1930 முதற்கொண்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. திராவிடக் கொள்கையும், பண்பாடும், கலாச்சாரமும் ஆழமாக ஊன்றப்பட்ட தமிழக மண்ணில் ஆரிய கலாச்சாரத்தை வேரூன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடியவில்லை. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குமரி மண்ணில் இந்துத்துவ கருத்தியலை பறைசாட்டும் விவேகானந்தர் மண்டபத்தை அமைக்க அவர்கள் இந்திய அளவில் கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. குமரி கடலில் இந்துத்துவத்தின் முகத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த விவேகானந்தர் பாறையின் அருகே திருவள்ளுவருக்கு 133 அடியில் கலைஞர் சிலை அமைத்தது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.
தமிழகத்தைச் சுற்றி பிணங்களைத் தின்ன வட்டமிட்டுக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு நுழைவாயில்களை திறந்து விட்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவை அப்போலா மருத்துவமனைக்கு அனுப்பிய கணம் முதலே விஷ வித்துக்கள் தமிழக மண்ணில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதாக தற்போது வரும் செய்திகள் அனைத்தும் நமக்கு அடர்த்தியான சந்தேகங்களை உருவாக்குகின்றன. இந்த வருடம் அக்டோபர் 22ம் தேதி நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது அதைப் பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பாஜக மாற வேண்டும். அதற்கேற்ப இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். அவரது கூற்று மூலமாக திட்டமிடப்பட்ட சதி தமிழகத்தில் அரங்கேறியுள்ளதை ஊகிக்க முடிகிறது.
136 எம்.எல்.ஏக்கள், 37 லோக் சபா எம்.பிக்கள், 13 ராஜ்யசபா எம்.பிக்கள் என அசுர பலத்தோடு மத்தியிலும் மாநிலத்திலும் அதிமுக உள்ளது. ஜூலை 2017-ல் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் அதிமுகவின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இந்த பலம் அப்படியே பாஜகவின் செல்வாக்காக மாற உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், நீட் தேர்வு போன்றவற்றை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்ற சில நாட்களிலேயே இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜகவால் வளர்க்கப்பட்ட இந்துத்துவவாதியான தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான மாஃபா பாண்டியனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தேமுதிகவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சில நாட்களிலேயே அதிமுகவிற்கு தாவிய மாஃபா பாண்டியன், 2000மாவது ஆண்டுகளில் பாஜகவின் தீவிர நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதன் முதலில் அரசியலில் பயணித்தது பாஜக மூலமாகத்தான். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக நடந்த அனைத்து கலந்தாலோசனைக் கூட்டங்களிலும் அருண் ஜேட்லியின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டிருக்கிறார். முக்கியமான பாஜக தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள பாண்டியராஜன் அதிமுகவின் முகத்தில் காவி சாயத்தைப் பூச நுணுக்கமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்ற உடன் அவர் எதிர்த்த திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்றால், அவர் திரும்பி வரமாட்டார் என்பதில் அதீத நம்பிக்கை மாஃபாவுக்கு எப்படி வந்தது? மேலும், பல முறை எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் எம்.ஜி.ஆருக்கு காவி சாயம் பூசி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என ஏன் இப்போது அவர்களின் மூளையில் உதித்திருக்கிறது? எல்லாமே மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், அதை மன்னார்குடி மாஃபியா கும்பல்களுடன் இணைத்து மக்களின் மனதை திசை திருப்பி விட்டு, இந்துத்துவ கும்பல் தம்பிதுரை எம்.பி, மாஃபாக்கள் மூலமாக தெளிவான வேலைத் திட்டங்களை அரங்கேற்றியுள்ளதாகத் தான் கருதுகிறேன். ஜெயலலிதாவின் பிணத்தின் அருகே கழுகு வட்டமிடுவதைப் போன்று அழையா விருந்தாளியாக வந்த மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கருத்தியல் ரீதியாக பாரிய வேறுபாடு கிடையாது என்று கூறியது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றது.
சசிகலாவின் தலைமையிலான மாஃபியா கும்பல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அதிரடி சோதனைகளையும் மத்திய அரசு துவக்கி இருக்கிறது. மாஃபா மூலமாக அதிமுகவை அபகரிக்கத் திட்டமிடும் பாஜக, அதிமுக தொண்டர்களிடையே பல்வேறு குழப்பங்களை உருவாக்கி வருகிறது. இதற்கு சமூக வலைதள போராளிகளாகிய நாமும் துணை போய் கொண்டிருக்கிறோம். பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம்தான் சசிகலா கும்பல் என்றாலும், இந்துத்துவக் கருத்தியலில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அல்ல. சசிகலா, பன்னீர்செல்வம் கும்பலையும் அதிமுகவை அபகரிக்க பாஜக பயன்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை விட குரூரமான இந்துத்துவ சிந்தனைவாதி மாஃபா அனைத்து வேலைத் திட்டங்களையும் தெளிவாக அரங்கேற்றி வருகிறார். அதிமுக தொண்டர்கள் காவி முகத்துடன் இரண்டு விரல்களைத் தூக்கும் இவரை அடையாளம் கண்டு கொள்வார்களா என்பதில் பாரிய சந்தேகமே எஞ்சி உள்ளது.
- ஷாகுல் ஹமீது