இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜனவரி 8 அன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு நடந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பனியன் கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்து கொண்டேன்.

communists agitationநேற்று முன் தினம் தொழிலாளர்களிடம் வேலை முடித்துவிட்டு கிளம்பும் போது, நாளை (ஜனவரி 8, 2020) நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டத்தில் நாமும் கலந்து கொள்ளலாம் என்றும், ஆளும் அரசின் கார்ப்பரேட் முதலாளிய ஆதரவு பற்றியும், விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்கு என்று பிடுங்கி பெரு முதலாளிகளுக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்குக் கொடுப்பதையும், தொழிலாளிகளின் உழைப்பை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதையும், போக்குவரத்துத் துறை - ரயில்வே துறைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது பற்றியும், BSNL, AIR INDIA, நிலக்கரித் தொழில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, டோல்கேட் வசூல், GST வரியால் தொழில் அழிவது பற்றியும், அனைத்து அரசு வேலைகளும் ஒப்பந்தக் கூலியாக மாற்றப்படுவது, அதற்கு சட்டவடிவம் கொடுக்கப்படுவது பற்றியும் விளக்கினேன்.

ஆனால் நேற்று காலை 7.30 மணிக்கு கம்பெனியைச் சுத்தம் செய்ய திறப்பதற்குப் போனால் அப்போதே தொழிலாளிகள் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள்..

"என்னங்க Strike-ல கலந்துக்கவில்லையா...?" என்றதும்,

"சார் அதெல்லாம் அரசு ஊழியர்களுக்குத் தானே... அவங்க என்னவெல்லாம் செய்றாங்க... நம்மல மனுசனா மதிக்குறாங்களா..? தண்ணி பிரச்சனை, ரேசன் பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனைகளுக்குப் போராடுனா போலீசை வச்சு மண்டையைப் பிளக்குறானுக... எல்லாத்தையும் தனியாருக்குக் கொடுக்கட்டும் சார்.... நாங்கலெல்லாம் பீசு ரேட்டுக்கு 12, 16 மணி நேரம் வேலை செஞ்சும் மாதம் 20, 000 ஆயிரம் சம்பாதிக்க முடியல. அதுக்கே வேலை கிடைக்க மாட்டேங்குது... நீங்க கூட இப்படி பேசி பேசி தான் எங்களையும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும் கூட்டிட்டுப் போனீங்க... அப்படி என்னத்தை இந்த அரசாங்கம் மாத்திடிச்சு.... மேலும் மேலும் அதிகமாகத் தானே பிரச்சனையைக் கொடுக்குறாங்க ..." 

"சங்கம் வைத்திருக்கும் கம்பெனிக்காரங்களே லீவு விடல... நீங்க Strike-க்கு சப்போர்ட் பண்ணுரீங்க... அவங்க சும்மா சும்மா வேலை நிறுத்தம் செய்றாங்க என்பதெல்லாம் அவங்க ஏதாவது சலுகை வாங்குவதற்காக எங்களை பயன்படுத்துறாங்க சார்..."

"அரசுக்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டனும் என்றால் மின்சாரக் கட்டணத்தை, பஸ் கட்டணத்தை, போன் பில்லை, GST வரியை, வீட்டுவரி, தண்ணி வரியை இரண்டு மாசத்திற்கு வசூல் செய்ய மாட்டோம்னு இருக்கச் சொல்லுங்க..." என்றார்கள்.

ஆக போராட்ட முறை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தொழிலாளிகள் தெரிந்து தான் உள்ளார்கள்.

சமீபத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை ஆட்சியை விட்டு ஓட வைத்துள்ளது.

இந்திய தொழிற்சங்கத் தலைமைக்குத் தான் முதலாளித்துவத்தின் சோலிய சரியா திட்டமிட்டு முடிக்கத் தெரியல போல..!

இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் இவ்வளவு தொடர் போராட்டங்களை தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஜல்லிக்கட்டு, எட்டுவழிச் சாலை, ஸ்டெர்லைட் பிரச்சனைகளால் தமிழகம் தொடர் போராட்டக் களமாக இருந்தது.

இப்போது காஷ்மீரின் 370-வது பிரிவு ரத்து, பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம், JNU மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்களை கைது செய்யக் கோரும் போராட்டம், மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிற் சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தம் ஆகியவற்றால் தற்போது நாடு முழுவதும் போராட்டக் களமாகி வருகிறது.

கம்யூனிஸ்டுக் கட்சிகள்தான் முன்பு அடிக்கடி போராட்டம் நடத்துவார்கள். தண்ணீர் வரவில்லை, சாலை வசதியில்லை என்று பொதுமக்கள் எப்போதாவது போராடுவார்கள். எல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும்!

போனஸ், சம்பள உயர்வு கேட்டு அரசு ஊழியர்கள் போராடுவதுதான் சில நேரங்களில் இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும். அவ்வளவுதான். 

இதற்கே அன்றைக்கு, “இவனுக்களுக்கு வேற வேலையே இல்லை. புருஷன் பொண்டாட்டி சண்டைக்கெல்லாம் ரோட்டுக்கு வந்துறானுங்க” என்று பலரும் சலித்துக் கொள்வார்கள்!

இன்று டிவி, மொபைலைத் திறந்தால் போராட்ட செய்திகள் வராத நாளே கிடையாது! 

“கைதுக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம்” என்று முன்கூட்டியே போலீசிடம் சரணடைந்த நிலையில் தான் பெரும்பாலான ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடைபெறுகிறது.

பெரிய கூட்டத்தை திரட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தலைவர்கள் திருப்திபட்டுக் கொள்கின்றனர். அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாகப் பிரச்சனையை முடித்ததில் போலீசும் நிம்மதி அடைகிறது.

இதற்கு முன்பு அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் நானும் தற்செயலாகக் கலந்து கொண்டேன். அங்கே ஏற்பாட்டாளர் ஒருவர் அருகிலிருந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டார்.

“100 பேருக்குக் குறையாமல் ஆட்களைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் போலீசு நம்மை மதிக்கும். வழக்கு போடவும் யோசிப்பார்கள். கூட்டத்தில் போலீசை திட்டிப் பேசக் கூடாது. உளவுத்துறை நம்மிடம் கேட்கும் விவரங்களை கூறி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களே நமக்கு சிக்கலை உருவாக்கி விடுவார்கள். ஒருவேளை கைது செய்தால் அமைதியாக ஒத்துழைப்போம்.” என்றார்.

அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆர்ப்பாட்டமும் திட்டமிட்டபடியே பிரச்சனையில்லாமல் நடந்து முடிந்தது!

போராட்டத்தின் கோரிக்கையை, அதன் முக்கியத்துவத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வது என்ற நோக்கம் இங்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.

போலீசிடம் முரண்பாடாமல் சுமூகமாக அணுகி, வழக்கு வாய்தா சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் எப்படி போராட்டம் செய்வது என்பதுதான் முக்கியமாகி விடுகிறது. தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி கொடுப்பதும், அது தொலைக்காட்சியில் நேரலை செய்கிறார்களா? அன்றைய நாளின் பிரேக்கிங் நியூஸா? என்று உறுதி செய்யும் வரை போலீசுடன் தள்ளுமுள்ளு நடைபெறுகிறது .

ஒரு வகையில் இப்போராட்டங்கள் ஒத்திகை பார்த்து அரங்கேற்றும் நாடகம் போல ஆகி விடுகிறது. தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளவும், மீடியாக்களின் கவனத்தை ஈர்ப்பதும்தான் இத்தகைய போராட்டங்களின் விளைவுகள்.

ஆரம்பத்தில் இது பொதுமக்களிடம் ஒருவித நம்பிக்கையை உண்டாக்கினாலும், இதே பாணி போராட்டங்கள் தொடரும் போது, மக்களிடம் அவநம்பிக்கைதான் விளைகிறது.

“காலையில் போயிட்டு சாயந்திரம் பத்தி விட்டுருவான். அடுத்த நாள் அவனவன் வேலையைப் பாக்கப் போயிருவான். வேற ஒண்ணும் ஆகப் போவதில்ல” என்று பொதுமக்கள் சலித்துக் கொள்கிறார்கள்.

இதை போராடத் தயங்குபவனின் வெட்டிப் பேச்சு என்று எளிதாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இப்போராட்டங்கள் வெற்றியை சாதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை உண்மையும்கூட! விளைவுகளை ஏற்படுத்தாத போராட்டங்கள் பொதுமக்களை எப்படி ஈர்க்கும்? ஊக்கப்படுத்தும்?

அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதமும், அரசின் பாசிச அடக்குமுறையும் இணைந்து, போராடும் மக்களின் உறுதியை, ஊக்கத்தை சீர்குலைப்பதில் வெற்றி பெற்றுள்ளன.

பெரும்பான்மை மக்களும் தேர்தல் திருவிழாவில் பங்கெடுப்பதே நமக்கான கடமை, உரிமை என்று திசைமாறி போய்க் கொண்டுள்ளனர்.

உறுதியுடன் போராடும் ஜனநாயக அமைப்புகளை தீவிரவாதிகள் - நக்சல்கள் என்று பீதியூட்டி அவர்களை, போராடும் மக்களிடமிருந்து வெட்டிப் பிரிப்பதன் மூலம், அவர்களையும் ‘பாதுகாப்பாக’ப் போராடும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கியுள்ளன.

இதுவே இன்றைய போராட்டங்கள் வெற்றி பெறாமல் போவதற்கும் காரணியாக இருக்கின்றது.

இதனை இடதுசாரிகள் உணர்ந்து ஓர் ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும். வழக்கமான போராட்ட வடிவங்களை விடுத்து, உறுதியான, தீர்வுகளை நோக்கிய போராட்ட வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து. முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

- தருமர், திருப்பூர்

Pin It