பாசிஸ்ட்கள் தனது சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத அனைவருக்கும் புத்தி புகட்ட விரும்புகின்றார்கள். இந்த நாட்டில் நாம் வாழ வேண்டும் என்றால் ஒன்று பார்ப்பன பாசிசத்தையும், முதலாளித்துவ பாசிசத்தையும் ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு அடிமையைப் போல சகித்துக் கொண்டு வாழ வேண்டும். வேறு எந்த மாற்றையும் அவர்கள் தருவதில்லை.

farmers protest 500அப்படி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கு எதிராக செயல்படும் அனைவரையுமே கொல்வதற்கு அவர்களின் சித்தாந்தம் மகிழ்ச்சியாக இசைவு தெரிவிக்கின்றது.

எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், சிறுபான்மையின மக்களும், தலித்துகளும், கம்யூனிஸ்ட்களும், நாத்திகர்களும் அவர்களின் கொலைப் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்று இருக்கின்றார்கள். தற்போது அந்த கொலைப் பட்டியலில் இந்திய விவசாயிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எப்பொழுதெல்லாம் தலைமை கண்ணசைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இவர்களின் ஏதாவது ஒரு பிரிவினரின் ரத்தம் இந்த மண்ணில் சிந்த வைக்கப்படும். அதற்கு பெயர் சித்தாந்த நரபலி.

அகோர பசி எடுத்த ஒரு ஓநாயைப் போல பார்ப்பன பாசிசம் என்னும் சித்தாந்தம் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. ரத்த வாடையை நுகரவில்லை என்றால் அதன் இருப்பு அழிந்துவிடும் என்பதால் அவ்வப்போது அதற்கு நரபலி கொடுத்து ஊட்டமளிக்கப்படுகின்றது.

நாட்டின் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பே நரபலி கூட்டத்தின் பிடியில் தற்போது உள்ளது. நாட்டில் ஒழுங்காக நரபலி நடைபெறுவதையும் மகாராஜா மனம் குளிருவதையும் உறுதிப்படுத்துவதுதான் அதன் முதன்மையான பணி.

அதனால் நம்மால் அதை எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. கேட்டால் அடுத்த நரபலி நீங்களாகவும் இருக்கலாம்.

ஒரு இந்திய குடிமகனாக இனி ஒவ்வொருவரும் பாசிஸ்ட்கள் நிகழ்த்தும் படுகொலைகளை பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். தேர்தலுக்காக படுகொலைகளை நடத்துவதையும், படுகொலைகளை நடத்துவதற்காகவே தேர்தல்கள் நடத்துவதும் இனி ஜனநாயகத்தின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக மாற்றப்படும்.

பாபர் மசூதி இடிப்பும், குஜராத் படுகொலைகளும், காவி பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளும் எப்படி அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்யாமல் அதை வலுப்படுத்தி பாசிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்தியதோ, அதே போல இனி தாக்குதலுக்கு எளிய இலக்காக இருக்கும் விவசாயிகளை தினம் தினம் நரபலி கொடுப்பதன் மூலம் பிஜேபியை ஆதரிக்கும் ரத்தவெறி பிடித்த கூட்டத்தின் மனங்கள் திருப்தி செய்யப்படும்.

அது மிக முக்கியமானது. சோத்துக்கு வழியற்று பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு மோடி தள்ளினாலும் ஒரு பிஜேபிகாரனின் மனநிலை என்பது பார்ப்பனியத்திற்கு எதிர் நிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக அவன் பிச்சை எடுப்பதை பெருமையாகவே நினைப்பான்.

அந்த உண்மையை பாசிஸ்ட்கள் நன்றாகப் புரிந்து கொண்டதால்தான் இன்று நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளை பட்டப்பகலில் படுகொலை செய்திருக்கின்றார்கள்.

பாசிச மோடி அரசு கொண்டு வந்த விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 மற்றும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020) போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

விவசாயிகள் யாரும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை என்றாலும், தானாக முந்திக் கொண்டு மூன்று விவசாய மசோதாக்களை நிறுத்தி வைத்ததோடு விவசாயிகளுடன் பேச குழுவையும் உச்சநீதி மன்றம் அமைத்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

இதனால் கார்ப்ரேட் கைக்கூலியான மோடி அரசு போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஒழித்துக்கட்ட பல்வேறு நரி வேலைகளைப் பார்த்தது. ஆனால் விவசாயிகள் ஒருமித்த குரலில் மூன்று வேளாண் மசோதாக்களையும் மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறாமல் தங்களின் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார்கள்.

பாசிச மோடி அரசின் விவசாய விரோத செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் அம்பலமாகி காறித் துப்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களின் பார்ப்பன பாசிசமும், முதலாளித்துவ அடிவருடித்தனமும் அம்பலப்பட்டதால் அதற்கு காரணமான விவசாயிகளைப் பழிவாங்க மோடி அரசு துடித்துக் கொண்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த ஆண்டு டெல்லியில் 72 வது குடியரசு தினத்தின் போது அமைதி வழியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியானா மாநிலம் கர்னலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்திருக்கின்றான்.

உழைக்கும் வர்க்கத்தின் மீது உழைக்காமல் நக்கிப் பிழைத்தே உடல் வளர்க்கும் பாசிஸ்ட்களுக்கு ரத்தத்தில் ஊறிப்போன அருவருப்பு உணர்ச்சிதான் அவர்களை புழுக்களைப் போல நசுக்கத் தூண்டியிருக்கின்றது.

இந்தப் பச்சை படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்பதை முன் உணர்ந்து வழக்கம் போல இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் தலையிட்டு இருக்கின்றது.

இதற்கு முன்னால் விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எல்லாம் உச்சநீதி மன்றம் எப்படி எதிர்வினை ஆற்றியது என்பதை அறிந்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் 'கண்ணீரைப்' புரிந்து கொள்வது கடினமானதல்ல.

தற்போது வெடிக்கக் காத்திருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை மட்டுப்படுத்த ஆஷிஸ் மிஷ்ரா கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. மோடி ஆட்சியில் காவி தீவிரவாதிகள் எல்லாம் எப்படி விடுதலை செய்யப்பட்டார்களோ அதே வழிமுறையில் ஆஷிஸ் மிஷ்ராவும் விடுதலை செய்யப்படுவான். ஏன் பிரக்யா சிங் தாகூர் போல அவனும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட ஆக்கப்படலாம்.

விவசாயிகளை காவி பாசிஸ்ட்கள் கொன்று குவித்தாலும் இந்த மானங்கெட்ட விவசாய விரோத கார்ப்ரேட் கைக்கூலிகளின் ஆட்சிகளில் வாழ வழியற்று அவர்கள் தங்களைத் தாங்களே நீண்ட காலமாக அழித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதுதான் இன்றைய இந்திய விவசாயிகளின் நிலை. ஒன்று அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் இனி அரசு ஆதரவோடு செயல்படும் காவி பாசிஸ்ட்களால் கொலை செய்யப்படுவார்கள். அதாவது கார்ப்ரேட் பாசிசத்தை காக்க நரபலி கொடுக்கப்படுவார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்கள் மீது டெல்லியில் காவி பாசிஸ்ட்களால் நடத்தப்பட்ட கலவரத்தைப் போல இனி நாடெங்கும் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளையும் கொன்று குவித்து உலகில் பெண்கள் மட்டுமல்ல விவசாயிகள் வாழ்வதற்கும் இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்ற சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள்.

- செ.கார்கி

Pin It