முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி அவர்கள் 21.5.1991 அன்று திருப்பெரும்புதூரில் படுகொலைச் செய்யப்பட்டார். அது தொடர்பாக ஒன்றியப் புலனாய்வு காவல் துறையினர் 41 பேர் குற்றவாளிகள் என அடையாளங் கண்டனர். சிவராசன் உள்ளிட்ட 12 பேர் இறந்து விட்டதால், மீதம் 26 தமிழர்கள் மீது பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
1998ஆம் ஆண்டு சனவரி 28ஆம் நாள் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக அறுபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் பழ.நெடுமாறன் தலைமையில் இணைந்து செயல்பட்டனர். 26 தமிழர் உயிர் காப்பு நிதி திரட்ட முடிவு செய்யப் பட்டது. மா.பெ.பொ.க.வும் அதில் ஒரு உறுப்பாகச் செயல்பட்டது.
இராசீவ் படுகொலைக்குமுன் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கொலையில் எந்தத் தொடர்பும் இல்லாத தி.மு.க.வினர் மற்றும் பெரியார் தொண்டர்கள் வீடுகள் மற்றும் கடைகள் மீது காங்கிரசு காலிகள் தாக்குதல் நடத்தினர்.26 தமிழர்கள் உயிர்காப்பு நிதி திரட்டும் குழுவில் வேலூர் மாவட்டப் பொறுப்பாளராக நான் செயல்பட்டேன்.
மூத்த வழக்குரைஞர் என். நடராசன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்காடினார். தடா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது செல்லாது; சாதாரண குற்றவியல் சட்டத்தின்படிதான் வழக்குப் பதிந்திருக்க வேண்டும் என்று வழக்காடி வெற்றி பெற்றார்.
1999 மே 11ஆம் நாள் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்குத் தண்டனையும், ரவிச்சந்திரன், செயக்குமார், ராபட் பையஸ் மூவருக்கு வாழ்நாள் தண்டனையும் விதித்து மற்ற 19 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் சார்பில் இந்தக் கூட்டமைப்பினர் அப்போதைய ஆளுநர் பாத்திமா பிவி-யிடம் கருணை மனு அளித்தனர். அவர் அதைத் தள்ளுபடி செய்துவிட்டார். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்துரு அவர்கள் வழக்காடி வெற்றியைத் தேடிக் கொடுத்தார். ஆளுநரின் ஆணை செல்லாது என்று தீர்ப்பு வந்தது. தொடர்ந்து குடிஅரசுத் தலைவருக்குக் கருணை மனு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டமைப்பின் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடுகளும், பேரணிகளும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
2010இல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது நளினியின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப் பரிந்துரை செய்தார்.
திராவிடர் இயக்கங்கள் தமிழ் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக செயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
2014ஆம் ஆண்டு பேரறிவாளன் அவர்களின் கருணை மனு மீதான வழக்கில் பதினோறு ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருந்த ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் அவர்கள் நால்வரின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றினார்.
2018 செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானம் மீண்டும் அமைச்சர வையில் நிறைவேற்றியது. காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த ஆளுநர்களும் சரி, பா.ச.க. ஆளுநர்களும் இத்தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமலேயே காலம் கடத்தி வந்தனர். அதன்பிறகு பல்வேறு அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாக 2021 சனவரி 27ஆம் நாள் எழுவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழ்நாட்டு அரசின் தீர்மானத்தையும் குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்திய ஒன்றிய அரசு இது குறித்து எந்த முடிவையும் எடுக்காத காரணத்தால், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், அஜய்ரஸ்தோகி, ஹேமந்த குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முப்பது ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த பேரறிவாளனை அரசு அமைப்புச் சட்ட உறுப்பு 142-இன்படி 18.5.2022 அன்று விடுதலை செய்தது.
தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
திரு. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசும் எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதை நீண்ட காலம் கிடப்பில் வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ் நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆ.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு 11.11.2022 அன்று முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பையஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு தமிழர்களையும் விடுதலை செய்தது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் 31 ஆண்டுகள் சிறையில் வாடியத் தமிழர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பொங்கியது.
வழக்கம்போல காங்கிரசுக் கட்சி, பா.ச.க. அரசு இவர்கள் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு செய்துள்ளன. அறுவரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17.11.2022 அன்று மறுசீராய்வு மனு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரசு, பா.ச.க. அரசுகளின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆறு தமிழர்களின் விடுதலையை வரவேற்கிறோம்.
- வாலாசா வல்லவன்