கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1991இல் கைது. 98இல் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை என தடா நீதிமன்றம் தீர்ப்பு. பின்னர் 19 பேர் விடுதலை ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனை. ஆயுள் தண்டனையாகக் குறைப்பு. பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி. 99இல் தமிழக ஆளுநரால் கருணை மனு நிராகரிப்பு. 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு. அதே ஆண்டில், பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு, 11 ஆண்டுகள் கழித்து 2011இல் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீலால் நிராகரிப்பு. அதே ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தூக்குக்கு நாள் குறிப்பு. தமிழகமே போர்க்கோலம் பூண்டது. போராட்டங்கள் வெடித்தன. செங்கொடியின் உயிர்த்தியாகம். அதைத்தொடர்ந்து ஆகஸ்டில் தமிழக சட்டமன்றத்தில் தண்டனையைக் குறைக்கத் தீர்மானம். தண்டனை நிறுத்திவைப்பு. நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின்னர், 2014 ஜனவரியில் மூவரின் தூக்கை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு. ஏழு பேரையும் விடுவிப்பதாகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் அறிவிப்பு..தண்டனைக் குறைப்பை எதிர்த்த காங்கிரஸ் மத்திய அரசின் மனு ஏப்ரலில் தள்ளுபடி. விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணையில் உள்ளது.

perarivalan 330நீதிக்கான இந்தப் போராட்டம் 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.. ஆனால் இன்னும் சிறைக்கதவுகள் திறந்தபாடில்லை.பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் தவிப்பும் தீர்ந்தபாடில்லை...இத்தனைக்கும் ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன், வாக்குமூலத்தையே தவறாகப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி..அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். மற்றொரு அதிகாரியான ரஹோத்தமனோ தான் எழுதிய புத்தகத்தில், தனு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் குண்டைச் செய்தது யார் என்பது மட்டும் இதுவரை தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் அவர்களின் விடுதலைக்கு எது தடையாக இருக்கிறது? மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இந்தச் சிக்கலில் மட்டும் ஒரே நிலைப்பாடு எடுப்பது ஏன்?

தங்கள் தலைவரின் கொலைக்கு, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டுவிட்டு, அப்பாவிகளைப் பலிகடாவாக்கி நியாயம் வழங்க முயற்சிக்கிறது காங்கிரஸ். இந்த ஏழு பேரை விடுவித்தால், அதை முன்னுதாரணமாக்கி எங்கே, முஸ்லிம் ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டி வந்துவிடுமோ என பா.ஜ.க. அஞ்சுகிறது.

அதே நேரத்தில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதம் வைத்திருந்ததாகக் கையும் களவுமாகப் பிடிபட்டு 6 ஆண்டு தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு ஒன்றரை ஆண்டுகளில் ஜாமீன். நினைத்தபோது பரோல் விடுமுறை. இதற்கிடையில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்திலும் நடித்து முடித்துவிட்டார். மனைவியின் உடல் நலனை அருகில் இருந்து கவனிக்க, சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கிய சட்டம், தந்தையின் இறுதிச் சடங்கில் கூட ரவிச்சந்திரனைப் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

சிறையில் நன்னடத்தை அடிப்படையில், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட இருக்கிறார். நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை என்பது சஞ்சய் தத்தைக் காட்டிலும், பேரறிவாளனுக்கு நூறு விழுக்காடு பொருந்துமானது. சிறைச்சாலையை அறச்சாலையாக மணிமேகலை மாற்றியதாகக் காப்பியத்தில் படித்திருக்கிறோம். மணிமேகலையின் ஆண் வடிவமாகப் பேரறிவாளன் இருந்து வருகிறார். திகார் சிறையில் கிரண்பேடி மாற்றத்தைக் கொண்டுவந்தார் என்றால், அதிகாரமும் பதவியும் அவரிடம் இருந்தன. ஆனால், ஒரு தூக்குத்தண்டனைக் கைதியாக இருந்துகொண்டு, முருகன், சாந்தன் ஆகியோருடன் இணைந்து, சக சிறைவாசிகளின் கல்வி நிலையை உயர்த்தவும், வாழ்வியல் ஒழுக்கக் கூறுகளை மேம்படுத்தவும் அவர் ஆற்றி வரும் பணிகளை, வேலூர் சிறை நிர்வாகமே பாராட்டி வருகிறது. எனில், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க ஏன் தாமதமாகிறது.?

உலக இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்காக அன்று, கால் நூற்றாண்டாக ஓடிக்கொண்டே இருக்கும் தன்னுடைய தாயின் கால்களைப் பிடித்துவிட்டு, வயதான பெற்றோர்களுக்கு மகனின் கடமையைச் செய்வதற்காகவும், தன்னை மானமுள்ள சுயமரியாதைக்காரனாக வளர்த்தெடுத்துள்ள இந்த சமூகத்திற்குத் தன்னுடைய கடமையைச் செய்யவுமே பேரறிவாளன் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.

19 வயதில் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும், இன்று நாற்பது வயதைக் கடந்த நிலையில், வாழ்வின் வசந்தத்தைத் தொலைத்து நிற்கின்றனர். தூக்குக் கயிற்றை அறுத்தெறிய 25 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.அடுத்து சிறைக்கதவுகளைத் திறக்க இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும்?