farmers protest at delhi 361மத்திய அரசின் விவசாய நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டம் இயற்றப்பட்ட செப்டம்பர் மாதத்திலிருந்து அதனை ரத்து செய்திடக்கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து தங்களின் போராட்டங்களை விவசாயிகள் வடிவமைத்தனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகள் அரசின் செவிகளுக்கு விழாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் டிராக்டர்களிலும், டிரக் வாகனத்திலும் போதிய அடிப்படை தேவைக்கான தயாரிப்புகளுடன் தலைநகர் டெல்லியினை முற்றுகையிட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்வானது, குளிர்காலத்தில் ஏற்படும் பனி மூட்டத்தால் மறையும் சூரியனை மற்றொருமுறை மறைய வைப்பதற்கு ஒப்பானது.

29 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட இந்திய தலைநகரத்தை இணைக்கும் அனைத்து வடமாநில எல்லையும் தனது வழமையான போக்குவரத்து சப்தங்கள் எழாமல் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற புரட்சி கோசங்களை மேலெழுகின்றது. தங்களுக்கே என்ற தனித்துவமான, வண்ணமயமான தலைப்பாகைகள் மற்றும் நீண்ட, பாயும் தாடிகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நகரின் எல்லைகளில் முற்றுகையிட்டுள்ளனர்.

புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் நெடுஞ்சாலைகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றனர், புதிய வேளாண் சட்டங்களாவது அவை கார்ப்ரேட் சுரண்டலுக்குத் தான் வழிவமைக்கும் என்ற ஒட்டுமொத்த ஒற்றைக் காரணத்திற்காக. இத்துணைக்கும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதுகாப்பு படையினரின் தடுப்புகள். அரசின் சாலை பெயர்த்தல், கண்ணீர்ப்புகை, தடியடி மற்றும் தண்ணீர் பீரங்கிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்போராட்டங்கள் குறித்து பஞ்சாபின் லூதியானா நகரில் இருந்து பயணமான 31 வயது கல்ஜீத் சிங் என்பவர் கூறும்போது, “மோடி எங்கள் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க விரும்புகிறார், நாங்கள் பல தலைமுறைகளாக எங்கள் வாழ்க்கையை விட விலைமதிப்பற்றதாக கருதும் நிலத்திற்கு எங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்து காப்போம்." மற்றொரு விவசாயியான அன்மோல் சிங் கூறும்போது: ”இப்புதிய சட்டங்கள் விவசாயிகளின் நிலத்தை பெரிய நிறுவனங்களுக்கு ஒப்படைத்து நிலமற்றவர்களாக மாற்றுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் வெளிப்பாடாகும்.

"ஏழை விவசாயி பசியால் இறக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார், இதனால் அவர் தனது பணக்கார நண்பர்களின் வயிற்றை நிரப்ப வேண்டும் எனக் கருதுகிறார்," அவருடைய இத்தகைய மிருகத்தனமான போக்கை அமைதியாக எதிர்த்துப் போராடவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்." என்றார்.

“கவுர்” என்னும் விவசாயி கூறும்போது "எங்கள் நாடு ஒரு பூந்தோட்டத்தினை போன்றது, அதில் மோடி தனது காவி நிறத்தில் அது இருக்க விரும்புகிறார். அதைச் செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அந்த மனநிலையை எதிர்த்து நான் இங்கு வந்துள்ளேன், ” என்று விளாசியுள்ளார்.

நிறுவனங்களின் சுரண்டல்!!

வேளாண் சட்டங்களாவது: குறைந்தபட்ச உத்தரவாத விலையில் தானியங்களை வாங்குவதை அரசு நிறுத்திடவும் , காப்ரேட் கம்பெனிகள் தாங்கள் நிர்ணயம் செய்யும் விலைகளிலே விவசாய பொருட்களை கொள்முதல் செய்யவும் , அதன் மூலம் கொள்ளை லாபம் பார்க்க வழிவகைசெய்யும் என அச்சப்படுகின்றனர். மோடியின் கூட்டாட்சி கொள்கைகளாவது சிறுபான்மை மக்களிடம் மனக்கசப்பையும் , தலித் மக்களிடம் வெறுப்பையுமே ஈர்த்துள்ளன, அதுபோலவே தற்போது விவசாயிகள் பாஜகவை “சர்வாதிகார நடத்தையுடையவர்கள்” என்று விமர்சிக்கின்றனர்.

விவசாயிகளிடம் இந்த சட்டங்கள் அதிர்ப்தியை அதிகப்படுத்தியுள்ளன, சிறந்த பயிர் விலைகள், கூடுதல் கடன் தள்ளுபடிகள் மற்றும் நீர்ப்பாசன முறைகள் ஆகியவற்றிற்கான உந்துதலில் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும், முகவர்களை அழித்து மொத்தமாக பெருநிறுவனத்தையே முழுமையாக சார்ந்திருக்கவும், அவர்களின் நியதிபடியே தங்களின் விவசாயத்தை அமைத்துக் கொள்ளவும், இன்னும் சொல்லப் போனால் விவசாயிகள் பெருநிறுவனங்களுக்கு அடிமையாக செயல்படவே இச்சட்டம் வழிவகை செய்கின்றது என்பதே விவசாயிகளின் வாதம்.

ஷாஹின்பாக்கை நினைவுப்படுத்தும் விவசாயிகளின் போராட்டம் 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக டெல்லியை மையம் கொண்ட ஷாஹின்பாக் போராட்டக்களத்தை நினைவுபடுத்தும் விதமாக விவசாயிகளின் முற்றுகை போராட்டம் இருக்கின்றது. பிபிசி நிறுவனத்தால் சிறந்த 100 ஆளுமை என வருணிக்கப்பட்ட 82 வயதைக் கொண்ட பல்கீஸ் பானு விவசாயிகளுக்கு ஆதரவளித்திட களத்திற்கு வரும்வழியில் தடுக்கப்பட்டார் , இதிலிருந்து இப்போராட்டக்களத்தின் வெப்பத்தினை உணரமுடியும்.

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் விவசாயிகளே, விவசாயிகளின் இப்போராட்டமானது மோடியின் நிர்வாகத்தையும், அவர்தம் கூட்டாளிகளையும் திணறடித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகளின் இத்தகைய எழுச்சியானது சாதாரண குடிமக்களின் பரவலான ஆதரவை பெற்றுக் கொண்டே வருகின்றது. மோடியும் அவரது கூட்டாளிகளும் புதிய சட்டங்களைப் பற்றிய விவசாயிகளின் அச்சங்களைத் தீர்க்க முயற்சித்தனர்.

அவரது பாஜக கட்சித் தலைவர்கள் விவசாயிகளை "வழிகெட்டவர்கள்" மற்றும் "தேசவிரோதிகள்" என்றும் பெயர்கொடுத்தனர், பொதுவாக பாஜகவையும் அவர்தம் கொள்கைகளையும் விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் ஒரு முத்திரை அதனை ஒருபொருட்டாக போராட்டக்காரர்கள் கருதவில்லை என்பது அவர்களில் போராட்டங்களின் வாயிலாக பிரதிபலிக்கின்றது.

தற்போது போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பலகட்ட முயற்சிகளை மத்திய பாஜக அரசு செய்து கொண்டு வருகிறது, ஆனால் விவசாயிகள் தங்களின் கோரிக்கையான புதிய வேளாண் சட்டங்களை அமைச்சரவையினைக் கூட்டி நீக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

தற்போதைய ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தங்களின் எதிர்கால தலைமுறையினரின் சமூக, பொருளாதார தடைகள் வீழ்ச்சி அடைந்திடக் கூடாது என்ற உணர்வுக்காகவே அன்றி வேறில்லை! இவைதான் அவர்களின் உள்ளங்களில் ஆழமாக ஓடுகின்றன. அதனால் தான் ஒட்டுமொத்த விவசாயிகளும் தங்களின் ஒருமித்த குரலாக “இன்குலாப் ஜிந்தாபாத்“ என்று முழங்குகின்றனர்.

- நவாஸ்

Pin It