farmer protestsநாம் நினைப்பது போல அடிமைகளாய் வாழ்வது ஒன்றும் அத்தனை சாதாரணமான ஒன்றல்ல. வாழ்க்கையில் உடல் உழைப்பில் ஈடுபடாமல், வியர்வையின் மணத்தை நுகராமல் காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்துமே சொகுசு வாழ்க்கையை ஒருவன் வாழ்கின்றான் என்றால் அவன் தன்னை ஏமாற்று, நயவஞ்கம், மோசடி, துரோகம், சீரழித்தல், போன்ற அனைத்துக் குணங்களுக்கும் தாயார் படுத்தி இருக்க வேண்டும். அப்படியான மனிதர்களால்தான் எந்த குற்றவுணர்வும் இன்றி இழிவான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

அப்படி இழிவான வாழ்க்கையை வாழ்ந்து பழகிய மனிதர்களுக்கு தன்னைப் போன்று புல்லுருவி வாழ்க்கையை வாழாமல் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் உழைத்து சாப்பிடும் மனிதர்களைப் பார்த்தால் இளக்காரமாகவும், அருவருப்பாகவும்தான் தெரியும்.

போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல், வேலை நிறுத்தம் போன்ற சொற்களைக் கேட்டாலே அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும். முதுகு வளைந்துக் கூழைக்கும்பிடு போட்டு, பல பேரின் வாழ்வை துணிந்து கெடுத்து, தனது வாழ்வையும் வளத்தையும் பெருக்கிக் கொள்ளும் இழி பிறவிகளுக்கு சாகும்வரை உழைத்தே வாழ நிர்பந்திக்கப்பட்ட சாமானிய மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தைப் பார்த்தால் இவர்கள் வாழ்வதற்காக போராடவில்லை போராடுவதற்காகவே வாழ்கின்றார்கள் எனவே இவர்கள் தொழிற்முறை போராட்டக்காரர்கள் என்று அவதூறு செய்யச்சொல்லும்.

ஆனால் தன்மானமும் சுயமரியாதையும் உள்ள மக்களுக்குத் தெரியும் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்வதைவிட போராடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து சாவது மேல் என்று.

இன்று போராட்ட களத்தில் தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு போலீஸ் சித்தரவதைக்கும், அரசு பயங்கரவாதத்திற்கும் தெரிந்தே முகம் கொடுத்து போராடும் தோழர்கள் யாரும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் கிடையாது. ஆளும் வர்க்கம் அவர்கள் மேல் அதை வலுக்கட்டாயமாக திணிக்கின்றது.

இன்று ஒரிசாவிலும், ஜார்கண்டிலும், தண்டகாருண்ய காடுகளிலும் துப்பாக்கி ஏந்தி இந்த அரசுக்கு எதிராக போராடும் பழங்குடியின மக்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள் இந்த அரசு எப்படி பன்னாட்டு பெரு முதலாளிகளுக்காகவும், இந்திய தரகு முதலாளிகளுக்காகவும் தாங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டோம் என்று சொல்வார்கள்.

ஆனால் அரசின் பார்வையில் அவர்கள் பழங்குடியின மக்கள் கிடையாது, அவர்கள் மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள், தேசவிரோதிகள்.

இன்று வழகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் தேசின இனப் போராட்டங்களை இந்த அரசு எப்படி மிருகத்தனமாக இராணுவத்தின் மூலம் ஒடுக்கி வருகின்றது என்பதையும் காஷ்மீரில் இந்திய ராணுவம் கொன்று குவித்த அப்பாவி இஸ்லாமிய மக்களை பற்றியும் தெரிந்தவர்களுக்கு தெரியும் போராட்டம் என்பதை ஏன் சிலர் வாழ்க்கையாக அதையே முழு நேர தொழிலாக மேற்கொள்கின்றார்கள் என்று.

அரசின் குண்டாந்தடிகளும், துப்பாக்கிகளும் எங்கெல்லாம் அத்து மீறுகின்றதோ அங்கெல்லாம் தொழிற்முறை போராட்டக்காரர்கள் உருவாகின்றார்கள். அவர்களின் தொழில் ஏன் போராட்டமாக மாறுகின்றது என்றால் இந்த அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் பின்னால் கார்ப்ரேட்களின் நலன் ஒளிந்திருக்கின்றது என்பதை கண்டு கொண்டதால்தான்.

அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திலும் இருப்பார்கள், மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும் இருப்பார்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் இருப்பார்கள்.

எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்திலும் இருப்பார்கள். அவர்களை நீங்கள் விவசாயிகளின் போராட்டத்திலும் பார்க்கலாம், பழங்குடியின மக்களுக்கு எதிராக இந்த அரசு கட்ட விழ்த்துவிட்டுள்ள பசுமை வேட்டைக்கு எதிரான போராட்டத்திலும் பார்க்கலாம். ஏன் நாளையே இந்த அரசு ஒரு மக்கள் விரோத திட்டத்தை கொண்டுவந்தால் அதற்கு எதிரான போராட்டத்திலும் பார்க்கலாம்.

நீங்கள் கடவுளைக் கூட குறிப்பிட்ட கோயிலில் சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் மக்களின் நலனையே தன் நலனாக ஏற்றுக் கொண்டவர்களை எல்லா போராட்டக் களத்திலும் பார்க்கலாம். ஏனென்றால் அவர்கள் உழைக்கும் மக்களை அவர்களின் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வந்த கடவுள்கள் அல்ல தன்மானமும் சுயமரியாதையும், மனித விழுமியங்களையும் கொண்டாடும் போராட்டக்காரர்கள்.

மன்னர்களுக்கு கூட்டிக் கொடுத்தும் அதற்கு பிறகு வெள்ளைக்காரர்களுக்கு கூட்டிக் கொடுத்தும் அவனது ஷூ நக்கியும் வயிற்று ஜீவனம் செய்து வந்த புழுவினும் இழிந்த பிறவிகளுக்கு போராட்டக்காரர்களை பார்த்தால் இளக்காரமாக தெரிவதில் வியப்பில்லைதான்.

அதனால்தான் அந்த ஹூ நக்கி சித்தாந்தத்தின் அரசியலை ஏற்றுக் கொண்ட மோடியால் டெல்லியில் கடும் பனியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததை இழிவு செய்யும் வகையில் போராடும் விவசாயிகளை மட்டமாக பேச முடிகின்றது.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய மோடி, “நாட்டில் ஒரு புதியவகை கூட்டம் உருவாகியிருக்கிறது. அக்கூட்டம் ஒரு சட்டத்தை அரசு முன்மொழிந்தால், அது யாருக்கான சட்டமாக இருக்கிறதோ அவர்களின் பின்னால் இருந்து எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்துகிறார்கள். மாணவர்கள் போராட்டமா அங்கேயும் இருப்பார்கள்.

மருத்துவர்கள் போராட்டமா அங்கேயும் அவர்கள் இருப்பார்கள். இவர்களிடமிருந்து நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களால் போராட்டம் இல்லாமல் வாழ முடியாது. தவறான கருத்தியலை மக்களிடம் விதைத்து தவறானபாதையில் வழிநடத்துவதே அவர்களின் பிரதான திட்டம். இவர்கள் சர்வதேச அளவில் அனைத்து இடங்களிலும் இருந்து கொண்டு இந்தியாவைப் பிரித்தாள நினைக்கிறார்கள்” என்று கூறி இருக்கின்றார்.

இது மோடியின் குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சங்கிக் கூட்டத்தின் குரலும் அதுதான். முதலாளிகளின் உள்ளாடைகளாய் இருக்கும் இந்தக் கூட்டத்திற்கு தனது எஜமானர்களுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியாது.

தேசவிரோதிகள், தீய சக்திகள், மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள், பாகிஸ்தான், சீனா கைக்கூலிகள் போன்ற வார்த்தைகள் மட்டுமே அவர்களின் மண்டைகளில் எந்நேரமும் ஜப மந்திரங்களாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

மக்கள் விரோத சங்கிக் கும்பலை தவிர ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள். அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மோடி அரசும் அதன் ஏவல் நாய்களும் செய்யும் சதித்திட்டத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

எப்படி கோயிலில் விபூதி தட்டை பூசாரி எடுத்துவருவது விபூதி கொடுக்க அல்ல பிச்சை எடுக்கத்தான் என்பதை பக்தர்கள் அறிந்து வைத்திருப்பார்களோ அதே போல மக்கள் மோடியின் ஒவ்வொரு திட்டமும் எதற்காக கொண்டு வரப்படுகின்றது என்பதை தெளிவாக உணர்ந்தே எதிர்க்கின்றார்கள்.

ஆனால் சங்கிகளின் மூளை, மக்கள் இன்னமும் தங்களின் பொய் பித்தலாட்டத்திற்கு நம்பும் ஏமாளிகளாக இருப்பதாக எண்ணிக் கொண்டே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதனால்தான் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் போராடும் விவசாயிகள் மீது தீவிரவாத முத்திரை குத்த முடிகின்றது.

விவசாயிகள் மோடி அரசின் மூன்று நாசகார விவசாய மசோதாக்களுக்கு மட்டும் தற்போது எதிராக இல்லை அவர்கள் ஒட்டுமொத்த சங்கிக் கூட்டத்திற்கும் எதிராக இருக்கின்றார்கள். அதன் மூலம் இது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லமால் நாட்டை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபடுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கார்ப்ரேட்டுகளுக்கு மாமா வேலைப் பார்க்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாகவும் மாற்றி இருக்கின்றார்கள்.

இனி பஞ்சாப்பிலோ அரியானாவிலோ பிஜேபி தலை எடுக்கவே முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலை நிச்சயம் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கூடிய விரைவில் ஏற்படும். அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட தொழிற்முறை போராட்டக்காரர்கள் நிச்சயம் துணை செய்வார்கள்.

தொழிற்முறை போராட்டக்காரர்களை வாழ்த்துவோம், வரவேற்போம் அவர்களோடு இணைந்து நாட்டை முதலாளித்துவ பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தும் பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியில் இருந்தும் மீட்டெடுப்போம்.

- செ.கார்கி

Pin It