படியும், சாஸ்திரப்படியும் கவுண்டர்கள் ‘தேவடியாள்மக்கள்’ என்று உறுதிப்படுத்தி வரும் இந்து மதப் பார்ப்பன ஆதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடத் தொடங்குங்கள். கவுண்டர்களை மட்டுமல்ல அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் இந்து மதம் அப்படித்தான் இழிவுபடுத்தியுள்ளது. நம்மைப் போலவே பார்ப்பன இந்து மதத்தால் அடக்கப்பட்டுள்ள சக மனிதர்களோடு மோதி, பார்ப்பன அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிக்கொள்ளாதீர்கள்.