vikatan logoவிகடன் குழுமம் 176 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வந்திருக்கின்றது. விகடன் போன்ற பாரம்பரியமான நிறுவனம் இப்படி செய்யலாமா எனப் பலர் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் விகடனும் ஓர் இரக்கமற்ற கார்ப்ரேட் பத்திரிகை நிறுவனம் என்பதையும், முதலாளிகளுக்கு லாபம் வரும் வரை மட்டுமே தொழிலாளர்கள் குறைந்த பட்சம் நிம்மதியாகவாவது வாழ அனுமதிக்கப் படுவார்கள் என்பதையும் புரிந்து கொள்ளும்போதுதான் நாம் விகடனையும் புரிந்து கொள்ள முடியும்.

விகடன் குழுமம் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து கார்ப்ரேட் நிறுவனங்களும் தங்களுடைய தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கி வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளி அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வான் என்று யோசிப்பவன் முதலாளித்துவ உலகில் தன்னுடைய இருத்தலை ஒருபோதும் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மனித நேயம் பொருந்திய முதலாளித்துவம் என்று உலகில் எங்குமில்லை. வரலாறு முழுக்க மனித ரத்தத்தைக் குடித்தே வளர்ந்த இனம்தான் முதலாளி இனம். நீங்கள் காணும் ஒவ்வொரு முதலாளித்துவ பிரமாண்டத்திலும் மனித ரத்தம் உறைந்தே கிடக்கின்றது. ஆனால் பிரமாண்டத்தைப் பார்த்து வாய் பிளப்பவர்கள் அதனுள் உறைந்து கிடக்கும் தொழிலாளியின் ரத்த வாடையை ஒருபோதும் உணர்வதில்லை.

நம்மில் பலர் முதலாளிகளின் உலகில் எப்படி அடிமைகளாக வாழ்வது என்பதற்கு நன்கு பயிற்சி எடுத்திருக்கின்றோமே ஒழிய, உழைப்புச் சுரண்டலில் உயிர் வாழும் முதலாளித்துவத்தின் கட்டமைப்பை எப்படி அடித்து நொறுக்குவது என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவர்களாகவே இருக்கின்றோம். முதலாளிகள் தங்களின் கீழ் வேலை பார்க்கும் கூலி அடிமைகளுக்கு வைக்கும் விதவிதமான பெயர்கள் கூட அதன் அடிவருடிகளுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்துகின்றது. அடிமையாக வாழ்வதில் ஆனந்தம் கொள்ளும் நாய்கள் ஒருபோதும் தங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் நன்றாகக் குரைப்பதற்குத்தான் என்பதை உணர்வதில்லை. மாறாக அவை கடைசி வரை எஜமானின் வீட்டு வாசலில் குரைத்துச் சாவதையே பெருமையாக நினைக்கின்றன.

விகடன் முதலாளியிடம் நாம் அறம் பேசுவதால் ஒன்றுமே நிகழப் போவதில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் இருக்கும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஏறக்குறைய இந்தக் கொரோனா சூழ்நிலையைப் பயன்படுத்தி வேலை நீக்கத்தை மேற்கொள்ளவும், கூடுமானவரை குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு முழு உற்பத்தியை எடுக்கவும் திட்டமிட்டு இருக்கின்றன. பல மாநிலங்கள் 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேர வேலையாக மாற்றி இருக்கின்றன. போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும் பாசிச நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓர் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட எதிர்ப்பை நாம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதிர்ப்பு என்பது தங்களின் உழைப்பைச் சுரண்டி இத்தனை நாள் கொழுத்த முதலாளி இன்று தனக்கு லாபம் குறைகின்றது என்பதைக் காரணம் காட்டி வேலையை வீட்டு நீக்கும் போது அதற்கு எதிரான தீரமிக்க போராட்டமாகும். ஆனால் சிலர் விகடனில் வாங்கிய விருதைத் திருப்பி தருவதன் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். டைம் பாஸ் போன்ற ஆபாச அயோக்கியத்தனமான சரோஜாதேவி புத்தகங்கள் போட்ட விகடன் குழுமத்தில் இருந்து விருதை வாங்கிய போது, அது காசுக்காக எதை வேண்டுமானாலும் எழுதும் ஒரு நான்காம் தரப் பத்திரிக்கை என்பது இவர்களுக்குத் தெரியாதா? பரவாயில்லை தெரியாமலேயே இருந்து விட்டுப் போகட்டும்.

விகடனோ, காலச்சுவடோ, இந்து தமிழ்திசையோ ஏதாவது பெரியாரைப் பற்றியோ, மார்க்சைப் பற்றியோ எழுதி விட்டால் உடனே “பார்த்தாயா... விகடனே சொல்லி விட்டது, காலச்சுவடே சொல்லி விட்டது” என்று அதற்கு முற்போக்கு சாயம் அடித்து துதி பாட ஆரம்பித்து விடுவார்கள் நம் முற்போக்குவாதிகளில் பலர். இந்தப் பத்திரிகைகள் பெரியாரையோ, மார்க்சையோ, அம்பேத்கரையோ எப்போதாவது புகழ்ந்து எழுதுவது என்பது முற்போக்கு வட்டாரத்தில் பத்திரிகை விற்பனையை அதிகப்படுத்தவே தவிர, உண்மையில் அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அல்ல. விகடனை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும்.

அவர்கள் கொடுக்கும் விருது என்பது தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே தவிர, சமூகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகளை அடையாளப்படுத்த அல்ல. ஒரு நேர்மையான மார்க்சியவாதியோ, பெரியாரியவாதியோ இதுபோன்ற கார்ப்ரேட்கள் தரும் விருதை ஒருபோதும் வாங்காமல் இருப்பதுதான் அவர்கள் தாங்கள் கொண்ட கொள்கைக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை ஆகும்.

விகடன் போன்ற பக்கா கார்ப்ரேட்கள் விருது தரும் போது கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வாங்கிக் கொண்டு போவதும், பிறகு “அய்யோ நீங்க எவ்வளவு நல்லவர்னு நினைச்சு விருது வாங்கினேன். இப்படி பண்ணிட்டீங்களே” என்று அதைத் திருப்பித் தருவதும் தேவையில்லாத வேலையாகும். ஐந்து பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லாத விகடன் விருதை திருப்பித் தருவதால் சீனிவாசன் ஒன்றும் கலக்கம் அடைய மாட்டார். அவர் தெளிவாக சொல்லி விட்டார் “நமது நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள இயலாது என்று நாம் உண்மையாக உணர்ந்து விட்டால்... ரைட் சைஸிங் செய்வதைப் பற்றி ஒன்றுக்கு இருமுறை யோசிக்கக் கூடாது. (ரைட் சைசிங் என்றால் தேவைக்கு ஏற்றபடி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுதல்). இந்த விவகாரத்தில் நாங்கள் நிறைய யோசிக்கிறோம். ஆனால் கொஞ்சம்தான் அமல்படுத்தி இருக்கிறோம். கொரோனா, ஊரடங்கு இதெல்லாம் இல்லை என்றால் கூட நாங்கள் கடந்த ஆறு மாதமாக ‘ரைட் சைசிங்’ செய்ய வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். இப்போது கொரோனா வந்து, ‘யோசித்துக் கொண்டே இருக்காதே செய்’ என்று சொல்லி விட்டது" என்று. (நன்றி:மின்னம்பலம்)

ஏன் முதலாளி முதலாளியாகவே இருக்கின்றான் என்றால், அவன் சீனிவாசனைப் போல சிந்திப்பதால்தான். சீனிவாசனுக்கு இப்போதைக்கு நஷ்டம் ஏற்பட்டு விடவில்லை, இலாபத்தில் இழப்பு ஏற்படுகின்றது என்பதுதான் பிரச்சினை. அதற்காக 176 குடும்பங்களை எக்கேடோ கெட்டு நாசமாய்ப் போ என துரத்தத் தயாராகி விட்டார். இதுதான் முதலாளித்துவத்தின் கொடூர மனப்பான்மை.

இதை முறியடிக்க வேண்டும் என்றால் பத்திரிகையாளர்கள் ஒரு சங்கமாக ஒருங்கிணைவது முக்கியமாகும். சங்கம் என்றால் முதலாளிகளின் கால் நக்கி சங்கங்கள் அல்ல, முதலாளித்துவத்தின் கொடூரத்திற்கு எதிராகப் போராடும் பொதுவுடைமைக் கட்சிகள், இயக்கங்கள் தலைமையிலான சங்கங்கள் ஆகும்.

இன்று விகடன் குழுமத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையின் ஓர் அங்கமாகும் என்பதை உணர வேண்டும். இன்று விகடன் முதலாளியைப் பணிய வைக்காமல் விட்டு விட்டால், நாளை அனைத்து அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களிலும் இந்த நிலை நிச்சயம் பரவும் என்பதை உணர்ந்து பத்திரிகை நண்பர்கள் ஓரணியில் இணைந்து போராட முயற்சிக்க வேண்டும்.

சீனிவாசன் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை பொதுவுடைமைக் கட்சிகளின், இயக்கங்களின் பலத்தோடு மட்டுமே பணிய வைக்க முடியும் என்பதை பத்திரிகைத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உணர்ந்து, வழமையான தன்னுடைய கார்ப்ரேட் விசுவாசத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மோடி தலைமையிலான பாசிச பிஜேபி அரசால் இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் பட்டினி சாவுக்கும், வேலை இழப்புக்கும், நிரந்தரத் துயரத்துக்கும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய காலத்தில் நாம் அனைவருமே அனைவருக்காகவுமே களத்தில் இறங்கிப் போராட வேண்டியது நம் முன்னால் உள்ள பெரும் கடமையாகும்.

- செ.கார்கி

Pin It