2019ஆம் ஆண்டு உலகளவில் சமுதாய, பொருளாதாரக் குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. தலாவாரி வருமானம் (per Capital) குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு குழந்தைகள் இறப்பு வகிதம் காசநோய் பாதிப்பு மலேரியா பாதிப்பு ஆகியன முதன்மைக் கூறுகளாக எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் அரசியல் கூறுகளை ஆய்வு செய்து குறிப்பாக மனித உரிமை மீறல், சட்டப்படியான ஆட்சியைப் பின்பற்றாமல் இருத்தல், தனிநபர் சுதந்திரம் பறிப்பு, தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகள் ஆகிய கூறுகளும் அலசப்பட்டுள்ளன.

இந்தியா விடுதலை பெற்று 72 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 69 ஆண்டுகளில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட முறைகள், பறிக்கப்பட்ட மாநில உரிமைகள், மனித உரிமைகள் ஆகிய கூறுகளையும் இந்தியப் புள்ளிவிவரங்களின்படி ஆய்வு செய்தால் இந்தியாவில் ஆட்சியியல் கூறுகள் சிதைந்து வருகின்றன என்பதையே நமக்குச் சுட்டுகின்றன.

மக்கள் தொகையில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகை வளர்ச்சியால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவைப் பெற முடியவில்லை. சான்றாக  2018ஆம் ஆண்டு 4000 டன்கள் உணவுப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வேளாண் பிரச்சி னைக்கு முன்னுரிமை அளிக்காத காரணத்தினால் உலகில் அதிக விளைச்சல் நிலம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பிரச்சினை தொடர்வது ஆட்சியாளர்களுக்குப் பெருத்த அவமானம் என்று பல வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் உற்பத்தியான வேளாண் பொருள்களைச் சேமித்து வைக்கும் வசதியும் இந்தியாவில் குறைந்து காணப்படுகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி இந்திய மக்கள் தொகை வளர்ச்சி மிகக் குறைந்த விழுக்காட்டில் குறைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை பெருகி வருகிறது. குறிப்பாக மக்கள் தொகையில்  15 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் வேலை செய்யும் நிலையில் இருந்தாலும் இந்த வயதிற்கு உட்பட்ட மக்களிடம் தான்  வேலையின்மை பெருகியுள்ளது. உலகளவிலான பன்முக வறுமைக் குறியீடு (Multi-Dimensional Poverty Index 2019) 2019இல் 36 கோடி மக்கள் மூன்று வேளை உணவை உண்ண வழியின்றி உள்ளனர். இந்த மக்களில்தான் ஏழைகளில் மிகவும் ஏழைகள் என்று கருதப்படுகிற மக்களுக்கு வருமானம் பெருக வில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் வருமான ஏற்றத்தாழ்வும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.

ஆண்டு தோறும் வெளிவரும் தேசிய அளவில் குற்றங்களின் புள்ளிவிவரங்களில்தான் தற்கொலைகள் செய்துகொள்வோரின் எண்ணிக்கை வெளியிடப்படும். மேலும் எக்காரணங்களுக்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரமும் கிடைக்கும். கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் புள்ளிவிவரங்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. ஏனென்றால் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை வெளியில் தெரிந்துவிடும் என்ற காரணத்திற்காகத்தான்.

தட்டம்மை வட மாநிலங்களில் பெரிய அளவில் இன்றும் உள்ளது. அதற்குக் காரணம் குழந்தை பிறந்த 9வது மாதத்திலும் பின்பு 1 வயதிற்குப் பிறகு தடுப்புசிப் போடும் முறை இல்லாததே காரணம் என்று புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. 5 வயதிற்குட்பட்ட குழந்தை கள் 37.9 விழுக்காடு ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதியுறுகின்றன என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. குழந்தை இறப்பு வீதம் 1000 குழந்தைகளுக்கு 34.6 என்ற அளவில் தேசிய அளவில் உள்ளது. மலேரியா நோயால் தாக்கப்படுவோர் 1000க்கு 18.8 வீதமாக உள்ளது.

காசநோயால் தாக்கப்படுவோர் எண்ணிக்கை 1 இலட்சத்திற்கு 211 வீதமாக உள்ளது. இதில் பெருங்கொடுமை என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஒரு இலட்சம் மருத்துவர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்றுள்ளனர். குறிப்பாக. இங்கிலாந்தில் 50 ஆயிரம் இந்திய மருத்து வர்கள் பணிபுரிகின்றனர். அடுத்ததாக அமெரிக்க கனடா ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்றனர். ஆஸ்திரேலியாவில் 5 மருத்துவர்களில் ஒருவர் இந்தியராகவும் கனடாவில் 10 மருத்துவர்களில் ஒருவர் இந்தியராகவும் உள்ளனர். இந்தச் சூழ்நிலை தொடருமானால் தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாவதற்கு மேலும் 40 ஆண்டுகள் ஆகும் என்று மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள AIIMS மருத்துவமனையில் 1989 முதல் 2000 வரை யில் பயின்றவர்களில் 428 பேர் மருத்துவராகத்  தகுதிப் பெற்றுள்ளனர். இதில் 241 மருத்துவர்கள் வெளிநாடு களில்  தங்கிவிட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வட மாநிலங்களில்கூட பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் இந்திய மாநிலங்களிலேயே பணி யாற்றுகின்றனர் என்ற புள்ளிவிவரமும் உள்ளது. AIIMS மருத்துவக் கல்லூரியில் பயின்ற  ஒடுக்கப்பட்ட சமுகத்தினர் 70 விழுக்காடு இந்தியாவிலேயே பணியாற்றுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுகின்ற மருத்துவர்கள் ஊர்ப்புற மருத்துவமனை களில் மருத்துவராகப் பணியாற்றுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு முது நிலை மருத்துவப் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு 2016ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டது. குறிப்பாக அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதியாக ஒரு ஆண்டு ஊர்புறப் பணிக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் அதிக அளவாக 10 மதிப்பெண் வரை அளிக்கப்பட்டது. மேலும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

இதன் காரணமாக இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு சுகாதாரக் குறியீடுகளில் முதல் மாநிலமாக விளங்கியது. மேலும் சாதாரண ஏழை எளிய குடும் பங்களில் இருந்து மருத்துவர்கள் உருவாகி தமிழ் நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என்ற தொண்டு மனப்பான்மையும் வளர்ந்து. இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கோ வெளி நாடுகளுக்கோ செல்வோர் எண்ணிக்கை ஒரு விழுக் காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. தமிழ்நாட்டில் உயர் மருத்துவம் பயின்றவர்கள் அதிக எண்ணிக் கையில் அரசுப் பொது மருத்துவ மனைகளிலேயே வேலை செய்கினற  மனப்பான்மையும் வளர்ந்தது. இதைத் தமிழ்நாட்டு முன்மாதிரி (Tamil Nadu Health Model)  என்று குறிப்பிட்டனர்.

நீட் தேர்வின் வழியாகவும் முதுநிலை உயர் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இருந்த அரசுப் பணி யாற்றுபவர்களுக்கு இருந்த இடஒதுக்கீடு முற்றிலும் 2016க்குப் பிறகு நீக்கப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங் களில் உள்ளவர்கள்  தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்து பட்டம் பெற்று வெளிமாநி லங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் செல்ல ஊக்கு விக்கும் முறையை ஒன்றிய அரசு புகுத்திவிட்டது. இதை ஆதிக்கச் சாதியினர் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்த பெரும் சதி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே மருத்துவத் துறையை நாம் காணமுடிகிறது.

2018ஆம் ஆண்டு மானுட மேம்பாட்டு அறிக்கை யின் குறியீடுகளின்  அடிப்படையில் பொதுகல்விக்காக இந்திய அரசு செலவிடும் தொகை பற்றி புள்ளிவிவரங் கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு 100 ரூபாய்  பொதுச் செலவில் கல்விக்காக ரூ.4 மட்டுமே இந்தியா கல்விக்காகச் செலவிடுகிறது. 19 கோடி தொடக்கப் பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களில் 6 கோடி மாணவர்கள்தான் இடைநிலைப் பள்ளிக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியையும் தொடர்கின்றனர்.

2.5 கோடி பட்டப்படிப்பை பயின்றவர்களில் 39 இலட்சம் பேர் மட்டும்தான் முதுகலை படிப்பிற்கு செல்கின்றனர். இவர்களில் 2 இலட்சம் பேர்தான் எம்.பில். பிஎச்.டி ஆய்வுப்பட்டங்களைத் தொடர்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்தால் இந்திய மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பயில்பவர்கள் உள்ளனர். இன்றைக்குத் தமிழ்நாடு இந்திய மாநிலங் களிலேயே முதல்நிலையில் உள்ளது.

2019இல் அமெரிக்காவின் நியுயார்க் நகரின் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch Newyork)  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த ஆண்டில் பாலியல் வன்முறை, சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல், சமூகச் செயல் பாட்டாளர்கள் ஆகியோர் மீது கொடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையரின் முதல் அறிக்கையில் காஷ்மீர் மாநிலத் தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்துள்ளன என்றும் நீதிமன்றத்தில் அவர்களுக்கு நீதி கிடைப்ப தில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 100 நகரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த போது ஒரு நகரம் கூட சுகாதாரமாக இல்லை என்றும் குப்பைக் கழிவுகள் அதிகமாகப் போடப்படுகின்றன என்றும் குப்பைகளை அகற்றுவதிலும் சரியான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு குறிப்பாக திரு.மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த பிறகும் தலைநகர் புதுதில்லியிலும் பஞ்சாப் அரியானா போன்ற மாநிலங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மக்கள் இன்னலுற்று வருகின்றனர் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி அடிப்படையில் வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கையில் தென்னக மாநிலங்கள்தாம் முன்னிலையில் உள்ளன. இதற்கு மாறாக மகாராட்டிரா, உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு வேலை தேடிப் பல இலட்சக்கணக்கானோர் தமிழ் நாட்டில் குவிந்து வருகின்றனர். இவ்வாறு உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதாரச் சமூகச் சூழல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டு வரும் நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது. இந்தப் பின்னடைவு தொடருமானால் இந்தியா ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக வேளாண் தொழில் கடந்த 20 ஆண்டு களாக 2.4 விழுக்காடு ஆண்டு வளர்ச்சியை எட்டுவதி லேயே பெரிய அறைகூவல்களைச் சந்தித்து வருகிறது.  இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுடைய  எண்ணிக்கை 92 விழுக்காடு அளவில் இருக்கிறது. இவர்களுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைப்பதில்லை. 1969ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயம் சிறுகுறு தொழில்களுக்குக் கடனளிப்பதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

1984வரை இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. 1990க்குப் பிறகு சிறுகுறு விவசாயிகளுக்கு மற்றும் சிறு வணிகர்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களுக்குப் பதிலாக பெரும் தொழில் புரிவோர்க்கு கடன் அளிக்கப்படுகிறது. மேலும்  தேசிய மயமாக்கப்பட்ட போது வங்கிகளின் ஊரக வங்கிகிளைகள் 1933ஆக இருந்தது 1991இல்  35206ஆக உயர்ந்தது. மேலும் 40 விழுக்காடு மொத்த வங்கி களின் கடனில் வேளாண்துறை, சிறுகுறு தொழில், வீட்டுக்கடன், பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கி 1982இல் உருவாக்கப்பட்டது. இந்த வங்கி கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும் திட்டத்தை மேலாண்மை செய்யும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், வேளாண் தொழிலில் ஈடுபடுவோர், நடுத்தரப் பிரிவினர் தேசியமயக்காப்பட்ட வங்கிகளில் தங்களுடைய சேமிப்பை வங்கிகளில் வைப்புத் தொகையாக வைத்த னர். இதன் காரணமாக வங்கிகளின் வைப்புத் தொகை  அதிகரித்தது.

1969இல்  நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி யில் 13 விழுக்காடாக இருந்த வைப்புத் தொகை 1990இல் 38 விழுக்காடாக அதிகரித்தது. நாட்டினுடைய  மொத்த சேமிப்பு 12.8 விழுக்காடாக 1969இல் இருந்தது. இது 21.7 விழுக்காடாக 1990இல் உயர்ந்தது. அதே போன்று நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கடன் அளவு 1969இல் 10 விழுக்காடாக இருந்தது. 1990இல் 25 விழுக்காடாக உயர்ந்தது. நாட்டினுடைய ஒட்டுமொத்த முதலீடு 1969இல் 13.9 விழுக்காடாகவும் 1990இல் 24.1 விழுக்காடாக உயர்ந்தது. இந்தியப் பணவியல் பொருளாதாரம் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நலிந்தோரும் நடுத்தர வர்க்கத்தினரும் வேளாண் தொழிலில் ஈடுபடுவோரும் பலனடைந்துள்ளனர் என்பதை டாடா சமூகவியல் மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் ராம்குமார் ஆகத்து 9, 2019 அன்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருந்த நிலை மாறி 2010க்குப் பிறகு பல மோசடிகளும் பெருமுதலாளிகள் 7 இலட்சம் கோடி கடனைப் பெற்று திருப்பியளிக்காத சூழல் உள்ளது. கடந்த நான்காண்டுகளில் அதிக அளவில் அம்பானி அதானி போன்ற பனியாக்கள்தான் தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் 2 இலட்சம் கோடி அளவிற்குக் கடன்களைப் பெற்றுள்ளனர். வங்கியியல் பொருளா தாரத்தில்  ஒரு தேக்க நிலை உருவாவதைச் சீர்செய்ய முயற்சி செய்த முன்னாள் இந்திய மைய வங்கியின் தலைவர் ரகுராம்ராஜன் பதவியிலிருந்து துரத்தப் பட்டார்.

மேலும் 2014இல் பா.ச.க. அரசு அமைந்தவுடன் மோடி, ஏழைகள் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு 2010லேயே மன்மோகன்சிங் ஆட்சிக்காலத் தில் தொடங்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆனால் இந்தச் சாதாரண ஏழைகள் வங்கிக் கணக்குகள் தொடங்க முடிந்தது என்று சாதனை பேசும் மோடி அரசு இவ்வங்கிக் கணக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிக் கவலைக் கொள்ளவில்லை.

பெரும் பான்மையான நலிந்த பிரிவினரால் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்பாடற்று உள்ளன என்ப தையும் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. வங்கித்துறையில் பண மோசடி பணவியல் பொருளதாரத்தில் தேக்க நிலை என்றால் அரசு நிதியியல் கொள்கைகளிலும் தடுமாற்றங்கள் 1991லேயே தொடங்கின. இதன் காரணமாக ஏறக்குறைய 200 இலட்சம் கோடிகளுக்கு மேல் தனியார் துறை வளர்வதற்காக வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வரிச்சலுகைகள் அளிக்கப் பட்ட பிறகும் நிதியியல் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லவில்லை. குறிப்பாக ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப் பட்ட பிறகு தடுமாற்றத்திலிருந்து பொருளாதாரம் தேக்க நிலைக்குச் சென்றுவிட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஏழை நடுத்தரப் பிரிவினர் என் பதும் நாம் கண்ட உண்மை.

சிறுகுறு தொழில்கள் தேக்க நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், சரக்குச் சேவை வரியை விதித்தது இத்துறையினருக்குப் பலத்த அடியாக இருந்தது. பெரும்பான்மையோர் வேலையிழக்க நேரிட்டது. வேளாண்மை சிறுகுறு தொழில்களில் இருந்த பொருளாதாரப் பின்னடைவு  எனும் நோய் பெரிய தொழில்களையும் தொற்றிக் கொண்டது. மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்களில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டு பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன. வரும் மாதங்களில் 36 இலட்சம் பேர் வேலையிழப் பார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு பொருளாதாரத்தின் அனைத்துத் தளங்களிலும் ஏற்பட்டுள்ள  தேக்க நிலையைச்  சரி செய்வதற்கு ஒன்றிய அரசு எந்தப் புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மாறாக இந்த நிலையைத் திசை திருப்பவே காசுமீருக்கு அரசமைப்புச் சட்ட 370 - 35-ஏ பிரிவுகளின் வழியாக அளித்து வந்த சிறப்பு உரிமைகளைப் பறித்திடும் வகையில் அந்தவிதிகள் இரண்டும் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இந்த நடவடிக்கையையும் காஞ்சிபுரத்து அத்திவரதர் வந்தார்; படுத்தார்; நின்றார்; குளத்திற்குள் சென்றார் போன்ற செய்திகளையே அளித்து ஊடகங்கள் பொரு ளாதாரப் பின்சரிவைப் பற்றி எவ்வித கருத்துகளையும் தெரிவிப்பதற்கு அஞ்சுகின்றன. பொருளாதாரச் சரிவும் சனநாயகத்தின் அனைத்துக் கூறுகளிலும் ஏற்பட்டு வருகின்ற சரிவுகளும் இந்தியப் பொருளாதாரத்தைத் தேக்க நிலையில் இருந்து மீட்குமா?

Pin It