என்னுடைய பெயர் தீபா. என்னுடைய சொந்த ஊர் பல்லடம் அருகே இருக்கும் தெற்குப்பாளையம். அம்மா பெயர் செல்வி. வீட்டிற்கு நான் ஒரே பெண்.அப்பா இல்லை. என்னுடைய இணையர் நாராயணமூர்த்தி. எங்களுக்கு ஒரு மகள் தீ.நா.செந்தணல். இணையருடைய ஊர் சூலூர் அருகே இருக்கும் கண்ணம் பாளையம். எங்களுடைய திருமணத்திற்குப் பிறகு என்னுடைய அம்மா வீட்டில் தெற்குப்பாளையத்தில்தான் இருக்கிறோம்.

இணையரைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுடைய எதிர்பார்ப்பு எந்த மாதிரி இருந்தது? தோழர் நாராயணமூர்த்தியைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

எனக்கு பிடித்த மாதிரி இருக்கணும் என்று நினைத்தேன். அரசுப் பணியில் இருக்கிற மாப்பிள்ளைகூட வந்திருந்தனர். ஆனால், எனக்கு விருப்பம் இல்லை. உறவினர்கள் எல்லோரும்கூட அரசுப் பணியில் இருக்கிறவங்களைத் திருமணம் செஞ்சுக்கோ... நீ வேலைக்கு போக வேண்டியது இருக்காது. உன்னுடைய வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால், நான் மறுத்துவிட்டேன். அரசு வேலையில் இருக்கிறாங்க என்பதற்காக நான் திருமணம் செய்யமுடியாது. எனக்குப் பிடிக்கவேண்டும் என்று சொன்னேன். நான் திருமணம் செய்தாலும் என்னுடைய வீட்டிற்கே என்னுடைய துணைவர் வரவேண்டும் என்று நினைத்தேன். (ஏனென்றால் அம்மா மட்டும் தனியாக இருப்பார்கள் என்பதற்காக) ஆனால், எங்களுடைய வீட்டுக்கு நாராயணமூர்த்தி வரவேண்டும் என்று திருமணத்திற்கு முன்பு நாங்கள் சொல்லவில்லை. அவரே குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என்னுடன் அம்மா வீட்டில் இருக்கிறார்.

எங்களுடைய உறவினர் ஆனந்த் என்பவர்தான் நாராயணமூர்த்தியை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினார். நாராயணன் பொறுப்பான நல்ல பையன். தீபாவுக்குச் சரியான ஒரு இணையராக இருப்பார் என்று சொன்னார். ஆனந்த் என்பவர் எங்களுக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவர்.அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.

மூர்த்தியை எங்களுடைய வீட்டிற்கு வரச்சொன்னோம். 01.05.2013 அன்று எங்களுடைய வீட்டிற்கு வந்தார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. அதனால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால், திருமணத்திற்கு முன்பு சிறைக்கு சென்றிருந்தார். அதை எனக்குத் தெரியப்படுத்தினால் நான் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிடுவேன் என்று நினைத்து என்னிடம் நாராயணமூர்த்தி சொல்லவில்லை.

எங்களுடைய திருமணத்திற்குப் பத்து நாட்களுக்கு முன்புதான் அதை என்னிடம் சொன்னார். ஆனால், அவர் என்னைப் பார்த்துவிட்டுச் சென்றவுடன் அவரைப்பற்றிய செய்தியை அடுத்த சில நாட்களில் நான் தெரிந்துகொண்டேன். கொலை, கொள்ளை என்ற பெயரில் சிறைக்குச் செல்லவில்லை, அவருடைய கொள்கைக்காகச் சிறை சென்றார் என்று தெரிந்துகொண்டேன். அதனால், நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

உங்களுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய திருமணம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து முடிவு பண்ணிச் செய்து வைத்த திருமணம். தாய்த்தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையிலும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர்.கொளத்தூர்மணி அண்ணன் முன்னிலையிலம் 07.07.2013 இல் தாலி, சடங்கு மறுத்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தாலி இல்லாமல் நடக்கிற திருமணத்தை உங்களுடைய வீடுகளில் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

தாலி இல்லாமல் திருமணம் நடந்ததற்கு காரணம் திருவள்ளுவர் தாய்த்தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் இராஜேஷ்கண்ணா. என்னுடைய அம்மா அந்தப் பள்ளியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர்தான் அம்மாவிடம் எடுத்துச் சொல்லி, தாலி மறுப்புத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார்.

ஆனால், என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தாலி இல்லாமல் எப்படிக் கல்யாணம் செய்வது. அவங்க ஒரு கிறிஸ்டியனா இருந்தாக்கூட மோதிரம் மாத்தலாம். தாலி இல்லாமல் கல்யாணம் பண்ணி ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது? அரசுப் பதிவுத் திருமணமாவது செய்யவேண்டும். நாளைக்கு அந்தப் பையன் விட்டுட்டு போயிட்டா என்ன செய்வது என்று சொன்னார்கள்.

எனக்கு நடந்த திருமணம் தாலி, சடங்கு மறுத்து நடந்ததைப்போல என்னுடைய உறவினர் வட்டாரத்தில் யாருக்கும் சுயமரியாதைத் திருமணம் நடக்கவில்லை. அதனால் தான் இப்படிச் சொன்னார்கள். அதற்கு நான் விட்டுட்டு போறவங்களுக்கு காவல் காத்திட்டு இருக்கமுடியாது. தாலி கட்டினாலும், கட்டவில்லை என்றாலும் அவன் விட்டுட்டு போனால் போகட்டும். அதைப்பற்றி எந்த ஒரு கவலையும் கிடையாது என்றேன். எனக்கு இது புதிதும் இல்லை. என்னுடைய சிறுவயதிலேயே எனது அம்மாவைக் கருத்து வேறுபாடு காரணமாக அப்பா பிரிந்துபோய்விட்டார். அம்மா தனியாக இருந்துதான் என்னை வளர்த்தார்.

இருபாலினரின் இல்லப் பராமரிப்பு பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு குடும்பம் என்று சொல்வது பெண்ணை மட்டும் சார்ந்தது அல்ல. ஆணும்,பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் குடும்பவாழ்க்கை. குடும்பத்தில் உள்ள இன்ப - துன்பத்தில் எப்படி இருவருக்கும் பங்கு உள்ளதோ, அதேபோல, வீட்டு வேலைகளிலும், குழந்தைகளைப் பராமரிப்பதிலும் இருவரும் பங்கெடுத்துச் செய்யவேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கமுடியும்.

ஹவுஸ் ஒய்ஃப் களாக - இல்லத்தரசிகளாக இருப்பவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லுங்கள்

இல்லத்தரசியாக இருப்பவர்கள் காலையில் 5 மணிக்கு எழுந்ததில் இருந்து காலை டிபன் செய்யணும், எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுக்கணும், குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் படுத்தணும், அவங்க டிபன் பாக்ஸ், சினேக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வைக்கணும். பள்ளிக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு அவர்களுக்குப் பிடித்த மாதிரி உணவுகளைச் செய்து கொடுக்கணும்.

கணவனுக்கு மதிய உணவு ரெடி பண்ணிக் கொடுக்கணும். அப்புறம் எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டுப் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, துவைத்த துணியை மடித்து வைக்கணும். அயன் பண்ண வேண்டிய துணிகளை அயன் பண்ணணும். அடுத்த நாள் காலையில் டிபன் செய்வதற்கு மாவு அரைக்கணும். திரும்பவும் 3.30 மணிக்குக் குழந்தைகளைப் போய்க் கூட்டிட்டு வரணும். அவுங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். மீண்டும் இரவு உணவு ரெடி பண்ணணும். இப்படியாகத்தான் இல்லத்தரசிகளின் வாழ்க்கை இருக்கிறது.

கணவன் வேலைக்கு போவதால் எந்த ஒரு வேலையையும் செய்யமாட்டார். அவர் உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு கொண்டுபோய் வைக்கணும். அவருக்குப் பரிமாறுவதில் இருந்து, அந்தத் தட்டைக் கழுவுவது முதற்கொண்டு அந்தப் பெண்தான் செய்யவேண்டும். அதற்குக் காரணம், “நீ வீட்டுல சும்மாதானே இருக்க” என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறார்கள். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செஞ்சிட்டு வீட்டிலேயே அடிமையாய் இருக்கணும். இதற்கு ஒரு பட்டம் வேற இல்லத்தரசி என்று. இதுதான் பெரும்பாலும் இல்லத்தரசிகளின் நிலையாக உள்ளது.

உங்களுடைய வீட்டில் நீங்கள் இருவரும் இல்லப்பராமரிப்பு பணிகள் செய்வதைப் பார்த்து உங்கள் குடும்பத்திலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்? அந்த அனுபவத்தைப் பற்றிக் சொல்லுங்கள்?

நாராயணமூர்த்தி வேலை செய்யும்போதுகூட என்னுடைய அம்மா மாப்பிள்ளையை எதுக்கு வேலை செய்யச் சொல்ற... அவர் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதை நாலுபேர் பார்த்தா என்ன சொல்லுவாங்க! அவர் வேலைக்கும் போய்ட்டு வந்து உனக்கு வீட்டுலையும் வேலை செய்யணுமா என்று என்னிடம் சொல்லி என்னைத் திட்டுவாங்க. அதற்கு நான் அவங்க அவங்க வீட்டில்தானே வேலை செய்யறாங்க. இதுல மத்தவங்க பாக்குறதுக்கும், பேசுறதுக்கும் என்ன இருக்கு என்று சொல்லுவேன்.

எங்க வீட்டிற்குப் பக்கத்தில இருக்க எங்க அத்தை சொல்லுவாங்க மூர்த்தி பரவாயில்லை. உனக்கு வீட்டுவேலை செய்வதில் நல்ல உதவியாக இருக்கிறார். இப்ப இருக்கிற எல்லாக் குடும்பத்து ஆண்களும், பெண்களுக்கு உதவியாக இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுவாங்க.

ஒரு சில ஆண்கள் வீட்டு வேலைகள் செய்து பழக்கம் இல்லை. தெரியாத வேலைகளை எப்படிச் செய்வது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெரிந்த வேலைகள், தெரியாத வேலைகள் என்று எதுவும் இல்லை. இதற்குத் தனியான வகுப்பு ஏதும் போய் பெண்கள் படிச்சிட்டு வருவது இல்லை. அவுங்களுக்கு 4 கை, கால்கள் இல்லை. சமையல் செய்யத் தெரியா விட்டாலும் பெண்களோட சமையல் செய்வதற்கு உதவி செய்து கற்றுக் கொள்ளலாம்.

சமையல் செய்யும்போது பெண்களுக்கு உதவியாக வெங்காயம் வெட்டுவது, காய் வெட்டிக் கொடுப்பது, குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் படுத்துவது, அவருக்குத் தேவையான மதிய உணவை டிபன் பாக்ஸில் எடுத்து வைத்துக்கொள்வது, அவருக்குத் தேவையான உணவை அவரே போட்டுச் சாப்பிட்டு அந்தத் தட்டைக் கழுவி வைப்பது, அவருடைய துணிகளை அவரே அயன் பண்ணி வைப்பது இந்த மாதிரியான வேலைகளைச் செய்யலாம்.

ஆனால், இந்த மாதிரியான வேலைகளைச் செய்யும்போது வெளி உலகத்துப் பார்வையில் தன்னை பொண்டாட்டிதாசன் என்று சொல்லி ஏளனம் செய்வார்கள் என்று ஒரு சில ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைக்கும் ஆண்கள் தங்களுடைய தாயையும், தன்னுடைய பெண் குழந்தைகளையும் அவர்களுடைய வலியை உணர்ந்தால் இந்த மாதிரியான வெளியுலகப் பார்வை அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது.

இனிவரும் தலைமுறையான நம்மளுடைய குழந்தைகளுக்கு ஆண்களுக்கான வேலை, பெண்களுக்கான வேலைகள் என்று கற்றுத் தராமல், இருவருக்கும் வீட்டு வேலைகளைப் பாரபட்சமின்றி அனைத்தையும் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பெரியாரியலைப் பற்றிச் சொல்லுங்கள்?

பெரியாரியலைப் பற்றித் தெரிந்து கொண்டது திருமணத்திற்குப் பிறகுதான். ஆனால்,அதற்கு முன்பே சாதியைப் பற்றிப் பேசுவதும், பெண் அடிமைத்தனம் இவை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுபோலத்தான் வாழ்ந்து கொண்டும் எந்த ஒரு விசயத்திற்கும் சுயமாக முடிவு எடுத்துக் கொண்டு இருந்தேன்.

பெரியாரியலைப் பற்றித் தெரிந்து கொண்டதற்குப் பிறகு சாதி, சடங்கு, சம்பிரதாயங்களில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன். சடங்கு என்கிற பெயரில் தேவையில்லாத பணச்செலவுகள், உறவினர்களிடையே சின்ன, சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்குக் காரணம் சடங்குகள். இவை தேவையில்லாதது என்று நினைத்தேன்.

அதனால், எங்களுடைய குழந்தைக்குத் தொட்டில் சீர், மொட்டை அடிப்பது போன்ற எந்த ஒரு சடங்கும் செய்யவில்லை. இனிவரும் காலங்களில் எந்த ஒரு சடங்குகளும் இல்லாமல்தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுடைய குழந்தையைப் பாலினபாகுபாடு இல்லாமல் சுதந்திரத்துடன் வாழ கற்றுக்கொடுப்போம்.

தோழர் நாராயணமூர்த்தி

என்னுடைய பெயர் நாராயணமூர்த்தி. நான் கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அம்மா பெயர் அருக்காணி. அப்பா பெயர் வெள்ளிங்கிரி. என்னுடைய குடும்பம் பெரிய குடும்பம். என்னுடைய திருமணத்திற்குப் பிறகு துணைவியார் தீபாவுடன் பல்லடம் தெற்குப்பாளையத்தில் வசிக்கிறேன்.

பெரியாரியல் கொள்கையை எப்போது ஏற்றுக்கொண்டீர்கள்?அதில் ஈடுபட காரணம் என்ன?

எனக்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தியவர் என்னுடைய உறவினர் ஈரோட்டில் இருக்கிறார். அவருடைய பெயர் இராயல் ராமசாமி. அவர் திராவிடர் கழகத்தில் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நான் பெரியாரியலைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அதற்கு முன்பு நான் சாதி, தீண்டாமையிலும், இந்து மத மூட நம்பிக்கையையும் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருந்தேன். அதனால் நான் நிறைய பணச்செலவுகளை செய்தேன். பழனிக்குக் கண்ணம்பாளையத்தில் இருந்து காவடி எடுத்துக்கொண்டு பத்து வருடமாக பாத யாத்திரைகூட சென்றுள்ளேன்.

அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் ராமசாமி அண்ணன் சிறு சிறு புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச்சொன்னார். நானும் அதைப் படித்து நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டு விவாதம் செய்து அதற்கான விளக்கத்தையும் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு சாதி - தீண்டாமையில் இருந்து விடுபட வேண்டுமெனில் பெரியாரியல் வாழ்வே சரியான ஒரு பாதையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் 2007 இல் இருந்து த.பெ.தி.க வில் இணைந்து செயல்படத் தொடங்கினேன்.

உங்களுடைய திருமண வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய திருமணம் தாலி, சடங்கு மறுத்து 07.07.2013 இல் நடந்தது. தாலி, சடங்கு மறுத்துத் திருமணம் செய்தாலும் சாதி மறுப்பு திருமணம் செய்யமுடியவில்லை என்ற கவலை மனதில் இருந்தது. இதை அறிந்த தீபா என்னிடம்,

“நீங்கள் சாதிமறுப்பு திருமணம்தான் செய்யவேண்டுமெனில் தாராளமாக என்னை விவாகரத்து செய்துவிட்டுப் போங்கள். பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழவேண்டாம். மற்றவர்களின் முன்னிலையில் பிடித்த மாதிரி காட்டிக்கொண்டு நாம் குடும்ப வாழ்க்கையை நீண்ட நாள் தொடர முடியாது. உங்களுக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுங்கள். நீங்கள் அப்படிச் செய்தாலும், எந்தக் காரணத்திற்காகவும் நான் உங்களைத் தேடி வரமாட்டேன். அதற்கான அவசியமும் எனக்கு கிடையாது. ஏனென்றால் நான் வேலைக்குப் போகிறேன். நான் சம்பாதிக்கிறேன். நான் உங்களை நம்பித்தான் என்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை என்று சொன்னார்.”

அதற்கு நான், “உள்சாதியில் திருமணம் செய்தாலும் தாலி, சடங்கு மறுத்துத் திருமணம் செய்ததையே ஒரு வெற்றியாக நினைக்கிறேன். வேறு சாதியில் திருமணம் செய்தாலும் சடங்கு, சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கையையும் நம்பி வாழ்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாம் அந்த மாதிரி இல்லாமல், பெரியாரியலின் வாழ்வான சாதி, பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் வாழ்வோம்” என்று சொன்னேன்.

அதன்படி இன்று வரை இந்து மதத்தின் எந்தச் சடங்குகளும், பண்பாடுகளும் இல்லாமல் சிறப்பாக வாழ்ந்து வருகிறோம். காட்டாறு குழுவின் வகுப்புகள் மூலமாகத் தொடர்ந்து திராவிடர் பண்பாட்டு வாழ்வைக் கற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் உங்கள் துணைவியாருடன் இணைந்து வீட்டு வேலைகளில் பங்கெடுத்துச் செய்வதைப் பற்றிச் சொல்லுங்கள்?

சுற்றுப்புறத்தில் இருக்கிறவர்கள் என்னை ஒரு பொம்பள மாதிரி வீட்டுவேலைகளைச் செய்கிறாயே என்று கிண்டல் செய்கிறவர்களும் உண்டு. பரவாயில்லை மனைவிக்கு உதவியாக இருக்கிறார் என்று பாராட்டுகிறவர்களும் உண்டு. யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் பெரியாரியல் வாழ்வை ஏற்றுக்கொண்ட பிறகு பெண்விடுதலை பற்றி பயிற்சி வகுப்புகளில் கற்றுக்கொண்டேன்.

அடிமைத்தனத்திலும் முதல் அடிமைத்தனம் பெண் அடிமைத்தனம்தான். அதற்கு நான் என்னுடைய வீட்டிலிருந்து முயற்சி எடுக்கணும் என்று நினைத்தேன். அதற்காக வீட்டுவேலைகளைப் பங்கெடுத்துச் செய்கிறேன். பலபெண்கள் வீட்டிலும் வேலைசெய்துவிட்டு வேலைக்கும் போக வேண்டியுள்ளது. மீண்டும் இரவு வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் வீட்டுவேலைகளைச் செய்யவேண்டியுள்ளது.

ஒரு மிஷினைப்போல ஓய்வின்றி வேலை செய்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு காலை உணவுகூடச் சாப்பிட நேரமில்லாமல் வேலைக்குப் போக வேண்டியுள்ளது. இதனால் பெண்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதை உணர்ந்த நான் எனது வீட்டில் வேலைகளைப் பகிர்ந்து செய்கிறேன். அதனால் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதற்கு எளிதாக உள்ளது. பெண்விடுதலை என்று சொல்லிப் பேச்சளவில் மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்று தெருவோரக் கடைகளில் தொடங்கி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை ஆண்கள் சமையல் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? இதில் என்ன பெரியாரியல் பெருமை?

இன்றைக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் முதல் கிராமத்தில் உள்ள டீ ஸ்டால் வரை ஆண்கள் சமையல் கலைஞர்களாகவும், பணியாளர்களாவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதைப் பணம் தரக்கூடிய ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறார்கள். அதே பணியைத் தன்னுடைய வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளுக்கு காலையில் எழுந்து சமைத்து தரும் மனப்பான்மை இன்றளவில் எந்த ஆணுக்கும் இல்லை.

இந்தப் பாகுபாட்டினைப் பற்றிப் பெரியார் சொல்வது என்னவென்றால், ஒரு மேல்சாதிக்காரனுக்குக் கீழ்சாதிக்காரன் அடிமையாக இருப்பான். அதே கீழ்சாதிக்காரனுக்கும் அடிமை உண்டென்றால் அது பெண்தான். தன் வீட்டு வேலைகளை அனைத்தும் செய்து கீழ்சாதிக்காரனைப்போல் அடிமையாகத் தான் வைத்து இருப்பார் என்று பெரியார் கூறுவார். அதுபோலத்தான் உள்ளது நமது ஆண்கள் சமூகத்தின் மனநிலை.

பெண்ணிற்குரிய கடமைகளாக இந்து மதம் சிலவற்றைக் கூறியுள்ளது. இந்து மதத்தின், மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் - 11 ன் படி,

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும், தன்னையும் வீட்டையும் அலங்காரமாக லட்சுமிகரமாக வைத்திருக்க வேண்டியதும் - குழந்தைகளைப் பராமரிப்பது, களைத்து வரும் கணவனுக்கு உணவளித்துப் பணிவிடை செய்வதும் - சமையலும், சமையல் சாதனங்களும் நல்லபடி இருக்கச் செய்வதும் மனைவியின் கடமையே.

ஒருவன் ஏழையாக இருக்கலாம். அல்லது பணக்காரனாக இருக்கலாம். அவனுடைய இல்லம் என்பது குடிசையாக இருக்கலாம். பெரிய மாளிகையாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த இடத்திற்கு அவள் இல்லத்தரசி என்று கூறுகிறோம். வாயிற்படிக்கு உள்ளே மனைவியின் சாம்ராஜ்ஜியம் நடக்கும். உள்ளே எத்தனை வேலைக்காரர்கள் வேலை செய்தாலும் அவர்களை வழிநடத்துபவர் மனைவியாகவே இருக்கவேண்டும். மகாராணியாகவே இருந்தாலும் மனைவியின் கடமைகளை கணவனுக்குச் செய்யவேண்டும் என்று மனுதர்மம் சொல்கிறது. இந்த மனுதர்மச் சிந்தனையை ஒழிப்பது தான் பெரியாரியல்.

உங்கள் இருவருக்கும் ஒன்றான ஒரு இலக்கு என்று எதாவது இருக்கிறதா?

2013 ஆம் ஆண்டு இந்து மத மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நாங்கள். வெறும் காகிதத்தில் மட்டுமல்ல; வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் மனுவின் சமுதாயச் சட்டங்களை எதிர்த்து வாழ விரும்புகிறோம். நமது தோழர்களாவது, மனு வுக்கு எதிரான சமத்துவமான வாழ்க்கைக்கான போராட்டத்தை முதலில் அவரவர் வீடுகளில் இருந்து, சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும், தொடங்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரது ஆசை.

Pin It