periyar 254நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்னும் நாட்டுக் கோட்டைச் செட்டி யார்மார்கள் தென்னிந்தியாவிலுள்ள மற்ற சமூகத்தார்களை விட செல்வ வான்களாவார்கள். எல்லோருமே வியாபார பழக்கமுள்ளவர்களாதலால் சற்று புத்திக்கூர்மையாயும் இருக்கப்பட்டவர்களாவார்கள்.

அப்படிப்பட்ட சமூகத் தார் ஜாதி சமய விஷயத்தில் பிடிவாத குணமுடையவர்களாகவும், குருட்டு நம்பிக்கையும், மூடபக்தியும் உடையவர்களாகவும் இருந்து வருவதால் அவர்களது செல்வங்கள் பெரிதும் கோடிக்கணக்காகப் பாழாக்கப் படுவது மல்லாமல் நாகரீக வளர்ச்சியில் மிகுதியும் பின்னடைந்தவர்க ளாகவே அநேகர் இருந்து வருகின்றார்கள்.

பல மக்களிடம் பழகும் சந்தர்ப்பங்களும், பல நாடுகள் சென்றுவரும் சவுகரியங்களும் அவர்களுக்கு ஏராளமாயிருந்தும் மேல்கண்ட ஜாதி சமய விஷயத்தில் உள்ள பிடிவாத குணத்தால் உண்மையான நாகரீகத்தின் புறமும் செல்வத்தின் கிரமமான செலவின் புறமும் சிறிது கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் கண்ணைக் கட்டி பரந்த காட்டுக்குள் விடப்பட்ட சுயேச்சைக்காரர்கள் போல் வகை தொகை தெரியாமல் செலவு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள்.

இந்த சமூகத்தார்களில் இப்படிப்பட்டவர்களே பெரும் பகுதியாய் இருந்து வருவதில் நாட்டின் முன்னேற்றம் பெரிதும் பாதக மடைய இவர்களே ஒரு காரணமாயுமிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. பணம் சம்பாதிப்பதை முக்கிய காரணமாகக் கொண்டு வெளி நாடுகள் சென்று ஏராளமான செல்வங்களை இந்த நாட்டுக்கு கொண்டு வருகின்றார்கள் என்பது போற்றக் கூடியதானாலும் அந்த செல்வம் நாட்டின் நாசத்திற்கும், பெருத்த ஜனத்தொகை கொண்ட சமூகங்களின் கேட்டிற்கும் பயன்பட்டு வருவது பற்றி துக்கப்படாமல் இருக்கவும் முடியவில்லை.

ஏதோ அச்சமூகத்தில் சில செல்வவான்கள் உண்மை நிலை யறிந்த மக்களாய் இருக்கின்றார்கள் என்று சொல்லக் கூடுமானாலும் அவர்களுக் கும் போதிய தைரியமும், வீரமும் இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பழமையைப் பின்பற்றித் தீரவேண்டிய நிர்பந்த முடையவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

மற்றபடி அச்சமூகத்தில் சில வாலிபர்கள் மாத்திரம் தைரியத்துடனும், வீரத்துடனும் வெளிவந்து மேல்கண்ட குற்றங்களிலிருந்து விலக தங்களாலானதைச் செய்கின்றார்கள் என்று சொல்லலாம். ஆனாலும் அவர்களுக்கும் எதிர்ப்பும் தொல்லையும் விளைவிக்கும் கூட்டம் அச்சமூகத்திலேயே இல்லாமலும் இல்லை. அப்படிப்பட்ட கூட்டத்திற்கு அச்சமூகத்தில் ஆதரவளிப்பவர்களும் இல்லாமலில்லை.

பெரும் பெரும் செல்வங்களைக் கொண்ட இச்சமூகம் இந்தப்படியான பிற்போக்குடைய நிலையில் இருப்பது நாட்டு நன்மைக்கு விரோதமாயிருப்பதால் அதைப்பற்றியே இவ்வாரம் சிறிது குறிப்பிட எண்ணுகின்றோம். இதற்கு இப்போது என்ன சந்தர்ப்பம் நேரிட்டதென்றால் மேற்கண்ட செட்டியார்களின் நாட்டிலிருந்து “சிவநேசன்” என்னும் பெயரால் வெளியாக்கப்பட்ட ஒரு வெளியீடு நமது பார்வைக்கு எட்டியதை பார்க்க நேர்ந்தது.

இவ்வெளியீட்டில் ஒன்றை சுமார் ஒரு வருஷத்திற்கு முன்னும் ஒரு தடவை நாம் பார்க்க நேரிட்டபோது அதிலிருந்த ஒரு விஷயத்திற்கு அப்போதும் ஒரு குறிப்பு எழுதினோம். அதாவது அதில் விபூதி என்னும் சாம்பலை உயர்த்தியும் நாமம் என்னும் மண்ணைத் தாழ்த்தியும் எழுதப்பட்டிருந்தது.

எப்படியெனில் கடவுள் மனிதனுக்கு நெற்றி கொடுத்திருப்பதே விபூதியிடுவதற்கென்றும் அதற்காகவே கடவுள் நெற்றியை குறுக்கு வசத்தில் அதிக நீளமாய் வைத்திருக்கின்றார் என்றும், இதை அறியாதவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றும், நாமம் (கோபி சந்தனம்) என்பது ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்து கழுவி விடப்பட்டதின் அறிகுறி என்பதுமாக எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்தவுடனே சிவனேசர்களின் யோக்கியதை இதை அநுசரித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருதி அதற்குத் தகுந்தவாறு அறிவு கொளுத்தி குறிப்பு எழுதினோம். அதுபோலவே இப்போது பார்க்க நேரிட்ட வெளியீட்டிலும் சில விஷயங்கள் காண நேரிட்டன. என்னவெனில் சமீபத்தில் திருச்சியில் நடந்த திரு. நீலாவதி - ராமசுப்ரமணியம் திருமணத்தைப் பற்றியும் மற்றும் திரு. முருகப்பா - மரகதவல்லி திருமணத்தைப் பற்றியும், திரு. சுந்தரி-அருணகிரி திருமணத்தைப் பற்றியும் இழிமொழியில் இகழ்ந்து எழுதியிருப்பதுடன் மணமகளையும், மணமகனையும் குறைவுபடுத்தியும் எழுதப்பட்டிருந்தது.

எழுதிய முறை கோழைத்தனமும் இழி குணத்தன்மையும் கொண்ட தாகக் காணப்பட்டதேயொழிய ஒரு யோக்கியமான முறையில் எழுதப்பட்ட தாகவும் காணப்படவில்லை. ஏனெனில் அத்திருமணங்களால் ஏற்பட்ட குற்றமென்ன? அதனால் யாருக்கு என்ன நஷ்டம்? எந்தக் கொள்கைப்படி அது குற்றம்? அதில் உள்ள நாணயத் தவறுதல் என்ன? என்பன போன்றவை களைக் காட்டி எழுதியிருக்கப்படுமானால் அதில் மனிதத்தன்மை பொலிந் திருப்பதைக் காணலாம்.

அப்படிக்கில்லாமல் கல்யாணத்திற்கு வந்திருந்த வர்களில் இருவர் தவிர மற்றவர்கள் “ஜட்காவாலாக்களும் அன்னக் காவடிகளும், டெம்பரவரிகளும், போலிகளும், சில்லரைப் பேர் வழிகளும்” ஆவார்களென்றும் மற்றும் அவன் இவன், அவள் இவள் என்று கள்ளுக்கடை சாராயக்கடை பாஷைகளிலும் பெயர்கள் குறிப்பிடுவதில் சிறிதும் மரியாதை இல்லாமல் காட்டுமிராண்டிகள் பாஷையிலும் எழுதப் பட்டிருப்பதுடன் மணப்பெண்களை சுண்ணாம்புக்காரி, வெற்றிலைப் பாக்குக் கடைக்காரி, எச்சில் படிக்கத்தில் கரித்தூவுபவள், தாசி, வேசி, சகண்ட், தேர்ட், போர்த் ஹாண்ட் என்றும் மற்றும் அதுபோன்று குச்சுக்காரத் தெருவில் பிறந்த குழந்தைகளின் பாஷையில் அற்பத்தனமாய் இழி துறையில் உபயோகிக்கப்பட்டுமிருக்கின்றன.

இதில் மற்றொரு விசேஷ மென்னவென்றால் இந்த வெளியீட்டுக்கு சிவநேசன் என்ற பெயரும் இதில் சேர்ந்தக் கூட்டத்தார்களுக்குச் சிவநேசர்கள் என்ற பெயரும் வைத்துக் கொண்டிருப்பதாகும். அன்றியும் இந்தக் கூட்டத்தார் இப்படி எழுதுவதற்குச் சொல்லப்படும் காரணமாய் அவர்கள் குறிப்பிடுவது என்ன வென்றால் இத்திருமணங்களால் அவர்கள் சாதியும் சமயமும் போய்விடுகின்றன என்பதாகும்.

ஆனால் இந்த பேர்வழிகள் எந்த சாதி சமயத்தைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக்கொண்டு இப்படி எழுதினார்கள் என்பது மாத்திரம் அதில் இருந்து சரியாய் விளங்கவே இல்லை. இந்தப்படி எழுதும் சிவநேசர் ஜாதியும், சிவநேசர் சமயமும் போய்விட்டதென்று கவலைப் படுகின்றார்களோ அல்லது இப்படிப்பட்டவர்களை ஆதரிக்கும் ஜனங்க ளுடைய மூட நம்பிக்கை ஜாதியும், மடச்சமயமும் போய்விட்டதென்று கவலைப்படுகின்றார்களோ என்பதும் நாம் அறியக்கூடவில்லை.

கடுகள வாவது மானம், வெட்கம், மனிதத்தன்மை, யோக்கியப் பொறுப்பு ஆகிய சாதாரண குணங்களாவது இந்த சிவநேசக் கூட்டத்திற்கு இருந்திருக்குமானால் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதிகளான மக்களை யாதொரு காரணமும் இல்லாமல் திருமணத்திற்கு வந்திருந்ததற்கு ஆகவே ஜட்கா வாலா, டெம்பர்வரி, அன்னக் காவடிகள், காலி, போலி, சில்லரை பேர்வழி என்றும், பெண் மக்களையும் தாசி, வேசி போன்ற அற்ப வார்த்தைகளாலும் வசைபாட சம்மதிக்க முடியுமா என்று கேழ்க்கின்றோம்.

இதுபோலவே திருப்பிச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் யோக்கியதைக்கும், நடத்தைக்கும் தகுந்த வார்த்தைகள் சுலபத்தில் கிடைக் காததாலும் அது அழகாயிராதென்றும் கருதி அதில் நேரம் செலவழிப்பதை விட்டு விட்டு அவ் வெளியீட்டின் மூலம் அவர்கள் கவலைப்படும் விஷயத்தில் பிரவேசிக்கின்றோம்.

அதாவது:- அதில் முக்கியமாய் குறிப்பிட்ட 1. கல்யாணம் கண்ட றாக்டா? என்பதும் 2. ஜாதி சமயம் போய்விடுகிறதே என்பதும் 3.பிள்ளை யார் பட்டி இரணிக்கோயில் கூட்டத்தார்கள் சேர்ந்து மணமக்களை ஜாதியை விட்டு விலக்கிவைக்க வேண்டும் என்றும் விரும்பும் விஷயங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

முதலாவது,

கல்யாணத்தை கண்டறாக்ட்டு (ஒப்பந்தம்) தான் என்றே நாமும் சொல்லுகின்றோம். அது ஒரு ஒப்பந்தமல்ல என்று சொல்வதானால் அறிவுக் கேற்ற ஆதாரங்களை காட்டட்டும் என்றே கேட்கின்றோம். அதுவும் மணம் செய்து கொள்ளுகின்ற மணமக்கள் செய்துகொள்ளும்படியான ஒப்பந்தம் கொண்டது தான் கல்யாணமே தவிர வேறொருவர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்காக மணமக்கள் கட்டுப்படவேண்டும் என்பது கல்யாணம் அல்ல என்றே சொல்லுவோம்.

அதை இழவும் (துக்கம்) மனிதத்தன்மை யற்றதும் என்றுதான் சொல்லுவதோடு அப்படிப்பட்ட ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு கஷ்டப்படுபவன் மூடன் அல்லது அடிமை என்றுதான் சொல்லுவோம். அதோடு அவ்வித ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றவர்களையும் அறிவிலிகள் அல்லது சுயநலத் தரகர்கள் என்றும் சொல்லுவோம்.

ஆண் பெண் சம்மதமின்றி அதுவும் அவர்களது தக்க பருவ உணர்ச்சியின் தேவை இன்றி மற்றும் தேவைக்குப் பொருந்தாத கல்யாணங்களின் யோக்கியதை இன்றைய தினம் அம்மாதிரி மணமக்கள் உள்ள வீடுகளில் நடக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கேட்டு அறிந்து நடுநிலைமையில் இருந்து நினைத்துப் பார்த்தால் நாம் சொல்லுவதின் உண்மை விளங்காமல் போகாது. அதைப் பற்றி விரிக்கின் பெருகும்.

இரண்டாவதாக ஜாதி சமயம் என்பதைப் பற்றி பேசுவோம். இதில் நாட்டுக் கோட்டையார் ஜாதி என்பதையும் நாட்டுக் கோட்டையார் சமயம் என்பதையுமே எடுத்துக் கொள்ளுவோம். பிறகு சாவகாசமாய் மற்ற ஜாதி சமயத்தைப் பற்றி கவனிப்போம்.

நாட்டுக் கோட்டையார் ஜாதிக் கொள்கைகள் என்பது அச்சாதி மக்களுக்காவது அனுஷ்டிக்க முடிகின்றதா?

நன்மையாயிருக்கின்றதா? உலக நாகரீகத்திற்கு ஏற்றதா? என்பனவாகிய முதலியவைகள் இங்கு கவனிக்கத்தக்கதாகும். இன்றைய தினம் பொதுவாக எங்கும் ஜாதி என்பதற்கு ஆதாரமாய் இருக்கும் கொள்கைகளில் பல வேஷத்திலேயே உடைய தாகும்.

அந்தப்படி பார்த்தால் நாட்டுக் கோட்டையாருக்கு உள்ள ஜாதி வேஷப்படி இன்றையதினம் யார் யார் இருக்கின்றார்கள். அவைகளில் 30 ´க்குக் கீழ்ப்பட்ட வாலிபர்கள் ஜாதிக் கொள்கைக்கு விறோதமாய் தலையில் மயிர் வளர்த்துக் கத்தரித்துக் கொள்ளுகின்றார்கள். 30 வயதுக்கு கீழ் பட்ட பெண்கள் காது துவாரத்தை சிறிதாக்கி கம்மல் தோடு இட்டுக் கொள்ளு கிறார்கள். இரவிக்கையும் போட்டுக் கொள்ளுகிறார்கள்.

இனியும் இது போலவே பல விஷயங்கள் செய்த இந்த ஜாதிக் கொள்கை வேஷத்தில் இன்றும் பல மாறுதல் அச்சாதி, பிரபு வீடு முதல் ஏழை வீடு வரையிலும் இன்று புகுந்து விட்டன. சிவநேசர் கூட்டத்திலும் தாண்டவமாடுகின்றன. ஆகவே இம்மாதிரியான ஜாதி வேஷக் கொள்கைகளை தப்பு என்று இவர்கள் சொல்லுவார்களானால் பழய கொள்கை நியாயமும் நாகரீக முமானதா என்று கேட்கின்றோம்.

“பழைய கொள்கையைச் சேர்ந்த வேஷங்கள் தான் நியாயமானது. அதில் சிறிது மாற்றினாலும் ஜாதி கெட்டுப் போகும்” என்று கருதுவார்களானால் கொஞ்ச காலத்துக்குள் நாட்டுக் கோட்டை ஜாதியாரெல் லாம் உலகத்திலுள்ள கண்காட்சி சாலைகளுக்கு விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போகப்பட வேண்டியவர்களாகத்தான் ஆய்விடுவார்களே தவிர நாட்டுக் கோட்டை நகரத்தில் வசிப்பதற்கு ஆளே கிடையாமல் போய்விடும் என்றே சொல்லுவோம்.

ஜாதியைக் காட்டுவதற்கு அடுத்தாப்போலுள்ளது சடங்கும் அது பற்றிய பழக்க வழக்கங்களுமாகும். ஆகவே அந்த விதமான ஜாதி சடங்குகள் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளைப் பற்றி சிறிது கவனிப்போம். அவை அறிவிற்கும், நாகரீகத்திற்கும், சௌகரியத்திற்கும் ஏற்றதா என்பதையும் கவனிப்போம்.

முதலாவது அவர்களுடைய கல்யாணம் என்பதில் உள்ள கஷ்டங் களே ஒரு மனிதன் காதினால் கேட்க சகிக்காததாகும். கல்யாணம் செய்த பிறகு அப்பெண்களுடன் வாழும் தன்மையோ மிகவும் பரிதாபகரமானதாகும். அதாவது ஒரு சாதாரண மனிதனுக்கு கல்யாணம் ஆக வேண்டு மானால் 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வேண்டும்.

ஒரு மனிதனுக்கு முதல் மனைவி இறந்துபோயோ, இருந்து எவ்வளவு நியாயமான காரணத்தால் பிடிக்காமல் போயோ மறுபடியும் வேறு கல் யாணம் செய்து கொள்வதானால் கண்டிப்பாய் 40, 50 ஆயிரம் முதல் அறுப தாயிரம் ரூபாய் வரை வேண்டும்.

இப்படி செலவு செய்தாலும் 25 வயதுக் காரனுக்கு 9 வயது பெண்ணும் 35 வயதுக்காரனுக்கு 11 வயது பெண்ணும் தான் கிடைக்கும். பெண் கொடுப்பவர்கள் பணக்காரர்களாய் இருந்தாலோ 20, 30, 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்துதான் தங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட கல்யாணத்திலும் 16 வயது பெண்ணுக்கு 11 வயது மாப்பிள்ளை யும், மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் பணக் காரர்களாயிருந்தால் 14 வயது 16 வயது பெண்ணுக்கு 9, 10 வயது மாப் பிள்ளைகளைக்கூட கல்யாணம் செய்வதும் வழக்கத்திலிருக்கின்றன.

மற்றும் இம்மாதிரி கல்யாணங்களும், கல்யாணப் பெண் மாப்பிள்ளைகளின் பொருத்தங்களை, அழகுகளை, குணங்களை, கல்விகளை, திரேக பொருத்தங்களைக் கவனியாமல் சம்மந்திகளின் சிநேக அவசியத்தையும், வியாபாரத் தேவைகளையும், கௌரவங்களையும் உத்தேசித்தே மணங்கள் நிச்சயிக்கப்படுபவைகளாகவும் இருப்பது வழக்கம்.

சமீபகாலத்தில் அந்த நாட்டில் 63 ஆயிரம் ரூ. சொத்துடையவர் ஒருவர் தனது 25 வது வயதில் 57 ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல்யாணம் செய்து கொண்டார். அக்கல்யாணம் சில்லரைச் செலவு வகையராக்களுக்கு விபரம் என்னவென்றால்:-

பெண்கிரயம் 37500
நகை 10500
கல்யாண செலவுக்காக 5500
கல்யாணம் முடித்த
தரகுக்காரருக்கு 3500
ஆக ரூ. 57000

செலவாகி விட்டது.

கல்யாண மாப்பிள்ளைக்கு அவர் செலவு போக மீதிப்பட்டது சுமார் ஐந்து ஆறு ஆயிரம் ரூபாயேயாகும். இதைக் கொண்டு தான் இனி அந்த மணமக்கள் பிழைக்க வேண்டும்.

இது தவிர அதே நாட்டில் மற்றொரு கனவான் முதல் பெண்ஜாதி இறந்துபோய் மறுமணம் செய்து கொள்வதற்கு தனது 36வது வயதில் 50ஆயிரம் ரூபாய் செலவு செய்து 8வயது பெண்ணைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்.

மற்றொரு கனவான் தனது நாணயத்தின் மீது பலரிடம் கடன்வாங்கி 50 ஆயிரம் ரூ. செலவு செய்து சிறு பெண்ணை கல்யாணம் கட்டி 2, 3 மாதம் இங்கிருந்து விட்டு கடன்காரர்கள் தொல்லைக்காக சம்பாதிக்க வெளிநாடு சென்று ஒரே மாதத்தில் இறந்துபோய் விட்டார். பணம் கொடுத்தவர்களுக்கு 4 µ வட்டியுடன் பணம் போய்விட்டது. அந்த 10 வயது பெண்ணுக்கோ சாகும் வரை விதவையாய் இருக்க வேண்டியதாய்விட்டது.

இந்த மாதிரியாக ஜாதிக் கல்யாணப் பெருமை ஒரு புறமிருக்க கல்யாணம் செய்து கொண்ட பெண்களை தாய்வீட்டில் விட்டுவிட்டு 3 வருஷம் 4 வருஷம் கப்பல் பிரயாணம் போய் விடுவதென்பதும் நாட்டுக் கோட்டை செட்டியார்களில் எங்கும் நடைபெறக் கூடியதும் மிகவும் செல்வாக்குப் பெற்றதுமான ஜாதிக் கொள்கையாகும்.

பெண்சாதியைக் கூட அழைத்துக் கொண்டு போனாலோ ஜாதி கெட்டுப் போகும் என்பதும் அந்த ஜாதியின் ஒரு முக்கிய கொள்கையாகும். பிறகு அவர்கள் வீட்டிற்கும் நகைக்கும் சடங்கிற்கும் விருந்து முதலியவைகளுக்கும் முறைதலை என்பது போன்ற சமூகச் சடங்கிற்கும் அவர்கள் பணம் செலவு செய்வது முதலிய ஜாதி கொள்கைகளை விரித்தால் அதுவும் மிகப் பெருகிவிடும். நிற்க, இனி சமயக் கொள்கைகளைப்பற்றி சற்று கவனிப்போம்.

ஜாதிக் கொள்கைகளையாவது பெரிதும் பரிகாசத்திற்கும் துன்பத் திற்கும் இடமாயிருக்கின்றதே என்று மாத்திரம் சொல்லலாம். அவர்களு டைய சமயக் கொள்கைகள் என்பதோ மக்கள் கேட்டிற்கே ஆதாரமாயிருக்கின்றன.

என்னவெனில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்மார்களின் சமயக் கொள்கைகள் பெரிதும் என்னவென்றால் கோயில் கட்டுவதும் வெள்ளி, தங்கம் ரதம், தேர்வாகனம் செய்வதும் பூசைகள், கும்பாபிஷேகங்கள் உற்சவங்கள் செய்விப்பதும் சத்திரங்கள் வேதபாடசாலைகள் கட்டிவைப்பதும் முதலிய வைகள் ஆகும். இவைகளுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று பார்ப்போமானால் பல கோடிக்கணக்கேயாகும்.

இச் செலவுகள் வீண் செலவும் தேசியப் பொருள் நஷ்டமுமல்லாமல் வேறு என்ன என்று சொல்லக் கூடும். செய்தவர்களும் நஷ்டமடைந்து சிலர் பாப்பராகி தாங்கள் கடன் வாங்கியவர்களுக்கும் முழுதும் கொடுக்க முடியாமல் இன்சால் வெண்டாகி தீர்த்துக் கொடுக்கப்பட்டு அழிகின்றதை நேரிலேயே பார்க்கின்றோம். இவைதவிர மற்றும் பார்ப்பனர் காலில் விழுவதும் அவர்களைக் குருவாய்க் கொள்ளுவதும் இவர்களது சமயமாயிருக்கின்றது.

இந்த மாதிரி சமயம் காக்கப்படுவதில் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்கின்றோம். நாட்டுக் கோட்டைச் செட்டியார்களில் தேவகோட்டையில் ஒரு பிரபல கோடீஸ்வரர் ஒருவர் சமீப காலத்தில் நன்றாயிருந்தது யாவருக்கும் தெரியும். அவர் சுமார் 60, 70க்கு மேல்பட்ட கோயில்கள் கட்டினவர்.

பல கும்பாபி ஷேகங்கள் செய்து வேத பாடசாலை, அன்ன சத்திரம் முதலியவை கட்டி னவர் வியாபாரத்தில் நஷ்டமடையாமல் தாசி, வேசி, குடி, சூது ஆகியவை களில் செலவழிக்காமல் ஒழுங்காய் நடந்து வந்தும் தன் சொந்தப் பணம் முழுவதும் போய் கடன்காரருக்குப் பதில் சொல்ல வேண்டியவராய் விட்டார் என்றால் இந்த மாதிரியான சமயக் கொள்கை இனியும் காக்கப்பட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் திரு. தர்மபூஷணம் தி. நா. முத்தய்ய செட்டியார் என்கின்ற கனவான் 50, 60 லக்ஷத்திற்கு மேற்பட்ட ஸ்திதி உடையவராயிருந்தவர். இவரும் பல கோயில்களைக் கட்டி வெள்ளிரதம் முதலிய வாகனம் செய்து சத்திரம் வேதபாடசாலை பிராமண சமாராதணை, பிராமண தர்மம் முதலிய வைகள் செய்தவர். “லோககுரு சங்கராச்சாரி சுவாமி” களின் பாதத்திற்கு 1008 பவுன் கொண்டு ஒவ்வொரு பவுனாய் போட்டு அர்ச்சித்து (சஹஸ்திர நாமம் செய்து) அவரது பாத தீர்த்தம் சாப்பிட்டு “தர்மபூஷணம்” என்று கௌரவப் பட்டம் பெற்றவர்.

இவரும் இன்று கடன்காரருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டராம். இவருடைய கணக்கையும் ஒரு தக்க ஆடிட்டரைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்தால் இவ்வளவு பணமும் கோவில் கட்டி வேத பாடசாலை வைத்து பார்ப்பனருக்கு கொடுத்துக் கொடுத்து இந்த நிலைக்கு வரவேண்டியவரானார் என்றே ரிப்போர்ட்டு எழுதுவாரே தவிர வேறு விதமாய் “தப்பு வழியில்” செலவு செய்ததாகவோ கொடுக்கல் வாங்கலில் நஷ்டமடைந்ததாகவோ எழுதமாட்டார்.

இதுபோல் கஷ்டப்பட்டவர்கள் கஷ்டப்படுகின்றவர்கள் குடும்பம் இனியும் எத்தனை இருக்கின்றது என்பது அச் சமூகத்திலேயே பலருக்குத் தெரியும். ஆகவே இம்மாதிரி ஜாதியும் சமயமும் காப்பாற்றப்பட வேண்டுமென்கின்ற அவசிய மென்னவென்றும் அதனால் அச் சமூகத்திற்கோ அல்லது நாட்டிற்கோ பலன் என்ன என்றும் கேழ்க்கின்றோம்.
இவைகள் ஒருபுறமிருக்க இச்சிவநேசக் கூட்டத்தாரின் ஒழுக்கங் களைப்பற்றிப் பேசுவோமானால் அங்குள்ள டாக்டர்களை, வைத்தியர்களை விசாரித்துப் பார்த்தால் அவர்களைக் கொண்டு என்ன விதமான வியாதியஸ் தர்கள் அதிகமாக ஆஸ்பத்திரிக்கு வருகின்றார்கள் என்பதைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிடச் செய்தால் உண்மை நன்றாய் விளங்கிவிடும்.

மற்றும் அவர்கள் தங்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளையே ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டாலும் விளங்காமல் போகாது. மற்றும் ஜாதி சமயத்தைக் காப்பாற்றும் சிவநேசக் கூட்டத்தாரின் பிள்ளைக் குட்டிகளைப் பற்றியோ வென்றால் அவர்கள் வெளியிடும் விளம்பரங்களைப் பார்ப்போமானால் பத்திரிகைகளிலெல்லாம் தங்கள் பிள்ளைகள் மைனர்களாக, சில்லரைப் பேர்வழிகளாக, டெம்பரவரிகளாக, காலிகளாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாக புத்தி சுவாதீனமில்லாதவர்களாக ஆகிவிட்டதாகவும் அவர்களுக்கு யாரும் ஒரு பைசா அளவு கூட கடன் கொடுக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளும் - தெரிவிக்கும் விளம்பரங்களையே அநேகமாய் நாள்தோறும் பத்திரிகைகளில் பார்க்கலாம்.

தனித்தனியாய் அனுபவிக்கும் மாதிரியான இம்மாதிரி பலன்கள் ஒரு புறமிருக்க பொதுவாக அச் சமூகத்திற்கே அதாவது அச் சமூகம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஜாதியையும் சமயத்தையும் காப்பாற்றி தமிழ்நாட்டிலெங்கும் கோவில்கள் கட்டி இவர் கப்பலேறிச் சென்ற நாடுகளிலும் கோவில்கள் கட்டிப் பெரும் பெரும் சமய தர்மம் செய்து வந்தும் சிறிதும் ஜாதிக் கொள்கைகள் தவறவிடாது வந்தும் வாழ்க்கையில் பெரும்பான்மையான மக்கள் எவ்வித நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இன்று அச் சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் 20 வயது முதல் 45 வயது வரையில் கல்யாணமில்லாமலும் கல்யாணம் செய்து கொள்ள மார்க்கமில்லாமலும் வெறும் ஒத்தை ஆட்களாகவே இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் வேறு சாதியில் கல்யாணம் செய்து கொண்டால் மாத்திரம்தான் சாதி கெட்டுப் போகுமென்று ஓலமிடுகிறார்களே ஒழிய மற்றபடி கூத்தி, வைப்பு முதலியவைகள் வைத்துக் கொண்டு எவ்வளவு ஒழுக்கயீனர்களாகத் திரிந்தாலும் அவர்களுடைய சாதி சிறிதும் கெடுவதில்லை. அதைப்பற்றி சாதியிலோ, சமூகத்திலோ யாரும் சிறிதும் இழிவாய்க் கருதுவதும் இல்லை.

இந்த மாதிரி கல்யாணம் செய்து கொள்ள முடியாத ஆட்களுக்கு இக் கூட்டம் இதுவரை என்ன பரிகாரம் செய்திருக்கின்றது. அல்லது அவர்களை வேறு என்ன செய்யும்படி கட்டளை இடுகின்றது என்பதை அறிய விரும்பு கின்றோம்.

தவிர, மேல்கண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்மார்களின் இன்றைய பொதுநிலை பொருளாதார விஷயங்களிலும் கவலைக்கிடங் கொடுக்கக் கூடியதாகவே தான் பல கஷ்டங்கள் காணப்படுகின்றன.

எப்படியெனில் இவர்கள் பெரும் பெரும் பொருள்கள் கொண்டு போய் வைத்து தொழில் நடத்திவரும் வெளிநாடுகளிலெல்லாம் இப்போது கஷ்டமே ஏற்பட்டிருக்கிறது. பர்மா நாட்டில் பர்மா பிரிவினையும், பூகம்பமும், கூலிச் சண்டையும், மலாய் நாட்டில் ரப்பர் விலை இறக்கமும், ஈய விலை இறக்கமும், சிலோன் நாட்டில் கொப்பரை, தேயிலை, ரப்பர் ஆகிய வைகளின் விலைகள் வீழ்ச்சியும், உள்நாட்டில் கோர்ட்டுக்கு போகாமல் பணம் வசூலிக்க முடியாத நிலைமையும் ஆகிய காரியங்களும் கவலைப் படும்படியாகவே செய்து வருகின்றன.

இதுவரை இவர்கள் கட்டி வைத்த கோவிலும், செய்து வைத்த கும்பாபிஷேகமும், பண்ணிவைத்த பூசையும், தேர், ரதம், வாகனம் முதலானவைகளும் இந்தக் கவலைக்கு என்ன பரி காரம் செய்கின்றன என்று கேழ்க்கின்றோம்.

ஜாதிப் பெருமையும் சமயப் பெருமையும் விபூதிப் பெருமையும், பிராமண விசுவாசப் பெருமையும் இக்கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் செய்யக் கூடும் என்றும் கேழ்க்கின்றோம். ஆகவே இவ்வளவையும் பார்த்துக்கொண்டு, அனுபவித்துக் கொண்டு இன்னமும், இம்மாதிரி கொள் கைகள் கொண்ட இந்த சாதியையும் சமயத்தையும் காப்பதற்கு முயற்சிப்பது அறிவுடைய செயலாகுமா என்றும் கேட்கின்றோம்.

எனவே இனியாவது மானமுள்ளவர்கள் இந்த மாதிரி ஜாதி சமயப் பேச்சே பேச மாட்டார்கள் என்றும் அவற்றை ஒழிக்கப் பாடுபடுபவர்களுக்கு உதவி செய் வார்களே தவிர, இடையூறு செய்யமாட்டார்கள் என்றுமே கருதுகின்றோம். மற்றும் இது விஷயமாய் அநேக விஷயங்களை நாம் மனதார மறைத்து விட்டோம்.

இப்படியெல்லாம் இருக்க வீணாய் நிரபராதிகளை “சில்லரை பேர்வழிகள்; போலிகள், டெம்பரவரி ஆள்கள், தாசிகள், வேசிகள்” என்பன போன்ற வார்த்தைகளால் இழித்துக் கூறியது யோக்கியர் செய்யும் வேலையா என்பதை சிவநேசர்களை யோசிக்கும்படியும் மற்றும் அச் சமூகத் தலை வர்களையும் இவர்களுக்கு புத்தி சொல்லும்படியும் வேண்டிக் கொண்டு இதை முடிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 19.10.1930)