2-915-ஆ, வடக்கு 8 ஆவது வீதி,
மகாலட்சுமி நகர். பல்லடம் (அஞ்சல்),
திருப்பூர் (மா.வ).
அன்பு கெழுமிய தோழர் விசயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
தாங்கள் கேட்டுக்கொண்டபடி அதிஅசுரன் படைத்தளித்த கட்டுரையைப் படித்தேன். மிகவும் சிறப்பாகப் பெரியார் கருத்தோட்டங்களையும், சுட்டிக்காட்டி முடிவாக பகுத்தறிவுச் சிந்தனைச் சிற்பிகள் என்னென்ன செய்யவேண்டுமென்பதை எடுத்துக் காட்டி அருமையான எதிர்காலத்திற்கு நலம் தரும் நற்செய்தியினைக் கூறியுள்ளார்.
கட்டுரையின் தலைப்பு ‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ என்பதாகும் உலகளாவிய பெரிய சிக்கலாகப் பேசப்படும் ஒரு கருத்தமைப்பாகும். குறிப்பாகத் திராவிட இனம், ஆரிய இனம், கருத்துகளை எடுத்து சிறப்பாக ஒப்பிட்டும் காட்டியுள்ளது கட்டுரையை மேலும் படிக்கத் தூண்டுகிறது. பார்ப்பனர்களது காஞ்சி காமகோடி பீடத்தின் குரு செயந்திர சரஸ்வதியார் பத்து பிள்ளைகளுக்கு மேல் ஈன்ற தாய்மார்களுக்கு வீரத்தாய் விருது வழங்கியவர்களைப் பாராட்டி இந்து சமூகத்திற்கு இந்தப் பெண்கள் பெருமையும், பாதுகாப்பும், தந்துள்ளதாகப் பாராட்டியுள்ளார் மேலும் 1980-களில் இந்து முன்னணி அமைப்பும், பிற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம். குழந்தை பெறும் எந்திரங்கள் அல்ல பெண்கள். பெண்கள் கருப்பை அறிவுரையை தமிழர்கள் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல. இந்த செய்தியை விவாதம் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல, இந்த செய்தியை விவாதம் கூட செய்ய வில்லை என்று அதி அசுரன் சுட்டிக்காட்டுகிறார்.
ஈன்று புறந்தருதல்தான் கடன் என்று சங்க காலத் தாய் கடமையை சங்கப்பாடல் கூறுகிறது. சுங்க காலத்திலேயே பார்ப்பனியம் குமுகாயத்தில் ஆட்சி செய்துள்ளது. பிறப்பது முடிந்ததும் பெயர்சூட்டல் (நாமகரணம்) தொடங்கி. முடிவாக உள்ள மரணத்திற்குப் பின் படம் திறந்து நினைவு ஏந்தல்விழா வரை பெரியார் தொண்டர்கள் பல மாற்றங்களைச் செய்தாலும் குழந்தை பெறுவதை நிறுத்தவில்லை ஏன்?
மனுதர்மப்படி பெண் மணம்புரிந்தபின் குழந்தைகள் பெறாவிட்டால் மலடியோ என சந்தேகப்படுவார்கள். குழந்தை பெற்றுத்தரா விட்டால் வேறு பெண்ணை மணப்பார்கள் ஆண்கள்? ஆணுக்கு வாரிசாக ஆண் குழந்தையை பெண் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஏன்? 1.பேர் சொல்ல 2.சந்ததி பெருக 3.முதுமையில் பெற்றோர் களைக் காப்பாற்ற 4.சொத்துக்களுக்கு வாரிசு உரிமை பெற 5.இது இயற்கையின் மெய். இந்த 5 நியாயங் களையும் தக்க விடை சொல்லி மறுக்கிறார் அதி அசுரன். அவரது வாழ்க்கைத்துணை நலம் குடும்பத்தின் தேவைக்குப் பொருள்கள் வாங்க மட்டுமே ஆகும் என்று பெரியார் கூறியபடி வாழ்ந்துள்ளார்.
திரு.அதிஅசுரன் அவரது துணைவியும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து அதே போல் வாழ்ந்ததைப் பதிவு செய்துள்ளார். இவர்களது தந்தையார் சொத்துக்களையும் விற்று இவரது சொந்த பந்தம் இல்லாத சிற்றூரில் நிலம் வாங்கி விட்டதையும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் முதியோர் இல்லம் உருவாக்க எண்ணியுள்ளார். ஜாதிச் சொந்தங்களை நாடாமல் சாதிமறுத்தவர்களைத் தோழர்களாக்கி மகிழும் மனித நேயத்தில் கரைந்து விடும் குமுகமாக அமைகிறது. இவர் கூற்று ‘பெண்கள் குழந்தை குட்டிகளை உருவாக்காமல் இருப்பதே பெண் விடுதலைக்கு சரியான வழி மட்டுமல்ல அதன் மூலம் சாதியும் ஒழிந்துவிடும்’ என்பதுதான் பெரியாரியல்! மிகவும் நல்ல விவாதம். பிள்ளைப்பேறு தொல்லையா? இல்லையா? என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஜாதிகள் உள்ள இந்திய குமுகத்திற்கு இது அவசரத்தேவை. மேல் நாடுகளில் ஜாதிகள் இல்லை, பெண்கள் விடுதலை பெற்றுள்ளனர் இங்கே பெரும்பான்மைப் பெண்கள் அடிமைகளாகவே உள்ளனர். எனவே, இக்கருத்துப் புரட்சி அவசியம், பெண்விடுதலை மூலமாகவே குமுகாயப்புரட்சி முழுமைபெறும்.