ஐந்து விரல்களைக் காட்டி எது பெரியது, எது சிறியது என்று கேட்டால் காட்சிப் பிராமணத்தால் உடனே சொல்லி விடலாம். ஒரு மாந்தோப்பில் எந்த மரத்தின் பழம் சுவையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அந்தத் தோப்பின் சொந்தக்காரன் சொல்வதை, கருத்துப் பிராமணமாக நம்பி நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு பனை தோப்பில் எந்த மரத்தின் கள் நன்றாக போதை தரும் என்பதையும் கூட உள்ளூர் குடிகாரர்களின் பிரத்தியட்ச அறிவின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் காட்சிப் பிராமணத்தாலும், கருத்துப் பிராமணத்தாலும் உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்று உலகில் இருக்கின்றது என்றால், அது உலகில் மிகப் பெரிய ஊழல் கட்சி அதிமுகவா இல்லை பிஜேபியா என்பதுதான்.
ஆட்சியில் ஊழல் நடக்கின்றதா, இல்லை ஊழலே ஆட்சியை நடத்துகின்றதா என்று மண்டை குழம்பி,யாருக்குமே தெரியாமல் நடக்கும் அந்த மறை ஞான ஊழலின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியனும் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நம்மைப் போன்ற அன்னாடங்காச்சிகள் கொஞ்சம் பணமிருந்தால் போட்டுக் கொள்ள நல்ல ஆடையும், அணிந்து கொள்ள நல்ல செருப்பும், உண்பதற்கு மூன்று வேளை நல்ல உணவும், மழைக்கும் வெயிலுக்கும் தப்பிக்க சொந்தமாக ஒரு வீட்டையும் வாழ்க்கையின் பெரிய இலக்காக வைத்து வருடக்கணக்கில் உழைத்தும், காலையில் நிம்மதியாகக் குந்துவதற்கு கழிவறை கட்டக் கூட துப்பில்லாமல் இருக்கிறோம். அந்த மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவே தாங்கள் கடவுளால் பணிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நம்மிடம் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வந்த அயோக்கியர்கள், நம் வாழ்க்கையை கேவலத்தில் இருந்து கழிசடைக்கு திருப்பி விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான கோடிகளில் அல்ல, லட்சக்கணக்கான கோடிகளில் கொள்ளையடித்து கொழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வெந்த சோற்றைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம் என்று வாழும் கோடான கோடி உழைக்கும் மக்களை ஏய்த்து அவர்களின் அடிமடியில் அடித்து தங்களின் சொர்க்க ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பக்கம் ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவுமே தெரியாத, மாநிலத்தை ஆளும் அதிமுக; இன்னொரு பக்கம் அந்த ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சியைத் திட்டமிட்டு தன்னுடைய சுயநலத்திற்காக கட்டிக் காப்பாற்றும் பார்ப்பன பாசிச பாஜக என தமிழகம் இந்த குற்றக் கும்பல்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றது. சாவதற்கு இழுத்துக் கொண்டிருப்பவனுக்கு கொடுக்க வைத்திருந்த தண்ணீரை திருடிக் கொண்டு போகக் காத்திருக்கும் இழிவான திருடனைப் போல தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து போய் ஓட்டு போட்டால் இருக்கும் மிச்சம் மீதியையும் துடைத்தழித்துவிட்டு தடயமே இல்லாமல் ஓடிப் போக பிணந்தின்னி கழுகுகளைப் போல அதிமுகவும் பிஜேபியும் இந்தத் தேர்தலை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன.
ஆனால் மக்களை ஏமாறாமல் திருடர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த முறை அதிமுக பிஜேபி வெற்றி பெற்றுவிட்டால், தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் ஓட்டுமொத்த இந்திய மக்களும் தங்கள் கழுத்தை தாங்களே அறுத்துக் கொண்டு சுய தற்கொலை செய்து கொள்வதற்கான ஒப்புதல் மரண வாக்குமூலமாகவே அது இருக்கும் என்பதால், இந்தக் கருமம் பிடித்த ஊழல் ஆட்சியின் யோக்கியதையை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.
கருப்புப் பணத்தை கைப்பற்றுவேன், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் எனச் சொல்லி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மோடி பட்டை நாமத்தை சாத்தியதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். அதைவிட முக்கியமாக ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்து, நாட்டில் இருந்த கருப்புப் பணத்தை எல்லாம் ஒழிக்கப் போகின்றேன் என மோடி நடத்திய உலகமகா நாடகத்தைத் தூங்கும் போது நினைத்தாலும் பல பேரின் தூக்கம் தொலைந்து போகும். 'சரி போய் தொலையுது, நமக்குக் குடுக்காட்டியும் பரவாயில்லை, நாட்டுக்காச்சியும் அந்தப் பணத்தை வைச்சுகிட்டு எதையாவது நல்லது செஞ்சு தொலைச்சா போதும்' என சில தேசபக்த பெருந்தனக்காரர்கள் கூட நினைத்தார்கள். ஆனால் மோடி அதிலும் ஒரு டுவிஸ்ட் வைத்தது இப்போதுதான் முச்சந்திக்கு வந்திருக்கின்றது.
கடந்த 09.04.2019 அன்று காங்கிரசு கட்சியின் கபில்சிபல் அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ மோடி அமித்ஷா குற்றக் கும்பலின் டவுசரை மட்டுமில்லாமால் இந்த நாட்டின் மிக உயரிய அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் ‘ரா’ உள்ளிட்ட அரசு உறுப்புகளின் அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. அந்த வீடியோ மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டு மக்கள் மீது திணித்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் தேதிக்கு முன்பே, அதாவது ஆறு மாத காலத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வைத்து புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அமித்ஷா தலைமையில் இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 26 பேர் அச்சடித்திருக்கிறார்கள் என்ற அதிபயங்கரமான உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
இப்படி கள்ளத்தனமாக வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தவுடன் திட்டமிட்டபடி கமிஷனுக்கு பெரிய பெரிய முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று கமிஷன் அடிப்படையில் குறைந்தபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் பணத்தைக் கைமாற்றினோம் என்று இந்தச் சதிகளில் முக்கிய கூட்டாளியாக இருந்த இந்திய உளவுத்துறையான ’ரா’(RAW) அமைப்பைச் சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இப்படி கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதற்காக சவுக்கிதார் மோடியும், சவுக்கிதார் அமித்ஷாவும் இந்திய இராணுவ விமானங்களைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். அயோக்கியத்தனம் செய்வதில் கூட தேசபக்தியைக் கடைபிடித்து இருக்கின்றார்கள். இப்படி இந்திய ராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் இராணுவ விமானப் படைத்தளத்திற்குக் கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு வேண்டும் அளவுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள். ஆனால் சில முத்திப்போன காவிப் பைத்தியங்கள் இது திட்டமிட்ட பொய், தேர்தல் சமயத்தில் மோடியின் பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதி என ஓரே போடாக போட்டு விடுவார்கள். அப்படிச் சொல்வதற்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல் இந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் ஆளுநர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது ஆளுநராக இருந்தவர் இரகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் ஆளுநராகப் பதவியேற்றது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 04ஆம் தேதிதான். ஆனால் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்ததாகச் சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆகும். அதாவது ஆறுமாதத்திற்கு முன்பே மோடி அமித்ஷா கும்பலின் இமாலய ஊழல் உர்ஜித் பட்டேல் என்ற கைக்கூலி மூலம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இந்தக் கேவலமான ஊழலைச் செய்வதற்காகவே இரகுராம் ராஜனை திட்டமிட்டு துரத்தி இருக்கின்றார்கள். அநேகமாக சுதந்திர இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே இதுதன் மிகப் பெரிய ஊழலாகும். வியாபம் ஊழல் பெரியதா? ரபேல் ஊழல் பெரியதா? என யோசித்துக் கொண்டிருக்கும்போது மோடி - அமித்ஷா குற்றக் கும்பல் புன்முறுவல் பூக்கின்றது “எங்களை எல்லாம் அவ்வளவு சின்ன திருடங்கன்னு நெனைச்சையா?” என்று.
ஏன் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது ஒரு பணக்காரன் கூட ஏடிஎம் வாசலில் நிற்கவில்லை என்று நாடு முழுவதும் மக்கள் கேள்வி கேட்டார்கள். ஆனால் அதற்கான விடை இப்போதுதான் கிடைத்திருக்கின்றது, அவர்கள் அனைவரும் அமித்ஷாவின் வீட்டு வாசலில் நின்றிருக்கின்றார்கள் என்று. பக்தர்கள் வெய்யிலில் நின்று சாக, பூசாரிகளும், கடவுள்களும் சேர்ந்து கூட்டாக பொங்கச் சோறை கருவறையில் வைத்து தின்றிருக்கின்றார்கள். அமித்ஷா நிர்வாக இயக்குனராக இருந்த அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் நவ 8-12ம் தேதிகளுக்குள் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டிருந்தது அப்போது பெரும் புயலைக் கிளப்பியது. அதே போல அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா வின் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்ததும் பெரிய ஊழலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் மோடி அமித்ஷா கும்பல் நமக்கு ஒன்கிராம் கோல்டைக் காட்டி ஏமாற்றிவிட்டு, வைர அட்டிகையையே ஆட்டையைப் போட்டிருக்கின்றார்கள்.
ஆனால் இதில் அதிமுகவின் ஊழல் பற்றி ஒன்றுமே இல்லையே, அதனால் அதிமுகவுக்கு ஓட்டு போடலாமா என யாரும் யோசித்து விடாதீர்கள். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் அதிமுக கொள்ளைக் கும்பலும் நேரடியாகவே சம்மந்தப்பட்டிருக்கின்றது. கடந்த மாதம் இந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்ததால், வைரத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் விலை சரிவு கண்டது. இதுபற்றி செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்ததோடு அப்படி வாங்கப்பட்ட வைரங்கள் தற்போது திடீரென விற்பனைக்கு வந்ததால்தான் இந்த விலை சரிவுக்குக் காரணம் என்றும் கூறியிருந்தது. மேலும் விற்பனைக்கு வந்த 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது என்றும், அவை அனைத்தும் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட வைரமே என்றும் குறிப்பட்டது.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் சித்திரம் அனைவருமே கூட்டுக் களவாணிகள் என்பதுதான். மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ஏதோ பரம ரகசியமாக வைத்திருந்து செயல்படுத்தியதாக இன்னமும் சில அடிமைகள் நம்மை நம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மோடி ரகசியமாக வைத்திருந்தது உண்மையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அல்ல, வெளிநாடுகளில் கள்ள நோட்டு அடித்து அதை கமிஷனுக்கு விற்பனை செய்ததைத் தான் என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது. இப்போது தெரிகின்றதா ஏன் அதிமுகவும் பிஜேயும் கூட்டணி வைத்திருக்கின்றது என்று. மோடியும் லேடியும் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த அதிமுக பிஜேபி கும்பலே கேடி கூட்டம் என்பதை உணர்ந்து கொண்டு வாக்களியுங்கள்.
- செ.கார்கி