இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற மாபெரும் சனநாயக நாடு.
இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி.
அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரப்பட்ட மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி.
ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிருத்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை மறைமுகமாக தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை பார்க்கின்ற போது, இது ஓர் இந்துவ அரசுதான்! என்பதை வெளிப்படையாகவே உறுதிசெய்கிறது.
பகவத்கீதையை தேசிய நூலாக அறிவித்தது, சமஸ்கிருதத்தை உலக மொழி அந்தஸ்த்துக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, சாதி வெறியை தூண்டி நாட்டை அமைதியிழக்க செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க.
தமிழக 'ஜெ' அரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மதவெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது.
மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோதபோக்கையே கடைபிடித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே! பாதுகாப்பு கொடுக்க முடியாமல் செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது.
இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை! மதுவெறி, மதவெறி, சாதிவெறியை தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, சாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, "தீபாவளியை புறக்கணிப்பது" என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது.
மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் இட்லர் முசோலினி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்பரிவாரங்களின் நடவடிக்கைகளில் சில:
*பகவத்கீதையை தேசியநூலாக அறிவித்தது,
*ஆசிரியர் தினத்தை குருகுல நாளாக அறிவித்தது,
*சமஸ்கிருதத்தை உலக மொழிக்கு இணையாக உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது,
*பொது சிவில் சட்டத்தைக் கொண்டு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி
*கர்வாப்சி என்ற பெயரில் வறுமையில் வாடும் இசுலாமியருக்கு 5.லட்சமும், கிருத்துவருக்கு 2.லட்சமும் கொடுத்து ஆசைகாட்டி கட்டாயத்தின் பெயரில் இந்து மதத்திற்கு மாற்றும் முயற்சிகள்,
இசுலாமிய, கிருத்துவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்.
*பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து தற்போது வினாயகர் ஊர்வலத்தின் போது, மசூதிகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, இசுலாமிய வரலாற்று சின்னங்கள் இருக்குமிடத்தில் இந்து கடவுள்கள் பிறந்ததாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது,
*கடந்த ஆண்டு நவம்பர், திசம்பரில் மட்டும் 38.கிருஸ்த்தவ ஆலயங்கள் மீதும் 30.க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்,
கருத்துரிமைக்கு எதிரான படுகொலைகள்
*பகுத்தறிவு கருத்தாளர்கள் புனேயை சேர்ந்த தபோல்கர், பேராசிரியர் கோவிந் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் துணைவேந்தர் கல்புரகி, ஆகியோரை படுகொலை செய்தது,
*ஆசிரியர் சுசீந்திரகுல்கர்னி முகத்தின் மீது மை வீசி தாக்குதல் நடத்தியது.
பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் மனிதப் படுகொலைகள்
உத்ரபிரதேசம் தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தியை பரப்பி முகமதுஅக்லாக் என்பவரை படுகொலை செய்தது,
*அடிமாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து அதில் வருவோரை படுகொலை செய்வது,
*மாட்டுக்கறி விருந்து கொடுத்ததாக கூறி காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ.ரஷித் என்பவர் முகத்தில் மை வீசி தாக்குதல் நடத்தியது,
இடஒதுக்கீட்டுக்கு எதிரான சதிகள்
*மருத்துவக் கல்விக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வருவதற்கான முயற்சி.
*தமிழகத்தில் தேவேந்திரர் ஒரு சிலரை அழைத்து இடஒதுக்கீடு வேண்டாம் என்று வாக்குமூலம் கொடுக்க வைப்பது,
*இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் சாதி இந்துக்களை தூண்டிவிடுவது.
தலித் மக்கள் மீதான படுகொலைகள்
*அரியானா மாநிலம் சன்பேத் கிராமத்தில் இரண்டு குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து படுகொலை,
*அதே போன்று கோவிந் என்ற சிறுவன் படுகொலை,
*2014.ல் 2249 தலித் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்,
*500.க்கும் மேற்பட்ட சாதியப் படுகொலைகள்
*கௌரவம் என்ற பெயரில் 15.க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள்,
*தருமபுரி, சேஷசமுத்திரம் ஊர் எரிப்பு, தேர் எரிப்பு,
*பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6.பேர் படுகொலை,
தேசத் தலைவர்கள் அவமதிப்பு
இந்திய நாட்டின் தேசபிதா காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேக்கு சிலை எழுப்புவது, சமூகநீதிக்காக போராடிய தலைவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது.
மர்ம மரணமடைந்த அரசு அதிகாரிகள்
தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி, திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா மர்ம மரணங்கள்.
இப்படி தொடரும் எண்ணற்ற சாதிவெறி, மதவெறி, பாலியல் சித்ரவதைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதே! அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்..
- இரா.அதியமான், நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.