துருப்பிடித்த கலப்பையை
நிலத்துக்குள் புதைத்திருந்தோம்.
வரப்போர மரத்தில் தொங்கும்
விதை நெல் மூட்டையிலிருந்து
வழிந்து கொண்டே இருந்தது மழை.
கலப்பையைப் புதைத்த இடத்தில்
செங்கற்கள் அடுக்கி
குலதெய்வமாக மாற்ற ஆரம்பித்தோம்
வளர்ந்த புற்றில் நுழைந்த பாம்புகள்
பால் ஊற்றி வைக்க யாருமில்லாததால்
ஆடுகளைக் கொத்த ஆரம்பித்தது
புயலடித்த மறு வாரத்தில்
கலப்பையைக் காணவில்லை
ஆழத்தில் வேறொரு வயலை
உழுது கொண்டிருந்தது.
அங்கே எப்போதும் நிறைந்திருக்கும் நீரில்
தலைகீழாக வளர்ந்தன தானியங்கள்
அறுவடைக்காக முதியவர்களைப்
புதைக்க ஆரம்பித்தோம்
நிலமெல்லாம் வளர்ந்து நின்றன
கதிர் அரிவாள்கள்.
குலவையிட்டபடி ஊர்மகளிர்
வயலுக்குள் இறங்கியபோது
முகம் காட்டியது கலப்பைச் சாமி.
எப்போதாவது ஒரு முறைதான்
நிலம் உடைத்து வெளியேறும்
பத்தாயத்தை உடைத்து அடுப்பெரித்து
பொங்கல் வைப்போம்.
அப்போது சன்னதம் வந்து ஆடுகிறவன்
வெறும் கால்களால் வயலை உழுவான்
மண்கிழித்துப் பெருகும் குருதியை
கலப்பைச் சாமிக்குப் படையலிடுவோம்.
அந்த ஒரு நாள் தவிர
வயலில் யாரும் கூடுவதில்லை.
குலதெய்வம் இருப்பதால்
வீடு கட்ட வயல் வாங்க வந்தவர்கள்
ரத்தம் கக்கிச் சாவார்கள் என்று
புராதனக் கதை
காற்றில் சுற்றி மிதந்த ஊரில்
தண்ணீர் வராத
ஆற்றுப் பாலத்திலிருந்து
நாங்கள்
மீண்டும் மீண்டும்
கீழே குதித்தோம்.

- இரா.கவியரசு

Pin It