modi 432இந்தியப் பொருளாதாரத்தை 2024-க்குள் ஐந்து லட்சங் கோடி டாலர் மதிப்புள்ளதாக மாற்றுவது தன் குறிக்கோள் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி 2019 சூலையில் அறிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை 'வளர்க்கும்' நோக்கில் மேலும் பன்னிரண்டு அணு மின் உலைகள், நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், புதிய அணைகளைப் பயன்படுத்தும் புனல் மின் நிலையங்கள் ஆகியவற்றை நிறுவப் போவதாக 2018 பிப்ரவரியில் நடுவணரசு அறிவித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை 2022-க்குள் 1,75,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிப்பதும் அரசின் குறிக்கோள்களில் ஒன்று.

1990-களில் தொடங்கி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதில் அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதற்குத் தேவையான பொருளாதார 'வளர்ச்சி'க்கும், சூழல் பாதுகாப்புக்கும் போட்டி இருப்பதைப் போன்ற தவறான கருத்தாக்கம் நீக்கமறப் பரப்பப்பட்டுள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார முறைமையில் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குதல் (அதாவது, 'பொருளாதார வளர்ச்சியைப்' பெருக்குதல்) என்பதில் பின்வரும் கூறுகள் அடங்கும்:

1) பெரும் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளை நிறுவுதல்;
2) இரும்பு, எஃகு, சிமென்ட், வேதிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமளவு நுகர்தல் (பயன்படுத்துதல்);
3) நிலம், நீர், கனிமங்கள், மரம் உள்ளிட்ட கான் விளை பொருள்கள் ஆகியவற்றின் தேவை அளவுமீறி வளர்தல்;
4) விளை நிலங்களையும் காடுகளையும் வேறு நோக்கங்களுக்கு மாற்றித் தருமாறு பெரு நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தந் தருதல்;
5) பெட்ரோலியம், நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆற்றல்களின் தேவை பெருகுதல்;
6) நகர்மயமாதல் வேகம் அதிகரித்தல்;
7) வானூர்தி நிலையங்கள், விடுதிகள், பெரிய தொகுப்புக் கடைகள் (shopping malls), தனியார் ஊர்திகள், விரைவுச் சாலைகள் போன்றவற்றை அதிகரித்தல்.

இவற்றைச் செயல்படுத்தும்போது பசுங்குடில் வளி வெளியீடு, இயற்கை அழிப்பு, இயற்கைச் சூழல் கேடுகள், கழிவுகள் ஆகியவை பெருகும். 2019-இல் அரசு வெளியிட்ட தேசிய வளங்களின் [பயன்பாட்டுச்] செயல்திறன் திட்டக் கொள்கை (National Resource Efficiency Policy) முன்வரைவு பின்வரும் சிக்கல்களைக் குறிப்பிடுகிறது:

1) பல இன்றியமையாத மூலப் பொருள்களுக்கு இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்கும் நிலை;
2) நிலப் பரப்பில் முப்பது விழுக்காடு தரங்குன்றி இருத்தல்;
3) உலகளவில் வேளாண்மைக்கென நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருத்தல்;
4) உலகக் கரியீருயிரகை வெளியீட்டில் 6.9% வெளியிட்டு மூன்றாமிடத்தில் இருத்தல்;
5) மறுசுழற்சியில் மிகக் கீழ் நிலையில் இருத்தல் (வளர்ந்த நாடுகள் 70%, இந்தியா 20-25%);
6) உலகச் சராசரியுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறன் குறைவாக இருத்தல்;
7) சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு 1,580 டன் வளங்களை அகழ்ந்தெடுத்தல் (உலகச் சராசரி 450 டன்கள்).

இயற்கையே நம் வாழ்வாதாரம் என்பது வெளிப்படை. இந்நிலையில், ஒரு சிலருடைய அளவு கடந்த சொத்துப் பெருக்கத்துக்காக இயற்கை வளங்களைப் பெருமளவு பயன்படுத்தி மாசுபடுத்தினால் பெரும்பான்மையினரான ஏழைகளும், 'நடுத்தர' மக்களுமே அதன் தீய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

வறுமை ஒழிப்பு, பொருளாதார 'வளர்ச்சி' ஆகியவற்றுக்கு அதிகத் தொடர்பில்லை; அதேபோல, பொருளாதார 'வளர்ச்சி' அதிகரிக்கும் வேகத்தைவிடச் சூழல் கேடுகள் பெருமளவு அதிகரிக்கின்றன. இந்தியா மட்டுமன்றி, பிற நாடுகளின் பட்டாங்கும் இதை உறுதிப்படுத்துகின்றன.

செல்வ வளம் மிக்க சில கோடி மக்களுடைய அளவுகடந்த நுகர்வு அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வருகிறது. ஆகவே நாம் - குறிப்பாக பணக்காரர்கள் - நம் குறிக்கோள்களையும் நம் மேம்பாட்டுச் செயலுத்திகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது.

வறுமையை ஒழிப்பதைப் பொருத்தவரை, வேளாண்மையில் ஒரு விழுக்காடு வளர்ச்சி என்பது பிற துறைகளில் அதே அளவு வளர்ச்சியைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகப் பயனளிப்பதாக சூழல் மாற்றம் தொடர்பான தமிழ்நாட்டுச் செயல்திட்டம் (Tamil Nadu State Action Plan on Climate Change) தெரிவிக்கிறது.

மூலக் கட்டுரை: Shankar Sharma, "A $5 trillion economy for India: At what cost?", 2020 January 14, https://www.ecologise.in/2020/01/14/a-5-trillion-economy-for-india-at-what-cost/

- பரிதி