பருவமழை காலத்தில் சுற்றுலா செல்ல கேரளா மற்றும் தமிழ்நாடு மலை பிரதேசங்களை கணக்கில் எடுக்கும் போது வால்பாறை, மூணார், தேக்கடி என நீண்டு கொண்டே சென்றது. இதில் அனைத்து  இடங்களும் ஓரிருமுறை சென்றதால் புதிதாக இடங்களை தேர்வு செய்யும் பொழுது, நண்பர்களின் மூலம் நமக்கு கிடைத்த இடம் பரம்பிக்குளம். பிறகு அங்கு செல்வதற்கும் அதன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதற்கும் இணையதளங்களை பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இருமுறை வால்பாறை சென்றிருந்தாலும் எப்படி பரம்பிக்குளம் நம் கண்ணில் தென்படாமல்  தப்பித்தது என்ற யோசனையோடு ஆயத்த பணிகளை செய்து இறுதியாக விடுமுறையில் சென்னையிலிருந்து பொள்ளாச்சி வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து பரம்பிக்குளம் பயணம் இனிதே ஆரம்பித்தது மகிழ்வுந்தில். 

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு   செல்லும் சாலையானது  வெண்ணிறக் கோடுகளால் சரி சமமாக பிரிக்கப்பட்டு, சாலையின் இருபுறங்களிலும் வெண்மை, கருமை மற்றும் வெண்மை நிற பட்டையோடு வானம் தெரியாமல் வளைந்து , தென்மேற்குப்  பருவக்காற்று மழையில் குளித்த குதூகலத்தில், பசுமையாய் நின்று, நம்மை இனிதே வரவேற்கிறது புளியமரங்கள்.

தேசிய நெடுஞ்சலைகள் வருவதற்கு முன்பு நமது பயணங்கள் அழகாக இருந்ததற்கு  இந்த சாலைகள் மற்றும் புளியமரங்களின் பங்கு மகத்தானது. அனால் இன்று நான்கு வழிச்சாலையில் மூன்றடி வளர்ந்த அரளிச்செடிகளை பார்த்து, அலுத்துக்கொண்டு பயணம் முடியாதா ? என்று வேகமாக செல்கிறோம்,  நாமும்  நமது இளைய தலைமுறையினரும் .

புளியமரங்களின் வரவேற்பு மட்டுமில்லாமல், அதன்பின்னரே  மணப்பெண் தோழிபோல் தென்னை மரங்களும் நின்று அதற்கான பாணியில் வரவேற்கின்றன, நம்மை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு.

சேத்துமடையில் உள்ள ஆனைமலை சோதனைச்சாவடியோடு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு , மகிழ்வுந்து மற்றும் பேருந்துகளில் மட்டுமே நம்மை ஆனைமலையின்  அழகை ரசிக்க அனுமதிக்கின்றனர்  வனத்துறையினர்.

ரசீது ஏதும் வழங்காமல் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு,  வாகனங்களை விட்டு எங்கும்  இறங்காதீர்கள் என்ற ஒரு சில எச்சரிக்கையோடு அனுமதிக்கின்றனர்  தமிழக வனத்துறை அதிகாரிகள். ரசீது கேட்டும், “அது தேவை இல்லை நீங்கள்  போகலாம்” என்ற அசாதாரண பதிலும் கிடைத்தது..!

ரசீது தரப்படாத சோதனை சாவடிகளில், கணினிமயமாக்கப்பட்ட ரசீது இயந்திரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

சோதனையோடு சோதனைச்சாவடியை கடந்து சென்ற நம்மை மெதுவாகச் செல்லுமாறு  எச்சரிக்கை செய்கிறது குண்டும் குழியுமான குறுகிய சாலைகள்.

மலைகளை ரசித்துக்  கொண்டு செல்லும் வேகத்தில் மட்டுமே நமது வாகனம் செல்கிறது. ஆகையால் நெடுஞ்சாலைப் பயணங்கள் முற்றிலும் மறந்து வனத்தின் அழகை அதன் அமைதி இசையுடன் அனுபவிக்கமுடிகிறது. மலைகளின் கொண்டை ஊசி வளைவுகளில் மேலே செல்லச்  செல்ல ஏதேனும் விலங்குகள் தென்படாதா? என்ற எண்ணம் உருவாகிறது.

டாப்ஸ்லிப் அருகே செல்லும் பொழுது  யானைகள், புள்ளிமான்கள்,  மயில்கள் என ஆங்காங்கே காண முடிகிறது. டாப்ஸ்லிப் சற்று முன்பாக மறுபடியும் சோதனைச்சாவடி என்ற பெயரில் சிறிய தொகை ரசீது இல்லாமல் வசூலிக்கப்பட்டு நம்மை அனுமதிக்கின்றனர். 

parambikulam 1

அதன் பின்னர் பசுமையான புல்வெளிகள் மற்றும் யானை சவாரிகள் நம்மை வியக்க வைக்கிறது. 

மறுபடியும் சிறிது தூரம் வனத்தை ரசித்துக்கொண்டு செல்லும் பொழுது  ஆனைப்பாடி சோதனை சாவடி நம்மை இனிதே வரவேற்கிறது. இங்கிருந்து கேரள வனத்துறை எல்லை ஆரம்பமாகிறது. சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் சரியாக வசூலிக்கப்பட்டு அதற்கான ரசீதை வனத்துறையினர் கைப்பட எழுதி நம்மிடம் தருகின்றனர்.

அதிலிருந்து சிறிது தூரத்தில் நான்காவது சோதனை சாவடியோடு நமது வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இங்கிருந்து நாம் கேரள வனத்துறையினரின் வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர் அதன் இயற்கை அழகை ரசிக்க.

பரம்பிக்குளத்தில் நாம் தங்குமாறு இருந்தால் மட்டுமே நமது வாகனங்கள் ஒரு வனத்துறை பாதுகாப்பாளரோடு அனுமதிக்கின்றனர்.

இங்கு தங்குவதற்கு www. parambikulam.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதன் பின்னர் நம் கண்களுக்கு வனத்தின் இயற்கை  விருந்துகள்தான்.

சாலையின்  இருபுறமும் சுமார் இருபது அடி தூரம் நன்றாக சுத்தம் செய்த நிலப்பரப்பில் புற்கள் மட்டுமே காணமுடிகிறது. ஆதலால்     நம்மை கண்டும் காணாமல் குதூகலத்தோடு துள்ளித்திரியும் மான் கூட்டங்களை ஆங்காங்கே நாம் காண முடிகிறது. புற்களை தொடர்ந்த நிலப்பரப்பில், அடர்ந்த தேக்கு மரக்காடுகள், பரம்பிக்குளம் எங்கும் காட்சியளிக்கிறது. 

பொதுவாக குறிப்பிட்ட இடங்களைத் தவிர, வாகனங்களை விட்டு இறங்க நாம் அனுமதிமதிக்கப்  படுவதில்லை.

parambikulam 2

அவ்வாறு ரசித்துக் கொண்டே செல்லும் பொழுது, பெரும்வாரிப்பள்ளம் அணைக்காக ஒரு சாலை பிரிகிறது. அங்கு ஒரு மரவீடு அணையை ஒட்டி உள்ளது. நாம் அங்கு தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு.

இனி வரும் சாலைகள் தூணக்கடவு அணையின் கரையோரப் பயணங்களே..!

தெளிந்த நீரில் சிறிய மூங்கில் படகுகளில் மலை வாழ் மக்கள் ஆங்காங்கே மீன் பிடிப்பது  நம்மை கவருகிறது. அடர்ந்த காட்டினுள் அணை இருப்பதால், அதன் கரையோரங்களில் யானைகள் அதன் குட்டிகளோடு நீர் பருகும் அழகு  சாலையில் இருந்து ரசிக்கும்படி இருக்கின்றது.

அடுத்து  நாம் காணவிருப்பது தூணக்கடவு அணையின் கரையோர மர வீடு. இதன் நுழைவு வாயில் சாலையில் அருகேயும், வீடு முழுவதும்  நீரின்  மேலே இருக்குமாறும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

parambikulam 3

தூணக்கடவு அணையை கடந்து செல்லும் பொழுது சிறிது தூரத்தில் கன்னிமாரா தேக்கு மரத்திற்கான சாலை பிரிகிறது. அடர்ந்த காட்டினுள் மிகவும் மெதுவாக செல்லக்கூடிய சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு நானூற்றி அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு மரம் பசுமையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

அதன் அடிப்பகுதி ஆறு  நபர்கள் சேர்ந்து கட்டி கொள்ளும் அளவு சுற்றளவு கொண்டது.

அதனை தொடர்ந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் ஒரு சாலை நீர்வழிச்சுரங்கதிற்காக (மலைக்குடைவு) பிரிகிறது. இந்த நீர்வழிச்சுரங்கத்தின் மூலம் பரம்பிக்குள அணையின்  பக்கவாட்டில்  எஞ்சிய  நீரானது தூணக்கடவு அணைக்கு  மலையைக் குடைந்து உருவாக்கிய இரண்டரை கிலோமீட்டர் தூரம்  உள்ள நீர்வழிச்சுரங்கத்தின் மூலமாக அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து பக்கவாட்டில் நிரம்பும் நீரானது பெரும்வாரிப்பள்ளம் அணைக்குச்செல்கிறது.

இறுதியாக நாம் சென்றடையும் இடம் பரம்பிக்குளம்.

இங்கு உள்ள பெரிய வட்டவடிவச்சாலை சந்திப்பும்,  உயரமான தூணின் உச்சியில் நான்முக சிங்கமும்  நம்மை ஏதோ மாநகராட்சி பேருந்து நிலையத்தை அடைந்த உணர்வைத் தருகிறது.

இங்கு இரண்டு சுற்றுலா துறை மர வீடுகள் , மலைவாழ் மக்களின் வீடுகள், கடைகள், சுற்றுலா விடுதிகள்,  மூங்கில் படகு சவாரி, பரம்பிக்குள அணை, வீட்டிக்குன்னு தீவுகள் என எண்ணில் அடங்கா அம்சங்களை கொண்டு  அமைதியான  இடமாக திகழ்கிறது.

மாலைப்பொழுதில் சுற்றுலாத்துறையின் சார்பாக, மலை வாழ் மக்களின் இசை மற்றும் நடன கச்சேரி நடைபெறுகிறது. 

இங்குள்ள  சுற்றுலாத்துறையில்  மலைவாழ்  மக்களின் பங்கு இன்றியமையாதது. நாம் இங்கு தங்கும் பொழுது சுற்றுலாத்துறை சார்பாக இவர்களே உணவு தயாரிக்கின்றனர். உணவின் சுவை இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. மதியம் மற்றும்  இரவு நேரம் அசைவம் உணவும், காலை வேலையில் சைவ உணவுகளும் கிடைக்கப்பெறுகிறது.

இரவு நேரங்களில் மர வீட்டில் தங்கும் பொழுது கிடைக்கப்பெறும் திகில் அனுபவம் என்றும் மறக்க முடியாததாய்  அமைகிறது. மேலும் தேவையான அணைத்து வசதிகளையும் வசதிகளும் அமையப்பெற்று, பாதுகாப்பு அம்சங்களோடு பசுமையோடு பசுமையாய்த்  திகழ்கிறது  இந்த மர வீடு. 

மரவீடு சாலையோரம் இருந்தாலும், இரவு நேரங்களில் பருவமழையின் ஓசை மரவீட்டின் கூரைகளை குடைந்து நமது செவிகளுக்கு பயம் கலந்த பரவசத்தை ஊட்டுகிறது.  மரவீடானது தேக்கு மரங்களின் துணையோடு தரையிலிருந்து பதினைந்து அடி உயரத்திலும் சாலையில்  இருந்து ஐந்தடி உயரத்திலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது.

parambikulam 4

வனத்துறையினர் நாளை காலை, நன்றாக விடிந்தவுடன் நடைபயணம் செல்லலாம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

மறு  நாள் காலை எழுந்து தயாராக, காலை மணி ஏழைக் கடந்தது.

வனத்துறையினர் வந்தவுடன், சற்று மிதமாகத்தூரிய சாரல் மழையுடன் வனத்தின் அழகை ரசிக்க நடந்து கொண்டிருந்தோம். 

parambikulam 5

சிறிது  தூரத்தில் அடர்ந்த வனத்தினுள்  நம்மை எடுத்துச்  செல்கிறது சிறிய ஒற்றையடிப் பாதை.                                                               

“எங்கும் பசுமை எதிலும் பசுமை” என்றார் போல் கண்கள் பசுமையின் அழகை கண்டு குளிர்கிறது. தினந்தினம் கொட்டி தீர்த்த பருவமழையில் விட்டுச்சென்ற மழைத்துளிகளை அள்ளிக்கொண்டு ஆங்காங்கே சிறிய நன்னீர் ஓடைகளாக, இறக்கத்தை நாடி ஓடிச் சென்று தனது படைகளை ஒன்று சேர்த்து இறுதியாக மழை  நீர் அணையை  அடையும் கண்கொள்ளாக் காட்சிகளை உள்ளடைக்கியது இந்த காடுகள்.

அடர்ந்த காட்டில், ஓங்கி உயர்த்த தேக்கு மரங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. காலையில் கண்விழித்த பறவைகள் அதற்க்கான குரலில் இசை பாட களைப்பின்றி நடை பயணம் தொடர்ந்தது. இப்படியே இங்கேயே மலைவாழ் மக்களோடு இருந்துவிடலாம் போல் என்று ஆழ் மனதில் யோசனை உண்டு பண்ணுகிறது இந்த காடுகளும் நடைப்பயணங்களும். 

parambikulam 6

இந்த நடைப்பயணம் செல்ல வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகள் உள்ளது. நமது விருப்பத்திற்கேற்றவாறு வனத்துறையினர் நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர். இவ்வாறே இரண்டு மணிநேரங்கள் செல்ல, காலை உணவு முற்றிலும் மறந்தே போயிருந்தன.

அதன் பிறகு காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி என ஐந்து வகையான உணவு வழங்கப்பட்டன.

காலை உணவு உண்ணும் பொழுது ஒரு சிலர் அவசரமாக எழுந்து வாகனங்களை எடுத்துக் கொண்டு அணையை நோக்கி  வேகமாக பயணித்தனர்.  என்ன என்று கேட்கும் போதுதான் தெரிந்தது அணைகளின் கரையோரமாக யானைக்கூட்டங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. நாம் போகும் வரை  யானைகள் இருந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று, கவனம் காலை உணவிலே சென்றது. அதன் பிறகு மூங்கில் படகு சவாரிக்கு அந்த யானைகள் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும் என்ற தகவல் கிடைத்தவுடன் வேகமாகச்  சென்றது எமது கால்கள்.

ஆற்றங்கரை அடைந்ததும் அங்கு இரண்டு மூங்கில் படகு சுற்றுலா பயணிகளோடு கரையை  நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது தூரத்தில் யானைக்கூட்டங்களை  காண முடிந்தது. 

parambikulam 7

எங்களின்  தாமதம் சாதகமாக அமைந்தது. எவ்வாறென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நபர்கள் செல்ல கூடிய மூங்கில் படகு  எங்கள் இருவருக்காக யானை கூட்டங்களை நோக்கி மெதுவாய் நகர்ந்தது. 

படகு, யானைக் கூட்டங்களுக்கு அருகில் செல்லச்செல்ல அதன் பிரமாண்டமும் அதிகரித்தது. என்னால் அதன் கூட்டங்களை நன்றாக  புகைப்படம் எடுக்க முடிந்தது. குட்டி யானைகளின் அசாதாரணமான நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தது. வயதான பெண் யானைகள் , குட்டிகள்  என எண்ணிக்கை பதின்மூன்றைத் தாண்டியது. 

அவ்வாறே அதன் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக  புகைப்படம் எடுக்க வசதியாக மூங்கில் படகு ஓட்டும் வனத்துறையினர் படகை குறிப்பிட்ட அளவு நெருக்கமாக கொண்டு சென்றனர். நமது ஆசைதான் விடுமா என்ன..! 

இன்னும் அருகில் செல்ல வேண்டுகோள் விடுக்கையில், அன்பாக மறுத்து அதனை தொந்தரவு பண்ணாமல் இருப்பது நமக்கு நல்லது என்று படகை திருப்பினர். கூடவே யானைகள் நன்றாகவும் சுலபமாகவும் நீந்தத் தெரிந்திருப்பதால் எந்த நேரமும் அது அணையில் இறங்கி நம்மை அடைய வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்தனர். ஏனெனில் அணையில்  தீவுகள் அதிகமாக  இருப்பதால் யானைகள் ஒவ்வொரு தீவுகளுக்கும் நீந்தியே செல்வது அடிக்கடி நிகழ்வதாக வனத்துறையினர் கூடுதலாக தகவல் கொடுத்தனர்.

parambikulam 8

அவ்வாறே படகு கரையை நோக்கி நகர்ந்தது . நானும் எனது புகைப்பட கருவியும் யானையை எதிர்நோக்கியே இருந்தது.

மேலும், இங்கிருந்து வீட்டிக்குன்னு தீவுகளை நாம் எளிதாக பார்க்க முடிகிறது.

இங்கு செல்ல வேண்டுமானால், அதற்க்காக முன்பதிவு செய்திருக்க வேண்டும். பிறகு அங்கு உணவு தயார் செய்வதற்கும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மதியம் வேளைகளில் ஐந்து நபர்களாக சென்று அங்கு உணவு சமைத்து, மறுநாள் காலை பதினொன்று மணியளவில் இந்த சேவை முடிவடைகிறது.

வீட்டிக்குன்னு தீவுகளின் அழகை கரையிலிருந்து ரசித்துவிட்டு, நாங்கள்  தங்கியிருந்த மரவீட்டை நோக்கி வனத்துறையின் உதவியோடு நடந்து சென்றுகொண்டிருந்தோம்.

பரம்பிக்குளத்திற்கு தினமும் மூன்று முறை கேரள மற்றும் தமிழக அரசின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு செல்ல மனமில்லாமல் மரவீட்டின் அறையை காலி  செய்து கொண்டு பரம்பிக்குளத்திலிருந்து பொள்ளாச்சியை நோக்கி பயணம் தொடங்கியது. வரும் பொழுது பார்த்து மகிழ்ந்த புள்ளிமான் கூட்டங்கள் அனைத்தும் நம்மை மீண்டும் கண்கவரும் வகையில் மேய்ந்து கொண்டிருந்தன.

நம்முடன் வந்த வனத்துறையினர், அடுத்து வரவிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்முகத்தோடு பரம்பிக்குளத்தை சுற்றிக்  காட்டும் முனைப்பில் காத்திருந்தார்.

சேத்துமடையில் உள்ள புளியமரங்களும் நம்மை சிலு சிலுவெனு காற்றோடு வழியனுப்பி மீண்டும் மறுமுறை நம்மை வரவேற்கத் தயாராக இருந்தது..!

பரம்பிக் குளத்தில் ஓரிரவு தங்கிய அனுபவம் கீழ்கண்டவாறு என்னை எழுதத்தூண்டுகிறது. 

பருவமழை நனைத்த காடுகள்,

பரவசமூட்டும் புள்ளிமான் கூட்டங்கள்,

அணைகளை ஒட்டி நீளும் சாலைகள்,

காட்டு யானைகளின் கூட்டம்,

மூங்கில் படகில் தீவுகளின் காட்சி ,

மரவீட்டில் திகிலான இரவு,

அடர்காட்டில் நடை பயணம்,

மலை வாழ் மக்களின் அன்பு,

வனத்துறையின் பராமரிப்பு,

நீரின் தெளிவு, சாலைகளின் வளைவு

என நீண்டு கொண்டே செல்கிறது பரம்பிக்குளத்தின் அழகு.

- ப.சிவலிங்கம்

Pin It