70 ஆண்டு சுகந்திர இந்தியாவில் எத்தனையோ சமூகத்தை சார்ந்த ஆளுமைகள், பிரதமராகவும், குடியரசு தலைவராகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாவும், ராணுவ தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.. ஆனால் இந்த பதவிகளுக்கு தலித் ஒருவர் நியமிக்கபட்டாலோ அல்லது பரிந்துரைக்கபட்டாலோ அதுநாடு முழுவதும் பெரிய பரபரப்புகளையும் அதிர்வுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்துகிறது.. ஏன் இப்படி ஏற்படுகிறது?

ramnath kovind jiwan parichayதலித் என்பது சாதியையும் தாண்டி அது தங்களுக்கான முதலீடாக கட்சிகள் பார்க்க தொடங்கிவிட்டன.. முதலீடு என்பதையும் தாண்டி தலித் என்ற சொல் தன்னுடைய இழந்த புகழ்களையும் செல்வாக்கையும் மீட்டெடுக்கும் மூலதனம் இல்லாத விளம்பர கருவியாக பயன்படுத்தப்படுகிறது.. எந்த கட்சி தலித் ஒருவரை முன்னிறுத்துகிறதோ உடனே நாங்கள் தான் தலித்துகளுக்கான உண்மையான பாதுகாவலர்கள், அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள்தான் காரணமென்று தம்பட்டமடிக்க தொடங்கிவிடுகின்றன.

தலித்துகள் அதிகாரத்திற்கு வருவதால் அந்த மக்களின் கழ்டங்கள் நீங்கிவிடுமா? என்றால் நிச்சயம் இல்லை.. ஆனால் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. ஆனால் இந்த பொதுசமூகம் சாதியை விட்டொழிக்காமல் இன்றளவும் இறுக்கமாக பிடித்துக்கொண்டே நிற்கிறது.. எப்படி சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்..

அமெரிக்காவில் படித்துவிட்டு வந்த அம்பேத்கார் பரோடா மன்னரின் கீழ் வேலை செய்ய விரும்பினார்.. ஆனால் தலித் என்பதற்காக பரோடா முழுவதும் அலைந்தும் வீடு கிடைக்காமல் மீண்டும் மும்பைக்கே திரும்பியதுதான் அதற்கு சாட்சி.. அது நடந்தது அப்போது இப்போதெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? என்றுகூட சிலர் கேட்கலாம் பிஹெச்டி மாணவன் ரோஹித் வெமுலா கொல்லப்பட்டது உங்கள் கேள்விக்கான பதில்..

தலித் மக்கள் எவ்வளவு படித்திருந்தாலும் , உயர்பதவியில் இருந்தாலும் இந்த பொதுசமூகம் தலித் என்றே பார்க்கிறது.. தலித்துகள் அதிகாரமிக்க உயர் பொறுப்புகளுக்கு வருவதால் தலித் மக்கள் உயர்ந்து விடுவார்கள் என்றால்.. மாயாவதி நான்குமுறை முதல்வராக இருந்த உத்திரபிரதேசத்தில் உள்ள தலித்துகள்தான் இந்தியாவிலே மெத்த படித்தவர்களாகவும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாகவும் இருப்பார்கள்.. ஆனால் அங்கு நிலைமையே முற்றிலும் தலைகீழானது இந்தியாவில் அதிக சாதிய வன்கொடுமைகள் நடக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசத்திற்கே முதலிடம்.. அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் தலித்துகள் இங்கு ஏராளம்..

ஜி. எம். சி. பாலயோகியும், மீரா குமாரையும் பாராளுமன்ற சபாநாயகராக நியமித்ததால் பாராளுமன்றத்தில் தலித்துகளுக்கான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதா? என்றால் இல்லை.. குறைந்தபட்சம் தலித் உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு அதிகமுறை வாய்ப்பாவது வழங்கப்பட்டதா? என்றால் அதுவும் இல்லை.. எப்போதும் போல பாராளுமன்றத்தில் தலித்துகளுக்கான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன..

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே. ஜி. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நீதிமன்றங்களில் அல்லது நீதிபதிகளை நியமிக்கும் முறைகளில் சாதிய பாகுபாடுகளே இல்லையென்று மறுத்துவிட முடியுமா? குறைந்தபட்சமாக தேங்கி கிடக்கும் தலித்துகளின் வழக்குகளாவது விரைந்து விசாரிக்கப்பட்டதா ?என்றால் அதுவும் இல்லை..

8 முறை லோக்சபா உறுப்பினராக ராம்விலாஸ் பஸ்வான் பிகாரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தொகுதியில் தலித் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டதா?, அவர்களின் சமூக அந்தஸ்து மாறிவிட்டதா? என்றால் இல்லை..

இவைகள்தான் இப்படி என்றால் தலித்துகளை வன்கொடுமையில் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களின் இன்றைய நிலைமை என்ன? சட்டத்தின்மூலம் ஒன்றை தடுக்கமுடியும் என்றால் இன்று இந்தியாவில் சாதிய பாகுபாடுகளே இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.. ஆனால் இன்று தீண்டாமையின் வடிவங்கள் மாறியிருக்கின்றன.. முன்பைவிட அதிகரிக்கின்றன..

பிறகு எதற்கு இந்த வன்கொடுமை சட்டங்கள்?குறைந்தபட்சம் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை வெளிகொண்டுவருவதற்கு ஒரு சிறிய ஆயுதமாக அவைகள் பயன்படுகின்றன.. அவ்வளவுதான்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தேசியகட்சிகள் தலித்தை கட்சியின் தலைவராக கொண்டுவந்திருக்கின்றன, காமினிஸ்டுகளை தவிர.. அப்படி என்றால் அந்த கட்சிகளில் உள்ள உறுப்பினர்களிடயே சாதிய பாகுபாடுகள் இல்லாமல் போய்விட்டனவா? குறைந்தது அந்த கட்சியில் உள்ள தலித் தலைவர்களோடு பிற சாதி இந்துக்கள் திருமணஉறவு வைத்துக்கொள்வதற்கு சாத்தியம் உண்டா ? என்றால் அதுவும் இல்லை.. பிறகு எதற்குத்தான் தலித்துகள் முன்னிறுத்த படுகிறார்கள்.. எல்லாம் ஓட்டுக்கான அரசியல்.. தலித்துகளின் வாக்குகள் இல்லாமல் அதிகாரம் சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால்தான் தலித்தை முன்னிலைபடுத்தும் யுக்தியை பின்பற்றுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் கட்சியின் தலைமைக்கோ அல்லது அதிகாரமிக்க பதவிக்கு தலித்துகளை கொண்டுவருவதன் நோக்கம் அதிகாரத்தை அவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கு அல்ல.. மாறாக அதனை அவர்கள் ஓட்டுகளாக பார்க்கின்றன.. அதில் அவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள்..

எனவே இங்கு தலித்துகளை உயர்பதவிகளுக்கு கொண்டுவருவதன் மூலம் தலித் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலை மாறிவிடும் என்பது முற்றிலும் பொய்யான கூற்று..

சமூக மாற்றம் ஒன்றே தலித்துகளின் உண்மையான விடுதலை.. அதை நோக்கியே பயணப்பட வேண்டும்.. ஆனால் அந்த சமூக மாற்றம் என்பது தலித்துகளால் மட்டுமே சாத்தியமில்லை. தலித் அல்லாதவர்களும் தலித்துகளோடு கைகோர்த்து போராடும்போதுதான் அதனை வென்றெடுக்க முடியுமென்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்..

- மணிகண்டன் ராஜேந்திரன்

Pin It