crenida dunbarkபதினாறு அகவையில் சூழலியல் போராளியாக உலகப் புகழ்பெற்றுள்ள கிரெடா துன்பெர்க் கழிந்து போன 2019ஆம் ஆண்டு குறித்துக் கூறியிருக்கும் ஐந்தே சொல் செய்தி: “Our house is on fire.” ஆம், நம் வீட்டில் தீப்பிடித்து விட்டது! என்கிறார் கிரெடா:

”பெரியவர்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டாம். அவர்களும் நம்பிக்கை கொள்ள வேண்டாம். என்னைப் போலவே நீங்களும் அச்சப்படுங்கள்.”

கிரெடா அச்சங்கொள்வதும் அச்சங்கொள்ளச் சொல்வதும் மத நம்பிக்கையாலோ மூட நம்பிக்கையாலோ அல்ல. அறிவியலை நம்புங்கள், அறிவியலரை நம்புங்கள்! நாம் பேரழிவு நோக்கி விரைந்து சென்று கொண்டிருப்பதாக அச்சங்கொள்வதற்கு அறிவியல்தான் அடிப்படை என்கிறார் கிரெடா. ஒப்புக்கு நம்பிக்கை ஊட்டாமல் உருப்படியான செயல் செய்யுங்கள் என்று உலகத் தலைவர்களிடம் கடுமையாக எச்சரிக்கிறார். இதற்காகப் போராட நம்மை அழைக்கிறார்.

creda dunbark1கிரெடாவின் அச்சம் நம்மையும் தொற்றிக் கொள்ள வேண்டும். நாமும் உரிய நேரத்தில் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழர்களாகிய நாம் மூன்று முனைகளில் அழிவு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம்.

  • பாழ்செய்யும் உட்பகையாகச் சாதியம் நம் ஓர்மையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அறமற்ற குமுகத்தால் அழிவுக்கெதிரான போராட்டத்தைத் திறமாக நடத்த முடியாது. தன் உரிமைகளைக் காத்துக்கொள்ளவும் மீட்டுக் கொள்ளவும் முடியாது.
  • காசுமீரத்திலும் பஸ்தாரிலும் துணைக் கண்டமெங்கிலும் பேரரசியம் நம் பெயரால், நம் வரிப் பணத்தைச் செலவிட்டு, நம் உயிர்களைப் பலியிட்டு நடத்தும் போர்கள் நம் மீதான அழிவுப் போராக மாறுமுன் விழித்தால்தான் உண்டு. அணுவாய்தப் போரின் பேரழிவும் நம்மை முறைத்து நோக்கிக் கொண்டிருக்கிறது.
  • வளர்ச்சியின் பேரிலான அடுக்கடுக்கான அழிவுத் திட்டங்கள் நம் மண்ணையும் நீரையும் காற்றையும் -- இயற்கையையும் சுற்றுச் சூழலையும் – தாக்கிச் சிதைக்கின்றன. உலகளாவிய காலநிலை மாற்றம், புவி வெப்பமாதலோடு சேர்ந்து நம்மைப் பேரழிவுப் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

”விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்பதுதான் இன்றைய மெய்ந்நிலை.

விழிமின்! எழுமின்! அறப் போர் தொடுமின்!

இதை நாம் செய்யத் தவறினால், உரிய நேரத்தில் உரிய முறையில் செய்யத் தவறினால், நான் கேட்க விரும்பும் கேள்வி:

நாம் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோமா?

- பசியன்

Pin It