சித்த மருத்துவர் பிரின்ஸ்

சர்க்கரை நோய் இனிப்பு நோய் அல்லது நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு பற்றிய குறிப்புகள் அதிக அளவில் சித்த மருத்துவ நூல்களில் காணப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் எறும்புகள் அதனை நோக்கிக் கவரப்பட்டுச் செல்வதை முதலில் இந்நோயின் கணிப்பாக இருந்து வந்துள்ளது. இந்த நோயில் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் என்று இல்லாமல் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இனிப்பு நோயினால் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிப்பு அடைவதைப் "பத்து அவத்தைகள்'' அல்லது பாதிப்புகள் என்று விவரித்து உள்ளனர் சித்தர்கள். இந்நோய் பித்த ஆதிக்கத்தினால் வருவதாகச் சொல்லப்படுகிறது. நாம் உண்ணும் உணவானது கரிஅமிலம் (Carbohydrate), புரதம் மற்றும் கொழுப்பு அகிய மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கும். இவற்றில் கரிஅமிலம் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறைபாட்டால் விளைவதே சர்க்கரை நோய் அகும். நாம் எடுத்துக்கொள்ளும் கார்போ ஹைட்ரேட் ஆனது உணவு மண்டலத்தில் செரிக்கப்பட்டு குளுக்கோஸ் ஆகிறது. இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. உணவு உண்ட 90 நிமிடங்களுக்குள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதன் உச்சநிலையை எட்டுகிறது. பின் இது உடல் உழைப்பால் செல்களுக்குள் சென்று சக்தியை வழங்கி கரிஅமிலம் மற்றும் தண்ணீர் ஆகிறது. மற்றும் ஒரு பகுதி Glycogen ஆக மாற்றப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. இவ்விரு வழிகளாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் இன்சுலின் அளவுக் குறைவால் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவது இல்லை. இதனால் தொடர்ச்சியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமலே இருந்து விடுகிறது. செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போவதால் உடல்சோர்வு ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்கிறது.

தற்போதைய சூழலில் வாழ்க்கை என்பது பல்வேறு மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்வின் எல்லாவிதமான வசதிகளையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றுவிடத் துடிக்கின்றனர். இதற்காக ஒய்வின்றி உழைக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போதைய வேலைகள் அனைத்தும் மூளைக்கே அன்றி உடலுக்கு இல்லை. இயந்திர மயமாக்களினால் எல்லாவிதமான வேலைகளுக்கும் கருவிகள் வந்துவிட்டன. இதனால் உடல் உழைப்பு மிக அரிதாகிவிட்டது. மூளை அதிகமாக உழைத்து, உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு 5வது இந்தியனும் ஒரு சர்க்கரை நோயாளியே என்ற நிலை (Every fifth Indian is a diabetic) ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்தினை எற்படுத்தும் விஷயமாக உள்ளது.

முன்பு கூறியது போல் சர்க்கரை நோய் என்பது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறைபாடேயன்றி இதுவே ஒரு நோய் அல்ல. ஆயின் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்துகிறது.
ஒருவருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்பது கண்டறியப்பட்டால் அவர் நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட மூன்று முக்கிய வழிகள் உண்டு. அவை உணவுக்கட்டுப்பாடு, உடல் உழைப்பு மற்றும் மருந்துகள் ஆகியவையே...

உணவுக் கட்டுப்பாடு : கரிஅமில உணவு வகைகளைக் குறைத்து புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுதியான உணவுகளை உட்கொள்வது, உணவினை ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளாமல் குறைந்த அளவில் குறிபிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்வதும் ஆகும். இவ்வாறு செய்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அரைவயிறு அன்னம், கால்வயிறு நீர், கால்வயிறு காற்று என்பது சித்தர்களின் அறிவுரை.

உடற்பயிற்சி: சர்க்கரையின் அளவைச் சீராக்க உடல் உழைப்பு மிகவும் முக்கியமான விஷயமாகும். தினமும் காலையில் துயிலெழுந்து குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பது நல்லது. Swimming, Cycling போன்றவையும் நலம் பயக்கும்.
மருந்து : சர்க்கரையின் அளவினை இரத்தத்தில் சீராக்க பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் செய்கைகள் வெவ்வேறு விதமாக உள்ளன. தற்போதைய ஆராய்ச்சிகளின் பலனால் தெளிவாக அவை விளங்குகிறது.

நாம் தற்போது பொன்குரண்டி கடல் அழிஞ்சில் என்னும் மூலிகையின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம். இதைப்பற்றிச் சித்த மருத்துவ நூல்கள் கீழ்வருமாறு தெளிவாக விளக்குகின்றன.

"தீதில் கடல் அழிஞ்சில் செய்யும் குணம்கேளாய்
ஓதுமது மேகமொழிப்ப தல்லால் வாதத்தில்
வந்த சலம் பித்தசல மாகப் பச்ச லந்தாகத்
சொந்த சல மும்போக்குஞ் சொல்”

பல நூற்றாண்டுகளாகச் சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் நீக்கும் அருமருந்தாக பொன் குரன்டி - கடல் அழிஞ்சில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது குடிநீராக வேறுபல மருந்துப் பொருட்களுடன் சேர்ந்துப் பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிப் பின்னர் பார்ப்போம். தற்போது கடல் அழிஞ்சில் எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

கரிஅமில வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் சர்க்கரை நோயில் X – Glucosidose inhibitors என்பது முக்கியமான மருந்து வகை ஆகும். கடல் அழிஞ்சிலில் இரண்டு முக்கியமான X - Glucosidase inhibitors உள்ளது. அவை Salicinol மற்றும் Kotalanol ஆகும். இவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது வேதிவினைகளால் உருவாக்கப்படும் X – Glucosidose inhibitor ஆன Acarbose என்பதை விட 200 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது; பக்க விளைவுகள் அற்றதும் அகும். 2.5 முதல் 5 கிராம் அளவு கடல் அழிஞ்சில் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்ததில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு அளவும் குறைக்கப்படுகிறது.

பன்னெடுங்காலமாக சித்தர்களால் சர்க்கரை நோய்க்கு ஏற்ற மருந்தாக உபயோகத்தில் இருந்து வந்த கடல் அழிஞ்சில் தற்போது அறிவியல் பூர்வமாக எத்தகைய நன்மைகளை நமக்கு பயக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொண்டோம். சித்தர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் மூலிகையின் பயன்பாடுகள் ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் உட்படுத்துவதே நலமானதேயன்றி கண்மூடித்தனமாகக் குறைசொல்வது நமக்கு அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்களை நாமே தொலைப்பது போன்றதாகும்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Pin It