இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு பேரின் விடுதலை குறித்துத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம்; அதை ஆய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று 6.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. மேலும் இந்த ஏழு பேரை விடுதலை செய்வதாக 2014ஆம் ஆண்டு செயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருப்பதால் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் ஆளுநருக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்கப்பட வில்லை என்று கூறி பேரறிவாளன் உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்தவழக்கின் மீதுதான் மேலே குறிப்பிட் டுள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்குமுன், இந்த ஏழு பேரின் கருணை விண் ணப்பத்தை 11 ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலை வரால் தள்ளுபடி செய்யப்பட்டதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு 18.2.2014 அன்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435 இன்படி, “உரிய அரசு” (Appropriate Government) ஏழு பேரையும் விடுதலை செய்வது பற்றி முடிவு செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் முதலமைச்சர் செயலலிதா 19.2.2014 அன்று எழுவரையும் விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இம்முடிவுக்கு மூன்று நாள் களுக்குள் நடுவண் அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரினார். 20.2.2014 அன்று மன்மோகன் சிங் தலைமையில் இருந்த நடுவண் அரசு, உச்சநீதி மன்றத்தில், மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக் கப்பட்ட இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று கூறி இடைக்காலத் தடை ஆணை பெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2015 திசம்பர் 2 அன்று வழங்கிய தீர்ப்பில், மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களை நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது. தமிழக அரசு செய்த மேல்முறையீடு குறித்து விசாரித்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வும் 7.2.2017 அன்று அளித்த தீர்ப்பில் இதே கருத்தை உறுதி செய்தது. ஆனால் இங்கே ஒரு செய்தியைக் கருத்தில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-இன்கீழ் விடுதலை செய்வது பற்றி மட்டுமே கூறியது. எனவே இச்சட்டப் பிரிவின் அடிப்படையில்தான் இவ்வழக்கு நடத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழக அரசு எழுவர் விடுதலை குறித்து மேல்முறையீடு செய்த வழக்கில், மூன்று மாதங்களுக் குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று 2018 சனவரி 23 அன்று நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் “இராசிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்வது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்து வதுடன், சர்வதேச அளவில் பாதிப்புகளை உருவாக் கும்; எனவே அவர்களை விடுதலை செய்ய அனு மதிக்க முடியாது” என்று கூறியது. அத் துடன் குடியரசுத் தலைவர் வாயிலா கவும் இதே கருத்தை நடுவண் அரசு வெளியிடச் செய்தது.
இந்தப் பின்னணியில், 6.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதி பதிகள் கொண்ட அமர்வு, அரசமைப்புச் சட்ட விதி 161-இன்கீழ் தமிழக அமைச் சரவையின் பரிந்துரையை ஏற்று ஏழு பேரை விடுதலை செய்வதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கலாம் என்று கூறி யுள்ளது.
1980இல் மாருராம் எதிர் இந்திய அரசு வழக்கிலும், 1988இல் கேகர்சிங் எதிர் இந்திய அரசு வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வுகள், நீதிமன்றத் தால் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையைக் குறைத்தல், மன்னித்தல் தொடர்பாக அரசமைப்புச் சட்ட விதி 72இன்படி குடியரசுத் தலைவருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரம் என்பது நடுவண் அரசின் அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் செயல் படுத்தப்பட வேண்டும்; அதேபோல் விதி 161இன்படி மாநில அரசின் அமைச்சரவையின் முடிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித் துள்ளன. இவ்வாறு அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் எடுக்கும் நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ எவரும் வழக்குத் தொடுக்க முடியாது.
மாறாக அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் அல்லாமல், ஆளுநர் தன்னிச்சையாக இதில் முடிவு எடுத்தால் அதுபற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர லாம். எடுத்துக்காட்டாக, பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1998 சனவரியில் 26 பேருக்கு மரணதண்டனை விதித்தது. இதை எதிர்த்து 27.2.1998 அன்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, அப்துல் காதர் காத்ரி ஆகியோர் 11.5.1999 அன்று வழங்கிய தீர்ப்பில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மரண தண்ட னையை உறுதி செய்தும், இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவர்க்கு வாழ்நாள் தண்டனை விதித்தும் மற்ற 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப் பளித்தனர்.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் கருணை விண்ணப்பம் அளித்தனர். அவர் அதை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார். உடனடியாக நால்வர் சார் பில் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடரப்பட்டது. அப்போது வழக்குரைஞராக இருந்த கே.சந்துரு, அமைச்சரவையின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக முடி வெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி இல்லை என்று வாதாடினார். அதேசமயம், அரச மைப்புச் சட்டத்தின் 181-ஆம் பிரிவின் படி ஆளுநர் பிறப்பித்த ஆணையை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என்று ஆளுநர் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் 25.11.1999 அன்று உயர்நீதி மன்ற நிதிபதி கே. கோவிந்தராசன் அளித்த தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார் : “அரசமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் ஒன்றியத்தின் அதிகாரம் மேவி நிற்கும். அதைப்போன்று ஆளுநர் என்பவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் அந்த மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 72ஆம் மற்றும் 161 ஆம் பிரிவுகள் முறையே குடியரசுத் தலைவர் மற்றும் அந்தந்த மாநில ஆளுநருக்கு கருணை மனுக்களில் மன்னித்தல் முதலிய அதிகாரங்களை வழங்கியுள்ளன.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் ஆகியோர் தமது அமைச்சரவைகளின் உதவியுடனும் ஆலோசனை யுடனும் மட்டுமே செயல்படுவர். அவர்கள் நேரடியாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இயலாது. தண்ட னைக்கு எதிரான மேல்முறையீட்டினை முடிவு செய்யும் பணியானது நிர்வாகப் பணியாகும். எனவே மாநில அரசால் அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைக்கு இணங்கவே ஆளுநர் செயல்பட வேண்டும்.
ஆளுநர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக அரச மைப்புச் சட்டத்தைப் பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. எனவே அவரது ஆணை சட்டப்படி செல்லத்தக்கதல்ல. எனவே ஆளுநரின் இந்த ஆணை நீக்கப்படுகிறது. மனுதா ரர்கள் மனுவின்மீது அமைச்சரவையின் ஆலோச னையைப் பெற்று அதற்குப் பிறகு புதிய ஆணையை ஆளுநர் பிறப்பிக்கலாம்” என்று தனது தீர்ப்பில் குறிப் பிட்டார்.
ஆளுநராக இருந்த பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தாலும் பயனிருக்காது என்பதை உணர்ந்து அவ்வாறு செய்யவில்லை.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகலுடன் நால்வரின் மரண தண்டனைக்கு எதிராக 12 இலட்சத்திற்கு மேற் பட்ட மக்கள் கையெழுத்துடன் அய்ம்பதாயிரம் பேர் பேரணியாகச் சென்று அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் அளித்தனர். தமிழக அமைச்சரவை நளினிக்கு மட்டுமே மரண தண்ட னையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து பரிந்துரை செய்தது. அதன்பேரில் 2000ஆம் ஆண்டு ஆளுநர் பாத்திமா பீவி இதற்கு ஒப்புதல் வழங்கினார்.
தற்போது 6.9.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவை 9.9.2018 அன்று கூடி, இந்த ஏழு பேரையும் முன் விடுதலை செய்ய இந்திய அரச மைப்புச் சட்டம் 161-ஆவது பிரிவின்கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது என்று தீர்மானித்தது. இத்தீர்மா னத்தை ஆளுநருக்கு அனுப்பியது.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 435இன்கீழ் நடுவண் அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்துள்ள நிலையில் அரச மைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்கீழ் ஏழு பேரை யும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று தமிழர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் குற்றவியல் நடை முறைச் சட்டப்பிரிவு 435 என்பது வேறு; அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 என்பது வேறு: இரண்டையும் தொடர்பு படுத்தல் கூடாது; 161ஆவது பிரிவு கூட்டாட்சி அரச மைப்பில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறை யாண்மை அதிகாரமாகும்; எனவே தமிழக அமைச் சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்சுவும் மற்ற சட்ட வல்லுநர்களும் கருத்துரைத்துள்ளனர்.
இதற்கிடையில் ஆளுநர் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவு குறித்து ஆலோசனை கேட்டு நடுவண் அரசுக்கு ஆளுநர் மடல் எழுதியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தொலைக்காட்சிகளில் இதுகுறித்து விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் 15.9.2018 அன்று ஆளுநர் மாளிகையிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், “இராசிவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஊகத்தின் அடிப்படையில் சில தனியார் தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை (7 பேர் விடுதலை) சிக்கலான ஒன் றாகும். இதில் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் சட்ட அடிப்படையிலும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. பல்வேறு நீதி மன்றத் தீர்ப்பு கள் அடங்கிய ஆவணங்களை செப்டம்பர் 14 அன்று தான் மாநில அரசு ஒப்படைத்தது. அந்த ஆவணங்கள் அனைத்தையும் கூர்ந்து ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும். இந்தப் பணியில் தேவைப்படும் போது ஆலோசனைகள் பெறப்படும். இந்த விடயத்தில் அரசியல் சட்ட அடிப்படையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுவர் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கமாட்டார் என்பதை ஆளுநர் அறிக்கை உணர்த் துகிறது. தேவைப்படும்போது ஆலோசனைகள் பெறப் படும் என்கிற ஆளுநரின் கூற்று புதிராக உள்ளது. இது நடுவண் அரசிடம் ஆலோசனை கேட்பதாக இருக்கு மானால் எழுவர் விடுதலை மேலும் சிக்கலாகும். அந்நிலையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன்கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மை அதிகாரத்தின்படி அரசின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் தமிழர்கள் வீதிகளில் இறங்கி விண்ணதிரக் குரல் எழுப்ப வேண்டும். ஆளுநர் எத்திசையில் காய் நகர்த்துகிறார் என்பதற்கு ஏற்ப எதிர்வினையாற்ற அணியமாக இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் இருக்கிறது.