வெறுப்பின் விதைகள் மிக தீவிரமாக விதைக்கப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவைகளை அறுவடை செய்தாக வேண்டும். எவ்வளவு விரைவாக வெறுப்பை வளர்க்க முடியுமோ, அவ்வளவு விரைவாக அதை வளர்க்க வேண்டும்.
இஸ்லாமியர்களின் ரத்தம், கிருஸ்தவர்களின் ரத்தம், பழங்குடியின மக்களின் ரத்தம், தலித்துகளின் ரத்தம் என யாருடைய ரத்தமும் வீணாக போகக்கூடாது. அவை அனைத்தும் மொத்தமாக வெறுப்பை வளர்ப்பதற்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
அப்படியான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்று இல்லாமல் இந்தியா முழுவதும் நடத்தி முடிக்கப்பட வேண்டும், அவசரமாக மிகவும் அவரசமாக. காலங்கள் குறைவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஓர் ஓட்டாக மாறியாக வேண்டும்.
யாரும் எதற்கும் தடையாக இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் எப்படி கொலைகளைப் பார்த்து ரசிப்பது, ரத்தத்தைப் பார்த்து கிளர்ச்சியடைவது என ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டு விட்டது.
இந்தப் பயிற்சி பல ஆண்டுகளாக தினம் தினம் மக்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்வானியின் ரத யாத்திரையின் போதும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், குஜராத் இனப்படுகொலையின் போதும், கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கெளரிலங்கேஷ் போன்றவர்கள் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் மக்கள் இதை எல்லாம் இந்தியாவில் வழக்கமான ஒன்றாகப் பார்க்க பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
அவர்களின் நாசித்துவாரங்களில் இப்போதெல்லாம் ரத்தவாடையை நுகர்ந்தால் குமட்டல் வருவதில்லை. அந்த வாடையை நுகராமல் இருந்தால்தான் அவர்களுக்கு அயற்சி ஏற்படுகின்றது.
கொலைகள் குறைவாக இருக்கும் போது அவர்கள் செய்திகளை சுவாரசியமற்றுப் பார்க்கின்றார்கள். கொலைகள் அவர்களுக்கு கொத்துக்கொத்தாக வேண்டும். உடல்கள் சிதைந்து, மூளைகள் தெறித்து, அங்கங்கள் பீய்ந்து கிடக்கும் போது மட்டும்தான் அவர்களால் மதத்தின் அழகியலை ரசிக்க முடிகின்றது.
கொடூரத்தின் அழகியலை ரசிக்கும் நிலைக்கு மாற்றப்பட்ட சமூகத்தில் அந்த கொடூரத்தை அரங்கேற்றி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த புதிய புதிய கொலைகாரர்கள் நாக்பூரில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி பெரும்பான்மை இந்துமத வெறியர்களை மகிழ்ச்சிப்படுத்த அனுப்பப்பட்ட ஒரு கொலைகாரன்தான் சேத்தன் சிங். உபியைச் சேர்ந்த ரயில்வே போலீஸ்காரனான சேத்தன் சிங், ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா, அஜ்கர் அப்பாஸ் ஷேக் (48), அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் பன்புர்வாலா (62) உள்பட 4 பேரை சுட்டு கொன்றிருக்கின்றான். இதில் சப் இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவைத் தவிர மற்ற மூவருமே முஸ்லிம்கள் ஆவார்கள்.
ரயில்வே போலிசாரால் கைது செய்யப்பட்ட சேத்தன் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடுமோ என மோடியின் மூளைவழியாக யோகியின் குழந்தைகள் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள். விரைவில் சுட்டவன் முழு மென்டல் என்று நாக்பூர் அனைத்துலக சாணி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆய்வறிக்கை வந்தாலும் வரலாம்.
சேத்தன் சிங் அடிக்கடி பணி இட மாறுதல் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தாகவும், விடுமுறை கிடைக்காததால் விரக்தியில் இருந்தாகவும் இன்னும் எத்தனை எத்தனை கட்டுக்கதைகளை கட்டி கொலைகாரனை காப்பாற்ற முடியுமோ, அத்தனை அத்தனை கட்டுக்கதைகளும் கட்டுக்கடங்காமல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன பாசிச சங்கிகளால்.
மனநலம் பாதிக்கப்பட்டவன் எப்படி கொலைகளை ஆற, ஆமர செய்துவிட்டு “அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்கள் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. இந்துஸ்தானில் வாழ வேண்டுமானால்… மோடி, யோகி… இருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று எப்படி பேசி இருக்க முடியும்? இது தொடர்பான காணொலியும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படுகொலைகள் யாருக்காக நிகழ்த்தப்பட்டன? மோடிக்காகவா? யோகிக்காகவா? ராமராஜ்ஜியத்துக்காகவா? இல்லாத இந்துஸ்தானத்திற்காகவா? யோசித்துப் பாருங்கள்... எல்லாமாகவும் தெரியும்.
கேட்ட தீர்ப்பை கொடுக்காத லோயா மர்மமாக மரணம் அடையும் நாட்டில், இந்துஸ்தானத்திற்காக முஸ்லிம்களை படுகொலை செய்த ஒருவன் எப்படி நல்ல மனதிடமுள்ளவானாக இருக்க முடியும்?.
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சேத்தன் சிங் மட்டுமல்ல, மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவன், தேவாலயங்களை எரித்தவன், மசூதியை இடித்தவன், பாதிரியாரையும் அவரது குழந்தைகளையும் எரித்துக் கொன்றவன், கர்பிணியின் வயிற்றை சூலாயிதத்தால் கிழித்து சிசுவை எடுத்துக் கொன்றவன், முஸ்லிம்களின் கை, கால்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தவன், இஸ்லாமியர்களின் சுடுகாடுகளை தோண்டி பிதைக்கப்பட்ட பிணங்களை வெளியே எடுத்துப் போட்டவன், சிறுமி ஆசிபாவை கோயிலில் வைத்து கடவுள் சாட்சியாக சிதைத்துக் கொன்றவன், மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக்கை அடித்துக் கொன்றவர்கள் என இப்படி பலபேர் கொடூரமாக மன நலம் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இருக்கின்றார்கள்.
இவர்களை காவல்துறை, ராணுவம், நீதிமன்றம் என எதனாலும் தண்டிக்க முடியாது. சட்டப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் இல்லாததால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும், பழங்குடியின மக்களையும் தலித்துகளையும் மட்டும் குறி வைத்துக் கொல்லும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் அதிகரித்துள்ளார்கள்.
மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தினம் தினம் எப்படி கடந்து போகின்றார்களோ, அதே போல இந்த சிறப்புரிமை பெற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் கடந்து போகின்றார்கள்.
பாசிசத்தின் பெரிய வெற்றியே அதை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதில்தான் உள்ளது. மக்கள் ஒருமுறை பாசிசத்தின் வாடையை நுகர்ந்து கிளர்ச்சி அடைந்து விட்டார்கள் என்றால், அவர்கள் தங்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுக்காக கூட போராட மாட்டார்கள். பாசிசம் யாரை எதிரியாக கட்டமைத்து வைத்துள்ளதோ, அவர்களின் குரூர சாவுக்காக மட்டுமே ஏங்கிக் கிடப்பார்கள்.
மக்கள் குரூரத்தை ரசிக்கும் மனநிலைக்கு மாறி விட்டார்கள் என்பதை பாசிஸ்ட்டுகள் எப்படி கண்டுபிடிக்கின்றார்கள்? அவர்கள் பெரும்பான்மை மக்களின் மெளனத்தின் மூலம் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கின்றார்கள்.
நம்முடைய மெளனம் மிக கனத்ததாக, மனித விழுமியங்கள் அற்றதாக, அழுகி துர்நாற்றம் வீசுவதாக உள்ளது. அப்படியான மெளனம் ஒருநாள் நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் கூட சமாதி கட்டிவிடும் என்பதை நாம் எப்போது உணர்கின்றோமோ, அப்போதுதான் பாசிசத்தை இந்த மண்ணில் குழி தோண்டி புதைக்க முடியும்.
- செ.கார்கி