காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே தனியார்மயம் ஆரம்பித்த போதிலும், தனியார்மயத்துக்கென்ற பிரத்யேகமாக ஒரு அமைச்சகத்தையே (Ministry of Disinvestment) உருவாக்கிய அவப்பெயர் வாஜ்பாய் அரசையே சேரும். அதன் பிறகுதான் துரிதகதியில் பகுதி பகுதியாகத் தனியார்மயப்படுத்தும் போக்கு தீவிரமடைந்தது.
பின்னர் அது தனியார்மயத் துறையாக்கப்பட்டு அதன் பெயர் அதற்கு முற்றிலும் மாறான பொருளில் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை ‘திபம்’ (DIPAM) என்று மாற்றப்பட்டது. பொதுத்துறை முதலீட்டு மேலாண்மை அமைப்பான திபம் செய்வதென்னவோ தனியார்மயம் மட்டும்தான், மீண்டும் அதன் பெயரை தனியார்மயத் துறை என்று பெயரிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
தனியார்மயப்படுத்துவதே பாஜகவை பொறுத்த வரை சிறந்த மேலாண்மையாகக் கருதப்படுகிறது. ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் எந்தப் புத்தாக்க முயற்சியும் காண முடியவில்லை, ஆனால் தனியார்மயப்படுத்திப் பொதுச் சொத்துக்களை அழிப்பதற்குத்தான் விதவிதமான புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்கிறது பாஜக அரசு. திட்டக் குழுவை நீக்கி அதற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயத்தின் ஊதுகுழலான நிதி அயோக் இத்தகைய அழிவுவேலைகளுக்கான திட்டமிடலையே செய்து வருகிறது.
1991லிருந்து இது வரை 4,88,827.95 கோடி மதிப்பிற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தனியார்மயத்தில் 68.7 சதவீதம் நரேந்திர மோதி அரசின் மூலம்தான் செய்யப்பட்டுள்ளது. வாஜ்பாய் அரசையும் கணக்கில் கொண்டால் மொத்தத்தில் 75% தனியார்மயம் பாஜக ஆட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்களில் 75 சதவீதத்தை அழித்துத் தீர்த்து விட்டு சோசலிசச் சுமை பாரமாக இருப்பதாகக் குறைபட்டுக் கொள்கிறது பாஜக அரசு. பொதுத்துறை நிறுவனங்களை சோசலிசச் சுமைகளாகக் காட்டி, அரசை சுமைதாங்கி போல் சித்தரிப்பது பாஜக அரசுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால் அவற்றின் பங்குகளை விற்றுத் தனியார் துறைக்குத் தீனி போடுவது மட்டும் ருசிக்காமல் இல்லை.
பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்கத் திறனையும், புத்தாக்க முயற்சிகளையும் பறிக்கும் விதமாக அவற்றின் நிதிகளை ஒட்டச் சுரண்டி விட்டுத் தனியார் நிறுவனங்களின் கடன்களையெல்லாம் அவற்றின் தலையில் கட்டிய பிறகு பொதுத்துறை நிறுவனங்களால்தான் நட்டம் ஏற்படுவதாகக் கணக்குக் காட்டி, அவை பெருஞ்சுமையேற்படுத்துவதாகக் கூறி அவற்றைத் தின்றுத் தீர்ப்பதும் மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு வாடிக்கையாகி விட்டது.
2019இல் நிதி அயோக் 48 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்றும், 28 பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக விற்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. தற்போது அடுத்த சுற்றில் விற்க வேண்டிய / தனியார்மயப்படுத்த வேண்டிய பொதுத்துறை நிறுவனங்களை அடையாளமிட்டுப் பட்டியலிடும் ஆக்கப்பூர்வமான பணியை நிதி அயோக் மேற்கொண்டுள்ளது. இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதே நிதி அயோக்கின் வாடிக்கையாகி விட்டது.
2014 மே மாதத்தில் பங்குச் சந்தைகளில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்தச் சந்தை மதிப்பில் 22.8 சதவீதமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பு, மோதி ஆட்சிக்கு வந்த பிறகு 2020இல் 7.7 சதவீதமாக வீழ்ந்துள்ளது. 2020-21இல் தனியார்மயத்தின் மூலம் ரூ. 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
பாதுகாப்புத்துறை, வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, உரத்துறை, பெட்ரோலியத் துறைகளில் மட்டும் பெயருக்கு நான்கு பொதுத்துறை நிறுவனங்களை வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையுமே விற்கப் போவதாக முடிவெடுத்துள்ளது மத்திய ஆட்சியாளர்கள் எந்த அடிப்படையில் அவற்றை முக்கியமற்ற துறைகள் என்று முடிவு செய்தார்கள்?
பாஜக அரசு பத்துக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களிடம், அவற்றிலுள்ள அரசின் பங்குகளை வாங்குமாறும் அதன் மூலம் அரசுக்கு நிதியளிக்கும் படியும் கேட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, அவற்றைத் தனியார்மயப்படுத்துவதும், பிறகு அவற்றைச் சுரண்டும் விதமாக அரசுப் பங்குகளை வாங்கச் சொல்வதும், முரண்பாடுகளின் உச்சம், இவர்கள் தேவைப்பட்டால் சுரண்டுவதற்கு சோசலிசச் சுமை தான் தேவைப்படுகிறது. இப்பொழுது வளம் உருவாக்குபவர்களையே கேட்கலாமே, ஏன் முடியவில்லை? வட்டியில்லாமல் ஒற்றை ரூபாய் அவர்களிடம் பெற முடியுமா?
தற்போது பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கான ஏற்பாடாகப் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு அளிக்க இயலாது என நிதியமைச்சர் கைவிரித்து விட்டார்.
2020-2025இல் 111 இலட்சம் கோடி மதிப்பில் தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இதில் 21% தனியார் துறையிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு நிதி பெறுவதற்கான ஒரு புதிய வழியாக சொத்து மறுசுழற்சி / பணமாக்குதல் என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளது பாஜக அரசு.
வளர்ச்சிக்காகச் சொத்துகளை மறுசுழற்சி செய்கிறோம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை விற்று 90,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. சாலைகள், நிலம், கட்டிடங்கள் துறைமுகங்கள், ரயில்வே, ரயில் நிலையங்கள், குழாய் வழிகள், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்குச் சொந்தமான கோபுரங்கள் போன்ற தொலைத் தொடர்புச் சொத்துகள், துறைமுகச் சொத்துகள், எனத் துண்டு துக்காணி விடாமல் எல்லாப் பொதுச் சொத்துகளையும் விற்பதன் மூலமும், ஒப்பந்த வாடகைக் குத்தகைக்கு விடுவதன் மூலமும் 90,0000 கோடி நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
1961 துறைமுகச் சட்டத்தின் படி துறைமுகத்தின் நிலங்களை விற்க முடியாத படி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மாற்றீடு செய்யும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய துறைமுகச் சட்டத்தில் துறைமுக இடங்களை விற்கும் விதமாக விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதிலுள்ள பொதுச் சொத்துக்களும், அதன் மூலம் பெற்றுவந்த அரசு வேலைவாய்ப்புகளும் முற்றிலும் பறிபோகும் விதமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்படவுள்ளன.
73,000 கோடிக்கு நிதித் தொகுப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் விடுமுறைப் பயணச் சலுகை (LTC), அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் (ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்) ஆகியவற்றை மட்டுமே அளித்துள்ளது பாஜக அரசு. தொலைக்காட்சி வாங்கினால் ’ரிமோட்’ இலவசம் என்பது போல்தானுள்ளது அரசு அறிவித்துள்ள விடுப்பு, பயணச் சலுகை, அதன் மூலம் வரிவிலக்கு பெற வேண்டுமானால் வரிவிலக்குத் தொகையை விடப் பல மடங்கிற்கு, 12% ஜி.எஸ்.டி. வரிகொண்ட பொருள்களில் செலவழித்தால் மட்டுமே இந்தச் சலுகையை பெற முடியும். வழக்கம் போல் எளிய மக்களுக்கு ஒன்றும் தரப்படவில்லை. இதை நிதித் தொகுப்பு என்பதும் இதன் மூலம் நாட்டின் வேண்டலை அதிகரிக்க முடியும் என்று நம்புவதும் அதீதமான குருட்டு எதிர்பார்ப்பே.
மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிவாரணத் தொகையில் 73,000 கோடியை இரண்டு வருடத்திற்குப் பிறகே அளிக்க முடியும் எனக் கூறியுள்ளது மத்திய அரசு. மாநிலங்கள் பெறக் கூடிய 0.5% கூடுதல் கடனுக்கு வட்டிச் சேவை அளிக்கவும் மத்திய அரசு முன்வரவில்லை. கடன் சந்தையில் அரசு கடன் பெற்றால் அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது என்ற ஒரு முதலாளித்துவக் கோட்பாடு நவீன தாராளமய ஆளுகையில் வலிந்து கடைபிடிக்கப்படுகிறது. இதை ‘நெருக்கித் தள்ளுதல்’ (crowding out) என்கிறார்கள்.
இத்தனை நாட்களாக மத்திய அரசு கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிவாரணம் அளிக்க விடாமல் தடுத்ததும் இதே கோட்பாடுதான். ஆனால் உண்மையில் இந்தக் கோட்பாட்டினால் ‘க்ரவுடிங் அவுட்’ செய்யப்படுபவை மத்திய, மாநில அரசுகளே. தனியார் நிறுவனங்கள் மலிவுக் கடன் பெற வேண்டுமென்பதற்காக அரசு நிறுவனங்களுக்கு மலிவுக் கடன் மறுக்கப்படுவது ‘‘நெருக்கித் தள்ளுதல்’’ இல்லையா? சிறு குறு நிறுவனங்களுக்கு நிதி கிடைக்காமல் தடுத்து பெருமளவில் கடன் சேவைகளை பெற்றுக் கொள்ளும் பெரு நிறுவனங்கள் நெருக்கித் தள்ளுதலில்’ ஈடுபடவில்லையா.
வங்கிகளில் நலிந்த பிரிவினருக்கும் தொழில்களுக்கும் முன்னுரிமை பிரிவுக் கடன் அளிப்போம் என்று வாக்களித்து விட்டு அதில் அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களையும் வீட்டுக் கடன் நிதி நிறுவனங்கள் உட்பட சேர்த்திருப்பது, சலுகை தருகிறோம் என்ற விதத்தில் செய்யப்படும் ‘நெருக்கித் தள்ளுதல்’ தானே! இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு, அதற்குள்ளே இட ஒதுக்கீட்டுக்கும் வாய்ப்புகளை பெறுவதற்கும் தடையாக இருப்பவர்களை இடைச் செருகுவது போலத்தான் இதுவும்.
சிறு, குறு மத்திய நிறுவனங்களில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே நிறுவனக் கடன் கிடைத்துள்ளது. பெரும்பாலானோர் நிதியுதவி பெற முடியாமல் தவிக்கின்றனர். நிதித்துறை சாரா நிறுவனங்களின் கடன் - மதிப்பும் அதிகரித்துள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் விற்பனையையும், ஏற்றுமதியையும் அதிகரிக்க வழிகாட்டுமாறு வால்மார்ட் பெருநிறுவனத்திடம் நிதின் கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமிங்கலங்கள் சின்ன மீன்களைப் பாதுகாக்குமா? விழுங்காமல் விட்டு வைக்குமா! இந்தியத் திமிங்லம் அம்பானி சிறு குறு நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்தற்காக அவற்றுடன் பங்குறவு கொள்ள முன்வந்துள்ளது திகிலூட்டுகிறது.
எளிய மக்களுக்கு வங்கிச் சேவை அளித்து வந்த அஞ்சலகங்களிலும் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சத் தொகை ரூ.500 வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அஞ்சல்துறை அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2 கோடி ரூபாய் வரை கடன்களுக்கான ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இச்சலுகை பயிர்க் கடனுக்கோ, டிராக்டர் கடனுக்கோ அளிக்கப்படாது என விவசாயிகளையும் விவசாயத் துறையையும் வஞ்சித்துள்ளது மத்திய அரசு.
பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக விவசாயச் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது, பஞ்சாப் அரசு குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. மற்ற மாநிலங்களும் விவசாய நலன்களைப் பாதுகாக்கும் முறையில் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
கேரள அரசை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் காய்கறிகளுக்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமியோ தான் ஒரு விவசாயியாக இருந்ததால் விவசாய நலன்களுக்கு இந்தச் சட்டம் எதிரானது அல்ல எனத் தனக்கு நன்றாகத் தெரியும் என ஆதரித்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது அவர் எப்படிப்பட்ட விவசாயியாக இருந்துள்ளார் என்று.
உலக வறுமைக் குறியீட்டுத் தரத்தில் 107 நாடுகளில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 37.4% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 17.3% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின்மையையே இது சுட்டிக்காட்டுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறா விட்டால் இந்நிலை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.
தற்போது கிராமப்புறங்களிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உ.பி., பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்திஸ்கார் ஆகிய 6 மாநிலங்களில் கிராமத்திற்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்காளில் 94 சதவீதத்தினரின் வருமானம் குறைந்துள்ளதால் அதில் 70 சதவீதத்தினர் மீண்டும் நகரத்திற்கே திரும்ப உள்ளதாக தெரிய வந்துள்ளது.
187 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிர்வாக அமைப்பின் தலைமையை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பெற்றுள்ளது. அமைப்பின் கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், வரவு செலவுத் திட்டத்தைத் தீர்மானித்து, தலைமை இயக்குநரைத் தேர்ந்தெடுப்பது ‘ஐ.எல்.ஓ’வின் உச்ச நிர்வாக அமைப்பாகும். குறைந்தபட்சம் இதற்காகவேனும் மக்கள் விரோத தொழிலாளர், விவசாய சட்டங்களை நிறைவேற்றா விட்டால், உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம் ஏற்படும்.
பணவீக்கம்:
உணவுப் பொருட்களின் விலை, குறிப்பாகக் காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 7.34 சதவீதமாகவும், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு 10.68 சதவீதமாகவும் இருந்தது. காய்கறிகளின் விலைவாசி 20.73 சதவீதமும், பருப்பு வகைகளின் விலைவாசி 14.67 சதவீதமும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 7.78% சதவீதமாக உள்ளது.
ஆகஸ்டில் உற்பத்தி நிலை:
புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி முதன்மைத் துறைகளின் உற்பத்தி 10.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் சுரங்கத் துறையில் 9.8 சதவீதமும், செய்பொருளாக்கத் துறையில் 8.6 சதவீதமும், மின்சாரத் துறையில் 1.8 சதவீதமும் வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. புகையிலை, அடிப்படை உலோகங்கள், இதர வாகனங்கள் தவிர மற்ற அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது.
பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் உடனடி நுகர்வுப் பொருட்கள் (3.3%), மூலதனப் பொருட்கள் (15.4%), முதன்மை பொருட்கள் (11.1%), இடைநிலைப் பொருட்கள் (6.8 %), கட்டுமானப் பொருட்கள் (2.3 %), நீடித்த நுகர்வுப் பொருட்கள் (10.3 %) ஆகியவற்றின் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
செப்டம்பரில் உற்பத்தி நிலை:
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, முதன்மைத் தொழில்துறைகளின் உற்பத்தி செப்டம்பரில் 5.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. உள்கட்டுமானத் துறைகளின் உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் மருத்துவ சுகாதார வசதிகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ஆயுஷ்மான் சர்க்கார் என்ற திட்டத்தின் மூலம் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு அமைப்புகளின் மூலம் மிகவும் தாராளமாக 10,000 கோடி அளிக்கப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது.. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 640,867 கிராமங்கள் உள்ளன.
10,000 கோடியை 640,867 கிராமங்களுக்கும் பங்கிட்டால் ஒரு கிராமத்திற்கான சுகாதார மேம்பாட்டுக்காகச் செய்யப்பட்ட முதலீடு வெறும் 15,000 ரூபாய் மட்டுமே. 500 ரூபாயில் தனிநபர்களையும். 15,000 ரூபாயில் ஒரு கிராமத்தையும் மீட்சி அடையச் சொல்கிறது பாஜக அரசு. உலகளவில் உடல்நலம், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளில் கடைசி நான்காவது (155/158) இடத்தில் இந்தியா உள்ளது என ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தர நிர்ணய அமைப்பை (BIS) நுகர்வோர் விவகாரங்கள் துறையிலிருந்து வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்துடன் இணைக்க உள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அவ்வாறு மாற்றப்படுமானால் தர நிர்ணய மதிப்பீடுகள் நுகர்வோரை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் நிறுவனங்களுக்குச் சாதகமான வகையில் தளர்த்தப்பட்டு நுகர்வோர் நலன்கள் பாதிக்கப்படும்.
இந்தியத் தர நிர்ணய அமைப்பை நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் இணைந்திருந்தால்தான் நுகர்வோர் புகார்களை முறையாக நிவர்த்தி செய்ய முடியும் என்று நுகர்வோர் விவகாரங்கள் துறையும் இது குறித்து வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உலகின் ஆற்றல் மையமாக இருக்கும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா ஆற்றல் உற்பத்தி மையமாக இருந்தால் கூட பெருமைக்குரிய விசயமாகக் கருதலாம்.
ஆனால் ஆற்றலின் நுகர்வு மையமாக மட்டும் இருப்பதில் என்ன பெருமை உள்ளது? நிலக்கரி சார்ந்த 14 பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனச் செலவினங்களை 2021இல் இருமடங்கு உயர்த்தி 2 இலட்சம் கோடியாகவும், 2020இன் இலக்கு 1 இலட்சம் கோடியாகவும், 2022இன் இலக்கு 3 இலட்சம் கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. படிம ஆற்றல் துறைகளுக்கான முதலீடுகளைக் குறைக்காமல் இரு மடங்காகவும், மும்மடங்காகவும் உயர்த்துவது சூழலியல் அடிப்படையில் அரசின் பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது.
இந்தியா உலகச் சந்தைகளில் நுழைந்து முதன்மையான ஏற்றுமதி செய்யும் நாடாக உயர வேண்டும் என நிதி அயோக்கின் முதன்மை நிர்வாக அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா போன்ற கொள்கைகள் கடந்த காலத்தில் பலனளிக்கவில்லை என்றும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகம் கோவிட்-19க்கு முன்பே குறைந்திருக்கும் போது ஏற்றுமதிக்காக உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதை தடுக்கச் சொல்வது தவறான பரிந்துரை. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக வளர்ந்த சீனாவே தற்போதைய பொருளாதார நிலைக்குப் பொருத்தமாக உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்கும் விதமான கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.
ஆனால் இந்தியாவில் இந்தப் பொருத்தப்பாடு கருதப்படாமல் தொழில் துறை உற்பத்தியையும் மேம்படுத்தாமல் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் இந்தியாவின் பெரிய உள்நாட்டுச் சந்தையைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியா ஏற்றுமதியின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும், சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாக்க இந்தியாவை அர்ப்பணிக்க வேண்டும் என்பது போல் ஏற்றுமதி சார்ந்த கொள்கையையே எக்காலத்திற்கும் உயர்த்திப் பிடிக்கும் இவர்களுக்கு சர்வதேச முதலாளித்துவ வர்த்தகத்தின் பாதுகாவலர்கள் என விருதளித்துப் பாராட்டுமாறு உலக வர்த்தக அமைப்புகளுக்குப் பரிந்துரைதான் செய்ய வேண்டும். புள்ளியியல் நிபுணர் பிரனாப் சென் 10 லட்சம் கோடி நிதிச் சலுகை அளித்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் 2019-20ஆம் ஆண்டின் நிலையை அடையும், இல்லையென்றால், 10.8% குறுக்கமடையும் எனத் தெரிவித்துள்ளார்.
முதல் 100 இந்தியப் பணக்காரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 14 சதவீதம் அதிகரித்து ரூ.37 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மொத்தச் சொத்து வளர்ச்சியில் முகேஷ் அம்பானி மட்டுமே 50 சதவீதத்துக்கு மேல் பங்கு வகிக்கிறார். 2025ல் புதிதாக 100 பெரும் பணக்காரர்கள் உருவாவார்கள் என இண்டஸ் தொழில்முனைவோரின் உலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார / பொருளாதார இரட்டை நெருக்கடியானது பெருமுதலாளிகளின் மூலதனத் திரட்டலை ஊக்குவித்துள்ளது தெரிகிறது.
கீனிசிய பொருளாதாரவியலாளர், ஸ்டிகிலிட்ஸ் செல்வந்தர்களிடம் வரிவிதிப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். என்றும் எதை செய்யக் கூடாதோ அதற்கான மாதிரியாக இந்தியா இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் வேலை செய்வோரில் பாதிக்கு மேற்பட்டோர் அடுத்த 12 மாதங்களில் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாக ஒரு சர்வதேச ஆய்வு கூறுகிறது. 1930க்கு பிறகு மிகப்பெரும் பொருளாதார மந்த நிலையை உலகம் சந்திக்க உள்ளதாக உலகவங்கி எச்சரித்துள்ளது. வளரும் நாடுகள் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருமான குறைவு ஏற்படும், இது சமூக ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும் என்றும் சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் இவர்கள் பரிந்துரைகளைத் தவிர பெரிதாய் என்ன நிவாரணம் அளித்துள்ளார்கள்?
ஜி-20 அளிக்கும் கடன் நிவாரண திட்டம் வளரும் நாடுகள் 2020ல் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகையில் 1.66 சதவீதத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஏனென்றால் இத்திட்டம் அரசுகளுக்கிடையிலான கடன் சேவைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் பங்கேற்கவில்லை. ஜி-20 அளிக்கும் கடன் நிவாரண திட்டத்தில் தனியார் நிறுவனங்களையும் பங்கேற்கச் செய்ய ஏன் சர்வதேச பண நிதியத்திற்கோ, உலக பொருளாதார அமைப்புகளுக்கோ, உலக வங்கிகக்கோ முடியவில்லை.
இவ்வளவு ஆண்டுகளாக அரசின் நிதி ஒதுக்கீடுகளை/செலவினங்களை எதிர்த்து சிக்கன நடவடிக்கைகளை திணித்து வந்த இந்த அமைப்புகளின் தலைவர்கள். சந்தை இயங்க வேண்டும் என்பதற்காக சமூக சொத்துக்களின் மூலம்(சோசலிச சுமைகளை திண்பதன் மூலம்) நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு கூக்குரல் விடுக்கிறார்கள். பொருளாதார பாட நூல்களில் முதலாளித்துவ சந்தை தானாகவே சமநிலையை அடையும் திறன் வாய்ந்த்தாக மெச்சிப் போற்றப்படுகிறது.
இப்பொழுது ஏன் அந்த சந்தையால் அரசின் உதவியில்லாமல் சமநிலையை அடையமுடியவில்லை. பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் போது நட்டத்தை ஏற்க மட்டும் அரசு செயல்பட்டு தனியார் நிறுவனங்களை பாதுகாக்கவேண்டும். நெருக்கடி சரியானவுடன் மீண்டும் அரசின் வாயைக் கட்டிவிடுவார்கள்.
மீண்டும் ஒரு பிரெட்டன் வுட் தருணம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச பண நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டினா தெரிவித்துள்ளார், இரண்டாம் உலகப்போருக்கு பின் பொருளாதார நெருக்கடிக்களை தவிர்ப்பதற்காக எவ்வாறு பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்பட்டதோ அதே போல் இன்றும் தேவைப்படுகிறது. என்று கூறியுள்ளார்.ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற இப்பொருளாதார அமைப்பு ரீதியாகக் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு சீர்திருத்தத்தையாவது முன்மொழிந்தாரா என்றால் இல்லை.
இந்தப் பொருளாதார நெருக்கடியிலும், சமூக அக்கறை என்பது துளியும் இல்லாமல், பெருமுதலாளிகள் இலாபம் பெற உதவும் ஏல முறைகளை உருவாக்கியவர்களுக்கே பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கோவிட்-19க்கான தடுப்பூசிகளை, மருந்துகளை, பிற சிகிச்சைகளை விரைவாக, மலிவாகப் பெறும் வகையில் அறிவுச் சொத்துரிமை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காக உலக வர்த்தக அமைப்பில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்து செய்த முன்மொழிவை வளர்ந்த நாடுகள் தடுக்கின்றன.
12 இலட்சம் பேர் கொள்ளை நோயில் இறந்த பிறகும் இதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த ஆண்டிற்குத் தள்ளி வைத்துள்ளார்கள் என்றால், இந்த பேரிடரிலும் உயிர்களைப் பொருட்டாகக் கருதாது இலாபத்தையே கருதும் முதலாளித்துவத்தின் மூலம் ஒருபோதும் மனித இனம் மீட்சி பெற முடியாது என்ற பேருண்மை விளங்கும்.
போப்பே முதலாளித்துவத்தின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். போப் ஃபிரான்சிஸ் “முதலாளித்துவச் சந்தையின் மாயக் கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன என்பதை கொரோனா கொள்ளை நோய் நிரூபித்துள்ளது; அனைவரின் கருத்துக்கும் ஒத்துழைப்புக்கும் இடம் தரும்படியான, போரை அறவே விலக்கும் படியான புதுவித அரசியலே இன்றைய உலகிற்குத் தேவை” என்று கூறியுள்ளார். ஆனால் சர்வதேசப் பொருளாதார அமைப்புகள் அமைப்பு மாற்றத்தைப் பற்றி வாய் திறக்காது வெறும் வார்த்தைகளாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே நிவாரணம் அளித்து வருகிறார்கள்.
- சமந்தா