கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

farmers protestஉலகத் தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்

வேகாத வெயிலில், கடும் பனி, சூறைக்காற்று என எந்நேரமும் நிலத்தில் உழைத்தவர்கள்.., ஏன்.. வீதிக்கு வந்தார்கள்?

அதுவும் போராட்டம் செய்ய, கடும் குளிர் வாட்டும்  தில்லிக்கு ஏன் வந்தார்கள்???

நாம் சிந்திக்க வேண்டாமா?

அதானி குழுமத்தின் அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (ADANI Agri Logistics Pvt Ltd) இந்தியா முழுவதும் 14 இடங்களில், பல லட்சம் டன் உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இராட்சத ’சைலோ’ கிடங்குகளை நிறுவியுள்ளது.

(நம் வீடுகளில் நெல், கேழ்வரகு, வேர்க்கடலை, சோளம், கம்பு தானியங்களை சேமிக்கும் மண்ணாலான பெரிய குருதுகளைப் பார்த்திருப்பீர்கள்! மரத்தில் செய்த பத்தாயங்களும் உண்டு.)

8,75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, இந்த இராட்சத (silo) களஞ்சியங்கள் சீமெந்து அடித்தளமும் துத்தநாகம் பூசிய மாழையும் (உலோகமும்) கொண்டு செய்யப்பட்டவை.

நெல், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் என அனைத்துப் பொருட்களையும் பல மாதங்கள் சிறிதும் சேதமின்றிச் சேமித்து வைக்கலாம்.

இந்த வகையில் முதல் பெருங்களஞ்சியங்கள் முதன்முதலாக பஞ்சாபின் மோகாவிலும் அரியானாவின் கைத்தாலாவிலும்தான் கட்டப்பட்டன.

கிடங்கிகளை இது வரை இந்திய உணவுக் கழகத்துக்கு (FCI) வாடகைக்கு மட்டுமே விட்டுக் கொண்டிருந்த அதானி அக்ரிஸ் நிறுவனம், முதன்முதலாக மத்தியப் பிரதேசத்தில் 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து நேரடியாகக் கோதுமை கொள்முதல் செய்ய உரிமம் பெற்றிருக்கிறது.

அதற்கு ஏற்றாற்போல் இன்றியமையாப் பண்டங்கள் பதுக்கல் தடைச் சட்டப் பட்டியலிலிருந்து காய்கறி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக் கிழங்கு வகைகளை விலக்கிப் புதிய சட்டம் போட்டிருப்பதால், இந்தச் சட்டம் அதானி முதலானோர்க்கு நன்மை செய்யவே தவிர உழவர்களின் நலனுக்காக அல்ல.

வேளாண் சட்டங்கள் அதானி, அம்பானி போன்ற பெருங்குழும (கார்ப்பரேட்) களவாணிகளுக்குத்தான்..,! என்ற உழவர்களின் அச்சம் நியாயமானதே..,!

அவசர அவசரமாக மத்திய மோதி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வடக்கே மண்டி என்று சொல்லப்படுகிற அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, அரசு செய்யும் கொள்முதலும் நிறுத்தப்படும் என்ற அச்சம் பஞ்சாப், அரியானா, உபி விவசாயிகளிடம் காணப்படுகிறது.

எல்லா விளைபொருட்களும், இம்மாதிரி அதானிகளின் சேமிப்புக் கிடங்குகளில் போய்ப் பதுங்கி கொண்டால்… அதானி நினைத்தால் மட்டுமே வெளியே வரும்!

உற்பத்தி செய்தவனும் வீதிக்கு வர வேண்டிய நிலை உருவாகும்! 

இதை உணர மறுப்பவர்கள் கையில்தான்… ஆட்சியும், அதிகாரமும்..!

விலை குறைவாக, அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் வாங்கிப் பதுக்கிக் கொண்டு..,

வேண்டல் பெருகும் போது அல்லது செயற்கையாக வேண்டல் உருவாக்கி, இப்போது வெங்காயம் விலை ரூ 200/கிலோ என விற்பது போல..,

விலை ஏறும்போது.., விற்பனைக்குக் கொண்டுவந்து,

கொள்ளை இலாபம் சம்பாதிப்பது குஜராத்தி பனியா அதானியின் திட்டம்! இந்த குசராத்தி பனியா முதலாளர் கூட்டத்தின் கூட்டாளியாகவே மோதி அரசு செயல்படுகிறது.

இதுதான் இந்திய அரசு என்பதை உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

- தியாகு