பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பது இன்னொரு தமிழினப் பகை நடவடிக்கையாகும்.
இராசீவ் காந்தி வழக்கில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு செய்த முடிவு, ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வை ஏற்றுக் கொண்ட நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு பாரதிய சனதாக் கட்சி, காங்கிரசுக் கட்சி, பிற அனைத்திந்தியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருக்கின்றனர். அதற்கு முன்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்து அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு ஒருமனதான தீர்மானமும் நிறைவேறியிருக்கிறது.
இவ்வாறு ஒட்டு மொத்தத் தமிழர்களும், தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என செய்துள்ள ஞாயமான முடிவை இந்திய அரசு ஏற்க மறுத்திருப்பது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435 வழங்கும் அதிகாரத்தை, தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் இனப்பகைச் செயலாகும்.
இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ஆயத்தில் நிலுவையில் இருப்பதால்தான், இவ்வாறான முடிவெடுத்திருப்பதாக இந்திய அரசு கூறுவது பொய்யான சாக்குப் போக்கே ஆகும். 19.04.2016 நாளிட்ட அதே கடிதத்தில், தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என அறிவித்திருப்பதே இந்திய அரசின் உண்மையான உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 2015 திசம்பர் 2 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு உள்ள ஒரே மாற்று வழியை எடுத்துக் காட்டுகிறது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ், தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் வழியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். உறுப்பு 161 மாநில அரசுக்கு வழங்கும் மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, நீதிமன்றத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
விதி 435-இன் கீழ், இந்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட பிறகு, தமிழ்நாடு அரசுக்கு இருக்கிற ஓரே வழி அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 தான்.
இது தேர்தல் நடத்தை விதிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அதிகாரமும் அல்ல. எனவே, உறுப்பு 161-இன்படியான ஏழு தமிழர் விடுதலை முடிவுக்கு, தேர்தல் நடத்தை விதி குறுக்கே வருமோ என தமிழ்நாடு அரசு தயங்க வேண்டியதில்லை. ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்யலாம்.
இச்சிக்கலில் ஏற்கெனவே ஒரே கருத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கோரிக்கைதான் இது என்று மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏழு தமிழர் விடுதலை என்பது தேர்தல் போட்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒட்டு மொத்தத் தமிழினத்தின் இன மானச் சிக்கலாகும்.
இதற்கிடையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்டகால சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒரே முடிவில் நின்று மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- கி.வெங்கட்ராமன்,பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்