பசிக்கிறது
உணவு கொடுங்கள்

எல்லோருக்குமான
உணவை
அரசாங்கம் ஏற்பாடு
செய்ய இயலாது

வேண்டுமானால்
யோகா செய்ய கற்றுக் கொள்ளுங்கள்

வயிற்று வலியால் துடிக்கிறேன்.
மருந்து கொடுங்கள்.

மாற்று மதத்தினர்
கண்டுபிடித்த மருந்தை அருந்துவது
நம் தெய்வத்திற்கு ஆகாது.

பொறுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பூமித்தாயின்
அருந்தவப் புதல்வன்.

கும்பல் வன்முறையாளர்கள்
என்னை வன்புணர்வுக்கு
இசையச் சொல்லி
இழுத்துச் செல்கிறார்கள்.
காப்பாற்றுங்கள்.

அவர்களை
கும்பல் வன்முறையாளர்கள் என்று
நீங்கள் குறிப்பிடக் கூடாது.
அவர்கள் தேச
எல்லையைக் காப்பாற்றும்
ராணுவ வீரர்கள்.
அவர்களுக்கு எதிராக
கூக்குரல் எழுப்புவது
தேசபக்திக்கு எதிரானது.

எனக்கான நிலத்தை
அபகரித்து விட்டார்கள்
மீட்டுக் கொடுங்கள்.

அபகரித்து விட்டார்கள் என்று
நீங்கள் அலறக்கூடாது.
பொது அமைதிக்கு
பங்கம் வராமல் இருக்க நீங்களாகவே
விட்டுக் கொடுத்து விடுங்கள்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி
ஒருநாள் இரவில்
வேலையை விட்டு
என்னை நீக்கி விட்டார்கள்.

இத்தனை நாள்
உங்களுக்கு வேலை தந்ததற்காக
நன்றி சொல்லுங்கள்.
விசுவாசம் கெட்டுப்போய்
விமர்சனம் செய்யாதீர்கள்.

வாழ வழியில்லை
தற்கொலை செய்து கொள்ளலாம் என்று
முடிவு செய்து விட்டேன்.

சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு
எடுத்து இருக்கிறீர்கள்.
ஒரு நாடு நன்றாக
இருக்க வேண்டும் என்பதற்காக
ஒருவர் சாவது தவறில்லை என்று
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள்
பாரத பண்பாட்டைக்
காப்பாற்றி விட்டீர்கள்.

போய் வாருங்கள்.
உங்களுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது.

நாங்கள்
இங்கேயே இருந்து
உங்களைப் போன்ற
மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறோம்.

- அமீர் அப்பாஸ்

Pin It