neduvasal agitation 343

2017 சனவரி 16ஆம் நாள் முதல் சல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி, “வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் செல்லமாட்டோம்” என்ற முழக் கத்துடன் சென்னை மெரினா கடற்கரையிலும் தமிழ் நாட்டின் மாவட்டத் தலைநகரங்களிலும் மற்றும் பல் வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கில் மாணவர் களும் இளைஞர்களும் திரண்டு இரவும் பகலுமாகத் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டு அரசு இதற் கான சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

2017 பிப்பிரவரி 16 முதல் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள நெடுவாசல் மக்கள் தங்கள் ஊரில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர். நெடுவாசலைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த உழவர்களும் பொதுமக்களும் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் முதலான இடங்களிலிருந்து மாணவர்களும் இளைஞர்களும் காவல்துறையின் தடுப்புகளையும் மீறி நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் களும் நெடுவாசலுக்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (Oil and Natural Gas Corporation - ONGC) தமிழகத்தில் காவிரி ஆற்றுப் படுகையான நெடுவாசல், குத்தாலம், கீழ்வேலூர், நன்னிலம் ஆகிய நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்று கூறப்படும் மீத்தேன் எரிவாயு இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இதுபோல் நாடு முழுவதிலும் 38 இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ இருப்பதாக 2008ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. நெடுவாசலில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் 10.4 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4.30 இலட்சம் டன் எண்ணெய் மற்றும் அதற்குச் சமமான எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் பெரும்பரப்பில் எண்ணெய் எடுப்பதுபோல் அல்லாமல், சிறு அளவிலான பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் கொள்கையை 2015இல் நடுவண் அரசு வகுத்தது. இது ‘சிறுவயல் கொள்கை’ எனப்படுகிறது. இச்சிறுவயல் கொள்கை யின் அடிப்படையில் 15.2.2017 அன்று இந்தியாவில் 31 இடங்களில் எதிவாயு எடுப்பதற்கான ஒப்பந்த உரிமையை நடுவண் அரசு தனியார் நிறுவனங் களுக்கு அளிப்பதாக அறிவித்தது. 31 இடங்களில் நெடுவாசலும் ஒன்று. நெடுவாசலில் எரிவாயு எடுப் பதற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறு வனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபது ஆண்டுளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, வாணக் கன்காடு ஆகிய இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 15.2.2017இல் நடுவண் அரசின் அறிவிப்பில் நெடு வாசல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இருபது ஆண்டுகளுக்குமுன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு இருப்பதற்கான ஆய்வை மேற்கொண்டபோது, மண்ணெண்ணெய் இருக்கிறதா என்று ஆய்வு செய்வதாக மட்டும் கூறி சில உழவர்களிடம் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தது.

தஞ்சை, நாகை மாவட்டங்களில் காவிரி ஆற்றுப் படுகையில், மீதேன் எரிவாயு திட்டத்திற்காகக் குழாய் கள் பதிக்கத் தொடங்கிய பிறகு, அதனால் ஏற்படக் கூடிய வேளாண் சீரழிவைக் கண்டு உழவர்கள் அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். அப்போதைய முதலமைச்சர் செயலலிதாவும் இத்திட்டத்தை எதிர்த் தார். தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவும் மீதேன் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கூறியது. மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இறுதியில் நடுவண் அரசு மீத்தேன் திட்டத்தைக் கைவிட்டது. மீத்தேன் திட்டம் வேண்டாம் என்பதற்கு வல்லுநர் குழு கூறிய அதே காரணிகள் நெடுவாசல் எரிவாயுத் திட்டத்திற்கும் பொருந்தும்.

‘மீத்தேன்’ என்ற பெயரை ‘ஹைட்ரோ கார்பன்’ என்று மாற்றிக் கூறி நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தைத் திணிக்கிறது நடுவண் அரசு. ஹைட்ரஜன் அணுவுடன் சேரும் கார்பன் அணுவின் எண்ணிக் கையைப் பொறுத்து, அதன் பெயர்கள் மாறுபடுகின்றன. ஒரு கார்பன் அணு இடம் பெற்றிருந்தால் மீத்தேன், இரண்டு இருந்தால் ஈத்தேன், மூன்று இருந்தால் புரோபேன், பத்து இருந்தால் டெக்கேன் என்று வரிசை யாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நெடுவாசல் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட் டத்தின் கிழக்குப் பகுதி தஞ்சை மாவட்டத்தின் எல்லை யில் அமைந்திருக்கிறது. அதனால் இப்பகுதி மக்கள் மீத்தேன் போராட்டம் பற்றியும் அதன் கேடுகள் குறித்தும் நன்கு அறிந்திருந்தனர். அதனால் நெடுவாசல் பகுதியில் எரிவாயு எடுக்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு 15.2.2017 அன்று ஒப்பந்தம் அளித்துள்ளது என்ற செய்தி வெளி யானதும், அன்றிரவே நெடுவாசல் உழவர்களும் மக்களும் கூடிப் பேசினர். இத்திட்டத்தால் உழவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், நிலமும் நீரும் நஞ்சாகும் என்று எண்ணினர். எனவே அடுத்த நாள் 16.2.2017 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட நெடுவாசல் உழவர்களும் பொதுமக்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து, நெடுவாசலில் எரிவாயு எடுக் கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று விண்ணப் பம் அளித்தனர். மேலும் அன்றே நெடுவாசலில் திரண்டு போராட்டத்தைத் தொடங்கினர்.

நெடுவாசலைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் எரி வாயு எடுப்பதால் சுற்றுவட்டாரம் முழுவதும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கிப் பல ஊர்களிலும் அறிக்கைகளை வழங்கினர்.

நெடுவாசலிலும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக் கான ஊர்களிலும் முப்பது ஆண்டுகளுக்குமுன் நிலம் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. அதன்பின் இப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர்வளம் பெருக்கி எல்லாவகையான பயிர்களையும் பயிரிடத்தக்கப் பசுஞ்சோலையாக மாற்றினர். நெடு வாசலில் எரிவாயு எடுக்க அனுமதித்தால், தாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய வளமான நிலமும் நீரும் நல்ல சூழலும், காற்றும் நஞ்சாகிவிடும் என்பதால் இப்பகுதியைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவ-மாணவியர், பணியில் இருக்கும் இளைஞர் கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் என்று பலதரப்பினரும் நாள்தோறும் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இவ் வாறு பல்வேறு ஊர்களிலிருந்து போராட்டத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நெடுவாசல் மக்கள் சார்பிலும் தன்னார்வத் தொண்டர்கள் சார் பிலும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகில் உணவு சமைத்து அளிக்கப்படுகிறது. யாருடைய தூண்டுதலோ, பின்னணியோ இல்லாமல் தன்னெ ழுச்சியாக இப்போராட்டம் நடக்கிறது.

நடுவண் அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நெடுவாசல் எரிவாயுத் திட்டத் தால் நிலம், நீர், மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு எத்தகைய பாதிப்பும் வராது என்று கூறுகிறது. ஆனால் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால், பழங் குடியினர், வேளாண் குடியினர், சில கோடிப் பேர் தங்கள் வாழிடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்கிற விவரத்தை நெடுவாசல் மக்கள், படித்த இளைஞர்கள் மூலம் அறிந்துள்ளனர். வளர்ச்சி என்கிற வாதம் நடப்பில் நகர்ப்புற பணக்கார மேட்டுக்குடியி னரின் வளர்ச்சிக்காகவே என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பெட்ரோலிய-கச்சா எண்ணெய் நாட்டின் தேவை யில் 70 விழுக்காட்டிற்குமேல் இறக்குமதி செய்யப்படு வதால், பல ஆயிரம் கோடி உருவா அந்நியச் செல வாணியை இழக்க வேண்டியுள்ளது என்று ஆளும் வர்க்க்ததினர் கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் ஆகியவை ஆடம்பரமான மகிழுந்துகள், விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களுக்கே பெருமளவில் செலவாகிறது. பேருந்து மூலமான பொதுப்போக்குவரத்தை அதிக மாக்குவதன் மூலம் மகிழுந்துகளின் தேவையைக் குறைக்க வேண்டும் என்று பொருளாதார வல்லு நர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பன்னாட்டு-உள்நாட்டுப் பெருமுதலாளியக் குழுமங்கள் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள் உற் பத்தி செய்வதற்காக - அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என்கிற பெயரால் இந்நிறுவனங்களுக்கு அரசு பல வகையிலும் உதவி வருகிறது. ஆண்டுதோறும் முத லாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்குவதன் மூலம் நடுவண் அரசுக்கு அய்ந்து இலட்சம் கோடி உருபா இழப்பு ஏற்படுகிறது.

இன்றைய அரசு, முதலாளிகளுக்கான அரசு, வளர்ச்சி என்ற பெயரில் உழவர்களையும் பழங்குடியி னரையும் வஞ்சிக்கும் அரசு. ஆகவே நெடுவாசலில் உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எரிவாயுத் திட்டத்தைக் கைவிடும் வரையில் போராடுவோம்.

Pin It