2019 ஜூலையில் கூடிய பொதுமையர் பரப்புரை மன்றத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில் 2016இல் முன்வைத்த “நமது குறிப்பான திட்டம்” ஆவணத்தை, மாறி உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

இறுதியில் “நமது குறிப்பான திட்டம்” ஆவணம் முன்வைத்த இடைக்கட்டம் அதாவது உலகமய, தாராளமய, தனியார்மய எதிர்ப்பு தொடரும் அதே வேளையில் முதன்மை முரண்பாடு மாறியுள்ளது என்றும் நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிச கும்பலுக்கெதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்றும், இக்கட்டம் இடைக்கட்டத்திற்குள் துணைக் கட்டமாகப் பார்க்க வேண்டும் என்றும் தோழர் துரைசிங்கவேலால் முன்வைக்கப்பட்ட கண்ணோட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆவணமாக முன்வைத்து விவாதித்து இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆவணம் விவாதிக்கப்பட்டு 2019 டிசம்பர் இறுதியில் கூடிய ஒருங்கிணைப்புக் குழுவில் தோழர் துரைசிங்கவேல் முன்வைத்த துணைக்கட்டம் (குறிப்பான திட்டம்) ஆவணம் சில திருத்தங்களுடன் இறுதி செய்யப்பட்டது. இந்த ஆவணத்தை உங்கள்முன் விவாதத்திற்கு முன்வைக்கிறோம். உங்களின் கருத்துகளை செறிவாக முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், குறிப்பான திட்டம் குறித்த அரசியல் விவாதங்கள் 2016 பழைய முன்னுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அம்முன்னுரையை கண்டிப்பாகப் படிக்க வேண்டுகிறேன்.

ஜனவரி                                               தோழமையுடன்

2020                                                       துரைசிங்கவேல்

பழைய (2016) முன்னுரை

சில ஆண்டுகளுக்குப்பின் புதிய போராளி சிறப்பிதழ் வெளி வருகிறது. கடைசியாக வந்த நான்காவது இதழ் (2011) “நமது பொதுத்திட்டம்” (வரைவு) சிறப்பிதழாக வெளிவந்தது. இது சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இன்று கூட இது விவாத ஆவணமாக இருந்து கொண்டு இருக்கிறது. இதர அரசியல் சக்திகளுக்கு அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்குத் தொடர்ந்து அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

இந்த இதழ் “நமது குறிப்பான திட்டம்” (வரைவு) சிறப்பிதழாக வெளிவருகிறது. “குறிப்பான திட்டம்” என்ற சொல் தமிழக, இந்திய செயல் களத்தில் இல்லாதது; வாசிப்புத் தளத்தில் மட்டுமே அறிமுகமானது.

இந்தியா என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்பட்டது. முதல் கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக சாதி நிலக்கிழார்கள் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்கள் நடைபெற்றன. இப்போர்கள் 18ஆம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்தில் தொடங்கி 1857 முதல் சுதந்திரப் போர் (உண்மையில் முதல் சுதந்திரப் போர் அல்ல. சாதி நிலக்கிழார்களின் தலைமையிலான இறுதிப் போர்) என்று சொல்லப்படுவது வரை நடந்தது. இறுதியில் சாதி நிலக்கிழார்கள் முற்றிலும் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் அடக்கப்பட்டனர்.

பின்னர், உற்பத்திமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக முதலாளியக் கூறுகள் வளர்ந்தன. புதிய வர்க்கங்கள் உதயமாயின. தொழிலாளர்களும் குட்டி முதலாளித்துவ சக்திகளும் உருவாயின. இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடைக்கட்டத்தை தீவிரமாக முன்கொண்டுச் சென்றனர்.

இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள், நடுத்தர வர்க்கத்தினர், கணிசமாக சாதி நிலக்கிழார்கள், இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் போன்ற வர்க்கங்கள் பங்கெடுத்தனர். இதன் விளைவாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் வன்முறையால் தூக்கியெறியப்படுவோம் என்று, தன்னுடைய இறுதி நிலையை உணர்ந்த, சமாதானப்பூர்வமாகவே பெருமுதலாளி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றித் தந்தது.

இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் அரசியல் சுதந்திரம் பெற்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இடைக்கட்டம் முடிவுக்கு வந்தது. முரண்பாடுகள் அடுத்த இடைக்கட்டத்திற்குள் நுழைந்தன.

- 1947க்கு பிறகு, தமிழக, இந்திய சூழலில்

- இந்திய-சீனப் போரின் போதும்

- இந்தியா-பாகிஸ்தான் போர்களின் போதும்

- இந்திராகாந்தியின் அவசரநிலைக் காலத்திலும்

- ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்தியப் படைகளை அனுப்பியபோதும்

இடைக்கட்டங்கள் மாறின. குறிப்பானத் திட்டங்கள் மாறின. ஆனால், தமிழக, இந்தியாவில் பொதுமையர் (கம்யூனிஸ்ட்) கட்சிகள் (அ) குழுக்கள் கடந்த நூறாண்டுகளில் “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு” இடைக் கட்டத்தைத் தவிர எதையும் அடையாளங் காணவில்லை. பொதுமையர் அமைப்புகள் இயக்க மறுப்பியல் (மாறா நிலைவாதம்) கண்ணோட்டத்தில் இன்றுவரை மூழ்கியுள்ளன.

விதிவிலக்காக, அவசரநிலை ஒட்டி சில மார்க்சிய-லெனினிய அமைப்புகள் அசைந்தன. பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்ட முயற்சித்தன. நடைமுறையில் வெற்றியைப் பெறவில்லை. தமிழகத்தில்கூட “தமிழ்நாடு அமைப்புக்குழு” (TNOC) பாசிச எதிர்ப்பு முன்னணியை முன்வைத்தது. இது நடைமுறையில் வெற்றியைப் பெறவில்லை. செயல்தந்திர முழக்கத்தை முன்வைத்து செயல்படுவதாகக் கூறும் “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் முதலில் பாசிச எதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்தன.

பின்னர், இந்து பாசிச எதிர்ப்பு முழக்கத்தை அரசியல் தளத்திலும் உலகமய, தனியார்மய, தாராளமய எதிர்ப்பு முழக்கத்தை பொருளாதாரத் தளத்திலும் முன்வைப்பதாகக் கூறின. இவை எதார்த்தத்தோடு பொருந்திப் போனதால் ஓரளவு அரசியல் முன்னோடிச் சக்திகளை திரட்டின. ஆனால், இப்பொழுது இதைக் கைவிட்டு “மக்கள் அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளன.

இ.க.க. மாவோயிஸ்டு கட்சி, முந்தைய மக்கள் யுத்தக் கட்சி ஆகியன தனது அரசியல் தீர்மான ஆவணத்தின் இறுதியில் உடனடிக் கடமைகளை முன்வைக்கும். அவைகளையே முழக்கங்களாகக் கொண்டு செல்ல வேண்டும். அதில் மார்க்சிய- லெனினிய- மாவோவியத்தை பரப்புவதுகூட உடனடிக் கடமையாக இருக்கும்.

இதை எதிர்த்து கடும் போராட்டத்தினூடே மக்கள் யுத்தக் கட்சியின் 9ஆவது அகில இந்திய பேராயம் (காங்கிரசு) உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைக்கும், இந்துத்துவா பாசிச எதிர்ப்பிற்கும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பானது கட்டப்பட்டது. அதுவும் மக்கள்திரளை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை.

சமீபத்தில், மாவோயிஸ்டுக் கட்சியின் தலைமை, இந்துத்துவாவிற்கு எதிராக, இடதுசாரிகள் செயலுத்தி (tactical) முன்னணியைக் கட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கத்தக்கதாகும்.

மேற்கண்ட அமைப்புகள் வேறுபட்ட தன்மைகளில் சில முயற்சிகள் எடுத்தபோதிலும் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வேறு சில அமைப்புகள் அரசியல் முன்னோடிச் சக்திகளை திசைத் திருப்புவதும் குழப்புவதும் மழுங்கடிப்பதுமாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் “வேற்றுமையில் ஒற்றுமை” என்று கூறிக் கொண்டு அரசியல் அய்க்கியத்தை நிராகரித்து, முதலில் அமைப்பு அய்க்கியத்தை முன்வைத்து சந்தர்ப்பவாதமாக உருவான மக்கள் விடுதலை சமீபத்தில் “கட்சி அடிப்படை ஆவணம்” என்று ஒரு கதம்ப ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இதில், பொதுத்திட்டம் இந்தியாவிற்கானது, குறிப்பான திட்டம் தமிழ்நாட்டிற்கானது என்று வரையறுத்துள்ளனர். பொதுத்திட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியானது உடனடிக் கடமை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கான திட்டம் எதுவும் இல்லை.

புதிய ஜனநாயகப் புரட்சி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விவசாயத் திட்டத்தில் மடங்கள், அறக்கட்டளைகளின் நிலங்கள் தேச உடைமையாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால், குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயிகளுக்கான புதிய ஜனநாயகத் திட்டம் என்ன?

மேலும், “சமதர்ம தமிழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பொருள் என்ன? புதிய ஜனநாயகமா? சோசலிசமா? கம்யூனிசமா?

மேற்கண்டவைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், திட்டம், அடிப்படை ஆவணம் இவைகளைப் பற்றி பொதுப்புரிதல்கூட இல்லாதவர்களாக உள்ளனர். புரட்சியின் தீவிரத்தன்மை (Revolutionary seriousness) இல்லாத மேம்போக்கான செயல்பாடே இவர்களின் “கட்சி அடிப்படை ஆவணம்” வெளியீடு ஆகும்.

சந்தர்ப்பவாதம் அடிப்படையாக இருப்பதே இவர்களின் குழப்பவாத நிலைப்பாடுகளுக்கு காரணமாகும். தொடர்ந்த இவர்களின் இத்தன்மையிலான செயல்பாடுகள் அணிகளிடையே தெளிவற்ற நிலையை ஏற்படுத்துவதும் அரசியல் தீவிரத்தன்மை அற்றவர்களாகவும் மாற்றுகின்றன.

இதனால், அணிகள் தங்களது சிக்கல்களை தனிநபர் மற்றும் அமைப்புச் சிக்கலாக பார்க்கின்றனர். தலைமையின் சந்தர்ப்பவாத அரசியலே ஏற்படும் சிக்கல்களுக்கு காரணம் என்று பார்ப்பதில்லை.

அடுத்து, கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலாக தனது அணிகளின் சிந்தனையை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் இருவர் ஆவர். ஒருவர், திட்டமும் இல்லை எதுவும் இல்லை, இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி எண்பதுகளில் பலமாக இருந்த மக்கள் யுத்தக் கட்சியின் நடைமுறை வேலைகளை நிறுத்தி கட்சியை கலைத்து மக்கள் யுத்தக் கட்சியின் திட்டத்தை கைவிட்டு ஓடிப்போன ஓடுகாலியும் தமிழகத்தின் கலைப்புவாதத்தின் பிதாமகனுமாகிய ஏ.எம். கோதண்டராமன் (போல்ஸ்விக் குழு). ஆவார்.

மற்றொருவர் மார்க்சிய ஆசான்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தனது அரசியல் நிலைப்பாடுகளை அணிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று நடைமுறை வேலைகளை நிறுத்திய கலைப்புவாதியும் உண்மையில் தனது நிலைப்பாடுகளை அணிகளுக்கு புரியவைக்க திறனற்றவரும் தகுதியற்றவருமான கார்முகில் (தமிழ் நாடு மார்க்சிய-லெனினிய கட்சி) ஆவார்.

இருவரும் அணிகளுக்கு பல வாக்குறுதிகளை தந்துவிட்டு இதுநாள் வரையில் செய்யாமல் மோசடி செய்து கொண்டிருக்கின்றனர். எந்த வேலையும் செய்யாமல் தலைமை பொறுப்பில் ஓட்டிக் கொண்டிருக்கும் பிழைப்புவாதிகளாக சீரழிந்து போய் உள்ளனர். இவர்களின் அணிகளோ சுய தன்மையற்ற ஒரே மாதிரி பேச்சுகளை வாந்தி எடுக்கின்றனர்.

அந்தளவுக்கு இருவரும் அணிகளின் சுயதன்மையை ஒட்டுண்ணியாக உறிஞ்சி உள்ளனர். இப்படிப்பட்ட அணிகளால் மக்களிடையே வேலை செய்ய எப்படி சாத்தியப்படும்? பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறி உள்ளனர். இவர்களின் இந்த செயல்பாடுகள் அபாயகரமானது ஆகும்.

புறக்காரணிகள் இருப்பினும் மேற்கண்ட அகக்காரணிகளே புரட்சிகர முகாம் பின்னடைவுக்குள்ளானதற்கு முக்கிய காரணங்களாகும். இருப்பினும், நான் முன்பு குறிப்பிட்ட “இயக்க மறுப்பியல்” கண்ணோட்டம் மிக முக்கியமானது ஆகும். இக்கண்ணோட்டம் இரண்டு முக்கிய விசியங்களை முன்கொண்டு வருகிறது.

அவை: (1) முரண்பாட்டின் குறித்தத் தன்மையை ஆய்வு செய்வது (2) பொருளின் மாற்றத்தில் பகுதியளவு பண்பு மாற்றம் அடைவது என்பதாகும். இவை இரண்டுமே மாவோவின் முக்கிய பங்களிப்புகளாகும்.

குறித்தத் தன்மையை பொருத்தவரை அதுதான் பொருளின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கியப் பாத்திரத்தை வகிப்பதாக மாவோ வலியுறுத்தினார். இது ஒரு பொருளின் தன்மையைப் பற்றி சரியான முடிவுக்கு வருவதற்கு உதவுகிறது. குறித்தத் தன்மையை பார்க்க மறுப்பதன் விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்!

மாவோயிஸ்ட் கட்சியானது தன்னுடைய நிலைப்பாட்டில் நிலவுடைமைக்கும்-பரந்துபட்ட மக்களுக்குமான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக பார்க்கிறது. மா.லெ கட்சி 1969இல் உருவானதில் இருந்து இதுதான் முதன்மை முரண்பாடாகத் தொடர்கிறது.

சுமார் 50 ஆண்டுகள் எந்த மாற்றமுமில்லாமல் தொடர்கிறது. மக்கள்யுத்தக் கட்சியாக இருந்தபொழுது எண்பதுகளில் தண்டகாரண்யாவில் (மகாராஷ்டிரா, சத்தீஸ்கர்) வேலையை தொடங்கியது. பின்னர், விவசாய திட்டமாகப் பழங்குடிகளுக்கு காட்டுநிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதில் என்ன மாறுபாடு என்றால் தண்டகாரண்யாவில் நிலவுடைமை உற்பத்தி நிலவவில்லை. அரைத்தொல்குடி உற்பத்தி முறையே நிலவியது. ஏற்கனவே அவர்கள் கூட்டுத் தன்மையில் இருந்தனர். எனவே, அவர்களுக்கு கூட்டுப் பண்ணைகளை உருவாக்கி இருக்க வேண்டும். மாறாக, நிலவுடைமை முதன்மை முரண்பாடு என்பதை பொதுத் தன்மையாக எந்திரகதியாக தண்டகாரண்யாவிற்கு பொருத்தப்பட்டது. அதன் குறித்தத் தன்மையானது கணக்கில் எடுக்கப்படவில்லை. இன்றுவரை மாவோயிஸ்டுகள் இத்தவறை உணர்ந்தார்களா எனத் தெரியவில்லை.

அடுத்து, இரண்டாவது விசியமான பகுதியளவு பண்பு மாற்றம் முழுக்க மாவோவின் தத்துவப் பங்களிப்பாகும். மாவோவிற்கு முன்பு இயங்கியல் விதியில், ஒரு பொருளின் மாற்றத்தில் அளவு மாற்றம், பண்பு மாற்றம் என்பதே விதியாகும். அளவு மாற்றம் படிப்படியாகவும் இறுதியாக பண்பு மாற்றம் பாய்ச்சலாக இருக்கும் என்பதே நிலைப்பாடாகும்.

மாவோவின் தத்துவார்த்த பங்களிப்பிற்கு பின் அளவு மாற்றம் மட்டுமல்ல பகுதியளவு பண்பு மாற்றங்களும் உண்டு என்பதை முன்வைத்தார். புழுக்களின் வளர்ச்சி, மனித உடலில் உருவாகும் பருவமாற்றங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்தார். இப்பங்களிப்பானது சிக்கலான சமூக வளர்ச்சியை துல்லியமாகப் புரிந்துக்கொள்ள பேருதவியாக உள்ளது.

தமிழக, இந்தியச் சூழலில் உள்ள பொதுமையர் முகாமில் மாவோவின் இந்த பங்களிப்பு அறியப்படாததாகவே உள்ளது. எனக்கு தெரிந்தவரையில் இதை முன்வைத்தவர் மக்கள் யுத்தக் கட்சியின் நிறுவனச் செயலர் கொண்டப்பள்ளி சீதாராமய்யா (கே.எஸ்) ஆவார். இதனடிப்படையில் எங்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர் அரசியல், அமைப்பு முரண்பாட்டின் காரணமாக கட்சியை விட்டு 90களின் தொடக்கத்தில் வெளி யேறினார்.

இதற்கு பிறகு 1995இல் நடைபெற்ற அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் கே.எஸ்-ன் கண்ணோட்டம் தவறு என்று தீர்மானிக்கப்பட்டது. இது மாவோவின் பங்களிப்பாக பார்க்கவில்லை. கே.எஸ்-ன் பங்களிப்பாக பார்க்கப்பட்டது. இக்கண்ணோட்டமே புரட்சிகர இயக்கத்தை பாய்ச்சலில் வளர்க்கவில்லை என்றும் இடைக்கட்டங்களில் தேங்கவைக்கிறது என்றும் பார்க்கப்பட்டது. எனவே, இக்கருத்தோட்டம் நிராகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் மக்கள் யுத்தக் கட்சியானது மக்கள் திரள் செல்வாக்கை கொண்ட காலகட்டமான 1985இல் போராட்டங்களுக்கு ஆயிரக் கணக்கிலும் மாநாடுகளுக்கு லட்சக்கணக்கிலும் மக்கள் அணிதிரண்டனர். ஆந்திர அரசு கடும் தொடர் அடக்குமுறையை ஏவியது. இக் கட்டத்தில் கே.எஸ்., கட்சி கட்டுதலை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது சரியானதே. ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், அரசு அடக்குமுறையை எதிர்கொள்ள இயக்கத்தை பாதுகாக்க கெரில்லாக் குழுக்களைக் கட்ட வழி காட்டினார்.

அக்கட்டத்தில் செய்திருக்க வேண்டியது என்ன?

(1) கட்சியைப் பலமாக எல்லா மட்டத்திலும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

(2) மாநிலந்தழுவிய அரசியல் கிளர்ச்சியை (அ) எழுச்சியை தயார் செய்து இருக்க வேண்டும். ஏனெனில் மாநிலம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் மக்களிடம் கட்சியின் செல்வாக்கு இருந்தது.

(3) ஆயிரக்கணக்கில் மக்கள் திரட்டப்பட்டு மக்கள் விடுதலைப் படை கட்டப்பட்டு மக்கள் யுத்தம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆந்திராவில் மக்கள் யுத்தம் தொடுக்கப்பட்டிருந்தால் அது எண்பதுகளின் இந்திய அரசியல் சூழலையே மாற்றிப் போட்டிருக்கும். வரலாறே தலைகீழாக மாறியிருக்கும்.

ஆனால், கே.எஸ்-ன் அரசியல் வழியானது இயக்கத்தின் வளர்ச்சியை மந்தப்படுத்தியது. இயக்கம் பாய்ச்சல் ரீதியான மாற்றத்திற்கு செல்லாமல் அளவு ரீதியான மாற்றமாக பார்த்து அதற்கு மிகையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கே.எஸ்-ன் தவறு பகுதியளவு பண்பு மாற்றத்திற்கு திட்டமிடாமல் அளவு மாற்றத்திற்கே அதிக அழுத்தம் தந்ததில்தான் அடங்கியுள்ளது. இதை 1995 சிறப்பு மாநாடு உணரவில்லை. கே.எஸ். பகுதியளவு பண்பு மாற்றத்திற்கே அதாவது, இடைக்கட்டங்களுக்கே அதிக அழுத்தம் தந்ததாக கருதி மறு கோடிக்குச் சென்றது.

இதற்குப் பிறகு இடைக்கட்டங்கள் கிடையாது; புதிய ஜனநாயகப் புரட்சிதான் ஒரே கட்டம் என்ற தட்டையான சிந்தனை ஒரு சாராரிடம் பலம் பெற்றது.

1995க்குப் பிறகுதான் தமிழ்நாடு, கர்நாடகாவில் ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன. சீனாவிற்கான கோட்பாடான “ஆயுதப் போராட்டமே முதன்மையான போராட்ட வடிவம்” “கெரில்லா குழுக்களே முதன்மையான அமைப்பு வடிவம்” என்பது பலம் பெற்றது. இதனால் புதிய பகுதிகளில்கூட தொடக்கத்திலிருந்தே ஆயுதக் குழுக்கள் மூலமே அமைப்புக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய முறையிலான மக்கள்திரள் அமைப்புகளின் மூலம் மக்கள்திரளை திரட்டுவது, வளர்ச்சியின் போக்கில் மக்கள்திரள் இயக்கத்தை பாதுகாக்க படிப்படியாக ஆயுதக் குழுக்களைக் கட்டுவது என்ற கே.எஸ்.-ன் அரசியல்வழி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

ஒன்பதாவது பேராயத்திற்கு (2001) பின் இப்போக்கு உச்சத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்திலும் சில செயல் போக்குகள் நடைபெற்றன. ஊத்தங்கரை சம்பவத்திற்கு (போலிசுடன் மோதலுக்கு) பிறகு தருமபுரியில் ஆயிரக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டனர்.

சில மாதங்களிலேயே உளவுத் துறை மக்கள் யுத்தக் கட்சி செயல்பட்ட அனைத்துப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனால் கட்சி செயல்படாமல் போனது. இயக்கம் முழுவதும் பின்னடைவுக்குள்ளானது. இதனால் தருமபுரியில் இருந்து மக்கள் யுத்தக் கட்சி பின்வாங்கியது.

இதற்கு பிறகு மேற்குத் தொடர்ச்சிமலையில் செயல்படுவது என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுதக் குழுக்கள் மூலமே செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முருகமலையில் கைது, கொடைக்கானலில் போலீஸ் மோதலில் தோழர் நவீன் பிரசாத் வீரமரணம் அடைந்தார். பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

1992இல் நான் கட்சிக் கண்ணோட்டத்தை வகுத்து வைத்தேன். இதன்படி, தமிழ்நாடானது, புவியியல் வரலாறு, சமூக, பொருளாதாரம் பண்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு சென்னை நீங்கலாக ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதில் வடமேற்கு மண்டலத்தில் முதன்மையாக கவனம் செலுத்தி செயல்படுவது என்ற செயல்திட்டத்தை முன்வைத்தேன். வடமேற்கு மண்டலம் என்பது இன்றைய வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களும் துறையூர், சத்தியமங்கலம் பகுதிகளும் அடங்கிய கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடராகும். இச்செயல்திட்டத்தை நான் முன்வைக்கும் பொழுதே மேற்குத் தொடர்ச்சிமலையில் முதன்மையாக செயல்பட வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்தது.

மே. தொ. ம. தொடரில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் அடர்த்தியாக மக்கள் இல்லாதது, மக்கள் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சி அடைந்த எஸ்டேட் உற்பத்தி முறை (டீ, காபி) நிலவும் கேரளப் பகுதிகளிலேயே மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

மேலும், வ,மே.ம. வளர்ச்சி அடையும்பொழுது மே.தொ.ம. தொடரை இராணுவத் தளமாக பயன்படுத்தலாம் போன்ற எனது கருத்துக்களை முன் வைத்தேன். இவை அப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டன. நான் சிறையில் இருந்த சூழ்நிலையில் (2002க்கு பிறகு) தமிழகத்தில் மே.தொ.ம. தொ. பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. இத்திட்டம் கருவிலேயே கலைந்தது.

சில மாதங்களுக்குப் பின் முச்சந்திப்பு திட்டம் முன்வைக்கப்பட்டது. முச்சந்திப்பு என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் சந்திக்கும் எல்லைப் பகுதிகள் ஆகும். இத்திட்டம் 2001இல் நடந்த முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியின் மையக் குழுவின் விரிவடைந்த கூட்டத்திலேயே சிலரால் முன்வைக்கப்பட்டது (வரைபடத்தைப் பார்த்து).

அப்பொழுதே நானும் கர்நாடக மாநில செயலர் தியாகி தோழர் சாகேத்ராஜனும் நடைமுறை சாத்தியமற்றது என்று நிராகரித்தோம். நான் கட்சியை விட்டு வெளியேறியும் தோழர் சாகேத்ராஜன் வீரமரணம் (போலீஸ் மோதலில்) அடைந்த பின்னணியிலும் இருவரும் இல்லாத சூழ்நிலையில் சில ஆண்டுகளாக நடைமுறை சாத்தியமற்ற முச்சந்திப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

மேற்கண்ட செயல்பாட்டிற்கு காரணம் அளவு மாற்றங்கள், பகுதியளவு பண்பு மாற்றங்களை மறுதலிப்பதால் இறுதிக்கட்ட தயாரிப்பதற்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் திரள் இல்லாததால் ஆயுதக்குழுக்களைக் கட்ட வனப்பகுதிகளை நாடுகின்றனர். இதனால் தனிமைப்பட்டு போகின்றனர். இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிய மக்கள் யுத்தக் கட்சி இன்று (மாவோயிஸ்டுக் கட்சி) இராணுவ நடவடிக்கைகளில் சுருங்கிப் போயுள்ளது.

குறிப்பானத் திட்டத்தை நிராகரித்த பொதுத் திட்டத்திற்கான நடைமுறையும்;

இடைக்கட்டங்களை நிராகரித்த இறுதிக் கட்டத்திற்கான சிந்தனையும், செயல்பாடும்;

செயலுத்திகள் இல்லாத மூலஉத்திக்கான சிந்தனையும் செயல்பாடும்;

 இன்று மாவோயிஸ்ட் கட்சியை இராணுவவாதத்தில் சுருக்கி உள்ளது.

“புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் எண்பதுகளின் தொடக்கத்தில் தங்கள் நிலைபாடுகளை வெளியிட்டன. 1970 மா.லெ கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. அதாவது, சமூக வளர்ச்சியின் உண்மைகளைப் பார்க்காமல் பின்தங்கிய தன்மையில் தரகு முதலாளி, அரைக் காலனியம் என்று சமூக வளர்ச்சியை குறைத்துப் பார்க்கும் வலது பார்வையே வெளிப்பட்டது. இன்றும் முதலாளித்துவ வளர்ச்சியை “நாடு கடந்த தரகு முதலாளித்துவம்” என்று தரகு முதலாளித்துவ பூணூலை அவிழ்க்காமல் பார்க்கும் பின்தங்கிய பார்வையே உள்ளது.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் இருத்தலை ஏற்றுக் கொண்ட அதே சமயத்தில், முதன்மை முரண்பாடாக நிலவுடைமைக்கும் பரந்துபட்ட மக்களுக்குமான முரண்பாட்டை முன்வைத்தனர். 50 ஆண்டுகளாக இம்முதன்மை முரண்பாடு மாறாமல் உள்ளது. இதற்கான எந்த செயல்திட்டங்களும் இதுநாள் வரையில் இல்லை.

மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை “நாங்கள்தான் முதலில் சரியாக வைத்தோம்” என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் இம்முரண்பாட்டை தீர்க்கவோ கூர்மைப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. ஆவணத்தில் எழுதி பரணில் தூங்குகிறது. “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகளின் அணிகளே! பரணில் இருந்து தூசி தட்டி எடுங்கள் என்றும் மாறாமல் இருக்கும் முதன்மை முரண்பாட்டை ஆய்வு செய்யுங்கள்.

இதை வலியுறுத்தும் காரணம், 1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு முதன்மை இலக்கான இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் இன்றுவரை முதன்மை இலக்காக பொதுமையர் அமைப்புகளால் பார்க்கப்படவில்லை. நிலவுடைமை முதன்மை முரண் பாடு என்று திசைத் திருப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பிராந்திய பெரு முதலாளி வர்க்கம் எந்தவித எதிர்ப்பும் தாக்குதலும் இல்லாமல் பலமாக வளர்ந்து வருகிறது. இன்று வளரும் ஏகாதிபத்தியமாகவும் மாறியுள்ளது.

இவர்கள் எண்பதுகளின் பத்தாண்டுகளில் பரப்புரையை மட்டுமே மேற்கொண்டனர். இச்செயல்போக்கை மற்ற அமைப்புகள் தொடர்ந்து விமர்சனம் செய்ததால் தொன்னூறுகளின் தொடக்கத்தில் “நாங்களும் மற்ற அமைப்புகளைப் போல் போர்க்குணமிக்க பொருளாதார போராட்டங்களை எடுக்கப் போகிறோம்; அப்பொழுதுதான் எங்களை மற்றவர்கள் மதிப்பார்கள்” என்று கூறி சில போராட்டங்களை எடுக்கத் தொடங்கினர்.

இவர்களின் இந்த சந்தர்ப்பவாத செயல்பாடு, “புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதை போன்றதே.” இதுநாள் வரையில் எந்தவித போர்க் குணமும் போராட்டங்களில் வெளிப்படவில்லை. சட்டரீதியான ஆர்ப்பாட்டங்கள், காலையில் கைது செய்து மாலையில் விட்டுவிடுவது என்பதுதான் இவர்களின் போர்க்குணமிக்க நடைமுறை.

தொடக்கக் காலத்தில் சில சம்பவங்கள் நடந்ததுண்டு. அவை புறச்சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக தங்களின் இருத்தலை (உயிரை) தக்க வைத்துக் கொள்வதற்காக அணிகளே தன்னெழுச்சியாக செய்ததாகும். முதலில் இந்நடவடிக்கைகளை எதிர்த்த தலைமை பின்னர் சந்தர்ப்பவாதமாக ஏற்றுக் கொண்டது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்கள் “மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்” என்ற இரண்டு செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து செயல்பட்டு வந்தனர்.

சில பத்தாண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் இவர்கள் முன்வைத்த முழக்கங்கள் புறநிலை யதார்த்த சூழ்நிலையோடு சரியாக பொருந்திப் போனாலும் இவர்களின் செயல்பாட்டு முறையின் காரணமாக அதாவது, முன்னோடிச் சக்திகளை மட்டுமே திரட்டும் இவர்களின் செயல் முறையின் காரணமாக சில நூறு பேர்களை மட்டுமே இவர்களால் திரட்ட முடிந்துள்ளது.

மேலும், இப்போக்கைப் பார்ப்போமானால், பகுதி போராட்டங்கள் வெற்றியைத் தராது; வர்க்கப் போராட்டங்களால் அரசு அடக்குமுறை வரும் என்று, முன்னோடி சக்திகளை மட்டுமே திரட்டும் இடது குறுங்குழுவாதப் போக்கை கொண்டுள்ளனர். இதன் வளர்ச்சிப் போக்காக “மக்கள் அதிகாரம்” என்று இடது வாய்ச்சவடாலை செயல் தந்திர முழக்கமாக முன்வைத்துள்ளனர்.

அரசு கட்டமைப்பு நெருக்கடிக்குள்ளாகி விட்டது; இதை வீழ்த்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகின்றனர் (ஒரு பக்கப் பார்வை பலமாக உள்ளது). மறுபக்கம், இதை வீழ்த்தும் மக்களின் தயார்நிலை பற்றி எதுவும் கூறுவதில்லை. எந்த மக்கள் வீழ்த்துவார்கள் என்றும் கூறவில்லை.

மக்கள் அதிகாரத்திற்கான அமைப்பின் வர்க்கத் தன்மை மற்றும் வடிவத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. (ருஷ்யாவில் “சோவியத்துகளுக்கே அதிகாரம்” என்று முழக்கமிட்டனர். சீனாவில், “உழவர் சங்கங்களுக்கே அதிகாரம்,” புரட்சிகர விவசாய கமிட்டிகளுக்கே அதிகாரம்,” “கம்யூன்களுக்கே அதிகாரம்” என்று வளர்ச்சிப் போக்கில் முழக்கங்களை முன்வைத்தனர்.

மக்கள் யுத்தக் கட்சி “கிராம ஆட்சி மன்றங்களுக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்தது). இதற்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகர கட்சியின் நிலை என்ன? சரி இவர்களின் அமைப்பு பலம் என்ன? இவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை. புறச்சூழலை மட்டும் விளக்கிவிட்டு (அதுவும் அரசு கட்டமைப்பு பற்றி மட்டும்) அகச்சக்திகளின் தயார்நிலையை பற்றி எதுவும் பேசுவதில்லை.

(இவர்கள் முன்பு மக்கள் யுத்தக்கட்சிக்கு சொன்ன, “குதிரைக்கு முன் வண்டியை பூட்டுவது” இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது).

இதனால் இவர்கள் முழுக்க தன்னெழுச்சிக்கு அறைகூவல் விடுக்கின்றனர். இந்த தன்னெழுச்சி அராஜகவாதத்திற்கு வித்திடும் ஏனெனில், “மக்கள் அதிகாரம்” என்ற முழக்கம் செயல் தந்திர முழக்கம் என்று கூறினாலும் உண்மையில் இறுதிக் கட்டத்திற்கான மூலஉத்தி முழக்கமாகும்.

இதனால் உண்மையில் செயலுத்திகளற்ற அருவமான இந்த மூல உத்தி முழக்கம் இயல்பாகவே தன்னெழுச்சியையும் அராஜக வாதத்தையுமே தோற்றுவிக்கும்.

இந்த தன்னெழுச்சி, அராஜகவாதத்திற்கான “மக்கள் அதிகாரம்” நடைமுறை சாத்தியமாகுமா? நிச்சயம் நடக்காது. அதனால்தான் இதை “இடது வாய்ச்சவடால்” என்கிறோம். மேலும், இவர்களின் உச்சக்கட்ட நகைச்சுவை என்பது தற்காப்பிலிருந்து தாக்குதலுக்கு இவர்கள் வந்துவிட்டதாக கூறுவதுதான். இதன் மூலம் அணிகளை புல்லரிக்க வைக்கின்றனர்.

உண்மையில், இவர்கள் முன்பு சொன்ன காற்றில் சண்டை போடும் கத்திச்சண்டை வீரன் “டான் குவிக்சாட்” தான் பொருத்தமாக நினைவுக்கு வருகிறான்.

இவர்களின் செயல்தந்திர முழக்கம் என்ற வரையறையானது இவர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். செயல் தந்திரம் (செயலுத்தி) என்பது தனித்த ஒன்றல்ல. அது மூல உத்திக்கு சேவை செய்கிறது. மேலும், முதன்மை முரண்பாடு, இடைக்கட்டம், குறிப்பான திட்டம் இவைகளோடு இயங்கியல் ரீதியான உறவை கொண்டுள்ளது என்று மாவோவிய கோட்பாடு கூறுகிறது.

“மாவோ சிந்தனைகளை” ஏற்றுக் கொள்வதாக கூறும் இவர்கள் இந்த கோட்பாட்டு வரையறைகளை பொருத்துவதில்லை. இதனால், இவர்களின் “மக்கள் அதிகாரம்” செயல் தந்திர முழக்கம் அந்தரத்தில் நிற்கிறது.

அதாவது, ஆளும் வர்க்கத்திற்கும் x மக்களுக்குமான முரண்பாட்டின் நிலை என்ன?

வர்க்க அணி சேர்க்கையில் யார்? யார்?,

இடைக்கட்டமா இறுதிக்கட்டமா?,

மக்கள் அதிகாரத்திற்கான முழக்கத்தின் திட்ட கோரிக்கைகள் என்ன?

போன்ற எந்த கேள்விக்கும் இவர்களிடம் பதில் இல்லை. “மக்கள் அதிகாரத்திற்கான முழக்கம் அருவமாகவே (abstract) முன்வைக்கப் பட்டுள்ளது. இவர்களின் தலைமை குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது.

“புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகளின் அணிகளே! சிந்திப்பீர்!

“மக்கள் அதிகாரம்” என்ற செயல்தந்திர முழக்கத்தை கேள்விக் குள்ளாக்குவீர்!

இல்லை என்றால் இப்பொழுது இருக்கும் அமைப்பும் கரைந்து போகும் (அ) கலைந்து போகும். தமிழகத்தில் இன்று “நாங்கள்தான் வேலை செய்கிறோம்” என்ற சுயதம்பட்டம் எல்லாம் அமைப்பைக் காப்பாற்றாது.

35 ஆண்டுகளில் சில நூறு பேரை திரட்டுவது புரட்சிகர வேலை ஆகாது. இக்காலத்தில் பல தேசங்களில் புரட்சி முடிந்து பின்னுக்குகூட போய்விட்டன. எனவே, சிந்திப்பீர்! கேள்விக்குள்ளாக்குவீர்.

சி.பி.அய் -யை பொருத்தவரை 1950 வரை திட்டம் கிடையாது. பின்னர், தோழர் ஸ்டாலின் மற்றும் சோவியத் கட்சியின் வழியின் வழிகாட்டுதலில் திட்டம் மற்றும் செயல்உத்தி வழி தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இவை எவராலும் செயல்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இச்சமயத்தில் உலக அளவில் சோசலிச முகாமில் பிளவு ஏற்பட்டது. குருசேவ் தலைமையிலான சோவியத் கட்சி சமாதானத்தின் மூலமே உலக சோசலிச புரட்சி வெற்றி அடைய முடியும் என்ற திரிபுவாதத்தை முன்வைத்தது.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டது சி.பி.அய். தலைமை. மேலும், இந்திய பெரு முதலாளி வர்க்கத்தை தேசிய முதலாளி வர்க்கம் என்று வரையறுத்தது. காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியது. இதன் உச்சமாக “எமர்ஜென்சி” யை ஆதரித்தது. “இந்திரா கம்யூனிஸ்டு கட்சியாக” செயற்பட்டது.

பின்னர், எண்பதுகளில் “எமர்ஜென்சியை” ஆதரித்தது தவறு என்று சுயவிமர்சனம் செய்து கொண்டது. அடிப்படை ஆவணங்களை பரிசீலிக்க தீர்மானித்தது. இன்றுவரை இவர்களால் முடிவுக்கு வரமுடியவில்லை. சிவப்புநிறக் கொடி, சுத்தி அரிவாள் என்பதைத் தவிர இவர்களிடம் மார்க்சிய அடிப்படைகள் எதுவும் இல்லை. முழுவதுமாக திரிபுவாதிகளாக சீரழிந்துள்ளனர்.

அடுத்து, சி.பி.எம்-மை பொருத்தவரை, மாவோவையே ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதுதான் “மாஸ் லைன்” “மக்களிட மிருந்து மக்களுக்கு” என்றெல்லாம் பாலபாடம் கற்கத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பான திட்டம், இடைக்கட்டம் என்பதெல்லாம் எப்பொழுது கற்பார்கள் என்று தெரியவில்லை. செயலுத்திகளை இவர்கள் சரியாக வகுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆளும் வர்க்க கட்சிகளுக்கெதிராகத்தான் வகுக்கிறார்கள். அதுவும் தேர்தலை ஒட்டித்தான் வகுக்கப்படுகிறது.

முதலில், காங்கிரஸ் எதிர்ப்பு என்றிருந்தது. பிறகு பா.ஜ.க. எதிர்ப்பு என்று காங்கிரசை ஆதரித்தது. இப்பொழுது, திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து மே.வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று சீரழிந்து உள்ளது. இவர்களின் செயலுத்திகள் இவர்களின் நாடாளுமன்ற வாதத்துடன் தொடர்பு உள்ளதே தவிர மூல உத்தியுடன் அல்ல. அதனால், மூல உத்தியுடன் உறவில்லாத செயலுத்திகள் இயல்பாகவே திரிபுவாதத்தில் மூழ்குகின்றன.

இவர்களின் போக்கின்படியே பார்த்தாலும்கூட, இன்றைய கட்டத்தில் இந்து பாசிச எதிர்ப்பை இவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைக்க திராணியற்று, தயார்நிலை அற்று இருக்கின்றனர்.

இடதுசாரி முன்னணி என்பதெல்லாம் பெயரளவிலானது. உண்மையில் இடதுசாரி அணித்திரட்டலுக்கு இவர்கள் தடையாக உள்ளனர் என்பதுதான் எதார்த்தமாகும். “சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம்” என்பதே திரிபுவாதமாகும்” என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகின்றனர்.

தோழர்களே!

கடந்த எண்பதாண்டுகால பொதுமையர் இயக்கத்தில் இப்படி அடிப்படை சிக்கல்களே தீர்க்கப்படாமல் உள்ளன என்பதே எதார்த்தமாகும். குறிப்பாக, சமூகத்தின் குறித்த தன்மை குறித்தும், பகுதியளவு பண்பு மாற்றங்கள் குறித்தும் தெளிவற்ற பார்வைகளே இடைக்கட்டம், குறிப்பானத் திட்டங்கள் முன்வராததற்கு காரணங்களாகும். இப்பின்னணியிலேயே இந்த குறிப்பானத் திட்ட ஆவணத்தை முதன்முதலாக உங்கள் முன் விவாதத்திற்கு வைக்கிறோம். உங்களது ஆழ்ந்த, செறிவான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

அக்டோபர்                                          தோழமையுடன்,

2016                                                     துரைசிங்கவேல்

Pin It