நாற்று நட்டு நெல் வளர்த்த சோழ நாடு, சோறுடைத்து என்பது பழைய மொழி. காற்று கெட்டு மாசுடைத்து தமிழ்நாடு என்பது இன்றைய மொழி. பகையது எதுவும் இல்லை தமிழனுக்கு என்பது அன்றைய மொழி. புகையது எங்கும் உள்ளது தமிழருக்கு என்பது இன்றைய மொழி.
மனிதனுக்கு இயற்கையின் கொடையில் மிக அத்தியாவசியமானது காற்று. காற்றின்றி மனிதன் உயிர் வாழவே இயலாது. தண்ணீர் கூட காற்றின் அத்தியாவசியத்திற்குப் பிறகே வருகிறது. அவ்வளவு அத்தியாவசியமானது காற்று.
மனிதன் சுவாசிக்கும் காற்றில் மாசு கலப்பது வேதனையானது. காற்று மாசு என்பது காற்றில் துகள்களையும் தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களை கலப்பதும் ஆகும். காற்று மாசாவதை இரண்டு வகையில் பிரிக்கலாம்.
1. இயற்கை, 2. செயற்கை
மாசு முற்றிலும் தவிர்க்க இயலாதுதான். அதாவது இயற்கையாகவே ஏற்படுகிற சில மாசை ஏற்றுக்கொள்ளலாம். அதென்ன இயற்கையாகவே ஏற்படுகிற மாசு என்றால்? இயற்கை மாசு என்பது கடலில், மண்ணில், மரம், செடி, கொடி போன்றவற்றால் இயற்கையாகவே காற்றில் கலக்கக் கூடியது. இது தவிர்க்க இயலாத ஒன்று.
செயற்கை மாசு என்பது நிலக்கரி, எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை எரிப்பதில் இருந்து வரக்கூடியது. இவற்றை எரிப்பதன் மூலம் வரக்கூடிய மிக முக்கிய மாசுகள் கார்பன் மோனாக்ஸைட்(CO), நைட்ரஜன் டையாக்சைட்(NO2), சல்பர் டையாக்சைட்(SO2) போன்றவை. சாலையில் இயங்கும் வாகனங்கள் பெரும்பாலும் வெளியிடுவது கார்பன் மோனாக்ஸைட்(CO) மற்றும் நைட்ரஜன் டையாக்சைட்(NO2). எரி மின்சார உற்பத்தித் தொழிற்சாலைகள், வேதியியல் தொழிற்சாலைகள், ஆகியவற்றில் இருந்து சல்பர் டையாக்சைட்(SO2) வெளியிடப்படுகிறது.
சொல்லப்போனால் இயற்கை வழங்கும் வளம் ஏராளம், காற்று, நீர், மலை, காடு என்று ஏராளமாக இருக்கிறது. காற்று இயற்கையின் சமத்துவ வளம். காற்று பார்ப்பனர்க்கு என்றோ, சூத்திரருக்கு என்றோ, பஞ்சமருக்கு என்றோ, ஏழைக்கு என்றோ, அல்லது பணக்காரருக்கு என்றோ தனியாக இயங்காது. தண்ணீரையாவது கண்டெயினரில் விற்கும் நிலை உண்டு. நல்ல வாய்பபாக காற்றை இன்னும் கண்டெயினரில் விற்கும் அவல நிலை வரவில்லை.
ஓசோன் என்பது உலகத்தைச் சுற்றி உள்ள ஒரு வாயு மண்டலம். அந்த மண்டலம் இருப்பதால் கதிரவனின் வெப்பம் மிதமாக உலகை வந்து சேர்கிறது. ஓசோன் படலம் ஓட்டையாக அல்லது வலுவிழந்து இருந்தது. இப்போதுதான் பல கட்டமாக காற்றில் மாசு குறைக்கப்பட்டப் பிறகு சிறிது சிறிதாக ஓசோன் படலம் வலுப்பெற்று வருகிறது.
காற்றில் முக்கியமாக இருக்கும் இரண்டு வாயுக்கள் பிராணவாயுவும் O2, கரிஅமில வாயுவும்(CO2). மரங்கள் கரிஅமில வாயுவை(CO2) உண்டு பிராணவாயுவை(O2) தருகின்றன.
மனிதர்கள் பிராண வாயுவை உண்டு கரிஅமில வாயுவைத் தருகின்றனர். மனிதர் வாழ பிராணவாயு அத்தியாவசியம். பிராணவாயு கிடைக்க மரங்கள் அத்தியாவசியம். மரங்கள் வளர தண்ணீரும், கதிரவனும் அத்தியாவசியம். இப்படி இயற்கையானது ஒன்றை ஒன்று ஒட்டி, சார்ந்தே வாழ்கிறது.
மனிதன்தான் பிறந்தவுடன் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகவும், பூணூல் அணியும் உயர் ஜாதி பார்ப்பனர் என்றும், காலில் பிறந்தவர் இழி ஜாதி என்றும், பூணூல் போட உரிமை இல்லாத பார்ப்பானுக்கு அடிமையான சூத்திரர் எனும் பிரிவினைகள் கொண்டு, ஒருவரை ஒருவர் ஒட்டாமலும் ஒருவரை ஒருவர் சாராமலும், அதே வேளையில் ஒருவர் மற்றொருவருக்கு அடிமையாக்கப்பட்டும் வாழ்கின்றனர்.
மரம் செடி கொடி கொடுக்கும் காற்றை உண்ணும் சிறிய மிருகம்தான் மனிதன். இந்த மனித மிருகத்துள், பார்ப்பனர் உருவாக்கிய செயற்கை யான திட்டம்தான் ஜாதிய படி நிலை அமைப்பு. இயற்கை எப்போதும் செயற்கையை விழுங்கும். பிராணவாயு மாசடைந்து பிராணனை வாங்கு கிறதோ இல்லியோ, இந்தப் பார்ப்பனீய மாசு தமிழரை படுத்தி எடுக்கிறது.
இலண்டனில் மாசு அளவு சிறிது அதிகமானாலே அது முக்கிய செய்தி ஆகிவிடுகிறது ஊடகங்களில். சென்ற முறை இந்தியர்கள், ஹிந்துக்கள் தீபாவளி கொண்டாடிய மாதத்திற்குப் பிறகு காற்றில் மாசு பெரும் அளவு அதிகரித்ததை புள்ளிவிவரம் துல்லியமாகத் தெரிவிக்கிறது. இதனை ஊடகங்கள் உடனடியாகப் பதிவு செய்தன.
ஒரு ஹிந்து ஏற்படுத்தும் காற்று மாசு ஆங்கிலேயரையும் விடுவதில்லை, சீக்கியரையும் விடுவதில்லை, தமிழரையும் விடுவதில்லை, அய்ரோப்பியரையும் விடுவதில்லை. ஏன்? மாசு ஏற்படுத்திய இந்திய ஹிந்துவையும் விடுவதில்லை. ஒருவர் செய்கிற தீங்கால் தொடர்பே இல்லாத பிறர் ஏன் துன்பப்பட வேண்டும்? என்பது அடிப்படை நாகரிகம். தீபாவளி கொண்டாடுவது பட்டாசு வெடிப்பது ஒருவர் விருப்பம் என்றால் அதனால் அடுத்தவர் பாதிப்படையக் கூடாது அல்லவா? பட்டாசு வெடிப்பவருக்கே அது தீங்குதானே?
காற்று மாசைத் தடுக்க பல முன்னெடுப் புகளை அக்கறை உள்ள அரசாங்கங்கள் எடுக்கின்றன. மின்சாரத் தயாரிப்பை இயற்கை வழியில், சூரியஒளி மூலமாக, காற்றாலை மூலமாக, கடலலை மூலமாக தயாரிக்கத் தொடங்குகின்றனர். வாகனங்கள் மின்சாரம் கொண்டு இயங்க வைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 2040-இல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய இப்பொழுதே திட்டமிடத் தொடங்கி விட்டனர்.
இலண்டனில் ஆராய்ச்சியாளர் ஒருவர் காற்று மாசால் ஏற்படும் தீங்குகளை அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தி இருக்கிறார். காற்று மாசைத் தடுக்கக் கூடிய அதி நவீன முகமூடிகளை, உடைகளை ஒருவருக்கு அணிவித்து, மாசுள்ள புகை சூழ்ந்த சாலையில் சில உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி சில மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப் பட்டது. பிறகு மூன்று மணி நேரம் அதே சாலையில் உலாவி, அதே நபர் இயல்பான நிலையில் அதாவது காற்று மாசைத் தடுக்கும் அணிகலன் இல்லாமல் மாசுள்ள, புகை சூழ்ந்த சாலையில் மீண்டும் உடற் பயிற்சிகள் செய்கிறார்.
இப்பொழுது மீண்டும் அதே மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. பரிசோதனை என்ன சொல்லிற்றுத் தெரியுமா? இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது, இரத்தத்தின் பிசுபிசுப்பு அதிகரித் துள்ளது. இதயத்தில் சிறுது அழுத்தம் அதிகரித் துள்ளது. அது மட்டுமல்ல காற்று மாசு இருக்கும் போது சிந்திக்கும் திறனில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். அந்தக் காணொளி இங்கே https://www.bbc.co.uk/iplayer/episode/b09m2djj/fighting-for-air
சாலையில் வாகனங்களால் காற்றில் கலக்கும் மாசைக் கண்களால் பார்க்கும்போது கண்களுக்குப் புலப்படாது. காற்றில் உள்ள மாசை தனிவிதமான ஒரு கருவியை வைத்து லண்டன் மாணவர் ஒருவர் பார்க்கும் காணொளியை இங்கே காணலாம் (http://www.bbc.co.uk/newsround/42601711).
சென்னை போன்ற மாநகரங்களுக்கு இப்படிப்பட்ட கருவிகூடத் தேவையில்லை. கண்ணாலேயே பார்க்கக் கூடிய அளவுக்கு மாசு அடர்த்தியை அடைகிறது. இது சொல்வதற்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம். இந்தக் காற்று மாசு ஒரு இனத்தின் சராசரி வயதை நேரடியாகவே பாதிக்கிறது. காற்று மாசு அதிகரிக்க அதிகரிக்க வாழும் வயதும் குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காற்று மாசு நுரையீரல் பாதிப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற வியாதிகளைக் கொண்டு வருவதே இதற்குக் காரணம். அது மட்டுமா காற்று மாசு இதயத்தையும் பாதிக்கச் செய்கிறது. உதவாதினி தாமதம். உடனே ஏந்த வேண்டும் அறிவாயுதம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மாசற்ற காற்றே மானுடத் தேவை!