காட்டாறு இதழியக்கத்தின் கோரிக்கைகள் மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு

சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள்? என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய பெரியார், அதற்குக் காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்துத் தொடர்ந்து போராடினார். அதேபோல மானுடச் சமூகத்தில் சரிபாதியான ‘பெண்’ ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதில்களை வரலாற்றிலிருந்து எடுத்து எழுதினார். ஆண் - பெண் சமத்துவமான சமூகத்திற்காகத் தொடர்ந்து பேசியும், எழுதியும் போராடியவர் பெரியார்.

பெரியார் போராடிய ஆண்- பெண் சமத்துவமான சமூகம் அமைந்து விட்டதா? எனக் கேட்டால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். அன்றைய நிலையை விட ஓரடி முன்னால் நகர்ந்திருக்கும் சமூகத்தை, பின்னோக்கிக் கற்காலத்திற்குக் கொண்டு செல்வதற்கான எல்லா முயற்சியையும் மதவாதிகளும், பிற்போக்கு வாதிகளும் செயல்படுத்தி வருகின்றார்கள். மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பது அவர்களுக்குக் கட்டற்ற அதிகாரங்களை வழங்கி உள்ளது.

இந்த நேரத்தில் பெரியார் போராடிய ‘ஆண் - பெண்’ சமத்துவ சமூகக் கருத்துகளை முன்வைத்து பண்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ‘காட்டாறு’ இதழியக்கம் பின்வரும் கோரிக்கைகளை வைத்து அடுத்த ஓராண்டுக்குத் தொடர் செயல்பாட்டைச் செய்யத் திட்ட மிட்டுள்ளது நமக்கு நம்பிக்கையளிக்கின்றது. இந்தக் கோரிக்கைகளைப் பற்றிய இளந்தமிழகம் இயக்கத்தின் கருத்து இதோ.

“பள்ளி - கல்லூரிகளில் ஆண் - பெண் இருபாலரும் கலந்து அமரும் முறையை அகர வரிசைப்படி (Alphabetical order) நடைமுறைப்படுத்து!”               

JNU, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங் களில் உள்ள ‘இருபால் பொதுவிடுதி’ முறையை (Co - Hostels or Unisex Hostels) பள்ளி - கல்லூரிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்து!” என்கின்ற கோரிக்கைகள், குழந்தைகள் வளரும் வயதிலேயே இருவருக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்காக “பள்ளி - கல்லூரி வளாகங்களில் ஆண் - பெண் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும், பழகுவதையும் தண்டிக்கும் காட்டுமிராண்டிகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளை இழுத்துமூடு. அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்!” என்ற கோரிக்கை ஏற்புடைய ஒன்றாக இருந்தாலும், இந்தக் கோரிக்கையை சட்டமாக்குவதற்காக நீண்ட போராட்டம் தேவைப்படும்.

“கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உள்ள Anti Sexual Harassment Cell களில் நிர்வாகம் தவிர, மனநல ஆலோசகர்கள் - காவல்துறை - மகளிர் அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கு!” என்ற கோரிக்கை செயல்படாமலும், பல குற்றங்கள் மூடி மறைக்கப்படுவதையும் தவிர்த்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உதவும்.

“பள்ளிக்கல்வியிலிருந்தே பாலியலையும் ஒரு பாடமாகக் கற்பி!” என்ற கோரிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். “வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் காட்டப்படுவது போல இன்றைக்கு எட்டாம் வகுப்பு, அதற்கு மேல் படிக்கும் மாணவர்களின் செல்போனில் போர்னோ படங்கள் தான் நிரம்பி வழிகின்றன. இதை எல்லாம் தவிர்ப்பதற்குப் பாலியல் கல்வி என்பது தேவையான ஒன்றாகின்றது.

“சிவப்புத் தோலே முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கும் சிவப்பழகு க்ரீம் வணிகத்தைத் தடைசெய்!”, “அலங்காரப் பண் பாட்டைத் தூண்டும் நகை வணிகம், பட்டு வணிகம், மலர் வணிகங்களைத் தடைசெய்! பட்டு நூல் உற்பத்திக்கான மல்பெரி விவசாயம், மலர் விவசாயத் தைத் தடைசெய்!” போன்ற கோரிக்கைகளை அரசு ஏற்காது. ஏனென்றால் இன்றைய அரசுகளை இயக்குவதே வணிகர்கள் தான். அதற்குப் பதிலாக ‘அழகு’ என இன்றைக்குச் சொல்லப்படுவதன் பின்னுள்ள அரசியல், வணிகம் தொடர்பான கருத்துகளைத் தொடர் பிரச்சாரம் செய்வது சரியாக இருக்கும். சந்தையில் இது போன்ற அலங்காரப் பொருட்கள் புறக்கணிக்கப்படும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

“பெண்களை அலங்காரப் பொம்மைகளாக உருவாக்கும் காது குத்து விழாக்களைத் தடைசெய்!”, “பெண்களை இழிவுபடுத்தும் பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடைசெய்!” போன்ற கோரிக்கைகள் பண்பாட்டுத்தளத்தில் அதிர்வுகளை உண்டாக்கும். அதேநேரம் மிகவும் அவசியமான கோரிக்கை களாகும். இந்தக் கோரிக்கைகளுக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

“திருமணங்களில் பெண்களின் சம்மதத் தையும், பெண்கள் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கு!” என்ற கோரிக்கையில் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கு என்பதை, திருமணமான பின்னர் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆண்கள் தடுக்கக் கூடாது, மீறித் தடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மாற்றலாம்.

அதே நேரம் வெளி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் உழைக்கும் பெண்களின் உழைப்பை இந்தச் சமூகம் மதிக்க வேண்டும். வேலைக்குச் செல்பவர் களுக்காவது எட்டு மணி நேரம் மட்டுமே வேலை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கோ எப்பொழுதுமே வேலை. இந்த நிலையை மாற்ற “இல்லப் பராமரிப்பிலும், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சமஉழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கு!” என்ற கோரிக்கை அவசியமான ஒன்றாகின்றது.

பெண்கள் எல்லோரும் பணிக்குச் செல்லுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். 30 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும் எனத் தொழிற்சாலைச் சட்டம் சொல்கின்றது. ஆனால், இது பெரும்பாலான இடங்களில் இல்லை. இதை அரசு உறுதியாக அமல்படுத்த வேண்டும். இதேபோல பெண்கள் கல்வி பயிலும் பள்ளிகளிலும், பணிபுரியும் இடங்களில் சானிட்ரி நாப்கினை அரசே இலவசமாகக் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்வி பயிலும் அரசுப் பள்ளிகளில் தண்ணீர் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சரியான தண்ணீர் வசதி கொண்ட கழிவறைகள் இல்லாததால் பெண்கள் பள்ளியை விட்டு இடைநிற்றல் அதிகமாக உள்ளது.

திருமணங்களின் பெண்கள் சம்மதம், திருமணத்திற்குப் பின் பணிக்குச் செல்வதைத் தடுக்கும் ஆண்களுக்கு தண்டனை போன்றவற்றை உறுதிப்படுத்த காவல்துறை - வழக்கறிஞர்கள் கொண்ட தனி ஆணையத்தை உருவாக்கு! என்ற கோரிக்கையும் சரியான ஒன்றே.

“பெண்ணின் திருமணத்திற்குப் பிறகு, கடவுளையே மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் ‘குலதெய்வ வழிபாடு’ களைத் தடைசெய்!” என்ற கோரிக்கையை தனி நபர் வழிபாட்டு உரிமை என்பதன் அடிப்படையில் முக்கியமான ஒன்றாகும்.

“திருமணம் தேவையில்லை என்றும், ‘குடும்ப அமைப்பே வேண்டாம்’ என்றும் முடிவெடுத்துத் தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கு!” எனும் கோரிக்கையுடன் “தனியே கல்வி பயிலும், உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் அரசு மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும்” என்பதையும் சேர்க்க வேண்டும்.

பிள்ளைபெற்றுக்கொள்ளாதவர்களுக்கு சீனாவில் முன்னுரிமை

“திருமணத்திற்கு முன்பே கருத்தடைச் சிகிச்சை செய்பவர்களுக்கும் - பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் அரசின், கல்வி - வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கு!” மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் ஏற்கனவே இது அமலில் உள்ளது. சீனாவுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவிற்கு மிகவும் தேவையான கோரிக்கை.

“திருமணத்தின் பெயரால் - கணவன் என்ற உரிமையால் நடக்கும் (Marital Rape) பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றமாக்கு!" என்ற கோரிக்கை பண்பாட்டுத் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆனால் இது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும்.

“திருமணங்கள் உறுதிசெய்யப்படும் போதே, அந்த மணமக்களுக்குத் ‘தனிக் குடித்தனம்’ என்பதைக் கட்டாயமாக்கு!” இந்த கோரிக்கையில் ‘கட்டாயமாக்கு’ என்பதற்குப் பதிலாக, பெண்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது சரியாக இருக்கும்.

“அனைத்துக் குடும்பங்களிலும் பெண் களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரம் படைத்த தனி ஆணையம் உருவாக்கு! சொத்துரிமை வழங்காத ஆண்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பெண்களுக்குப் பகிர்ந்தளி!” எனும் கோரிக்கை மற்ற எல்லா கோரிக்கைகளையும் விட மிக முக்கியமான ஒன்று. பொருளாதாரச் சுதந்திரமின்மையே இன்றைய அடிமைநிலையில் பெண்கள் நீடிக்க வைக்கின்றது. பொருளாதார சுதந்திரம் பெண் களுக்கு வழங்கப்பட வேண்டும்.

“திருமணக் காலத்தில் பெற்றோரிடம், பிள்ளைகள் நகை, பணம், பொருட்கள் கேட்பதைக் கடும் குற்றமாக்கு!” எனும் கோரிக்கையுடன் “ஆடம்பரத் திருமணங்களை அரசு தடை செய்ய வேண்டும்” என்பதையும் சேர்க்க வேண்டும்.

பொது உணவகங்களை உருவாக்கு!

“சமையலறை உடைப்புப் போராட்டம்” நடத்த இருக்கும் ‘காட்டாறு’ இதழியக்கம் அது தொடர்பாக எந்தக் கோரிக்கையும் வைக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது. பல வெளிநாடுகளில் இருப்பது போன்ற “பொது உணவகங்கள்” அல்லது “சமூக உணவுக்கூடங்கள்” இங்கும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்மொழிகின்றோம்.

பெரியாரிய இயக்கங்கள் ஏதும் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றதா? அப்படி நடத்தினால் நம் மகளை அங்கு அனுப்ப வேண்டும் என்று என்னிடம் கூறினார் என் இணையர், அவரது கேள்வியை நான் பின்வரும் கோரிக்கையாக இங்கு வைக்கின்றேன். பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கான “கோடை கால முகாம்கள்”, “வார இறுதிப் பயிற்சி வகுப்புகள்” நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கல்வி நிலையங்களில் ஊடுருவி வரும் இந்நேரத்தில் இது மிகவும் தேவையான ஒன்றாகும்.

பெரியாரின் கனவை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ‘காட்டாறு’ இதழியக்கத்திற்குத் இளந்தமிழகம் இயக்கம் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், கருத்துத் தளத்திலும், போராட்டக் களத்திலும் உங்களுடன் இணைந்து செயல் படுவோம் எனவும் உறுதி கூறகின்றோம்.

காட்டாறு:

ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சமையலறைகள், அதில் பெண்ணின் உழைப்பு முடக்கம், ஆணாதிக்கம் என்பவைகளுக்கு மாற்றாக, அரசே தரமான உணவை வழங்கும் பொது உணவகங்களை - சமூக உணவுக்கூடங்களை அமைக்க வேண்டும் என்ற இளந்தமிழகம் இயக்கத்தின் முன்மொழிவு மிகவும் அவசியமானது. இரஷ்யப் பயணத்திற்குப் பிறகு, தோழர் பெரியார் இதுபோன்ற பொது சமையல்கூடம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

பல பெரியார் இயக்கத் தோழர்கள் அதற்காக முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அரசே இதைச் செய்வது சரியாக இருக்கும். முதலில், அதுபோன்ற உணவகங்களில் போய்ச் சாப்பிடலாம். தனித்தனி சமையலும், சமையலறைகளும் வேண்டிய தில்லை என்ற எண்ணம் மக்களுக்கு உருவாக வேண்டும். மக்களுக்கு அந்த எண்ணம் உருவாக வேண்டுமானால், முற்போக்காளர்கள் முதலில் மாறவேண்டும். முதற்கட்டமாக, ஏதாவது ஒரு ஊரில், முற்போக்கு அமைப்புகளில் உள்ள தோழர்களின் குடும்பங்கள் இணைந்து இதைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். நாம் தொடங்கினால், மக்களுக்கும் அந்த எண்ணம் தோன்றும்.

நமது கோரிக்கைகள் அனைத்துமே அரசுக்கு வைப்பது போல இருந்தாலும், அதற்கு முன் மக்களிடையே ஒரு மனமாற்றம் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துதான் முன்வைக்கிறோம். அந்த மனமாற்றத்துக்கான தொடக்கமாக, ஒரு விவாதத்தைத் தொடங்குவது தான் நமது கோரிக்கைகளின் நோக்கம். தொடர்ந்து முயற்சிப்போம்.

Pin It