மரிச்ஜாப்பியின் ஆக்கிரமிப்பு, வனச்       சரணாலய நிலத்தின் மீதும் மாநிலத்தின் மற்றும் உலக வனவாழ்வு நிதியம் ஆதரவளித்த புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மீதும் நிகழ்ந்த சட்டத்திற்கு புறம்பான ஊடுருவலாகும். தீண்டத்தகாத அகதிகள் மரங்களை வெட்டுவதை நிறுத்தாவிட்டால், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறிய ஜோதிபாசு, பின்வருமாறு கூறினார் : “நடந்த வரையில் போதும்; அவர்கள் (தீண்டத்தகாத அகதிகள்) வெகு தூரம் சென்று விட்டனர்.'' உலக வனவாழ்வு நிதியமும் பிற சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனவாழ்வு பாதுகாப்பு குழுக்களும் மரிச்ஜாப்பி அகதிகள் விஷயத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது, சந்தர்ப்பவாதமானது. ஏனென்றால், வெளிநாட்டு தலையீட்டின் மூலம் மரிச்ஜாப்பி குறித்து சர்ச்சைகள் உருவாகியிருக்கும். சட்டத்திற்குப் புறம்பான வகையில் மனிதர்களோ, பொருட்களோ உள்ளேயோ வெளியேயோ செல்ல முடியாத சட்டத்திற்குப் புறம்பான முற்றுகைக்கு மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் உட்படுத்தப்பட்டதின் கொடூரமும், ஆளும் சி.பி.எம். கட்சியின் தற்புகழ்ச்சியான ஸ்டாலினிசமும் (சி.பி.எம். கட்சியின் 1989 ஆம் ஆண்டு மாநாட்டில், அப்போதைய சோவியத் யூனியன் குடியரசுத் தலைவர் கோர்பசேவின் படத்தை வைக்காமல், ஸ்டாலினின் படமே வைக்கப்பட்டது). வெளிப்படையாக எந்த ஆதரவையும் பெற்றுத் தரவில்லை.

அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளோ, மற்ற அரசு சாரா அமைப்புகளோ – தீண்டத்தகாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்ற, அரசு மீது அழுத்தம் கொடுத்ததாக எந்தப் பதிவும் இல்லை. சுற்றுப்புறச் சூழல் இயக்கம் உள்பட பல்வேறு நலன்களின் சார்பாக அரசு தீண்டத்தகாத அகதிகளை வெளியேற்றியதற்கு எந்த உந்துதலும் தேவைப்படவில்லை. இப்பிரச்சினையில் நேரடியாகப் பங்களிக்காவிட்டாலும், அகதிகளை வெளியேற்றியதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் இயக்கத்திற்கு வெற்றியே கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த வெற்றியைப் பெற நிகழ்ந்த தீண்டத்தகாத மக்களின் படுகொலையை, சுற்றுப்புறச் சூழல் இயக்கத்தினர் பயன்படுத்தவில்லை.

சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனவாழ்வு பாதுகாப்புத் திட்டங்களால் தொல்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது, பரவலாகத் தெரிந்த ஒரு செய்தியாக இருப்பினும் – இத்தொல்குடி மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 6 லட்சமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் நிறுவனங்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பது, எதார்த்தமற்றதாகக் கருதப்பட்டது. தீண்டத்தகாத அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க மேற்கு வங்க அரசு மத்திய அரசை நிதி கேட்டது. ஆனால், மத்திய அரசு நிதி தர மறுத்தது. மத்திய அரசு நிதி அளித்திருந்தால், மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். வெறும் வற்புறுத்தல் மட்டுமே தீண்டத்தகாத அகதிகளை வெளியேற்றிவிடாதபோது, மாநிலத்தின் வெற்று நிலங்கள் அதை செய்திருக்க முடியும். ஆனால், அத்தகைய நுட்பமான தீர்வுகள் கவனமாக கருத்தில் கொள்ளப்படவே இல்லை. ஏனென்றால், இவ்வாறு வெற்று நிலங்களில் தீண்டத்தகாத அகதிகளை குடியமர்த்துவது, அதிகார வர்க்கத்தின் மீது பெரிய பளுவை சுமத்தியிருக்கும்.

பிரிட்டன், பெல்ஜியம், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பள்ளிக் குழந்தைகள் உலக வனவாழ்வு நிதியத்தின் புலிகளைக் காப்பதற்கான திட்டத்திற்கு நிதி திரட்டுகிறார்கள் என்பது, இந்தியாவின் கவனத்தை ஈர்த்த செய்தியாக இருந்தது. காடுகளின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர், புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பெறப்படுவதை நியாயப்படுத்தி பேசும்பொழுது, அதன் நிதிப் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டும் ஆனால், அதே நேரத்தில் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

இதுவரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட – உலக வனவாழ்வு நிதியத்தின் பணம் வெறும் 35 லட்சம் ரூபாய்தான். இது, புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மதிப்பீட்டில் 5 சதவிகிதமாகும். இக்குறைந்த பங்களிப்பான 35 லட்சம்கூட ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில், ஓர் "உலகப் பாரம்பரியத்தை' பாதுகாப்பதில் உலக சமூகத்தினருக்கு பங்களிக்கும் ஓருணர்வு வரவேண்டும் என்பதால்தான். எனினும், காடுகளின் தலைமைப் பாதுகாவலர், மிகப்பெரிய தியாகங்கள் காடுகளில் வாழ்பவர்களால்தான் செய்யப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார்.

“ஆகவே, அய்ரோப்பிய குழந்தைகள் இன்னொரு கண்டத்தில் புலிகளைப் பாதுகாக்க நிதி திரட்டுவது, போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் அதே அளவுக்கு போற்றுதலுக்குரியது, நூற்றாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்து வந்த கிராமங்களையும், தங்கள் வாழ்வாதாரங்களையும் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் அமைதியான, பேசப்படாத தியாகமாகும்'' என்கிறார் ஷாகி என்ற ஆய்வாளர்.

Marichjhapi_9

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரான டாக்டர் சரண்சிங், மனிதர்களின் நலனைவிட புலிகளின் நலனை பெரிதாகக் கருதியதற்காக விமர்சிக்கப்பட்டார். இதேபோன்று தொல்குடி மக்களின் இடம் பெயர்தலை ஆதரித்த மற்றவர்களும் விமர்சிக்கப்பட்டனர். தன்னுடன் வந்த நண்பர்களைத் தாக்கிய புலியை ஈட்டியால் கொன்ற கிராமவாசியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது அரசு. இது, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை ஒப்பிடும்போது, மனித உயிர் குறைத்து மதிப்பிடப்படுவது பற்றிய கேள்விகளை எழுப்பு கிறது. ஏழை மூன்றாம் உலக குழந்தைகளை உணவாக உண்ணும் விலங்குகளைப் பாதுகாக்க, அய்ரோப்பிய குழந்தைகள் நிதி திரட்டுகிறார்கள் என்பது, மிருக உரிமைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்கிறது!

உலக வனவாழ்வு நிதியத்தின் வெளியீடுகள், வனவாழ்வுக்கும் வனநிலங்களுக்கும் நேரடியான ஆபத்தாக இருப்பதாக ஏழை மக்கள் மீது பழிசொல்லத் தொடங்கின. உலக வனவாழ்வு நிதியத்தின் நிறுவனர்கள் முதலில் கண்டாமிருகத்தை தங்கள் சின்னமாகத் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் மக்கள், உலக வனவாழ்வு நிதியத்தை "அழகான விலங்குகளை காப்பாற்றும்' நிறுவனமாகக் கருதுவதை உலக வனவாழ்வு நிதியத்தின் நிறுவனர்கள் விரும்பவில்லை. ஆனால், இக்கொள்கை சுற்றுச்சூழல் – விதிப்படியும் நெறிப்படியும் சரியாக இருந்தாலும், அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இல்லை என்பதை விரைவில் தெரிந்து கொண்டனர். ஆகவே, பாண்டா (கரடி), வங்காளப் புலி, கொரில்லா, யானை போன்ற பிற மிருகங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கவும், செயல்பாட்டைக் கோரவும், நிறுவனத்தை ஆதரிக்கவும் தேவைப்பட்டன.

ஆகவே, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக இத்தகைய நிறுவன ரீதியான தேவைகள், ஏழை மக்கள் கொடுத்த மனித விலையைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது புறந்தள்ளுவது என்பதைத் தவிர்க்க முடியாததாக்கி விட்டது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு, National Geographic Explorer தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இதில் இவ்விஷயம் குறித்து கிராமவாசிகளைப் பேச அனுமதிக்கவில்லை. மாறாக, ஒரு வர்ணனையாளர் மனிதனைத் தின்னும் புலி பற்றி பின்வருமாறு கூறுகிறார் : “புலி என்றால் சாவு என்று மட்டும் அர்த்தம் இல்லை. புலி என்றால் வாழ்வு. ஏனென்றால், புலிகள் மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உணவு தரும் காடுகளைப் பாதுகாக்கின்றன. உலகம் முழுமையானதாக இருப்பதற்கு புலி தேவையான ஒன்றாக இருக்கிறது என்பதையும், புலிக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒரு விலையையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.''

உண்மை என்னவெனில், புலிகளே சுத்தமாக இல்லை என்றால், கிராமவாசிகள் நலமாக இருப்பார்கள். ஏனென்றால், கிராமவாசிகள் புலிகளின்றி காடுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். வாழ்வாதாரத்திற்காக ஆபத்தைப் புறந்தள்ளி, வனத்திற்குள் செல்லும் பாதுகாப்பற்ற ஏழை மக்களுக்கு எதிராகத்தான் வனங்களை புலிகள் பாதுகாக்கின்றன. வேட்டைக்காரர்கள், காடுகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு எதிராக புலிகளால் செயல்பட இயலாது. புலிகளை வைத்துக் கொள்வதால், ஏழை மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஏனென்றால், அவர்கள்தான் தங்கள் வாழ்வை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுற்றுலா துறையினரும், அரசியல்வாதிகளுமே பயன்களைப் பெறுகிறார்கள். இதை National Geographic நிறுவனம் தொலைக்காட்சியில் சொல்லாது. எனவே, வனங்களில் வாழும் ஏழை மக்களுக்கும் புலிகளுக்கும் ஒருவர் மீது ஒருவர் சார்ந்த உறவு இருக்கிறது என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இழக்கப்பட்ட மனித உயிர்கள் – புலிகள் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட வேண்டிய தேவையான, ஏற்றுக் கொள்ளப்பட்ட விலையாக சித்தரிக்கப்படுகிறது.

ஏழை மக்கள் விலையைக் கொடுக்க, பணக்காரர்கள் பயனடைகிறார்கள். ஆனால், மேற்கத்திய பார்வையாளர்களுக்கு இதுபற்றி கவலையில்லை. புலிகளைக் காப்பாற்றும் வெற்றிகரமான சூழல் எவ்வளவு பயனை தரலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்திக்க விரும்புகின்றனர்.

மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் படுகொலை இந்தியப் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் இச்செய்தி வெளியிடப்படவில்லை. இது குறித்த ஒரே கல்வி ரீதியான ஆய்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிலஞ்சனா சாட்டர்ஜி என்பவர், முனைவர் பட்டத்திற்காக அளித்த வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரையாகும். உலக வனவாழ்வு நிதியம், மரிச்ஜாப்பி தீண் டத்தகாத அகதிகள் வெளியேற்றத்தில் தொடர்புபடுத்தப்படாமல் தப்பித்துக் கொண்டது. ஆனால், அதன் கொள்கைகளில் இருந்த முரண், பின்னர் இந்நிதியம் ஜிம்பாப்வே மற்றும் கென்ய அரசு அதிகாரிகள் வேட்டைக்காரர்களுக்கு எதிராக சுட்டுக் கொல்லும் கொள்கையை செயல்படுத்த – தாக்குதல் ஆயுதங்களையும், எலிகாப்டர், துப்பாக்கி ஊர்திகளையும் வாங்குவதற்கு உதவியபோதுதான் சர்வதேச கவனத்திற்குத் தெரிய வந்தது!

வடக்கத்திய நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை நிலைகள், மூன்றாம் உலக நாடுகளுக்கான திட்டங்களிலிருந்து எவ்வளவு வேறுபடுகின்றன என்பதை இப்பிரச்சனை தெளிவுபடுத்துகிறது. மீண்டும் தொழில்நுட்ப சிந்தனைகள், அறச்சிந்தனைகளைப் புறந்தள்ள அனுமதிக்கும்போது; மிக சர்ச்சைக்குரிய கொள்கைகள் உருவாகின்றன. உலக வனவாழ்வு நிதியத்தின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப் பட்ட பிறகு, பிரிட்டன் கண்டனக் குரலை எழுப்பியது.

இந்த அனுபவத்தால், சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் மாறியதாகத் தெரியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய வனச் சரணாலயத்தை உருவாக்குவதற்கு வழி செய்வதற்காகவும், கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காகவும் பர்மிய ராணுவம் – கேரன் பகுதியில் முழு கிராமங்களை அழித்து படுகொலை செய்தும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டும், மக்களை அடிமைப்படுத்தியும் வருகின்றன. ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் கொல்லப்பட்டிருப்பினும் அது, சுற்றுப்புறச் சூழல் நிறுவனங்கள் பர்மிய ராணுவ சர்வாதிகார அரசோடு இணைந்து செயல்படுவதைத் தடுக்கவில்லை. பர்மிய அரசோடு இணைந்து செயல்படுவதை நியாயப்படுத்தி, நியூயார்க்கில் அமைந்துள்ள வனவாழ்வு பாதுகாப்புக் கழகத்தின் அறிவியல் இயக்குநர் பின்வருமாறு கூறுகிறார் : “கட்டாய இடப் பெயர்தலையும் துன்புறுத்தலையும், கொலைகளையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. ஆனால், அரசின் செயல்பாடுகளை எங்களால் தடுக்க முடியாது.''

பர்மாவில் நிலவும் சூழல் பற்றி "ஸ்மித்கோனியன்' அமைப்பின் பிரதிநிதி பின்வருமாறு கூறுகிறார் : “நாங்கள் அங்கே முக்கியமான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புப் பணியை செய்ய இருக்கிறோம். நாங்கள் ஓர் அரசோடு கருத்து வேறுபாடு கொள்ளலாம். ஆனால் ஓர் அரசுக்கு எதிராக செயல்படுவது எங்கள் வேலை அல்ல.'' உலக வனவாழ்வு நிதியத்தின் இயக்குநர் கூறு கிறார் : “சில நேரம் நாங்கள் மோசமான அரசுகளோடு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ இத்தகைய மோசமான அரசுகளை ஆதரிப்பது, சுற்றுப்புறச் சூழல் பயன்பாட்டுக்கு கொடுக் கப்படும் விலையாக எடை போட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.''

வெளிநாட்டில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலமோ, அந்நியச் செலாவணிக்கு ஈடாக பொருட்கள் மற்றும் சேலைகளை வழங்குவதன் மூலமோ இந்நிதியங்கள் ஓர் அரசை ஆதரிக்கின்றன. ஆகவே, அயல்நாட்டு பொருளுதவிகளை வழங்குவோரின் திட்டங்கள், ஏழை மக்களின் நலன்களை ஒடுக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வனச்சரணாலயங்களை உருவாக்க – படுகொலை களையும், கொத்தடிமைத்தனத்தையும் செயல்படுத்தும் ராணுவ சர்வாதிகார அரசுகளோடு இணைந்து பணியாற்ற, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக் குழுக்கள் தற்பொழுது உடன்படும்போது, ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசை நோக்கிய இச்சுற்றுப்புறச் சூழல் குழுக்களின் கண்ணோட்டம் வித்தியாசமானதாக இருக்காது என்று கொள்ளலாம். மரிச்ஜாப்பியில் சுற்றுப்புறச் சூழல் குழுக்கள், பன்னாட்டு ஊடகங்களில் செய்தி வராமல் தவிர்த்து விட்டன. ஒரு வங்காள நாளேடு பின்வருமாறு எழுதியது : “சுந்தர்பான் பகுதியிலிருக்கும் மரங்களின் வாழ்வுக்கு நிச்சயம் மதிப்பிருக்கிறது. ஆனால், உறுதியாக புகலிடம் தேடி வந்த இம்மக்களின் வாழ்வுக்கு மதிப்பில்லாமல் இல்லை. குடியேறிய தீண்டத்தகாத மக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பாளராகத் தன்னை சித்தரித்துக் கொள்ளும் அரசின் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.

சுந்தர்பான் பகுதியை வனச் சரணாலயமாகவும் சுற்றுலா தளமாகவும் வளர்த்தெடுக்கும் எந்த முயற்சியும் – அதிகார வர்க்க ஊழலுக்கும் திறனின்மைக்கும் வழிவகுக்கும். உலக வங்கி நிதியை "வல்லுநர் படைகள்' சுரண்டி மலையளவு காகித அறிக்கைகளை தருவதைத் தவிர, இதனால் எந்த பலனும் உண்டாகப் போவதில்லை. மரிச்ஜாப்பியில் வனத்துறையால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்புகளை தீண்டத்தகாத அகதிகள் அழிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்குப் பதிலாக, வனத்துறை அரசாங்க பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவது சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு நேர்மாறாக சில மாதங்களில் தீண்டத்தகாத அகதிகள், அவர்களுடைய சொந்த முயற்சியால் 12 குடியிருப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் தேங்குவதைத் தடுக்க கழிவு நீர் குழாய்களையும் சாலைகளையும் அமைத்தனர். மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவ மய்யம், உலைக் களங்கள், மட்களம், சிகரெட் தொழிற்சாலைகள், அடுமனை, 7 மீன்வள வளாகங்கள், படகு செய்யும் தளங்கள், 170 படகுகள், 300 கடைகளோடு கூடிய 4 சந்தைகள், கடலலைகளை கட்டுப்படுத்த ஓர் அணைத் திட்டத்தின் தொடக்க வேலைகள் ஆகியவற்றையும் அமைத்தனர். இது, வளர்ச்சி நோக்கியவர்களுக்கு பிடித்திருந்தாலும், திறனின்மையாலும் ஊழலாலும் அரசின் செயல்பாடு பழுதுபட்டிருந்தாலும், அரசின் நிலை சுற்றுப்புறச் சூழல் செயல் திட்டங்களுக்கு நெருக்கமானதொன் றாக இருந்தது. இவ்வாறு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப் புக்கும் மக்கள் உரிமைகளுக்கும் உள்ள மோதல், மனித உரிமைகளுக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கும் இடையே உள்ள சமரசங்களின் மய்யத்திற்கு இட்டுச் செல்கிறது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இது, மக்களின் இடம்பெயர்தல் மற்றும் நில வுடைமையை இழக்கச் செய்வதன் மூலம் – வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் அழிக்கிறது.

மரிச்ஜாப்பி பிரச்சினையில் மிக ஏழ்மையான மக்கள் தங்கள் இன்னுயிரை விலையாகக் கொடுத்தனர். ஆனால், பலன்களோ மிருகங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் சென்றது. சுற்றுலாவுக்கு தூய்மையான சூழல் உள்ள இடங்கள் தேவைப்படுவதால், ஏழை மக்கள் அவர்கள் உயிர் வாழப் பயன்படுத்தும் நிலங்களை – பெரிய நிறுவனங்களும், அரசும் சுற்றுலா தளங்களுக்கு ஒதுக்குகின்றன. பொருளாதாரப் பலன்களை உருவாக்கினாலும், அவை இடம்பெயர்ந்த மக்களால் மிக அபூர்வமாகவே பெறப்படுகிறது. மேலும், மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளை இந்தப் பொருளாதாரப் பலன்கள் நிச்சயமாக சென்றடையவில்லை.

இப்பொருளாதாரப் பலன்கள் கூட விவாதத்திற்கு உரியவை; ஏன் என்றால் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் விட்டுச் சென்ற இடங்களை, பின்னர் ஆளுங்கட்சியான சி.பி.எம். கட்சியை பின்பற்றுபவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் இதைவிட கூடுதலான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உண்டாக்கும் எனக் கருதப்பட்ட அகதிகளின் குடியிருப்பு தடுக்கப்பட்டாலும், சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு அடையவில்லை.

மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் இனப்படுகொலை குறித்து சுற்றுப்புறச் சூழல்வாதிகள் எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது மட்டுமின்றி, அக்குற்றத்தில் அவர்கள் தொடர்புபடுத்தப்படவுமில்லை. இந்நிலையில், சுற்றுப்புறச் சூழல்வாதிகள் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் இனப்படுகொலையை எதிர்க்கவோ; இப்பிரச்சனையில் தீண்டத்தகாத மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பவோ இல்லை. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக தீண்டத்தகாத மக்களைப் படுகொலை செய்த மேற்கு வங்க அரசு மட்டும் இதற்காக பழி சுமத்தப்பட்டது.

தீண்டத்தகாத அகதிகளை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி வன்முறையைப் பயன்படுத்தாததால், இடதுசாரி முன்னணி அரசும் அவ்வாறே நிலைப்பாடு எடுக்கும் என்று தீண்டத்தகாத அகதிகள் தவறாக நினைத்திருக்கலாம். மாற்று குடியிருப்பு ஏற்பாடுகளை செய்யாத நிலையில், வன்முறை மட்டுமே அகதிகளை வெளியேற்றுவதில் வெற்றியடைந் திருக்கும். சாவை சந்திக்கத் தயாராக இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை, அவர்கள் நிராயுதபாணியாக இருப்பினும் கட்டாயமாக வெளியேற்றுவது கடினமானதாகும். ஒரு காலத்தில் வீரமிக்கதாகவும், முன்னோடியான தாகவும் கருதப்பட்ட அத்தகைய மன உறுதி, இப்போது அரசுக்கு எதிரான, சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான தேச விரோத செயலாக சித்தரிக்கப்பட்டது.

வளங்கள் குறையக் குறைய, சுற்றுப்புற சூழல்வாதிகளோடு மோதலை உருவாக்கும் ஏழை மக்களின் போராட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுப்புறச் சூழல்வாதிகள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பின் விலையைப் பரவலாக்கி, ஏழை மக்கள் மட்டும் அந்த விலையை கொடுக்கும் நிலையை மாற்றாமல் இருந்தால், இந்த விளிம்புநிலை மக்களின் மீது அந்நிய கொள்கைகளை திணிப்பதற்கு எதிர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். சுற்றுப்புறச் சூழல் இயக்கம் மூன்றாம் உலக அதிகார வர்க்கம் மீது தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இயற்கை வளங்களைச் சார்ந்திருக்கும் மிக ஏழ்மை யான மக்களுக்கு எதிரான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. வாழ்வாதாரங்களுக்கான மாற்று வழிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டால் ஒழிய, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது மனித துயர நிகழ்வுகளையே உண்டாக்கும்.

மரிச்ஜாப்பியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த, அரசுக்கு சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் நேரடி அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் அரசு அதை செய்யாமல் இருந்திருந்தால், சுற்றுலாத் துறையாலும் சுற்றுப்புறச் சூழல் வாதத்தினாலும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந் திருக்கும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் வணிக நோக்கத்தை உருவாக்குவதன் மூலம் மரிச்ஜாப்பி போன்ற நிலப் பகுதி களின் மீது புதிய மதிப்பீட்டை உண்டாக்கும் வகையில், செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு கொள்கைகளை மாற்றும் குழுக்களை சுற்றுப்புறச் சூழலும் சுற்றுலாத் துறையும் உண்டாக்குகிறது. இல்லையென்றால், இந்நிலங்கள் மக்கள் குடியிருப்பிற்கு ஏற்ற மற்றும் மரபு சார்ந்த வளர்ச்சிக்கு ஏற்ற வெற்றிடங்களாகவே கருதப்படும்.

மேற்கு வங்க அரசு மரிச்ஜாப்பி நிலப்பகுதியை சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மதிப்பீடு செய்த பிறகு, அகதிகள் குடியேற்றத்தை விட அதை கவர்ச்சிகரமானதாகக் கருதியது. மோசமான கட்டமைப்பு வசதிகளே சுற்றுலா துறையை சாத்தியமற்றதாக ஆக்கியதென அரசு புரிந்து கொள்ளத் தவறியது. சுற்றுலா துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் போனாலும்கூட எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு கருத்தாக, அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கலாம். மரிச்ஜாப்பி தீண்டத்தகாத இன மக்களின் இனப்படுகொலை அம்பலப்படுத்தப்படாத வரை, சுற்றுப்புறச் சூழலிய லின் சந்தேகமற்ற வெற்றியாக அதை கருதிக் கொண்டிருக்கலாம்.

தொல் குடிமக்களை இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களாகவும், தொல்குடி மக்களின் வாழ்வின் மீது பெரிய முதலாளித்துவ நிறுவனங்களும் அரசும் செலுத்தும் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவும் சுற்றுப் புறச்சுழல்வாதிகளின் வெளியீடுகள் சித்தரிக்கின்றன. பெரிய திட்டங்களுக்கெதிரான சுற்றுப்புறச் சூழல்வாதிகளின் சாத்தியமான நண்பர்களாக ஏழைமக்களை சித்தரிப்பதற்கு இந்த கணிப்பு உதவுகிறது. தொல்குடிமக்களின் சுற்றுப்புறச் சூழல் உணர்வு, அவர்கள் ஏழ்மையால் தேவையான ஒன்றாக உண்டாக்கப்பட்ட ஒரு நிர்பந்தமாகும்.

சுற்றுப்புறச் சூழல்வாதிகள் தங்களை சித்தரிக்கும் விதத்தை விரும்பாத ஏழை மக்கள், அவர்களின் வெளியீடுகளில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் சுற்றுப்புறச் சூழலோடு நேசம் பாராட்டாதவர்களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குழுக்களுக்கு பிரச்சார வாய்ப்பைத் தரவில்லை.

மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் குடியேற்றப் பிரச்சனையில் அரசு சுற்றுப்புறச் சூழல் கொள்கையை கடைப்பிடித்ததால், நர்மதா அணைக்கு எதிரான இயக்கம் போன்ற எதிர்ப்பை சந்திக்கவில்லை. நர்மதா அணைக்கு எதிரான இயக்கம் முக்கியமான சுற்றுப்புறச் சூழல் கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்பட்டதால், சர்வதேச சுற்றுப்புறச் சூழல் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.

உண்மையில், நர்மதா அணையால் இடம்பெயரவிருக்கும் பழங்குடி மக்கள் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளைப் போலவே சுற்றுப்புறச் சூழலை பாதித்தனர். ஆனால், நர்மதா அணைக்கு எதிராக பழங்குடியினரை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைத்த வெளியாட்கள், அவர்களை சுற்றுப்புறச் சூழல் உணர்வுமிக்கவர்களாக வெளிஉலகத்திற்கு தவறாகக் காண்பித்து அதன்மூலம் பழங்குடியினரை – பெரிய திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நண்பர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் சித்தரிக்க முடிந்தது.

பழங்குடியினர் சர்வதேச சுற்றப்புறச் சூழல் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் நர்மதா அணைத் திட்டத்திற்கான உலக வங்கி நிதியை நிறுத்த முடிந்தது. அதுமட்டுமின்றி, உலக வங்கி இந்திய அரசின் மீது செல்வாக்கை செலுத்தி, பழங்குடி மக்களுக்கு நர்மதா அணை விவகாரத்தில் போதுமான இழப்பீட்டைப் பெற்றுத் தர முடிந்தது. மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளோ நர்மதா அணையில் சுற்றுப்புறச் சூழல் குழுக்கள் காட்டிய எதிர்ப்பை விட அதிகமான எதிர்ப்பை தெரிவித்தும்கூட, எவருமே அறிந்திராத வகையில் மரணித்தனர்.

ஏனென்றால் மரிச்ஜாப்பி அகதிகள், இந்திய சமூகத்திலும் மேற்கத்திய நாடுகளிலும் இருந்த அந்நியக் கண்ணோட்டங்கள் மற்றும் நலன்களோடு ஒத்துப் போகவில்லை. மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளின் வெற்றிகரமான வளர்ச்சிப் பணி செயல்பாடுகள், பெரும்பான்மை சமூகம் சுற்றுப் புறச் சூழல் சிதைவினால் உண்டாக்கிய கறையிலிருந்து மீண்டுவரப் போதுமானதாக இல்லை. மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள், மரபு சார்ந்த வளர்ச்சிப் பாதையை பின்பற்றினர். அது, எல்லைப் பகுதிகளில் நவீனமானதாகக் கருதப்படவில்லை.

காடுகளைச் சுற்றி ஓர் எல்லைக் கோட்டை அரசு வரைந்துவிட்டு, எந்த காடும் நிலமும் இனி விவசாய நிலமாக மாற்றப் படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்த சூழ்நிலைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதிக்க தீர்மானங்களுக்கு ஏற்புடைய வகையில் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள், அவர்கள் பிரச்சனையை எவ்வாறு வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதைப் பார்ப்பது கடினமானது.

ஆங்கிலத்தில் - ராஸ் மாலிக்
தமிழில் - இனியன் இளங்கோ

Pin It