தமிழகத்தில் காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, கெயில் பிரச்சினை, அடுத்தாக இப்போது நெடுவாசல் என தமிழக விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பிரச்சினைகள் வருவது வேதனைக்குரியது. 

 ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகளின் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேசும் போது, "பீர்மேடு, தேவகுளத்தை கேரளாவுக்கு விட்டுகொடுத்ததால் மட்டும் தமிழக்திற்கு 405 டி.எம்.சி தண்ணீர் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 35 நாட்கள் மட்டுமே மழை பெய்கிறது. இதன் மூலம் 940 மி.மீ மழைநீர் கிடைக்கிறது. தாமிரபரணி தவிர பிற ஆறுகள் வெளிமாநிலங்களில் உற்பத்தி ஆகின்றன. நாம் நீருக்காக வெளிமாநிலங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.” என்றார்.

TN farmers at delhi

 காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதனை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லையென மத்திய அரசும் அந்த மாநில அரசைக் கேள்வி கேட்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் 1979ம் ஆண்டு தண்ணீர் சேகரிக்க மறுக்கப்பட்டது. அப்போதிலிருந்து தமிழக விவசாயிகள் அதற்காக போராடி வருகிறார்கள். கெயில் பிரச்சினை! இது தமிழகத்தில் 310 கி.மீ தூரத்தை சேலம், கோவை, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஏழு மாவட்ட விவசாய நிலத்தை துளைத்துக் கொண்டு போகும் எரிவாயு குழாய் திட்டம். இந்த கெயில் எரிவாயு திட்டத்திற்கு 66 அடி அகலத்திலும் 3 1/2 அடி ஆழத்திலும் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதோடு குழாய் பயணிக்கும் இருபுறமும் கிட்டத்தட்ட 20 அடி தூரத்திற்கு விவசாயம் செய்யக்கூடாது. மேலும் குழாயைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டும் இருக்கிறது. 

 கெயில் எரிவாயு குழாய் செல்லும் பாதையிலோ அதன் அருகிலோ ஆழமாக ஊடுருவும் வேர் கொண்ட பயிர்களை பயிரிடக் கூடாது, மரங்களை அறவே நடக்கூடாது, விவசாயத்திற்கு ஆதாரமான கிணறோ, வாய்க்காலோ பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வெட்டக்கூடாது. இதுமட்டுமல்ல பதிக்கப்பட்ட குழாயில் வெடிப்போ, கசிவோ ஏற்பட்டால் சமபந்தப்பட்ட நிலத்தின் விவசாயியே அதற்கு முழு பொறுப்பாவாராம். அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறையில் தள்ள ஆவண செய்திருக்கிறது திருத்தப்பட்ட எரிவாயு குழாய் பாதிப்புச் சட்டம். குழாய்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், தான் நிரபராதி என்பதனையும் நிலத்தின் சொந்தக்காரரே நிரூபிக்க வேண்டுமாம். 

 இப்போது தமிழகத்தின் 7 மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள நெடுவாசல் உட்பட 22 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். இந்த எரிவாயு எடுக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்துமே வானம் பார்த்த பூமி. விவசாய நிலங்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் கீழிறங்கி விட்டது என சோகத்தில் இருக்கும் மக்களுக்கு உங்கள் நிலத்தை எடுத்து ஆய்வு செய்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப் போகிறோம் என்று மட்டும் கூறிவிட்டு வேறு எந்தத் தகவலும் இல்லாமல் நிலத்தை அபகரிக்கும் பணியில் இறங்கினார்கள். அதற்கு எதிரான போராட்டமும் இன்று வீரியமடைந்துள்ளது.

தமிழகம் கற்றுக் கொண்ட போராட்டம்

 ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சிக்குப் பிறகு தமிழகம் முழுக்க ஒரு போராட்ட சூழ்நிலையில் தான் நகருகிறது. தமிழகத்தின் ஒரு பகுதியில் நடக்கும் பிரச்சினைகள் தமிழகத்தின் பிரச்சினையாகவே பார்க்கும் மனநிலைக்கு மக்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றத்தை தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் துரோக நிலையும் மாணவ போராட்டமும் ஏற்படுத்திற்று.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் வடகாடு, நெடுவாசல், கருவாக்குறிச்சி, கோட்டைக்காடு, வாணக்காடு ஆகிய இடங்களில் ஆய்வு செய்வதற்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்த நிலையில் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

 இந்த மக்களின் போராட்டத்தை தற்போதைக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து இத்திட்டத்தைக் கொண்டுவர மாட்டோம் என்று கூறி பின்பு எண்ணெய் வள அதிகாரிகளை அழைத்து சமரச முயற்சியில் இறங்கினார், ஆனால் அது விவசாயிகளிடம் பலிக்கவில்லை. மத்திய அரசும் போராட்டத்தைக் கலைக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டது.
 
மத்திய அரசின் சூழ்ச்சிகள்

 நெடுவாசல் திட்டத்தை எதிர்த்த மக்களிடம் மத்திய அரசை சேர்ந்த பாஜகவினர் ‘மக்கள் விரும்பவில்லையென்றால் இந்த திட்டம் கைவிடப்படும்’ என அறிக்கை விட்டார்கள். ஆனால் மக்கள் தொடர்ச்சியாக 20 நாட்களுக்குப் பிறகு இத்திட்டம் வேண்டாம் என்று போராட்டங்கள் நடத்தியும் திட்டத்தை கைவிட்டதாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் பாஜகவின் எம்.பியான பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகத்தின் போராட்டங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவல்” என குற்றச்சாட்டை கூறினார். (வணக்கம் இந்தியா 10.03.2017). தமிழகத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள் அனைத்தும் மத்திய அரசினுடைய தமிழக துரோக நிலையை எதிர்த்தென்பதால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் திசைதிருப்ப முயற்சித்தார்கள். அதே நேரத்தில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் எச்.ராஜா, “ஒரு விதத்தில் மத்திய அரசை எதிர்க்க வேண்டியதே அவர்களது வேலை. அதனை முறியடிப்போம்” என பேட்டி கொடுக்கிறார். (தி இந்து 06-03-17). எப்படி ஜல்லிக்கட்டு மாணவர்களின் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதை இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று சித்தரித்து அடிதடி நடத்தினார்களோ அதே போன்று நடத்துவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது.

 கர்நாடக எம்.பியான தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்திற்கு வந்தார். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதே விவசாயிகளின் பிரச்சினையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போன கர்நாடகத்தின் முடிவுக்கு குரல் கொடுக்காமல் விவசாயிகளுக்காக பரிந்து பேசுகிறேன் என்று தமிழகத்திற்கு வந்ததை தமிழகம் கவனிக்காமல் இல்லை. அதனால் மக்கள் அவரது பேச்சுவார்த்தையை நிராகரித்தனர்.

 அதே போல்,தமிழகமே ஹைட்ரோகார்பன் என்று கொந்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், அமெரிக்காவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முதலீட்டாளர்களிடம் கூட்டத்திற்கு கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருந்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காகவே மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்றி ஒற்றைச் சாளர அனுமதிக்கு வழி செய்துள்ளது எனவும் இந்தியாவில் (நெடுவாசலும் அடங்கும்) பல பகுதிகளில் ஆய்வுகள் முடிந்து தனியார் நிறுவனங்கள் முன்வந்திருக்கிறது எனக் கூறி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு கொடுத்தார். இப்போது இந்தியாவில் 31 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம், அதில் 15 நிறுவனங்கள் புதிதாக பெட்ரோலியம் தொடர்பாக தொழில் தொடங்கியவை என பெருமையாகப் பேசினார்.( வணக்கம் இந்தியா 10.03.17). 

மக்களின் கேள்விகள்

 பாஜக எம்.பி இல.கணேசன் நெடுவாசல் பிரச்சினையைப் பற்றி கூறும்போது “எல்லா திட்டத்தையும் இப்படி எதிர்த்தீர்கள் என்றால், என்ன ஆகாயத்திலா திட்டத்தை செயல்படுத்த முடியும். ஒரு நாட்டுக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்யலாம்” என்றார். அதற்கு மக்களும் சில பதில்களை முன்வைத்தார்கள். அதாவது, “ஆகாயத்திலா திட்டங்களை செயல்படுத்த முடியும் என பிஜேபி எம்.பி கேட்கிறார்! திட்டங்கள் எப்படியோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் விவசாயம் நிலத்தில் மட்டும் தான் செய்ய முடியும். ஆகாயத்தில் முடியாது” என பதில் கொடுத்தார்கள்.

 ஒரு மாநிலம் தியாகம் செய்யலாம். ஆனால் அதற்காக எம்.பிக்களும் தான் தியாகம் செய்யலாமே. நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள், இலவச தொலைப்பேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றால் தினப்படி உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது எம்.பிக்களுக்கு மாதந்தோறும் 50,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பிற படிகளாக 45 ஆயிரம் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. டெல்லியில் வசதி படைத்தோர்கள் இருக்கும் இடத்தில் வீடு ஒதுக்கல் என எம்.பிகளின் இந்த சலுகைகளும் சம்பளமும் பத்தாமல் போக இன்றைய உ.பி முதலவர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த சம்பளம் சரியானதா என ஆய்வு செய்தது மத்திய பாஜக அரசு. யோகி ஆதித்யநாத் குழு எம்.பிக்களின் சம்பளம் பத்தாது, இன்னும் 100% உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது (தினமலர் 01.05.2016). நாட்டின் பொருளாதாரத்திற்காக விவசாய நிலங்களை தியாகம் செய்யச் சொல்வோர்கள் எப்போது தங்களது ஏகபோக வாழ்க்கையை கொஞ்சமாகவாவது தியாகம் செய்வது? மாநிலத்தை தியாகம் செய்யச் சொன்ன இல.கணேசன் தனது சலுகைகளை நாட்டிற்காக தியாகம் செய்வாரா?

 தூத்துக்குடியில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாஜக எம்.பி இல.கணேசன், “இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் நாட்டு நலனுக்காக, மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. இவர்களின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும்” என்றார். விவசாய நிலத்திற்காக தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் மக்களின் பின்னணி என்வென்று ஆராயச் சொல்லி போராட்டத்தைக் களங்கப்படுத்துகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். 

 "தாமிரபரணி ஆற்றில் வெளிநாட்டு நிறுவனங்கள் குடிதண்ணீர் எடுப்பதற்கு அனுமதியளித்தது கண்டிக்கத்தக்கது" என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பாஜக எம்.பி இல.கணேசன். அவரிடம் மக்களின் சார்பாக கேட்பது, வெளிநாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியின் சார்பாக அமெரிக்காவிற்குச் சென்று விவசாய நிலங்களை அழித்து, ஹைட்ரோகார்பன் எடுக்க வாருங்கள் என அழைப்பு விடுக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரையும் கண்டியுங்கள். 

 மத்திய அரசின் அறிக்கைப்படி ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தினால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அபகரிக்கும் இடத்தில் விளைநிலங்களை வைத்தே நாங்கள் 500க்கும் மேற்பட்டோருக்கும் வேலை தருவோம் என்கிறார்கள் நெடுவாசலில் போராடும் மக்கள்.

தொடரும் போராட்டங்கள்...

 இப்படியான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு அடுத்தகட்டமாக டெல்லியில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் கடந்த மார்ச் மாதம் 13ம்தேதி முதல் போராடி வருகின்றனர். வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 போராட்ட பூமியாகவே மாற்றிவிட்டது தமிழகம், போராடித் தான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு தமிழக மக்கள் மத்திய அரசால் தள்ளப்பட்டுள்ளனர்.

- அபூ சித்திக்

Pin It