பசுக்களைப் புனிதம் என்றும் அவைகள் முனிகள், தேவர்கள், கடவுள்கள் குடியிருக்கும் கோவில், ஆகவே கோமாதா என்றும் தங்கள் முன்னோர்கள் அதாவது ஆரியர்கள் இறைச்சியை உண்டதில்லை என்றும் குறிப்பாகப் பசுவை உண்டதில்லை என்றும் அடுக்கடுக்கான பொய்களை வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் உயிரினங்களைப் பலி தரும் வேள்விகள் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டது என்பது வரலாற்றாய்வு அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது.

இந்திரனுக்குக் காளைகள், அக்னி, வருண, மித்ரா பகவானுக்கு செந்நிற பசு, புள்ளிகளைக் கொண்ட பசு என விதவிதமாக பசுக்கள் பலியிடப்பட்டு விருந்தளிக்கப்பட்டது என்று ரிக் வேதம் விளக்குகிறது. அஸ்வமேதம், ராஜசூயம், வாஜபேயம் போன்ற வேள்விகளில் பசு, எருது, காளை ஆகியவற்றின் இறைச்சிகள் அவசியமானதாக இருந்தன. மாட்டிறைச்சியையும், உணவு தானியங்களையும் பார்ப்பனர்களுக்கு தட்சணையாகத் தரப்பட்ட பசுக்கள் பற்றி அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

beef festival 600பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்து அண்ணல் அம்பேத்கர் எழுதியது “ பார்ப்பனர்கள் மிகப் பெருமளவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்துவந்த ஒரு காலம் இருந்தது. அச்சமயம் பார்ப்பனர் அல்லாதோரும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், நாள்தோறும் அதனைச் சாப்பிடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. .... பார்ப்பனர் விசயம் அப்படியல்ல. அவர் புரோகிதராக இருந்தார். பசு பலியிடப்படாத நாளே இல்லை எனலாம். பார்ப்பனருக்கு  ஒவ்வொரு நாளும் மாட்டிறைச்சி விருந்து நாள்தான். இதன் காரணமாக அந்நாட்களில் பார்ப்பனர்கள் மிக அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடு பவர்களாக இருந்து வந்தனர்.’’ (பக். 153. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தமிழ் தொகுதி 14. பக்கம் 153, தீண்டப்படாதவர்கள் யார்?)

இப்படி செந்நிறம், புள்ளிவைத்தது, வைக்காதது என வகை வகையான பசுக்களைச் சுவைத்த பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உணவை ஏன் கைவிட்டனர்? அதைப் புனிதமாக்கி  வழிபடுவது ஏன்? என்ற ஆய்வை அண்ணல் அம்பேத்கர் மேற்கொண்டார். சுமார் 400 ஆண்டு காலம் பவுத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையேயான போராட்டத்தில் இதற்கான விடைகள் இருப்பதை அவர் கண்டார்.  பவுத்தமும், சமணமும் இறைச்சி உணவை எதிர்க்கவில்லை. வேள்விகளையும் ஏராளமான விலங்குகளைக் குறிப்பாக பசுக்களை, எருதுகளை பலியிடுவதையும் கொண்ட பார்ப்பனிய கோட்பாடுகளை நிராகரித்தன மக்கள் பவுத்தர்களின் பிரச்சாரத்தையும், கோட்பாடுகளையும் ஆதரித்தனர், பார்ப்பனர் தங்கள் அதிகார நிலையை இழந்தனர்.

பசு இறைச்சியின் முக்கியத்துவம் குறித்தும், பார்ப்பனர்களின் அந்த புரட்டு குறித்தும் தந்தை பெரியார் பேசுகிறார், தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள். இராமாயணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம். பிறகு, அதனை பார்ப்பனர்  விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களைக் கீழ்மக்கள் என்று கூறி விட்டார்கள். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின்றார்கள். ஆகவே மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும். - “விடுதலை” 03.02.1964. மாட்டுக்கறி உண்ணவேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டும் இல்லாமல் தனது பொதுக்கூட்ட மாநாடுகளில் மாட்டிறைச்சி விருந்தும் வைத்து தாழ்த்தப்பட்டவர்களைக் கொண்டு சமைக்க செய்தவர்.

இப்படி பல சீர்திருத்த தலைவர்கள் மாட்டிறைச்சி உணவை வலியுறுத்தினாலும் இறைச்சி சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், நேர்மையற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், சண்டை போடுபவர்கள், வன்முறையாளர்கள்,பாலியல் குற்றம் புரிபவர்கள் என்று முத்திரை குத்தி 6-ம் வகுப்பு புத்தகத்தில் “ஆரோக்யமான வாழ்க்கைக்கு வழி” என்ற தலைப்பில் பாடமாக எழுதி குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்துள்ளது மத்திய கல்வித் திட்ட குழு. 

beef census report 600மனிதருக்கு நலன் தரும் மாட்டுக்கறியை உண்பவர்களை இழிவானவர்களாக நடத்துவதும், இழிவானவர்களாகக் கருதுவதும் இன்றும் நடை முறையில் இருக்கிறது. மாட்டுக்கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்பவர்களை தீட்டாக கருதுவது பார்ப்பனிய மனநிலை. மாட்டிறைச்சி உண்பவர்கள், பறை இசைக்கருவி, இசைக்கலை ஞர்கள், என இவர்கள் மீதான தீண்டாமைகளும் தொடர்கின்றன.

இந்துத்துவ பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும், வைத்திருந்தார்கள் என்றும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்கு தல்களும், அவர்களது திருமண விழாக்களில் புகுந்து சோதனை செய்யும் போக்கும் அங்கங்கே அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. அதே போன்று மாட்டிறைச்சிக்கும் படு திண்டாட்டம், அவர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை கோழி, மீன், ஆடு என ஒட்டுமொத்த இறைச்சிக்கே தடை, இல்லை கடைகளை நகரங்களில் இருந்து நீண்ட தொலைவு செல்ல கூறி வியாபாரிகளை தொல்லைக்குட்படுத்துவது, இல்லை கடைகள் நிறந்தரமாக மூட நிர்பந்திப்பது. இப்படி பசுவை பாதுகாத்துகொன்டே. இவர்கள் செய்யும் அடுத்த புனித பணி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து உலக அளவில் முதலிடம் பிடிப்பது.

இப்படி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மாட்டிறைச்சி சந்தையை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் அதிலும் பார்ப்பனர்கள், மற்றும் மார்வாடிகள் (இவர்கள் பூமிக்கு கீழே விளைவதைக் கூட உண்ணமாட்டார்கள் அந்த அளவு சைவப் பிராணிகள்) தான்.

 ஆனால் தாழ்த்தப்பட்ட, முஸ்லீம் மக்களின் உணவாக உள்ள மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து அதன் மூலம் இந்துத்துவ முதலாளிகளை மேலும் முதலாளிகளாக மாற்றுவது மட்டும் தான் நோக்கம். இவர்களின் மாட்டரசியல் என்பது உயர் சாதியினருக்கான தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் முன்னிறுத்தப்படும் கோட்பாடே தவிர மாடுகள் மீதான உயிர்ப் பாசமோ,உயிர் நேயமோ கிடையாது. 

ஒரு புறம் மாடு புனிதம் மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி வணிகம்! என்பதே ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அடி நாதம். 

Pin It