நாடாளுமன்றத்தில் மக்களுக்குத் தேவையான செய்திகளைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று பிரதமர் மோடி நேற்றைய தினம் டெல்லியில் பேசியிருக்கிறார்.
இது வேதாளம் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது.
நாடாளுமன்றம் என்பதே மக்களுக்கான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காகத்தான். நாட்டு மக்களுக்குத் தேவையானவை என்ன, அதற்கான சட்டங்களை இயற்றுவது, அது குறித்து சட்ட முன்வரைவின்போது விவாதங்களை நடத்துவது இவை போன்றவைகளை உள்ளடக்கியதுதான் நாடாளுமன்றம்.
இந்த நெறிமுறைகளை, நடைமுறைகளைப் பற்றி இன்றைய பாஜக அரசு கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை, நாடாளுமன்ற மாண்பை மதிப்பதாகவும் தெரியவில்லை.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக, அச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் லட்சக்கணக்கானோர் கூடி அமைதியான போராட்டத்தை அறுபத்திமூன்று நாட்களுக்கு மேல் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியக் குடியரசு நாளன்று நடத்திய டிராக்டர் ஊர்வலம் மிகச்சரியாக நடைபெற்றது என்றாலும், இடையில் காவல்துறையின், கண்ணீர்ப் புகையும், தடி அடியும் வேளாண் மக்களை மத்திய அரசு எப்படி மதிக்கிறது என்பதற்குச் சாட்சியாய் அமைந்துவிட்டது.
வேளாண்சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில், இந்தச்சட்டம் ‘‘மக்களுக்குத் தேவையானதுதானா’’ என்று யோசித்துத்தான் கொண்டுவந்ததா? என்பதை இன்று வேதம் ஓதும் மோடி சொல்ல வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்று சேர்ந்து இவ்வேளாண் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன.
சட்டத்தின் தன்மையை கொஞ்சம் கூட யோசிக்காமல், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், ஓர் அவசர சட்டத்தின் மூலம் இவ்வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. இச்சட்டத்திற்குக் கையெழுத்திட வேண்டாம் என்று திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தியும் கூட குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுவிட்டார்.
இந்த வேளாண்சட்டம் மக்களுக்குத் தேவையான சட்டம்தானா, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைக் கொஞ்சமும் சிந்திக்காத மோடி இன்று மக்களுக்கு வேண்டியதை மன்றத்தில் பேசச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
முதலில் இந்த வேளாண்சட்டத்தை மோடி ரத்து செய்ய வேண்டும், புத்தி சொல்லக்கூடாது.
- கருஞ்சட்டைத் தமிழர்