2000 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமை வாய்ந்த கருத்தியலால் முன்னெடுக்கப்பட்ட பௌத்தம், பௌத்த அரசுகளிடம் தோல்வியடைந்த வேதமதம் என்ற பார்ப்பனியம் வீழ்ச்சியடைவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் பார்ப்பனியத்தின் சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடி, பார்ப்பனிய வேகத்தைத் தடுத்து நிறுத்தினார் ஐயா தந்தை பெரியார்.

இந்திய அளவில் பார்ப்பனிய வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், மனுஸ்மிருதி, வேத இதிகாசங்கள் போன்றவைகளை முன்வைத்துப் பார்ப்பனிய சமூக அநீதிகளை அக்குவேறு, ஆணிவேறாகக் கிழித்துப் போட்டார் பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர்.

எவ்வளவு அடி கொடுத்தாலும் சாகாமல் உயிர்த்தெழும் பாம்பைப் போல, பார்ப்பனியம் பாம்பின் நஞ்சுக்குச் சமமான வர்ணாசிரம அநீதியை நிலைநாட்ட முனைந்து கொண்டிருக்கிறது.

ெஹக்டேவர், கோல்வால்கர் உள்ளிட்டவர்களினால் விதைக்கப்பட்ட `ஏகஇந்தியா’ என்ற கோட்பாட்டை, `ராமராஜ்ஜியம்’ என்ற பெயரால் உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸும் அதன் அரசியல் பிரிவான பா.ஜ.கவும்.

இன்றைய மத்திய பா.ஜ.க அரசு, ராமராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இந்து மதவாதம், இஸ்லாமிய - கிருத்துவ - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான சமூக அநீதிகளை இழைத்துக் கொண்டிருக்கிறது.

நாளுக்கொரு சட்டம், ஆளுக்கொரு பேச்சு என்பதைச் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு மாநிலங்களுக்கு எதிராக, மாநில சுயாட்சிக்கு எதிராகச் சென்று கொண்டிருப்பது நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமைகிறது.

சர்வாதிகாரம், மதவாதம், சாதியம் இவைகளினால் மட்டுமே செய்யப்படும் ஆட்சியும், அதிகாரமும் மக்களின் கோபத்தால் தரைமட்டமாகும் என்பது வரலாறு.

Pin It