தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுகவில், ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அணியாக இருந்த அந்தக் கட்சி, இப்போது மூன்று அணியாக உடைந்திருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு உள்ளவரை, அவர் மட்டுமே அந்தக் கட்சிக்குத் தலைவராக இருந்தார்... இன்று எல்லோரும் தலைவர்களாகிவிட்டார்கள். எந்த ஒருவரின் தலைமையின் கீழும் இனி அந்தக் கட்சி ஒருங்கிணைய முடியாது என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மூன்று அணிகளுமே, ஆட்சிக்கு ஆபத்து ஏதுமில்லை என்னும் பல்லவியை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி இருந்தால்தான் பணத்தையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இந்தச் சூழலில்தான், வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லியிருப்பது போல, இது அவர்களின் கடைசிச் சட்டமன்றக் கூட்டமாகவும் இருக்கலாம். மூன்று அணியில் யார் ஒருவருக்கும் பெரும்பான்மை இல்லை என்று ஆகிவிட்டது. வர இருக்கும் சட்டமன்றத் தொடரோ மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தொடர். எனவே, நிதி தொடர்பான சட்ட முன்வரைவுகள் ஆளும் கட்சியால் கொண்டு வரப்படும்போது, அவை தோல்வியடையுமானால், அமைச்சரவை பதவி விலக வேண்டிய கட்டாயம் நேரும்.
இத்தனை இக்கட்டான நிலைமை இருந்தாலும், ஆட்சிக்கு ஆபத்து ஏதுமில்லை என்று ஆளும் கட்சியினர் கூறுவதற்கு, பின்னால் இருக்கும் பா.ஜ.க.,தான் காரணம். இந்த ஆட்சி கவிழ்ந்து போய்விடாமல் பார்த்துக் கொள்வதில், அவர்கள் இப்போது மிகக் கவனமாகவே இருப்பார்கள். அதற்குக் காரணம், ஜூலை 17ஆம் தேதி வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல்தான். அந்தத் தேர்தலில், நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 776 பேரும், இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 4,114 பேரும் வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் மொத்த மதிப்பு, 10 லட்சத்துக்கும் மேலானது. மொத்த வாக்குகளில், இப்போது ஏறத்தாழ 48 விழுக்காடு வாக்குகள் பா.ஜ.க-., கூட்டணி வசம் உள்ளன. இதில் சிவசேனாவின் வாக்குகளும் அடக்கம். அதில் ஏதும் சிக்கல் ஏற்படுமானால் அதிமுக வின் வாக்குகள் கண்டிப்பாகத் தேவைப்படும். அதிமுகவிடம் 50 நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும், 132 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களின் வாக்குகளினுடைய மதிப்பு 5 விழுக்காட்டிற்கும் கூடுதல். எனவே, ஆட்சியைக் கவிழ்க்காமல் இருப்பதுடன், கவிழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதிலும் மத்திய அரசு கவனமாக இருக்கும். எனினும் ஜூலை 17க்கு மேல் என்ன நடக்கும் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள தமிழக அரசு, தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்துப் பார்க்கிறது. பள்ளிக் கல்வியில் சில மாற்றங்கள், பல இலவசத் திட்டங்கள், நில வழிகாட்டி மதிப்புக் குறைத்தல் முதலான பல அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், எந்த ஒரு திட்டம் நிறைவேற வேண்டுமானாலும், மானியக் கோரிக்கைகள் முதலில் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். பொதுவாக, நிதிநிலை அறிக்கைத் தொடர் என்பதுதான், சட்டமன்றத் தொடர்களிலேயே மிக நீளமானது. வழக்கமாக, நாற்பது நாள்களுக்குக் குறையாமல் அத்தொடர் நடைபெறும். ஆனால் இம்முறை மார்ச் 16ஆம் தேதி தொடங்கிய தொடர், 24ஆம் தேதியே முடிந்து விட்டது. ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களும் சட்டமன்றத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டன. அவை இரண்டுமே நடைபெறவில்லை. ஒத்திவைக்கப்பட்ட தொடரும் முடித்து வைக்கப்பட்டு, மீண்டும் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழக அரசு, அறிவிப்பளவில், வெளியிட்டுள்ள திட்டங்களும் கூட, போலியானவையாகவும், ஏமாற்றுத்தன்மை உடையனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக, நில வழிகாட்டி மதிப்பு 33 விழுக்காடு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பத்திரப்பதிவு கட்டணம் 3 விழுக்காடு கூட்டப்பட்டுள்ளது. இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், மக்களுக்கு லாபம் எதுவுமில்லை. இப்படித்தான் இந்த அரசின் அறிவிப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகி, வானில் உதயசூரியனின் கீற்றுகள் தோன்றும் நாளை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.