arun jaitley

டிசம்பர் 2001-இல் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சதிக்குற்றம் சாட்டப்பட்டு , உச்ச நீதிமன்றத்தால் 2004 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவின் வழக்கறிஞராக இருந்தவர் யார் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

"பெண்களே! உங்களை பலாத்காரம் செய்ய முற்படும் போது கடவுளின் பெயரை உச்சரிப்பதோடு, பலாத்காரம் செய்ய முற்படும் நபர் மீது கையை வைத்து நான் உன்னை சகோதரனாகக் கருதுகிறேன் எனக் கூறுங்கள்" என்று சர்ச்சையை கிளப்பிய சாமியார் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்ட இந்த சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கறிஞராக இருந்தவர் யார் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி.

2007-ம்ஆண்டு வோடபோன் நிறுவனம் ஹச்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியத்தில் ரூ. 11,200 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வோடபோன் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக அப்போது இருந்தது யார் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் இறந்தனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம் என்கிறார்கள். உலகத்தை உலுக்கிய இத்துயர சம்பவத்தின் நிறுவனத்திற்கு வழக்கறிஞராக இருந்தவர் யார் தெரியுமா? தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது, மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் சுமார் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும், இதில் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இங்கிலாந்து சென்ற இவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறையினர் அறிவித்தனர். பொருளாதாரக் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியவரும் வழக்கறிஞரும் யார் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவர், முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

சஹாரா குழுமம் 2008-09-ல் பொதுமக்களிடையே கடன் பத்திரங்களை வழங்கி முதலீட்டைத் திரட்டுகிறது. இந்தக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் தங்களது பங்காக (ஷேர்) மாற்றிக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு இந்த நிறுவனங்களால் திரட்டப்படுகின்றது. மொத்தப் பணத்தில் ஒரு சதவீதம் தான் உண்மை என்றும், மீதம் உள்ள அனைத்தும் கள்ளப் பணம், கருப்பு பணம் என்றும் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கருப்புப் பணம் எப்படி வர்த்தகத்தில், தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதற்கு இந்த நிறுவனம் உதாரணமாகத் திகழ்கிறது. இந்த சஹாரா நிறுவனத்தின் வழக்கறிஞர் யார் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

பாரத மாதா வாழ்க என்று சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்தியப் பிரதேச சட்டசபையில் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகிறார். வங்கிகளிடம் ரூ.9000 கோடி கடன் வைத்துள்ள பிரபல மும்பை தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரின் ரேஷன் கார்டு மற்றும் கேஸ் மானியம் மத்திய அரசால் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

500, 1000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு 3 வாரத்தில் சீராகும் எனவும், இதனால் சில நாட்களுக்கு இடையூறுகள் இருக்கக்கூடும் எனவும், மக்கள் நேர்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அருண் ஜெட்லி பேட்டியளிக்கிறார்.

பசுவைக் காப்பதற்கு தனிச் சட்டம் இருக்கும் இந்த நாட்டில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணத்தை சுருட்டி, நம்பிக்கை மோசடி செய்யும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்கு தனிச் சட்டம் கிடையாது என்பது துரதிர்ஷ்டவசமானது. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று இருக்கும் மக்களிடம் எழுச்சியும் போராட்ட குணமும் எப்படி இருக்கும். தேசபக்தி பற்றி இவர்கள் பேசும் பொழுது "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் சாவதோ" என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

- த.சத்தியமூர்த்தி

Pin It