மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வரிசையில், கர்நாடக மாநில பாஜக அரசும் மிகத் தீவிரமான முறையில் பசுமாடுகள் மீதுஅக்கறை செலுத்தத் துவங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பாஜக அரசு, பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்று பயமுறுத்தியுள்ளது.
இந்நிலையில்தான், பசுக்களை பாதுகாக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பிரபு சவுகான், மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, வாசனைபத்திகள் உள்ளிட்ட பொருட்களையே பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், உள்ளிட்ட பொருட்களை மட்டும் அதிகளவில் பயன்படுத்தும் மக்கள், அதன் சிறுநீர், சாணம் உள்ளிட்டவற்றை மட்டும் பயன்படுத்த முன்வராதது தனக்கு கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரபு சவுகானின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வருகிறது.
***
உ.பி. பாஜக அரசு அமைத்த கோ சாலையில் 12 பசுக்கள் எரிந்து பலி
உத்தரப்பிரதேசத்தில் பசுமாடுகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அம்மாநில பாஜக அரசு, ஏராளமான கோ சாலைகளை அமைத்துள்ளது. இந்த கோ சாலைகளில் பசுக்களின் பராமரிப்பு, தீவனங்களுக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், கோ சாலைகளில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, பசு மாடுகள் தீவனமின்றி பட்டினியால் இறந்து போவதும், போதிய பராமரிப்பின்மைக் காரணமாக கொத்துக் கொத்தாக நோயால் செத்து மடிவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில்தான், செவ்வாயன்று பாக்பத் மாவட்டம் நக்லா பாடி கிராமத்திலுள்ள கோ சாலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பசுமாடுகள் பரிதாபமான முறையில் இறந்துள்ளன. 18 பசு மாடுகள் கடுமையான தீக்காயம் அடைந்துள்ளன.
கோ சாலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் திடீரென உயர் மின்அழுத்தம் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணைஆட்சியர் அஜய் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
- விடுதலை இராசேந்திரன்