தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகு தான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய, இயற்கையில் அமைந்த தொன்றன்று. - குடி அரசு - 21.07.1945

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இருபது வயதுக்கு மேல் இருந்தால், இந்தச்சமுதாயம் அவர்களைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி என்ன? எப்ப கல்யாணம் என்பது தான்.

“வயசாகுதில்ல சீக்கிரமா உன் அப்பன் ஆத்தாகிட்ட சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண வேண்டியது தானே? எதையும் கால காலத்துல பண்ணிரனும்ப்பு இல்லாட்டி பின்னாடி ரெம்ப சிரமமாகிப் போகும் சொல்லிட்டேன்.”

ஏதோ இவுக தயவில் தான் நாம வாழப் போறமாதிரியும், நம்ம கலியாணம் பண்ணாட்டி பின்னாடி இந்த மக்கள் நம்மள கல்லுடைச்சாவது காப்பபாத்தப் போறமாதிரியும் ஒரு பில்டப் கொடுப்பாக பாருங்க.... நமக்கு அப்பதான் இந்தக் காதுரெண்டும் கேட்காம போனா என்னனு தோணும். ஆண்களுக்குப் பராவாயில்ல, பிடிக்கலைன்னா எடத்தக் காலி பண்ணிடலாம். பொம்பளப்பிள்ளைகள் நெலம தான் ரொம்பக் கொடுமை.

“எக்கா கொஞ்சம் மிளகாய்த்தூள் இருக்கான்னு” கேட்டுவருகிற பக்கத்து வீட்டு அக்காக்களிருந்துதான் ஆரம்பிக்கும் வம்பு. ஏக்கா பிள்ளை என்னா பண்றா? “பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்குத் தான் தெரியும் இதற்கு பதில் சொல்றது எவ்வளவு சிரமமுன்னு”

(நாமும் எழுதவோமில்ல கேப்சனு) அவ படிக்கிறா என்று பதில் வரும். உடனடியாகப் பந்து போல் அடுத்த கேள்வி. படிச்சி என்ன செய்யப்போறாளாம்? அந்தம்மாவும் பதிலுக்கு, “படிச்சு அவ சொந்தக்காலில் நிற்கப் போறாளாம்” என்று சொல்ல, “கால காலத்திலேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து சட்டுபுட்டுன்னு பந்தக்கால் போடுவீங்களா?.... சொந்தக்கால்ல நிக்கிறேங்கறா, நொந்தக்கால் நிக்கிறேங்கறாணு, கதை சொல்றீங்க? பையனாயிருந்தாலும் பரவாயில்ல, பொம்பளப்பிள்ள... படிச்சு என்ன செய்யப்போறா? சீக்கிரம் பாருங்க...” சரி நான் வாரேன் அடுப்புல சட்டிய வச்சுட்டு வந்தேன் என்று மிளகாய்த்தூளுடன் கிளம்பிடுவாக. மிளகாய்த்தூள் அங்கே... எரிச்சல் இங்கே என்ற நிலை தான் அந்தக் குடும்பத்துக்கு..

                இன்னிக்கி இருக்கிற காலகட்டத்தில் குடும்பம் என்கிற அமைப்புக்குள்ள ஆணோ, பெண்ணோ வரலைன்னு சொன்னா, அவர்களை இந்தச் சமூகம் ஏத்துக்கிறதில்ல. ஆம்பளை கல்யாணம் பண்ணலைன்னா அவன் குடும்பப் பாரத்தத் தாங்கிறான். இல்ல அவன் சித்தன் மாதிரி அப்படி இப்படின்னு சொல்லி சமூகம் அவர்களை லேசுல கடந்திரும்.

ஆனால் ஒரு பொம்பளைப் பிள்ளை குடும்ப வாழ்க்கை வேண்டாமுன்னு தனிச்சிருந்தால் அவங்களை இந்த பாழாய்ப் போன சமூகம் ஏச ஆரம்பித்துவிடும். அவ யாருக்கும் அடங்கமாட்டாள். யார் சொல்லியும் கேட்கமாட்டா. ரொம்ப படிச்சிருக்குன்னு திமிராத் திரிவா. இது ஆரம்பத்துல் அந்தப் பிள்ளைக்கு இந்த ஆணாதிக்கம் பிடிச்சவிங்க (அதுதாம்பா மேல் சாவானிஸ்ட்டோ, கீழ் சாவனிஸ்ட்டோ) கொடுக்கிற பட்டப்பேரு.

அதுவே அந்தப் பொண்ணு கல்யாண வயசெல்லாம் தாண்டி அதாவது ஒரு முப்பது தாண்டிட்டா, அதே சமூகம் அந்தப் பிள்ளைக்கு ஏதோ கோளாருப்பே... புத்தி சரியில்லாதது, கடைசியா அவ எவன் கூடவோ பழகி, கெட்டுப் போயிருப்பபாள் என்று அந்தப் பொம்பளைப் பிள்ளையின் நடத்தையைக் கொல செய்து அவளை வாழ் நாள் முழுசும் நடைபிணமாக்கி விடுவார்கள்.

                கல்யாணம் பண்ணாம வாழ்றவங்க கத இப்படின்னா. ஒருத்தரக் கல்யாணம் பண்ணி வாழ்வரவங்க வாழ்க்கையிருக்கே அத விடக் கொடுமை. பொம்பளைப் பிள்ளை சின்ன வயசிலிருந்து அப்பா, அம்மா, சமூகம், இதுகளுக்கெல்லாம் பயந்து, தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ முடியாமல், தான் விரும்பின படிப்பைக் கூட படிக்காமல், மத்தவங்க நெருக்கடியிலேயே வாழ்றாங்க.

சரி, இளமை வாழ்க்கை தான் இப்படிப் போச்சு, திருமணமாவது அவுக விருப்படி நடக்குதான்ன அதுவுமில்ல. அப்பவும் பிறருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாங்க. திருமண வாழ்க்கை என்பது எல்லா ஆண்களுக்கும் சொர்க்கமாகத் தான்ருக்கு. ஆனா பொம்பளைப் பிள்ளைகளுக்கு அது வெல கொடுத்து வாங்குன நரகம். நல்ல கணவர் அமைந்தால் (இந்த நல்ல கணவன்களை எந்த மேட்ரி மோனியலில் தேடுறது?) அவர்களின் வாழ்க்கை இன்பமாய்ப் போகும். கணவர் சரியில்லை என்றால் அந்த பொம்பளப்பிள்ளை பாடு ரொம்ப திண்டாட்டந்தேன்...

முதல்ல இந்தக் குடும்ப வாழ்க்கையில் தள்ளுவதற்கு இந்த ஆணாதிக்கச் சமூகம் எப்படி அவளின் விருப்பத்தைப் புறந்தள்ளியதோ, அதே போல பிடிக்காத கணவனோடு வாழ விருப்பமில்லாமல் குடும்பத்தை விட்டு வெளியேற நினைத்தாலும், அதே ஆதிக்கத்துடன் மீண்டும் மீண்டும் அவளை அந்தப் படுகுழியில் தள்ளுகிறது. தனி மனிசியா வாழணும்ணு அந்தப் பொண்ணு நெனைச்சாலும் இவனுக விடாமல், தனியா வாழுறது கஸ்டம்... பணம், பாதுகாப்பு, கவுரவம், அப்டின்னு எதையாவது சொல்லி அந்தப் பிள்ளைக நிம்மதியக் கெடுப்பானுக.

சரி.... இந்த மாதிரிப் புத்திமதி சொல்லி அப்பவாது அந்தப் பிள்ளைக்கு பிடித்த வாழ்க்கை என்னனு கேட்பாங்களானு பார்த்தா, திரும்பவும் அந்தப் பிடிக்காத கணவனோடு சேர்ந்து வாழனும்னு சொல்லி துரத்துவானுக. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன், உனக்காக இல்லைன்னாலும் இந்த குழந்தைக்காவது பாரு அந்தக் குழந்தை வேற அப்பனையே நினைச்சிட்டுக் கிடக்கு”

என்று அந்த பொம்பளைப் பிள்ளையை மனரீதியாகத் துன்பத்தக் குடுப்பானுக. இது உறவுக்கார மத்தியில தனித்து வாழணும்னு நெனைக்கிற அந்தப் பிள்ளையைப் பண்ற கொடுமை.

அப்பாடா ஒரு வழியா சொந்தக்காரங்கிட்டு தப்பித்து, தான் விரும்பினபடி, தனித்து அந்தப் பொம்பளைப்பிள்ளை வாழணும்னு ஆசைப்பட்டால் இந்தச் சமூகம் கேட்கிற கேள்வி இருக்கே.... அதற்கு எந்த ஐ.நா சபையில முறையிடுறதுன்னு தெரியல.

வீடு வாடகைக்குக் கிடைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் சிக்கல். ஏம்பா வீட்டுக்காரர் வரலியா? எப்ப வருவார்? என்ள செய்யிறார், தனியாகத் தான் இருக்கேன் என்று சொன்னால், தனியாக இருக்கிறவர்களுக்கு வீடு இல்லைன்னு சொன்னாக் கூட பரவாயில்ல.... சரி அவுக வீடு, அதனால் சொல்றாங்க என்று தேற்றிக்கொண்டு அடுத்த இடத்துக்குப் போகலாம்.

ஆனால் அதற்குப் பதிலாக, புருசன் இல்லையா? அய்யயோ எங்க வீட்டுல கல்யாண வயசுல பொண்ணும் பையனும் இருக்காங்க என்று சொல்லி வெறுப்பேத்துவானுக. ஏதோ அவங்க புள்ளைங்க வீட்டுக்குள்ளே இருந்த சித்தார்த்தன் போல இந்தப் பொம்பளப்பிள்ளையால் தான் கெட்டுப்போவது போல் பேசுவாணுக.

இந்த தொல்லைகளுக்குப் பயந்து வேற வீடு பார்க்கப் போகும் அந்தப் பிள்ளை. ஒரு வழியாக வீடு கிடைத்தாலும் அந்த வீட்டிற்கு ஆம்பளைக யாரும் வந்தாலும் அம்புட்டுதேன். அந்தப் பிள்ளையின் நடத்தை மொத்தமாகக் கேவலப்படுத்தப்படும். ஒரு ஆம்பளை கல்யாணத்துக்கு பிறகும் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்தால் அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்னு பேசுற இந்தச் சமூகம்தான் கல்யாண வாழ்க்கை முறிந்து போன பிறகும் கூட வேறு யாருடனும் பேசாமல் விட்டுவந்தவனையே நினைச்சு வாழனுமுன்னு கட்டாயப்ப்டுத்துவானுக.

தப்பித் தவறி அந்தப் பிள்ளை தனக்குனு ஒரு புது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டால். அவளைப் பத்தி ஏற்கனெவே தெரியும். இப்படி ஏதாவது பண்ணுவான்னு... அவள் வளர்ப்பு அப்படி. குணம் அப்படி... என்று தங்கள் ஆணாதிக்கச் சிந்தனை தோற்றுப்போனதை ஏற்க முடியாமல் அதை வயிற்றெரிச்சலாக மாத்தி அந்தப் பெண்ணின் மீது வசவு மழை பொழிய ஆரம்பித்துவிடுவார்கள்.

பெண்களுக்கு அலுவலங்கள், பேருந்துகள், ஏன் வீடுகளில் இருப்பவர்களுக்குக்கூடப் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. இதில் தனித்து வாழும் பெண்கள் நிலைமையசொல்லவே வேண்டாம். கேட்பதற்க்கு யாரிருக்கா என்ற திமிரில் ஆண்களின் அத்துமீறல் அதிகமாக இருக்கும். அதை மீறி இந்தச் சீண்டல்களை எதிர்த்து நிற்கும் பெண்களை ஒழுக்கங்கெட்டவளாகச் சித்திரித்து, ஆண்கள் கூட்டம் அகப்படாமல் செல்லும்.

தனித்தே தான் வாழ்வேன் என்று சொல்லும் பெண்களின் வாழ்க்கைக்கான ஒரு சூழல், சமூக முன்னேற்றம் இன்னும் இந்த மண்ணில் பரவலாக்கப்படவில்லை. ஆனால் அதற்கான தொடக்கம் எப்போதோ அய்யா பெரியாரால் ஏற்பட்டுவிட்டது. ஆண் வர்க்கத்தினால் கைவிடப்பட்டு அதனால் தனித்து வாழும் பெண்களைத் தான் இந்தச் சமூகம் கற்பு, கலாச்சாரம், குடும்ப கவுரவம் என்று சொல்லி அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டே இருக்கிறது. தனித்து வாழும் பெண்களின் வாழ்க்கையை அங்கீகரிக்க, ஒரு சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு தொடர் சமூகப் போராட்டத்தினால் இன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மறுமணம் செய்ய ஆண்களும், அதற்குப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். இந்தச் சமூகமும் சரி என்று சொல்லாமல் சம்மதிக்கிறது. இதற்கு நாம் அந்த ஈரோட்டுக் கிழவனுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவர் மட்டும் இல்லை என்றால் பெண்களுக்கான பிரச்சனை பெண்களுக்கே தெரியாமல் போயிருக்கும். பெண்களின் தலையில் ஓங்கிக் கொட்டியது போல, ஆண்களிடமிருந்து பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னவர். ஆணாகப் பிறந்து பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் போராடிய - இந்த நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, எந்த நூற்றாண்டுக்கும் பொருத்தமான பெண்ணியவாதி எங்கள் அறிவாசான் பெரியார்.

                எனக்கு இனி யாரும் தேவையில்லை (திருமண முறிவுக்குப் பின்) தனித்தே தான் வாழ்வேன் என்று முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தான் இருக்கிறது. அதற்குக் காரணம் ஆண்களால் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதல்ல அர்த்தம். அவர்கள் பொருளாதாரத்தில் பிறரைச் சார்ந்திருப்பதனால் தனித்துப் போகத் தயங்குகிறார்கள்.

சில படித்த பெண்கள் கூட திருமணத்திற்குப்பின் ஆண்களின் கட்டாயத்துக்கு உட்பட்டு வேலையை விட்டுவிடுகிறார்கள். ஒரு சில கணவன்மார்கள் மனைவியிடம் உன்மேல உள்ள அன்பினால் தான் வேலைக்குப் போகவேண்டாமுனு சொல்கிறேன் என்று மகுடி ஊதி மயக்கி வீட்டில் உட்கார வைத்திருப்பார்கள்.

இதனால் பெண்கள் தன் பொருளாதாரத்தையும் அதன் தொடர்விளைவாக சுயமரியாதையும் இழக்கிறார்கள். தனித்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையும் தொலைக்கிறார்கள். பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் சாராமல் - சுயமாக வாழ கல்வியும், வேலையும் மிக முக்கியம். மேலும் தனித்து வாழ்தல் என்று முடிவெடுத்து விட்ட பிறகு, ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்று கவலைப் படாமல் தன் புத்திக்குட்பட்டுத் துணிந்து செயல்படவேண்டும்

பெண்ணைப் பெற்றோர் கடமை:

“உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள். திருமணம் செய்து கொள்ள இஸ்டமா? பொதுச் சேவை செய்ய இஸ்டமா? என்று. திருமணத்தில் இஸ்டம் என்றால் நல்ல வரனைத் தேடிப்பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டுவிடுங்கள். வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள். ‘பொதுச் சேவையில் பிரியம்’ என்றால் அதற்குத் தாராளாமாய் வசதி செய்து கொடுங்கள். பிறர் என்ன சொல்வார்களோ என்று கவலை கொள்ளாதீர்கள். பெண் எங்கே கெட்டுப் போய் விடுவாளோ என்று அஞ்சாதீர்கள்.” - தோழர் பெரியார் - 02. 11. 1948 விடுதலை.

Pin It