தலையங்கம்
‘தலித் முரசு' கடந்த ஓராண்டாக, ஒவ்வொரு மாதமும் தாமதமாக வெளிவருவதை வாசகர்கள் அறிவர். இதற்கான காரணம் புதிதல்ல. இரு ஆண்டுகளுக்கும் மேலாக இதழ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது, அனைவரும் அறிந்த செய்திதான். இருப்பினும், 12 ஆண்டுகளாக மாதம் தவறாமல் இதழைக் கொண்டு வரும் போராட்டத்தில், என்றென்றும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சிலர்தான் தோள் கொடுக்கிறார்கள்; பலர் இன்றளவும் வேடிக்கைதான் பார்க்கிறார்கள். ஆண்டுக் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, வாழ்நாள் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. போதிய விளம்பரங்கள் இன்றி, குறைந்த விலையில், தரமான ஓரிதழை நடத்தும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.
கருத்தியல் தளத்தில் மட்டுமின்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்த கல்லூரி விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்ப, நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக விளைந்த பயனாளிகள் 522 பேர்களில், இதுவரை 16 பேர்தான் வாழ்நாள் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதிலும் ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் தன்னெழுச்சியாக இதைச் செய்திடவில்லை. அத்துனை பேரும் வாழ்நாள் கட்டணம் செலுத்தினால், இதழை ஓராண்டுக்கு மேல் தொய்வின்றி நடத்த இயலும். இவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த, நாம்தான் வெட்கப்படுகிறோம்.
“தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள படித்தவர்கள், உயர் படிப்பு படித்த வகுப்பினர், எனக்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டனர். கல்வியை உள்வாங்கிக் கொண்டு, உயர் கல்வியையும் பெற்ற பிறகு, அவர்கள் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் மக்களுக்காக உழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளுவதில் மட்டும் தீவிரமாக இயங்கும் எண்ணற்ற எழுத்தர்களின் கூட்டம், என்னை திகிலடையச் செய்து விட்டது'' என்ற டாக்டர் அம்பேத்கரின் கூற்று, இன்றுவரை அப்படியே பொருந்துகிறது!
தலித் மக்களுக்காக அரசியல் தளத்தில் குரல் கொடுக்க, வலுவான கட்சிகள் இருக்கின்றன; பொருளியல் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன; நிர்வாக ரீதியாக அவர்களுடைய சிக்கல்களை தீர்த்துக் கொள்ள எண்ணற்ற எஸ்.சி., எஸ்.டி. நலச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இம்மக்களுக்காக இயங்குவதற்கும், அவர்களுடைய எண்ணங்களை எதிரொலிப்பதற்கும் – இங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பத்திரிகைகள் உள்ளன. அதிலும் 12 ஆண்டுகளாக தலித் அடையாளத்துடன் வெளிவரும் ஒரே இதழ்கள் "தலித் முரசு' இருந்தும் – இதற்குப் போதிய ஆதரவு நல்கப்படவில்லை; இதன் தேவை உணரப்படவில்லை என்பதுதான் வேதனை!
தலித் மக்கள் நாள்தோறும் பிரச்சினைகளை சந்திக்கவே இல்லையா? அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து சட்டமன்றங்களில் மட்டும் முழங்கினால் போதுமா? அவை தெருவெங்கும் எதிரொலிக்க வேண்டாமா? இம்மக்களுக்கான போராட்டங்கள் பதிவாக வேண்டாமா? தலித்துகளின் கலை, வரலாறு, பண்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டாமா? நாள்தோறும் வன்கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன. ஆனாலும் குறைந்தளவே பாதுகாப்பு கொண்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக்கூட ரத்து செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் வலுக்கின்றன. இவற்றுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டிய தலித் இயக்கங்கள், தேசியம் மற்றும் மொழி அரசியலில் சிக்க வைக்கப்பட்டுள்ளன.
நடைபெற இருக்கும் 15ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்நாட்டு அரசும், கட்சிகளும் செலவழிக்கப் போகின்றன! கையால் மலம் அள்ளும் மனிதனை விடுவிக்க திட்டம் தீட்டி, அதைத் தீவிரப்படுத்த வக்கற்ற அரசு – மனிதனை நிலவுக்கு அனுப்ப 12 ஆயிரம் கோடி ஒதுக்கப் போகிறதாம்! ஆனால், இந்தியாதான் வறுமைப் பட்டியலில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் 23 கோடி மக்கள் போதிய ஊட்டச்சத்தின்றி அல்லலுறுகின்றனர். வர்ணாசிரமப் படிநிலையில் மேல்தட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக வறுமைப்பட்டியலில் இருக்க வாய்ப்பில்லை. தலித்துகளும் பழங்குடியினரும்தான் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். ஜாதிதான் வறுமையை தோற்றுவிக்கிறது. ஜாதியை உருவாக்கியது இந்து பண்பாடு. தலித்துகளை இந்து அடிமைகளாகவே வைத்திருக்க நாள்தோறும் சதிகள் அரங்கேறுகின்றன.
எது எப்படி இருப்பினும், அடிமைகளாக இருப்பதில் சுகம் காணும் தலித்துகளை கிளர்ந்தெழச் செய்ய - ‘நீ அடிமை' என்று உணர்த்திக் கொண்டே இருப்பதைத் தவிர - "தலித் முரசு' வேறு என்ன செய்துவிட முடியும்?