பார்த்ததும் இது தான் பிரச்சனை என்று சொன்ன காலம் இருந்தது. வாரத்தில் சரியாகி விடும் வியாதிகளுக்கு வாக்கு தான் முதல் டெஸ்ட். ரெண்டு நாளாவா... வலி என்று வயிற்றைத் தொட்டு அமுக்கி பார்த்து... இது தான் என்று சொல்லி மருந்தும் எழுதிக் கொடுத்து விடுவார் மருத்துவர். மருத்துவர் என்றால் கம்பவுண்டர் இல்லை. ஒரிஜினல் MBBS தான். கை மூட்டு விலகி விட்டதை... இது ஒட்டுக்குடல்....இது வெறும் சுளுக்கு தான் என்று தொட்டு பார்த்தே கண்டு பிடித்த மருத்துவர்களையும் அறிவோம். தலைவலியா... காய்ச்சலா... வயிற்றுக்கெடுப்பா... வாந்தியா... ரெண்டு நாளுக்கு தான் மருந்து. சரியாகி விடும்.

மருத்துவத்தில் இருக்கும் பெரிய காரியமே நோயை சரியாக கண்டுபிடிப்பது தான். டையக்னஸ் செய்வது தான். அது அனுபவத்தின் வாயிலாக... அக்கறையின் மூலமாக... உள்ளார்ந்த படிப்பின் வழியாக... நிதானமாக நேர்மையாக போகிற போக்கில் நடந்து கொண்டிருந்தது. ரெம்பவும் முடியாத போது தான் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு அனுப்புவார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நடந்து கொண்டிருப்பது வேறு. சின்ன சின்ன நோய்க்கும் கூட பெரிய பெரிய தீர்வைக் காட்டுகிறார்கள்.hospital scanமருத்துவத்தில் பெரிய பெரிய தொழில் நுட்பங்கள் அனைத்துமே போற்றுதலுக்குரியவை தான். ஆனால்... அதை ஒன்றுமில்லாத ஒன்றுக்கு கூட உபயோகிக்க செய்வது தான் கண்டதுனத்துக்குரியது. மானுட வாழ்க்கையில் அதுவும் மக்களாட்சியில்... கல்வியும் மருத்துவமும் இலவசமாகத் தான் கிடைக்க வேண்டும். ஆனால் நடந்து கொண்டிருப்பது எல்லாம் தெரிந்ததே. காசுள்ளவன் கிட்னி மாற்றிக் கொள்ள முடியும். இல்லாதவன் அவனே சென்று சுடுகாட்டில் படுத்துக் கொள்ள தான் வேண்டும். இங்கு எதுவும் சமமாக இல்லை. இருக்கவும் முடியாது.

நோயின் தீவிரத்தை பொறுத்து தான் மருத்துவத்தின் நேர்மை இருக்க வேண்டும். சின்ன தலைவலிக்கு எக்ஸ்ரே எடுக்க சொல்வது அபத்தம். ரெண்டு நாள் சிகிச்சைக்கு பத்து நாள் மாத்திரை எழுதி கொடுப்பது பிசினஸ். மருந்து மாத்திரை சந்தை மற்ற சந்தைகளை விட பெரியது. ஒவ்வொரு நோயாளியுமே ஒவ்வொரு பிசினஸ் ஆகி வெகு காலம் ஆகி விட்டதை அறிவு உணர்ந்தே இருந்தாலும்... நெஞ்சு பொறுக்குதில்லையே தான் நிலைமை.

கிளினிக்கில் இருக்கும் ஒவ்வொரு மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன்- ம் குறிப்பிட்ட லேப்- ன்... குறிப்பிட்ட மருந்தகத்தின் பெயர் தாங்கிய படிவமாகத்தான் இருக்கிறது. அதிலே கூட மார்க்கெட்டிங் மேனேஜர் திறன்பேசி எண் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை ஒரு மருத்துவரை பார்த்து விட்டால் அதன் பிறகு நாம் அங்கு தொடர்ந்து வாடிக்கையாளர் போல ஆகி விடுகிறோம். பதிவு செய்த அடுத்த நொடி நமது திறன் பேசிக்கு வணக்கத்தோடு என்ட்ரி எண் போட்ட அறிமுக செய்தி வந்து விடுகிறது. அதன் பிறகு வாரம் ஒரு முறை அந்த டெஸ்ட் இந்த ஆபரில்... இந்த டெஸ்ட் இலவசமாக என்று கொக்கி போட்டு இழுப்பது தான் வேலை. எல்லாமே இங்கு டேட்டாவாகி விட்டன. நாம் எண்களாகி விட்டோம்.

மூட்டு வலியா... எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்துக்கலாம். ஒருவேளை அந்த வியாதியா இருந்துட்டா.. ஒருவேளை இந்த வியாதியா இருக்க வாய்ப்பிருந்துட்டா என்று நோயாளி மனநிலையை போட்டு தாக்கி கசக்கி பிழிந்து விடுகிறார்கள். நாமும் எதுக்கு வம்பு எடுத்தே பார்த்திடலாம் என்ற எண்ணத்துக்கு வந்து விடுகிறோம். இன்றைய கால கட்டத்தில் மருத்துவத்தை எப்படி உள் வாங்குவது. புரிந்து கொள்வது. பயமுறுத்துகிறார்கள். அதை சாப்பிடுங்கள். இதை சாப்பிடாதீர்கள். அந்த உடற்பயிற்சி... இந்த உடற்பயிற்சி... என்று சதா மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

நடந்தால் மனுஷன். கிடந்தால் பிணம். இடையில் எதற்கு இத்தனை அச்சம். அதுவும் இந்த செல்போன் அறிமுகத்துக்கு பின் இந்த உலகம் எப்போதும் சவப்பெட்டியை சுமந்து கொண்டே அலைவது போன்ற பிரமை. எனக்கு மட்டும் தானா.

எடுத்ததுமே டெஸ்டுகள் தான். அப்புறம் தான் பேச்சே. நோயாளி மனநிலையே மூடாக்கு போட்ட உடல் மூடியாக தான் இருக்கும். அந்த நேரத்தில் மருத்துவரே கடவுளாக தெரிவார். கடவுள் சாத்தானானால் மனிதன் தாங்குவானா. சரி என்று அந்த ஸ்கேனை எடுத்து வந்து பார்த்தால்... அதில் ஒன்றுமே இருக்காது. இருக்கும் உடல்நிலைக்கு அது சரி தான். சாதாரண குறைபாடுகளுக்கும் அதே முறை சரியா என்று தான் கேட்கிறோம். முதுகுவலியா... எடு MRI ஸ்கேன். அதற்கு முன் செய்து பார்க்க இருக்கின்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவதில்லை. நேரா ஹீரோதான் என்பது போல.... நேரா லேப்க்கு போ. இந்த டெஸ்ட்லாம் எடு. அதுவும் அவுங்க சொல்ற அந்த குறிப்பிட்ட லேப்க்கு தான் நாம் போக வேண்டும். அப்படி தான் அந்த பிரிஸ்கிரிப்ஷன் நம் கையில் திணிக்கப்பட்டிருக்கிறது. நீ காசு வெச்சிருக்கியா... இல்லையா என்றெல்லாம் மருத்துவ கடவுள்களுக்கு தெரிய தேவை இல்லை. எங்கோ விட்டதை இங்கே எடுக்கும் சூதாட்டம் போல தான்... அவர்களின் பார்வையும் பிஸினஸும்.

எனக்கு தெரிந்து ஒரு மருத்துவர் இங்கே பக்கத்தில் தான். என்ன வியாதிக்கு போனாலும் ஒரு மாசத்துக்கு மாத்திரை எழுதி கொடுத்து விடுவார். நாமும் சர்க்கரை மிட்டாய் பைத்தியங்கள் போல அத்தனை மாத்திரைகளை கொண்டு வந்து நேர நேரத்துக்கு விழுங்கி அதனால் சூடு பிடித்து.. மீண்டும் அவரிடமே சென்றால்...கூலாக அது வேண்டாம்.. இது சாப்பிடுங்க என்று இன்னும் ஒரு 20 நாளைக்கு வேறு மாத்திரை கொடுப்பார். நினைத்தாலே கசக்கும் மருத்துவர்கள்.

சில பேரெல்லாம் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். டாக்டர் ஒன்று சொல்லி விட்டால்... உயிரே போனாலும் அதைத்தான் பின் தொடர்வார்கள். அத்தனை நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட மருத்துவனை நம்புகிறான். சில மருத்துவர்களோ கமிஷனை மட்டுமே நம்புகிறார்கள். ஆடு மாட்டிருக்கு. உனக்கு இவ்ளோ. எனக்கு இவ்ளோ என்று பந்தாடுவது இயல்பாகவே இருக்கிறது. மச்சான் ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒருத்தன் மாட்டி இருக்கான். நான் முடிச்சிட்டேன். உன்கிட்ட அனுப்பி விடறேன். CT ஸ்கேன் எடுத்துட்டு அப்டியே உன் மாப்பிள்ளைகிட்ட MRIக்கு அனுப்பு. அப்புறம்.. அப்பிடியே உன் தங்கச்சி புருஷன் இருக்கான்ல.. அவன்கிட்ட எக்ஸ்ரேக்கு அனுப்பு. அப்புறம் அப்பிடியே யூரின் டெஸ்ட் எடுக்கறதுல உன் பங்காளி கில்லாடி இல்ல. அவன்கிட்டயும் சும்மா அனுப்பி விடு.... என்று புது புது வியாதிகளை உருவாக்கி பேங்க் அக்கவுண்டை காலி செய்து விட்டு தான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

தேவையான டெஸ்டுகளை எடுக்க சொல்வதில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆரம்ப கட்ட மருத்துவத்திற்கே எல்லா டெஸ்ட்டையும் எடு என்று சொல்வதைத் தான் இப்படி எழுத வேண்டியிருக்கிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து மாத்திரைகளின் அளவு இருக்க வேண்டுமே தவிர.. லேப்
உடன், மருந்தகத்துடன் போட்டுக்கொண்ட அக்ரீமெண்ட் அளவில் பிரிஸ்கிரிப்ஷன் நிறைய கூடாது. இல்லையா....?

- கவிஜி

Pin It